செவ்வாய், 14 மே, 2019

மரண தண்டனை விதித்த பிறகும்
கருணை மனு போட மறுத்த புலவர் கலியபெருமாள்!
மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய
மறுத்த நாதுராம் கோட்சே!
கமலஹாசன் அறியாத உண்மைகள்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்த
மூன்று தலைவர்களில் ஒருவர் புலவர் கலிய பெருமாள்.
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஒரு அழித்தொழிப்பு வழக்கில், அதாவது கொலை
வழக்கில் புலவருக்கு மரண தண்டனை விதிக்கப்
பட்டது. புலவர் மட்டுமல்ல, அவரின் மகன்கள்,
உறவினர் என்று புலவரின் குடும்பமே சிறையில்
இருந்தது. இந்த வரலாறு எதுவும் இன்றைய
தலைமுறைக்குத் தெரியாது. சொல்ல வேண்டிய 
நக்சல்பாரிகளும் குழுக்களுக்கு இடையிலான பொறாமை
உணர்ச்சி காரணமாகச் சொல்வதில்லை. நிற்க.

செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்
ஆகிய அனைத்தும் புலவரின் மரண தண்டனையை
உறுதி செய்தன. அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு
போடும் காலம்.

எவ்வளவோ வற்புறுத்தியும் ஜனாதிபதிக்கு கருணை மனு
போட புலவர் மறுத்து விட்டார். அரசிடம் கருணை கோர
மாட்டேன் என்று பாறையைப் போல உறுதியுடன்
நின்றார் புலவர்.

இருப்பினும் இவ்வழக்கில் பிறரை விடுவித்த அரசு
புலவரையும் விடுவித்தது அவரின் கருணை மனு
இல்லாமலேயே.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மரண தண்டனை
விதிக்கப்பட்ட ஒரு கைதி, ஜனாதிபதிக்கு கருணை மனு
போட மறுத்தவராக புலவர் திகழ்கிறார். இதே போன்ற
வேறொரு நிகழ்வும் இந்திய வரலாற்றில் உண்டு.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் படுகிறார்;
30 ஜனவரி 1948ல். நாதுராம் கோட்சே (A1), நாராயண் ஆப்தே
(A2) உள்ளிட்ட 8 பேர் விசாரணை நீதிமன்றத்தால்
தண்டிக்கப் படுகின்றனர். கோட்சே, ஆப்தே இருவருக்கும்
மரண தண்டனையும் ஏனைய 6 பேருக்கு ஆயுள்
தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது விசாரணை
நீதிமன்றம்.  

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தாங்கள்
நிரபராதிகள் என்று கூறி 7 பேர் மேல்முறையீடு
செய்தனர். இந்த மேல்முறையீடடை பஞ்சாப்
உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஆனால், தான் நிரபராதி
என்றோ தண்டனையைக் குறைக்கக் கோரியோ
நாதுராம் கோட்சே மேல்முறையீடு செய்யவில்லை.
He did not appeal against his conviction and death sentence.

பஞ்சாப் உயர்நீதிமன்றம் கோட்சே, ஆப்தே ஆகிய
இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை
உறுதி செய்தது. ஏனைய 6 பேரில் 4 பேருக்கான
ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப் பட்டது.
ஆயுள் தண்டனை பெற்றவர்களில் கோட்சேயின்
தம்பி கோபால் கோட்சேயும் ஒருவர்.

அ) பஞ்சாப் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய தேதி
8 நவம்பர் 19449.
ஆ) கோட்சே, ஆப்தே இருவரும் அம்பாலா சிறையில்
15 நவம்பர் 1949 அன்று தூக்கில் இடப்பட்டனர்.தீர்ப்பு
வந்த ஒரே வாரத்துக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்
படுகிறது.

இதைப் படிக்கிற வாசகர்களுக்கு நியாயமாக ஒரு
கேள்வி எழ வேண்டும். ஆனால் அப்படி ஒரு கேள்வி
எவருக்கும் எழாது என்று நான் அறிவேன்.

பஞ்சாப் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, உடனே
7 நாட்களுக்குள் தூக்கில் போட்டு விடுவார்களா?
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எதுவும் கிடையாதா
என்ற கேள்வியை வாசகர்கள் எழுப்பினால் மகிழ்ச்சி.

காந்தி கொலை நடந்தது 1948ல்.
கோட்சே தூக்கில் இடப்பட்டது 1949ல்.
இந்தியாவில் உச்ச நீதிமன்றம் (Supreme Court)
ஏற்படுத்தப் பட்டது 1950ல். அதாவது காந்தி கொலை வழக்கு
முடிந்து தீர்ப்பு நிறைவேற்றப் பட்ட பிறகு.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் (Constitution)
1950 ஜனவரி 26ல் செயல்பாட்டுக்கு வருகிறது. அதன்
பிறகே உச்ச நீதிமன்றம் அமைக்கப் படுகிறது. எனவே
உச்சநீதிமன்ற மேல்முறையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

புலவர் கலிய பெருமாள் அவர்கள் வர்க்க எதிரிகளைப்
படுகொலை செய்வது (annihilation of class enemies) என்ற
சாரு மஜூம்தாரின் அரசியல் வழியை முழுமனதோடு
ஏற்றவர். எனவே ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டு
இறைஞ்சி நிற்க அவர் தயாராக இல்லை. அவர்
போற்றுதலுக்கு உரியவர்; வணங்கத் தக்கவர்.

நாதுராம் கோட்சே தான்தான் காந்தியைக் கொன்றவர்
என்றும் அதற்கான காரணங்கள் இன்னின்ன என்றும்
நீதிமன்றத்தில் தெளிவாகக் கூறியவர். காந்தியைக் கொலை
செய்ததை அவர் தயக்கமின்றி ஒப்புக் கொண்டவர்.
அவரது ஒப்புதல் வாக்குமூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் 1) நாதுராம் கோட்சே 2) புலவர்
கலிய பெருமாள் ஆகிய இருவர் மட்டுமே மேல்முறையீடு
செய்யாமலும் கருணை மனு போடாமலும் (முன்னர்க்
கூறியபடி) தங்களின் கொள்கையில் வழுவாமல்
பாறை போன்ற உறுதியுடன் நின்றவர்கள். மீதி
அனைவரும் கருணை மனு உள்ளிட்ட அனைத்து
வழிகளையம் பயன்படுத்தியவர்களே.
  
.பகத் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
கருணை மனு எதுவும் கூடாது என்று உறுதியாக
இருந்தார் பகத்சிங். இதை இக்கட்டுரையில் குறிப்பிட
விரும்பவில்லை. ஏனெனில் இது 1947க்கு முன், அதாவது
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த நிகழ்வு.  

பகத் சிங், உத்தம் சிங், வாஞ்சிநாதன், நாதுராம் கோட்சே,
புலவர் கலிய பெருமாள் ஆகியோர் கொலை
செய்திருக்கலாம். அவை கொள்கைக்காகச் செய்யப்பட்ட
கொலைகள்.எனவே அவர்கள் இறுதி வரை கம்பீரமாக
நின்றனர்.

ஆனால் கூலிக்குக் கொலை செய்த இழிந்த பிண்டங்கள்
உயிர்ப்பிச்சை கேட்டு மனித குலத்துக்கே அருவருப்பை
ஊட்டிக் கொண்டு திரிகின்றனர்.

விடுதலையை நேசிக்கும் எவனும்
மரணத்தையும் கூடவே நேசிக்க வேண்டும்.
அப்படி மரணத்தை நேசித்த கோட்சே, புலவர்
ஆகியோரின் உறுதியைப் போற்றுவோம்.
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
Gandhi is no saint. நக்சல்பாரி இயக்கம் அதன் தொடக்க
காலத்தில், மகாத்மா காந்தியைத் தீவிரமாக வெறுத்தது.
நாடெங்கும் காந்தி சிலைகளை நக்சல்பாரிகள்
உடைத்தனர்.
*******************************************************    


   
  

   
            

  


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக