ஞாயிறு, 5 மே, 2019

போற்றுதலுக்குரிய சுஜாதா! 
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
மே 3 சுஜாதா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை!
-------------------------------------------------------------------
1970களில் சுஜாதா எழுதத் தொடங்கினார்.
எழுதியது அனைத்துமே அறிவியல்தான்.

அக்காலத்தில் பெ நா அப்புசாமி மட்டுமே தமிழில்
அறிவியலை எழுதிக் கொண்டிருந்தார்.கலைக்கதிர்
என்ற அறிவியல் பத்திரிகை கோவையில் இருந்து
வந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் அறிவியல்
என்பது இவ்வளவுதான். அதாவது கடலில் காயம்
கரைத்த கதைதான்.

இந்த நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்
சுஜாதா. வெகுஜன ஏடுகள் அனைத்தையும் தம்
எழுத்தாற்றலால் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கெல்லாம்
அறிவியலை எழுதினார். அவரின் துப்பறியும் கதைகள்
அனைத்தும் அறிவியலே.

தமது கதையில் நெரிசலும் ஜன சந்தடியும் நிறைந்த
ஒரு நகரத்தை இப்படி வர்ணிப்பார்: "நகரின் இயக்கம்
ஒருவித பிரௌனியன் இயக்கம் போன்று இருந்தது".

பிரௌனியன் இயக்கம் = Brownian Motion.
அடுப்பில் உலை வையுங்கள். உலைநீர் நன்கு
கொதித்ததும் அதில் ஒரு பிடி அரிசியைப்
போடுங்கள். உலை கொதிக்கக் கொதிக்க,
அரிசியானது உலைப்பானையின் உள்ளே
தாறுமாறாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும்.
இதுதான், அரிசியின் இந்த இயக்கம்தான்
பிரௌனியன் இயக்கம் (Brownian motion).

போகிற போக்கில் எழுதிச் சென்று விடுவார் சுஜாதா.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு
ரசிக்கவும் அறிவியல் அறிவு வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதப்போகும் ஒருவன் ஒரு நோட்ஸ்
வாங்கக் கடைக்குப் போகிறான். ஹோலோகிராம்
(hologram) முத்திரை உள்ள நோட்சைப் பார்த்து
வாங்குகிறான். இன்று ஹோலோகிராம் பலரும்
அறிந்த ஒன்று. ஆனால் 80களிலேயே (அல்லது
90களில்) ஹோலோகிராம் பற்றி எழுதியவர் சுஜாதா.
அவரின் கொலையுதிர்காலம் நாவலைப் படிக்கவும்.

கணினி குறித்தும் செயற்கைக்கோள் தகவல்
தொடர்பு குறித்தும் எவருக்கும் முன்பாகவே
தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் சுஜாதா.
காலத்தை மீறிச் சிந்தித்தவர் அவர்.

சாமானியனிடமும் அறிவியலைக் கொண்டு சென்றவர்
சுஜாதா. தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்குகள்
இண்டு இடுக்குகளிலும் அவர் அறிவியலைக் கொண்டு
சென்றார். தமக்கென ஒரு ராஜபாட்டையை அவர்
உருவாக்கிக் கொண்டார்.

சுஜாதா பெங்களூருவில் இருந்தபோது கலைஞரின்
மகள் கனிமொழியும் பெங்களூருவில் இருந்தார்.
கனிமொழி மிகுதியும் சுஜாதாவின் வீட்டிலேயே
இருப்பார். இருவருக்கும் இடையில் தந்தை-மகள்
உறவு இருந்தது. இருவரின் மணிக்கணக்கான
உரையாடல்களின் மூலம்  தமக்கான intellectual layersஐ
கனிமொழியால் எளிதில் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.

சுஜாதா ஆகச்சிறந்த அறிவியல் பரப்புநர் (science communicator)
ஆவார். அவரின் அறிவியல் பரப்புப் பங்களிப்பை
அகல உழுதலுக்கு (extensive cultivation) ஒப்பிடலாம்.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக