புதன், 8 ஏப்ரல், 2020

கட்டுரை
மலையின் சிகரத்தில் ஒரு காலும்
கடலின் ஆழத்தில் ஒரு காலுமாக
விசுவரூபம் எடுத்து நிற்கும் குவான்டம் கொள்கை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
கடலையும் கடல் அலைகளையும் குழந்தைகள்
இளம் வயதிலேயே அறிந்து கொள்வது கட்டாயம்.
அறிய வைப்பது பெற்றோரின் கடமை!

"நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி."
இது பாரதியின் காவிய வரி. இதில் கடல் அலைகளின்
நிறம் நீலம் என்கிறார் பாரதியார்.

நிறம் என்றால் அலைநீளம் என்றே இயற்பியல் கூறும்.
(Colour means wavelength). வெவ்வேறு நிறங்கள் என்றால்
வெவ்வேறு அலைநீளம் கொண்ட அலைகள் என்கிறது
இயற்பியல்.

ஆயின், நீல நிறத்தின் அலைநீளம் என்ன? இக்கேள்விக்கு
ஒரு பெண் தன்னுடைய ப்ரா அளவைத் துல்லியமாகக்
கூறுவது போல இயற்பியலால் கூற இயலாது.
420 நானோமீட்டர் முதல் 490 நானோமீட்டர் வரையிலான
அலைநீளமே நீலநிறம் என்று இயற்பியல் கூறும். இங்கு
RBG எனப்படும் மூன்று நிறங்களை (சிவப்பு, நீலம், பச்சை)
மட்டும் கருதும் நிறவெளியே (Colour space) பின்பற்றப் படுகிறது.

இக்கட்டுரையைப் படிக்கும் இயற்பியல் மற்றும் பொறியியல்
மாணவர்களே, நிறங்களின் அலைநீளங்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிச்சயம் நீங்கள் செய்து
பார்த்திருப்பீர்கள். டைபிராக்சன் கிரேட்டிங் முறையிலோ
அல்லது நியூட்டனின் வளையங்கள் முறையிலோ
கண்டறிந்தீர்கள்தானே! உலகப் பிரசித்தி பெற்ற சோடியம்
விளக்கின் அலைநீளத்தைக் கண்டறிந்தீர்கள் அல்லவா?
நீங்கள் கண்டறிந்த அலைநீளம் என்ன? அதைத்
தெரிவியுங்கள். நிற்க.      

மீண்டும் அலைக்கு வருகிறபோது கண்ணதாசன் வந்து
விடுகிறார்.
"வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்"
என்ற அவரின் அந்தாதி ஓர் மாபெரும் மானுட அற்புதம்.

நீரலைகள், நினைவலைகள் என்று இரண்டு வகையான
அலைகளைக் கவிஞர் குறிப்பிடுகிறார். இதில்
நீரலைகளுக்கு மட்டுமே பௌதிக இருப்பு (physical existence)
உண்டு. எனவே இயற்பியல் நீரலைகளை ஏற்றுக் கொண்டு
நினைவலைகளைக் குப்பையில் வீசுகிறது.

நினைவலைகள் என்பதெல்லாம் metaphysical.
அவற்றின் ஆதரவாளர்களுக்கு இங்கு இடமில்லை.
அவர்கள் ஜக்கி வாசுதேவிடமோ அல்லது பாதிரியார்களிடமோ
போகலாம்.

ஒளி அலைகள் என்று கேள்விப் பட்டு இருப்போம். ஆனால்
நியூட்டன் ஒளியானது ஒரு அலை என்பதை ஏற்கவில்லை.
ஒளி என்பது துகளே என்றார் அவர். உலகப் புகழ் பெற்ற
அவரின் துகள் கொள்கை (corpuscular theory of light) 12ஆம்
வகுப்பு இயற்பியலில் பாடமாக இருக்கிறது.

கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் ( Christian Huygens 1629-1695)
என்பவர் நியூட்டன் காலத்து விஞ்ஞானி. இவர் ஒளியானது
அலையாக இருக்கிறது என்றார். எனினும் நியூட்டனுக்கு
முரணான இவரின் கொள்கை நியூட்டனின் மறைவு வரை
மங்கியே கிடந்தது.

ஒளி அலையா அல்லது துகளா என்பதைக் கண்டறிய
ஆயிரம் பரிசோதனைகள் நடந்தன. இவற்றில்
முரண்பட்ட முடிவுகள் கிடைத்தன. சில பரிசோதனைகள்
ஒளி அலையாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியம்
கூறின. சில பரிசோதனைகளில் ஒளி தன்னை துகளாக
மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டது. இதனால்
அறிவியல் உலகில் ஒரு நிச்சயமற்ற நிலை நீடித்தது.

விஞ்ஞானிகள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, அலை,
துகள் என்று வாதிட்டார்கள். உலகமே இரண்டாகப்
பிளவு பட்டது. ஆடு மேய்க்கிறவன் முதல்
அடுப்பங்கரையில் பத்துப் பாத்திரம் தேய்க்கிறவள்
வரை அலைக்கட்சி என்றும் துகள் கட்சி என்றும்
பிரிந்து ஐரோப்பாவில் மோதிக் கொண்டார்கள்.

அலை துகள் மோதலைக் கருவாகக் கொண்டு முட்டாள்
எழுத்தாளர்கள் சிறுகதையும் நாவலுமாய் எழுதிக்
குவித்தார்கள். துகள் கட்சியைச் சேர்ந்த குப்பம்மாளை
அலைக்கட்சியைச் சேர்ந்த துலுக்காணம் காதலிப்பதும்
இக்காதலுக்கு நேரும் எதிர்ப்புகளையும் காவியமாக்கி
விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தார்கள்
எழுத்தாள மூடர்கள்.

புள்ளி போட்ட ரவிக்கைக்காரி
பொட்டுப் பொட்டு சேலைக்காரி
மாட்டுச்சாணி அள்ளும்போது
மாமன் மனசு துள்ளுதடி.
(இது துலுக்காணம்).

கடலிலே அலையடிக்க
கன்னி மனசிலும் அலையடிக்க
ஆட்டுப் புழுக்கை அள்ளையிலே
மாமன் நெனப்பு கொல்லுதையா.
(இது குப்பம்மா) 

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில் விஞ்ஞானிகள்
தீர்ப்பு வழங்கினார்கள். அலையா துகளா என்ற
பிரச்சினைக்கு முடிவு கட்டினார்கள். நூற்றாண்டுகளாக
நீடித்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் வழங்கிய தீர்ப்பு
இதுதான்!
ஒளி துகளாகவும் இருக்கிறது; அலையாகவும் இருக்கிறது.
ஒளி-துகள் இரட்டைத் தன்மையே ஒளி பற்றிய
மெய்ம்மை (wave particle duality) ஆகும்.

பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பின் மீதுதான் குவான்டம்
தியரி உருவாக்கப் பட்டுள்ளது. எல்லாக் கொள்கைகளும்
ஏதேனும் ஒரு ஒற்றைத் தன்மை மீது கட்டப்பட்டன
என்று கொண்டால், அதற்கு மாறாக, குவான்டம்
கொள்கையானது  இரட்டைத் தன்மை மீது கட்டப்
பட்டுள்ளது. இதனால்தான் இன்று வரை அது புரிந்து
கொள்ளக் கடினமாக உள்ளது.

ஆயின் ஒரே நேரத்தில் ஒளியானது துகளாகவும்
அலையாகவும் இருக்குமா? அப்படித் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுமா? கேள்விகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்தார் நியல்ஸ் போர். ஒரு நேரத்தில்
ஒரு பண்பு மட்டுமே வெளிப்படும் என்றார். அதாவது
ஒரு பரிசோதனையின்போது ஒளி தன்னை அலையாக
வெளிப்படுத்திக் கொண்டால், அதன் துகள் பண்பு
அப்பரிசோதனையில் வெளிப்படாது என்கிறார்.
இவரின் இக்கோட்பாடு "நிரப்புக் கோட்பாடு"
(Principle of complementarity) எனப்படுகிறது.
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக