வியாழன், 16 மே, 2019

மாறும் என்ற விதியைத் தவிர அனைத்தும் மாறும்
என்னும் காரல் மார்க்சின் விதி
அறிவியலின்படி சரியானதா?
ஒரு பொறியாளரின் கேள்விக்கான பதில்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
காரல் மார்க்ஸ் பெர்லின் பல்கலைக் கழகத்தில்
மாணவராக இருந்தபோது, அவரின் பேராசிரியராக
இருந்தவர் ஹெக்கல். மாறும் என்னும் விதியைத் தவிர
அனைத்தும் மாறும் என்னும் விதியை ஹெக்கலிடம்
இருந்து கற்றார் மார்க்ஸ்.

எனினும் ஹெக்கலுக்கு முன்பே கிரேக்கத்தில் கிமு
காலத்தில் ஹீராக்கிலிட்டஸ் இதைக் கூறி இருந்தார்.
கிழக்கில் புத்தரும் இதைக் கூறி இருந்தார்.

எல்லாம் மாறும் என்றால் பிரஷ்ய அரசும் மாறும்
அல்லவா என்ற மார்க்சின் கேள்விக்கு ஹெக்கல்
அளித்த பதிலில் மார்க்ஸ் நிறைவு அடையவில்லை.
எனவே மார்க்ஸ் தம் சொந்த முயற்சியில் ஆராய்ந்து
அனைத்துமே மாறும் என்று கண்டறிந்தார்.

இந்த விதி falsifiable அல்ல என்கிறார் நண்பர் வேல்முருகன்.
எனவே இது அறிவியல் அல்ல என்கிறார் வேல்முருகன்.
(இங்கு நான் குறிப்பிடும் வேல்முருகன் தமிழரான
பொறியாளர்).

நண்பர் வேல்முருகன் ஒன்றும் காரல் பாப்பர் அல்லர்.
மார்க்சின் இந்த விதியை காரல் பாப்பர் அறிவியலற்றது
(unscientific) என்று கூறியதாக எனக்குத் தெரியவில்லை.
அப்படி பாப்பர் கூறியிருந்தால் அதை எனக்குத்
தெரியப் படுத்துமாறு வேண்டுகிறேன்.

மார்க்சின் இந்த விதியை எப்படிப் புரிந்து கொள்ளுவது?
இயங்கிக் கொண்டிருக்கும் எல்லாமும் இயக்கத்தின்
போக்கில் மாற்றம் அடையும். பொருள் கருத்து சமூகம்
ஆகிய மூன்றும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.

அப்படியானால் பித்தகோரஸ் தேற்றம் (a^2 + b^2 =c^2)
மாறுமா? பைனாமியல் தேற்றம் ((x + a)^n = x^n +..............))
மாறுமா என்றால், அவை மாறா என்பதே விடை.

மாறிகள் மாறிலிகள் சார்பலன்கள் (variables, constants and functions)
பற்றி அறிந்தோர், கால்குலஸ் மற்றும் வகைக்கெழு
காணுதல் (differentiation) பற்றி அறிந்தோர் பின்வரும்
உண்மையினை அறிந்திருப்பர்.

மாற்றம் அடைகிற பொருளைத்தான்  differentiate செய்து
விடை காண இயலும். constantஐ differentiate செய்தால்
விடை பூஜ்யமே. அதைப் போலவே பித்தகோரஸ்
தேற்றம், பைனாமியல் தேற்றம் மற்றும் பல்வேறு
கணித அறிவியல் உண்மைகள் ஆகியவை மாறா.
(மாறா =மாறாது). மார்க்சின் விதி அவற்றுக்குப்
பொருந்தாது.

இந்த விதியின் மூலம் மார்க்ஸ் யாப்புறுத்துவது
என்னவெனில், இயற்கை சிந்தனை சமூகம்
ஆகிய மூன்றும் தொடர்ந்து இயங்கிக் கொண்டு
இருக்கின்றன; இயக்கத்தின் போக்கில் மாறிக்
கொண்டு இருக்கின்றன; எனவே இன்று இருக்கும்
அனைத்தும் நாளை மாறும் (மேற்கூறியவண்ணம்)
என்பதே.

இங்கு காரல் பாப்பருக்கு வேலையில்லை. இது
முற்றிலும் அறிவியல்பூர்வமானது.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
falsifiable ஆக இருந்தால் மட்டுமே ஒரு தியரியை
scientific theory என்று சொல்ல முடியும் என்றார்
காரல் பாப்பர். இவர் ஒரு scientific philosopher).

மேலும் விளக்கம் பெற அறிவியலும் தத்துவமும்
என்ற என் கட்டுரையைப் படிக்கவும். அறிவியல்
ஒளி ஏட்டில் வெளிவந்த கட்டுரை)
***********************************************
சமகால அறிவியல் உலகம் காரல் பாப்பரின்
FALSIFIABLE தியரியை ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே யார் என்ன தியரியை முன்வைத்தாலும்
அது எந்த எந்தச் சூழலில் FALSIFIABLE என்பதையும்
கூடவே முன்வைக்க வேண்டும். இல்லாவிடில்
அந்தத் தியரி நிராகரிக்கப்படும். இதுதான்
இன்றைய நிலை. இது குறித்துப் பலமுறை
எழுதி இருக்கிறேன்.





                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக