செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் தரும் படிப்பினை என்ன?
நீண்ட RDX கட்டுரை! (RDX = 3.5 tonne) 
---------------------------------------------------------
இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு
தேசமாகக் கருதுகிறது (India as a nation).பாரத் ஹமாரா
தேஷ் ஹை! இந்தியக் குடிமக்கள் அனைவரையும்
இந்தியர்கள் என்னும் ஒரு தேசிய இனமாகக் கருதுகிறது
(Indian nationality). இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
அடித்தளம், ஆதார சுருதி எல்லாமே இதுதான்.இந்த ஓர்மை
இல்லாவிட்டால், அடுத்துச் சொல்லப்படும் விஷயங்களைப்
புரிந்து கொள்ள இயலாது; பிறழ்புரிதல் நிகழும்.

இந்தியா ஒரு பல்தேசிய இன நாடு என்ற ஒளிவீசும் உண்மையை
இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்கவே இல்லை. அரசமைப்புச்
சட்டத்தை வரைந்த டாக்டர் அம்பேத்கார் இதில் மிகத்
தெளிவுடனும் உறுதியுடனும் இருந்தார். தேசிய இனங்களின்
உரிமை என்று பேசுவதில் பொருளே இல்லை. ஏனெனில்
தேசிய இனங்களின் இருப்பையே இந்திய அரசமைப்புச் சட்டம்
அங்கீகரிக்வில்லை. ஒற்றை தேசிய இனம்(single nationality)!
அது இந்தியன் என்னும் தேசிய இனம் (Indian nationality)!
இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம்.

எனவேதான் மாநில அரசுகளை எந்தக் காரணமும்
இல்லாமல் கலைத்து விடலாம் என்று மத்திய அரசுக்கு
அதிகாரம் அளிக்கும் 356ஆவது பிரிவை இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார் டாக்டர்
அம்பேத்கார். (Or otherwise என்னும் ஷரத்தைப் படிக்கவும்).

தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கும்
அரசமைப்புச் சட்டம் ஒன்று இப்பூவுலகில் இருந்தது.
அதுதான் சோவியத் ஒன்றியத்தின் (USSR) அரசமைப்புச்
சட்டம். நான் அந்தச் சட்டத்தைப் படித்திருக்கிறேன்.
1980களில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம்
ஒரு கையடக்கப் பதிப்பாக அதைத் தமிழில்
வெளியிட்டு இருந்தது. அன்றைய கம்யூனிஸ்ட்
வாசகர்கள் அதைப்  படித்திருக்கலாம். சுயநிர்ணய
உரிமை என்றால் என்ன என்பதை உலகுக்கே
உணர்த்தியது அந்த அரசமைப்புச் சட்டம்.

அச்சட்டத்தின் அடிப்படையில்தான் 1922ல் சோவியத்
ஒன்றியத்தை லெனின் உருவாக்கினார். 1917ல் ரஷ்யாவில்
புரட்சி வெற்றி அடைந்து போல்ஷ்விக்குகள் அரசு
அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டார்கள். என்றாலும்
ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் சோவியத் ஒன்றியம்
என்னும் பல்தேசியஇனக் குடியரசு உருவாக்கப் பட்டது.

இந்தச் சூழலின் பின்னணியில்தான் காஷ்மீருக்கு
இதுவரை வழங்கப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ள
சிறப்பு அந்தஸ்து பற்றிப் பார்க்க வேண்டும்.
ஒரு விதிவிலக்காகவும் முற்றிலும் தற்காலிகமான
ஓர் ஏற்பாடாகவுமே ஜவகர்லால் நேருவால் இந்தச்
சலுகை காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. சுமார் 70
ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தச் சலுகையை
தற்போது பாஜக அரசு நீக்கி உள்ளது.

ஷரத்து 370 நீக்கப்பட்டதானது இந்திய அரசமைப்புச்
சட்டத்தின் வாசகத்திற்கும் உணர்வுக்கும் (letter and spirit)
ஏற்புடைத்த ஒன்றே. எந்த ஒரு தேசிய இனத்தின்
இருப்பையும் அங்கீகரிக்காத இந்திய அரசமைப்புச்
சட்டம், காஷ்மீரிகளை ஒரு தேசிய இனமாக, ஒரு
குறிப்பிட்ட சூழலில் தற்காலிகமாக அங்கீகரிக்க நேரிட்டது.
அந்தப் பிழை இன்று சரி செய்யப்பட்டு இருக்கிறது.
The said clause which was a MISFIT at the statute book has now been
removed. Just that is all!

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்திய ஆளும்
வர்க்கத்தின் நலனுக்கானது.அது ஆளும் வர்க்க
நலனையே பிரதானமாக ஏற்றுக் கொண்டது.
அதில் தேசிய இனங்களின் நலன்களைத் தேடுவது
வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று.

ஷரத்து 370 நீக்கம் என்பது முற்றிலும் ஒரு இந்துத்துவ
அஜண்டா ஆகும். இது வெற்றிகரமாக நிறைவேறி
உள்ளது. இது பாஜகவின் (மற்றும் ஆர் எஸ் எஸ்சின்)
சித்தாந்தத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்துள்ள
வெற்றி ஆகும்.

ஒரு இந்துத்துவ அஜெண்டாவாக இருந்த போதிலும்
அது பல மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றது.
மாநிலங்களவையில் எல்லா தலித் கட்சிகளும்
காஷ்மீர் மசோதாவை ஆதரித்து வாக்களித்தன.

உபியின் மாயாவதியம் பீகாரின் பாஸ்வானும்
மராட்டியத்தில் குடியரசுக் கட்சியும் பாஜகவை
ஆதரித்து வாக்களித்தன. அகாலிதளம், ஆம் ஆத்மி
என்று அமித்ஷாவை ஆதரிக்க கியூவில் நின்ற கட்சிகள்
அநேகம்.

மமதாவுக்கும் மோடிக்கும் பகை என்றால் அப்படிப்
பகை! இருவருக்கும் இடையில் பச்சைப் புல்லைப்
போட்டால் கூட அது பற்றிக் கொள்ளும். என்றாலும்
மமதாவின் கட்சி எதிர்த்து வாக்களிக்கவில்லை.
தந்திரமாக வெளிநடப்புச் செய்து அமித்ஷாவை
ஆதரித்தது.

அரசியல் சாணக்கியர் சரத் பவாரும் வெளிநடப்புச்
செய்து அமித்ஷாவை ஆதரித்து வரலாறு படைத்தார்.
பீகார் புரட்சியாளர் நித்திஷ் குமாரின் கட்சியும்
வெளிநடந்தது. மாநிலங்களவையில் நேற்று
முழுவதும் வெளிநடப்புப் புரட்சிதான்!

காங்கிரஸ் எதிர்த்தது என்னவோ உண்மைதான்.
என்றாலும் அந்தரங்க சுத்தியுடன் காங்கிரஸ்
எதிர்க்கவில்லை என்பது 95க்கு கீழே IQ உள்ளவர்களும்
அறிந்த விஷயமே.

ஒரு இந்துத்துவ அஜண்டாவாகப் பிறப்பெடுத்த
370ன் நீக்கம், காலப்போக்கில் இந்த 70 ஆண்டுகளில்
metamorphosis அடைந்து தேசிய அஜெண்டாவாக மாறி
இருக்கிறது என்பதையே மாயாவதி முதல் மமதா வரை
பல்வேறு கட்சிகளின் ஆதரவு காட்டுகிறது. இந்த
உண்மையைப் பார்க்கத் தவறுவது பெரும் மடமை
ஆகி விடும்.

ஆக 370ன் நீக்கம் என்பது பாஜகவின் அரசியல் வெற்றி
மட்டுமல்ல, அதன் சித்தாந்த வெற்றியும் ஆகும்.
மேலும் இது இந்திய ஆளும் வர்க்கத்தின், இந்திய
முதலாளிய வர்க்கத்தின் வெற்றியும் ஆகும்.

காஷ்மீருக்காக கடந்த 15 ஆண்டுகளில் மட்டும், அதாவது
2004 முதல் இன்று வரை இரண்டு லட்சம் கோடிக்கு  மேல்
செலவாகி இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.
இவ்வளவு பணம் செல்வு செய்வதை முதலாளியம்
விரும்பவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய
முதலாளியம் விரும்புகிறது. 370ன் நீக்கத்திற்கு
இதுவும் ஒரு காரணம்.  

பாஜகவின் அரசியல் வெற்றியைப் பொருட்படுத்த
வேண்டாம். ஆனால் அதன் சித்தாந்த வெற்றியைப்
புறந்தள்ள முடியாது.

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்னும்
சித்தாந்தத்திற்கும் இந்தியாவானது  இந்தியன் என்னும்
ஒற்றைத் தேசிய இனத்தைக் கொண்டது என்னும்
பாஜக (மற்றும் காங்கிரஸ்) உள்ளிட்ட ஆளும் வர்க்க
சித்தாந்தத்திற்கும் இடையில் நடந்த போரில்
இந்தச் சுற்றில் பாஜக வென்றுள்ளது. இன்னும் பல
சுற்றுக்கள் உண்டு. இதுதான் காஷ்மீர் நிகழ்வில்
இருந்து பெற வேண்டிய படிப்பினை!
***************************************************

    
    
    
   
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக