Interstellar
-----------
ஒரு பேரிடர் சூழலில் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் Interstellar படம் பார்த்ததில்.. மனித ஆற்றலின் மீதும் , இயற்கையின் மீதும் அபார நம்பிக்கை ஏற்பட்டு மனதின் அழுத்தம் குறைந்ததென்றால் அது மிகையல்ல.
-----------
ஒரு பேரிடர் சூழலில் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் Interstellar படம் பார்த்ததில்.. மனித ஆற்றலின் மீதும் , இயற்கையின் மீதும் அபார நம்பிக்கை ஏற்பட்டு மனதின் அழுத்தம் குறைந்ததென்றால் அது மிகையல்ல.
Interstellar படத்தின் இயற்பியல் நுண்விவரங்களை எழுத தனித்தனியாக 10 பதிவுகள் வேண்டும். முக்கிய இயற்பியல் விவரங்கள் , கதை , படத்தின் தாத்பரியம் , திரைமொழி குறித்த எனது உணர்வுகளை பகிர்ந்துள்ளேன்.
Interstellar
--------
--------
கதை
---
---
நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் கொரோனா பேரிடரை விட 100 மடங்கு அபாயகரமான கட்டத்தை பூமி ’இண்டர்ஸ்டெல்லார் ‘ படத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பூமி வாழத் தகுதியற்ற ஒரு கோளாக ஆகிக் கொண்டிருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் குறைந்து நைட்ரஜன் வாயு அதிகமாயிருக்கிறது. இருக்கும் கொஞ்சம் ஆக்சிஜனை சுவாசித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் பூமி மக்கள். பூமியின் கடைசி மனித தலைமுறை இதுதானோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது.
பூமி மனிதர்கள் சுவாசிக்க முடியாமல் மடிந்துப் போகக் கூடும் என்ற நிலையில் , சிறந்த விண்கப்பல் பைலட்டான கூப்பரை அவர்கள் தேர்ந்தெடுத்து நாசா விஞ்ஞானிகள் குழுவை சந்திக்குமாறு செய்கின்றனர். ( அவர்கள் என்பவர்கள் யார் ? ) . ஒரு புழுதிப்படலத்தில் வீட்டிற்குள் விழும் மண் துகள்களை பைனரி முறையில் டீகோட் செய்ததில், கூப்பருக்கு ஒரு location கிடைத்து.. இவ்வாறாகா நாசாவை அடைகிறான் கூப்பர்.
நாசா விஞ்ஞானிகள் குழு மனித இனத்தைக் காப்பாற்றுவதற்கான திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். பூமியிலிருந்து மனித சமூகத்தை விண்கப்பல் மூலமாக புதியதொரு கோளுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது திட்டம் A. ஆனால் , பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு அவ்வளவு மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதென்பது இயலாத காரியம். எனவே பூமியின் ஈர்ப்பு விசையையே அதற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க வேண்டும்.
பூமியில் மனிதர்கள் அழிந்தாலும் , பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் ஒரு கோளில் மனித இனம் தழைத்து விட வேண்டும் . ஆயிரக்கணககான மனித கருமுட்டைகளை அங்கு வள்ர்த்து மனித இனம் புதிய கோளை தனது வீடாக்க வேண்டுமென்பது திட்டம் B.
இதற்காக வேறொரு கேலக்சியில் விஞ்ஞானிகள் குழு ஒன்று வாழத்தகுந்த கோளை ஆராய்ந்துக் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த விண் பயண திட்டத்திற்கு தயங்கும் கூப்பர் பின்னர் சம்மதிக்கிறான்.
ஆரம்ப காட்சிகளிலேயே கூப்பரின் மகள் மர்ஃபியின் அறையில் புத்தக அலமாரியிலிருந்து புத்தகம் தானாக விழுகிறது. இதனை அமானுஷ்ய செயலென கூப்பரிடம் கூறுகிறாள் மர்ஃபி. அதனை மறுக்கிறான் கூப்பர். ஆனால் , புத்கம் விழுந்த செயலை morse முறையில் மர்ஃபி தீர்த்த போது அது STAY என்ற வார்த்தையாக வருகிறது.
இந்நிலையில் நாசாவின் மிஷனில் இணைந்துக் கொண்டு விண் பயணம் செய்யவிருப்பதாக மர்ஃபியிடம் கூப்பர் சொல்ல.. அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் மர்ஃபி. STAY என்ற வார்தையை முன்வைத்து தந்தை போக வேண்டாமென அடம் பிடிக்கிறாள். பெரும் உணர்வுப் போராட்டங்களுக்கிடையே குடும்பத்திடமிருந்து விடைபெறுகிறான் கூப்பர். மர்ஃபிக்கு ஒரு வாட்சை தந்து விட்டு செல்கிறான்.
விண் பயணம் ஆரம்பிக்கிறது. கூப்பர் , பிராண்ட் , டார்ஸ் ரோபோ , ரோம் உள்ளிட்ட அஸ்ட்ரானெட் குழு Endurance இல் ( விண் கப்பல் ) 2 வருட பயணத்துக்குப் பிறகு சனி கோளின் அருகே அவர்கள் உருவாக்கியிருக்கும் worm hole ஐ அடைகிறார்கள். ( அவர்கள் என்பவர்கள் யார் ? ) . கூப்பர் குழுவினரின் விண் கப்பலில் ஆயிரக்கணக்கான மனித கருமுட்டைகளும் உடன் வருகின்றன.
Worm hole என்பது விண்வெளியை தனது ஈர்ப்பு விசையால் வளைத்து.. விண்வெளியின் தூரத்தை குறைக்கும் ஒரு செயற்கை பாதை. Worm hole இற்குள் பயணம் தொடர்கிறது. இப்பயணத்தின் போது காலத்திற்கிடையேயான சந்திப்பு நடக்கிறது. அஸ்ட்ரேனெட் பிராண்ட் வேறொரு காலத்தை சந்தித்து கை கொடுக்கிறாள்.
பின்னர் , வார்ம் ஹோலின் வழியே வேறொரு கேலக்சியை அடைகிறார்கள் கூப்பர் குழுவினர். ஏற்கனவே அந்த கேலக்சியில் சில கோள்களை ஆராயச் சென்ற நாசா விஞ்ஞானிகள் அனுப்பியத் தகவலின் அடிப்படையில் 2 கோள்களை ஆராய்கின்றனர் கூப்பர் குழுவினர். ஆனால் , இரண்டும் கோளிலிலுமே அவர்களுக்கு நல்ல செய்தி இல்லை.
கூப்பர் குழுவினர் முதலில் இறங்கும் நீர் கோளின் ஒரு மணி நேரம் என்பது பூமியின் 7 வருடத்திற்கு சமம். ஆம், மாமேதை ஐன்ஸ்ட்டீன் அவர்கள் சொன்ன relativity. காலம் சார்புத் தன்மை கொண்டது. ஒரு கோளின் நிறை , தனது நட்சத்திலிருந்து அது கொண்டுள்ள தூரம் இவைகளால் ஒரு கோளின் கால அளவு தீர்மானிக்கபப்டுகின்றது.
பூமியின் நிறை ( mass ), ஈர்ப்பு விசை , சூரியனிலிருந்து அதன் தொலைவு போன்ற தன்மைகளால் பூமியின் காலமானது ஒரு நாளைக்கு 24 மணி நேரமாக இருக்கிறது. இதே, சூரியனிலிருந்து பூமியை விட வெகு தொலைவில் இருக்கும் வியாழன் கோளில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம் . சனி கோளின் ஒரு நாள் என்பது 11 மணி நேரம் . இதே வெள்ளி கோளில் ஒரு நாள் என்பது பூமி கணக்கில் 116 நாள். வெறும் space இல் உள்ளப்டியே காலம் மிக மெதுவாக நகரும்.
இப்போது புதிய கேலக்சியின் நீர் கோளில் இறங்கும் கூப்பர் குழுவினர் அங்கு மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு , குழுவில் ஒருவரை இழந்த நிலையில் திரும்பி Endurance க்கு வருகின்றனர். நீர்க் கோளில் 3 மணி நேரம் காலத்தை செலவிட்டதால் பூமி காலத்தின் படி 21 வருடங்கள் கழித்து விண் கப்பலுக்கு திரும்பி வருகின்றனர். விண்கப்பலில் இருக்கும் ரோம் மத்திய வயதுக்காரனாக மாறி விட்டிருக்கிறான்.
இந்த இடைவெளியில் தனது மகனிடமிருந்து வந்திருக்கும் தகவல்களை பார்க்கிறான் கூப்பர். மகன் பெரியவனாகி தனக்கு ஒரு பேரக் குழந்தையை பெற்றுக் கொடுத்திருப்பது , தனது தந்தை இறந்து விட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளையும் அறிந்து வாழ்க்கையின் முக்கிய கட்டங்களைத் தான் தொலைத்திருப்பதை உணர்ந்து அழுகிறான் கூப்பர்.
இதற்கிடையே நாசாவில் தலைமை விஞ்ஞானி இறந்த செய்தியை வீடியோ மெசேஜாக சொல்லுகிறாள் மர்ஃபி. திட்டம் A என்பது எப்போதும் சாத்தியமில்லை. திட்டம் B யை செயல்படுத்துவதற்காகவே கூப்பர் குழுவினர் விண்பயணம் மேற்கொண்டிருப்பதையும் கூறுகிறாள். தலைமை விஞ்ஞானி இதனை மறைத்து விட்டதையும் , கூப்பர் குழுவினன் பூமி மனிதர்களை காப்பற்றப் போவதில்லை என்றும் கூறுகிறாள்.
ஆனால் , இச்செய்தியை பார்க்கும் முன்னரே கூப்பர் குழுவினர் மற்றொரு ஐஸ் கோளில் சென்று விட்டிருக்கின்றனர். விஞ்ஞானி மன் தங்களை ஏமாற்றி விட்டதை உணர்கின்றனர். Endurance திரும்பும் போராட்டத்தில் கூப்பர் தரப்பின் விஞ்ஞானி ரோம் மற்றும் பொய் கூறிய விஞ்ஞானி மன் ஆகியோர் மரணம் அடைகின்றனர்.
விண்கப்பல் திரும்பி மர்ஃபி கூறிய செய்தியை அறியும் கூப்பர் அதிர்கிறான்.
இப்போது கூப்பர் , பிராண்ட் மற்றும் ரோபோ டார்ஸ் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். கர்காங்ட்டுவா என்ற மாபெரும் கருந்துளையின் அருகில் இருக்கும் ஒரு கோளை ஆராய அவர்கள் இப்போது விரைகிறார்கள். கருந்துளையின் வெளியே அதன் Event Horizon இல் ( எல்லைகளில் ) இருக்கும் ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு என்டியூரன்ஸ் பயணிக்கும் பொருட்டு, எடைகளை குறைக்க திட்டமிடுகிறான் கூப்பர்.
இதற்கிடையே கூப்பருக்கு மற்றமொரு திட்டமும் இருக்கிறது. அது கருந்துளை என்பது பிரபஞ்சத்தின் ஒளி , வெளி , காலம் அனைத்தையும் வளைக்கவல்லது. அப்படியெனில் கருந்துளைக்குள் செல்வதால் தான் இழந்த காலத்திற்குள் போய் வரலாற்றை மாற்றி விடலாமா ? தன் மகளுடனேயே தங்கி விடலாமா என்று நினைக்கிறான் கூப்பர்.
அதன்படி ரோபோ டார்ஸ் முதலில் தன்னை விண்கப்பலில் இருந்து துண்டித்துக் கொண்டு கரந்துளையின் ஈர்ப்பிற்குள் சிக்க , தொடர்ந்து கூப்பரும் தன்னைத் துண்டித்துக் கொண்டு கருந்துளையின் ஈர்ப்பிற்குள் சிக்குகிறான். பிராண்ட் கன்ணீருடன் கூப்பரை பிரிந்து பயணத்தை தொடர்கிறாள். தான் மானசீகமாக காதலித்திருக்கும் விஞ்ஞானி எட்மாண்ட் ஆராய்ச்சி செய்த கோளை நோக்கி பயணிக்கிறாள் பிராண்ட்.
கருந்துளைக்குள் சிக்கும் எந்தப் பொருளும் அந்தப் பொருளாக இருக்க முடியாது. கருந்துளையின் அதிபயங்கர ஈர்ப்பு விசை எந்த matter வடிவத்தையும் இல்லாமல் ஆக்கி விடும். ஏன் , ஒளியையும் , வெளியையும் கூட வளைக்கவல்லது அல்லவா கருந்துளை !!
இந்நிலையில் கருந்துளைக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறான் கூப்பர். அவன் கருந்துளையின் ஆழ் பகுதியை அடையுமுன்.. ஒரு டெசராக்ட் அவனை தடுத்து காப்பாற்றுகிறது. அந்த டெசராக்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது. ( அவர்கள் என்பவர் யார் ? ) . இங்கு டெசராக்ட் கூப்பர் வீட்டில் மர்ஃபி அறையின் புத்தக அலமாரி வடிவில் இருக்கிறது.
அந்த டெசராக்ட்டில் நிகழ்கிறது ஓர் அற்புதம். கூப்பர் அங்கு காலத்தை ஒரு matter dimension ஆக , அதாவது ஒரு பருப்பொருள் பரிமாணமாக பார்க்கிறான். அவனது கடந்த காலம் ஒரு பருப்பொருள் பரிமாணமாக அவன் முன் நிற்கிறது. கடந்த காலத்தோடு தொடர்புக் கொள்ள முயற்சிக்கிறான் கூப்பர். தான் வெளியேறுவதை தடுக்குமாறு கருந்துளைக்குள் இருந்து மர்ஃபியிடம் மன்றாடுகிறான். காலத்தோடு முட்டுகிறான் மோதுகிறான். அந்த முயற்சியில் தான் முன்பு புத்தகம் விழுந்தது. STAY என்ற வார்த்தையை சொல்லியது.
இதற்கிடையே தனது தந்தை தங்களை கைவிட்டுசென்றதாக எண்ணிக் கொண்டிருக்கும் மர்ஃபி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் முயற்சியில் இருக்கிறாள். தனது அறையில் புத்தக அலமாரியில் அப்பா கொடுத்த வாட்சை வைத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் மர்ஃபி.
இதற்கிடையே தனது தந்தை தங்களை கைவிட்டுசென்றதாக எண்ணிக் கொண்டிருக்கும் மர்ஃபி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் முயற்சியில் இருக்கிறாள். தனது அறையில் புத்தக அலமாரியில் அப்பா கொடுத்த வாட்சை வைத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் மர்ஃபி.
இதற்கிடையில் கருந்துளையின் டெசராக்ட்டில் இருக்கும் கூப்பர் கடந்த காலத்தை மாற்றுவதற்காக அவர்கள் நம்மை அனுப்பி வைக்கவில்லை என்பதை உணர்கிறான். தன் மகளுக்கு ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க உதவி செய்வது தான் இப்போது முடியும் என்பதையும் உணர்கிறான்.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட கால , தூர அளவுகள் கடந்து தன் மகளுக்கும் தனக்குமான அன்பின் மூலம் மர்ஃபிக்கு தான் உதவுவதை புரிய வைக்க முடியும் என்பதை உணர்கிறான். அந்த வகையில் காலங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் வேறொரு பரிமாணத்தில் நடக்கிறது. முன்பு புத்தகத்தை விழ வைத்த அமானுஷ்யமும் , இப்போது கடிகாரத்தின் வழி சங்கேத மொழியில் பேசுவதும் வேறு யாருமல்ல தனது தந்தை தான் என்பதை உணர்கிறாள் மர்ஃபி. My dad is the ghost ந்று உணர்ந்த நிலையில் வாட்ச்சில் நிகழும் மாற்றத்தை வைத்து , அதனை டீகோட் செய்துஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கிறாள் மர்ஃபி.
இந்நிலையில் 'அவர்கள் என்பவர்கள் யார்' ? என்று உணர்கிறான் கூப்பர். அவர்கள் என்பவர்கள் கடவுளோ , ஏலியன்களோ அல்ல. அவர்கள் என்பவர்கள் தமது சந்ததியான எதிர்கால மனிதர்கள் என்பதை உணர்கிறான் கூப்பர்.
நான் எப்படி என் மகளோடு காலம் கடந்த தொடர்பு கொண்டேனோ , அதே போல் தான் எதிர்கால மனிதர்கள் நம்முடன் இப்போது தொடர்புக் கொள்கிறார்கள். என்று ரோபோ டார்சுக்கு விளக்குகிறான் கூப்பர்.
எதிர்கால மனிதர்கள் மனித இனத்தை காப்பாற்றுவதற்கு தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை , தன் மகள் மர்ஃபியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதையும் டார்சிடம் விளக்குகிறான் கூப்பர்.
இதனையடுத்து நோக்கம் நிறைவேறிய நிலையில் கால டெசராக்ட் சரிகிறது. கூப்பர் கருந்துளையின் வழியே மீண்டும் கடந்த கால பாதையில் பயணிக்கிறான். அப்போது கடந்த காலத்தில் விண்கப்பலில் தன்னுடன் வந்துக் கொண்டிருக்கும் பிராண்ட்டிடம் கைக் குலுக்குகிறான். கருந்துளை மீண்டும் நமது Milkyway கேலக்சியோடு இணைகிறது. காலங்களுக்கிடையேயான சந்திப்பு இப்போது கூப்பரின் point of view வில் நிகழ்கிறது.
கூப்பர் மயக்க நிலைக்கு செல்கிறான். பின்னர் கண்விழிக்கையில்.. ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கிறான். அவர்கள் அதாவது எதிர்கால மனிதர்கள் கூப்பரை கருந்துளையினுள்ளிருந்து பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
கூப்பர் கண்விழிக்கும் கோளானது ஒரு துணைக்கோள். சனி கோளை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு துணைக்கோள். அங்கு தனது மகள் பெயரிலான ஒரு நிலையத்தில் கண் விழிக்கிறான் கூப்பர். ஈர்ப்பு விசை புதிரை விடுவித்து விட்டதால்.. மனிதர்கள் அந்தக் கோளின் ஒரு பகுதியை தங்கள் வசதிக்கேற்ற ஒரு ஆர்க் வடிவில் வளைத்திருக்கிறார்கள்.
கிளம்பும் போதிருந்த அதே வயதில் இருக்கும் கூப்பர், தற்போது 120 வயதைத் தொட்டிருக்கும் தன் மகளை சந்திக்கிறான். அவளது வேண்டுகோளின் பேரில் கர்காங்ட்டுவா கருந்துளையின் அருகே எட்மாண்ட் கோளில் தன்னந்தனியாக ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் பிராண்ட்டை சந்திக்க புறப்படுகிறான் கூப்பர். மீண்டும் விண்பயணம் தொடர்கிறது.
வாழத் தகுதியுள்ள இடமான எட்மாண்ட் கோளில் மனித இனத்தின் அடையாளமாக ஒரு நிலையத்தை நிறுவி ஆராய்ச்சிகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள் பிராண்ட். பூமி கைவிட்ட போதிலும் மனித இனம் பிரபஞ்சத்தில் இப்போது பிழைத்துக் கொண்டுள்ளது.
படத்தின் தாத்பர்யம்
------
இயற்கையின் எந்த பரிமாணத்தையும் விடவும் மிக வலிமையானது உயிர்க்ளுக்கிடையேயான அன்பு என்பதே படத்தின் தாத்பர்யமாக நான் உணர்கிறேன்.
------
இயற்கையின் எந்த பரிமாணத்தையும் விடவும் மிக வலிமையானது உயிர்க்ளுக்கிடையேயான அன்பு என்பதே படத்தின் தாத்பர்யமாக நான் உணர்கிறேன்.
கூப்பருக்கும் - மர்ஃபிக்குமான தந்தை மகள் பாசம் தான் காலங்கள், தூரங்கள் கடந்து அவர்களுக்குள்ளான கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க வைத்து மனித இனத்தைக் காப்பாற்றியது.
விஞ்ஞானி எட்மாண்ட் மீது விஞ்ஞானி பிராண்ட் கொண்டுள்ள காதலால் தான்.. 2 கோள்கள் கை விட்ட போதிலும் எட்மாண்ட் கோளை நம்பி தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு இப்போது மனிதர்கள் வாழ வேறொரு கோளை கண்டுபிடித்திருக்கிறாள்.
நேசம் பிரபஞ்சத்தின் எந்த பரிமாணத்தையும் விட வலிமையானது, எந்த இயற்பியல் சமூகவியல் அளவீடுகளுக்குள்ளும் வைக்க முடியாத இயற்கையே அதிசயிக்கும் ஒரு பரிமாணம் நேசம். பூமி உயிர்கள் தங்களுக்கிடையே உண்டு செய்துக் கொண்ட நேசம்.
ஆம் நேசமே மனித இனத்தை பிரபஞ்சத்தின் வலிமையுள்ள இனமாக மாற்றியது. அந்த நேசத்தின் வடிவம் தான் சமூகம்.
திரைக்கதை , திரைமொழி - நோலன் தனித்துவங்கள்
----------
சமகால மனிதர்களின் பிழைத்தலில் தான் எதிர்கால மனிதர்கள் வந்திருக்கக் கூடும். சமகால மனிதர்களை எதிர்கால மனிதர்கள் காப்பாற்றினார்களெனில்... அந்த எதிர்கால மனிதர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள் ? எதிர்கால மனிதர்கள் என்பது தான் விடை. அந்த எதிர்கால மனிதர்களை ? மீண்டும் எதிர்கால மனிதர்கள் என்பதே விடை. இந்த முடிவற்ற சுழல் போய்க் கொண்டே இருப்பது ஒரு கிறிஸ்ட்டோஃபர் நோலன் தனித்துவம் எனலாம்.
சமகால மனிதர்களின் பிழைத்தலில் தான் எதிர்கால மனிதர்கள் வந்திருக்கக் கூடும். சமகால மனிதர்களை எதிர்கால மனிதர்கள் காப்பாற்றினார்களெனில்... அந்த எதிர்கால மனிதர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள் ? எதிர்கால மனிதர்கள் என்பது தான் விடை. அந்த எதிர்கால மனிதர்களை ? மீண்டும் எதிர்கால மனிதர்கள் என்பதே விடை. இந்த முடிவற்ற சுழல் போய்க் கொண்டே இருப்பது ஒரு கிறிஸ்ட்டோஃபர் நோலன் தனித்துவம் எனலாம்.
கிட்டத்தட்ட இன்ஸ்செப்ஷனிலும் படத்திலும் , கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் என ஒரு முடிவற்ற சுழல் கான்செப்ட்டை நோலன் செய்திருப்பார்.
அதே போல் , இன்செப்ஷனில் ஆர்க்கிடெக்ட் மாணவியும் , டிகார்ப்பியோவும் தங்கள் கனவுகளில்.. கற்பனையாக நகர அமைப்பினை ஆர்க் வடிவத்தில் மாற்றி கொண்டு வந்து அமைக்கும் விஷயத்தை இண்ட்டர்ஸ்டெல்லாரில் மனிதர்கள் புலம் பெயர்ந்த புதிய கோளின் நகர அமைப்பில் கையாண்டிருப்பார் நோலன்.
அதே போல் , வேறொரு கேலக்சி கோள்களில் விஞ்ஞானிகள் குழுவினரின் போராட்டத்தையும் , பூமியில் பிழைக்க முடியாத சூழலில் மர்ஃபி உள்ளிட்டவர்களின் போராட்டத்தையும் Parallel காட்சிகளாக அமைத்திருப்பார் நோலன்.
இன்செப்ஷனிலும் இதே போல் 3 கனவுக் காட்சிகளையும் parallel ஆக அமைத்திருப்பார்.
எல்லாவற்றையும் விட interstellar இன் முத்தாய்ப்பே கருந்துளையினுள் நடக்கும் காட்சிகள் தான். இந்த க்ளைமேக்ஸ் சீக்வென்சில் முறையே 3 காலங்கள் கையாளப்படுகிறது. ஒன்று , அலமாரியிலிருந்து புத்தகம் விழுதலை அமானுஷ்யமாக கருதும் மர்ஃபியின் பால்ய வயது காலம் , இரண்டு, விஞ்ஞானி மர்ஃபி தனது அறையில் புதிரை விடுவிக்கும் காலம் , மூன்று , கருந்துளையின் டெசராக்ட்டினுள் பருப்பொருள் பரிமாணமாக இருக்கும் இவ்விரண்டு காலத்தினூடும் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் கூப்பரின் காலம்.
இந்த 3 கால காட்சியில் ஒரு சுவாரஸ்யமென்னவெனில்... மர்ஃபியின் பால்ய வயது காலமானது கூப்பர் நேரில் வாழ்ந்த கடந்த காலம் , மர்ஃபியின் பால்ய வயது காலத்தை நமக்கு ஏற்கனவே காட்டிச சென்ற திரைக்கதை. மர்ஃபியின் யுவதி காலத்தையும் , கூப்பரின் கருந்துளை காலத்தையும் நிகழ்காலமாக நம்முன் நிறுத்துகிறது. ஆனால் , மர்ஃபி யுவதியாக ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் காலமானதும் கடந்த காலம் தான். அதனால் தான் அது டெசராக்ட்டினுள் வளைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் கடந்த முறை யார் மர்ஃபிக்கு புதிரை விடுவிக்க உதவியது ? இதே அவள் தந்தை கூப்பர் தான் .
மீண்டும் அதே முடிவற்ற சுழல். பிரபஞ்சவியலின் தன்மையே இந்த முடிவற்ற சுழல் தான் !!
விண்வெளியின் பெரு நிசப்தம் , முக்கியமான தருணங்களில் ஏற்படும் ஆச்சர்ய உணர்வு , வார்ம் ஹோலில் பயணிக்கும் போது ஏற்படும் உறைந்து போகச் செய்யும் உணர்வு , புதிய கேலக்சிக்கு சென்றடைந்த பின் ஏற்படும் அலாதியான ஆசுவாசம் , நீர்க் கோளில் ஒரு நீரலை அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் கொடுக்கும் த்ரில் உணர்வு , விண்கலம் விண்கப்பலோடு dock கும் காட்சிகள் , திட்டம் A என்பதே பொய் என்று மர்ஃபி வீடியே மெசேஜில் கூறுகையில் . கூப்பர் குழுவினர் ஐஸ் கோளை நோக்கி பயணிக்கும் காட்சி , கருந்துளைக்குள் பயணம் ஆரம்பித்த பின் சுற்றத்தை மறக்கும் அளவு நம்மை உறைந்துப் போகச் செய்யும் உணர்வு. என ஒரு விண்பயணத்தின் போது மனித மனம் சந்திக்கும் ஆச்சர்ய உணர்வுகளை எல்லாம் தன் திரைமொழி இலாவகத்தால் துல்லியமாக கடத்தி இருப்பார் கிறிஸ்ட்டோபர் நோலன். ஒரு விண்பயணம் போய் விட்டு வந்த கிறக்கம் இன்னும் தீரவில்லை. ஒலியமைப்பு , படத்தொகுப்பு , CGI காட்சிகள் , பின்னனி இசை , அருமையான ஒளிப்பதிவு , அபார நடிப்புகள் என நோலன் மேஜிக்கிற்கு பின்பு எவ்வளவு உழைப்பு இருந்திருக்க வேண்டும் !!
நீர்க் கோளில் இருந்து அதிவேகமாக வெளியேறும் விண்கலம். அப்போது ஒலியமைப்பும் , இசையும் உச்ச பதட்டத்தில் இருக்கும். விண்வெளியை அடைந்தவுடன் சட்டென ஒரு Extreme wide shot இல் படு நிசப்தத்துடன் விண்கப்பல் நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் விண்கலம். இப்படியே தேர்ந்த திரைமொழியே படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும்.
க்ளைமேக்ஸ் சீக்வென்சில் மூன்று காலத்தின் தருணங்களையும் மிகச் கச்சிதமாக எடிட் செய்திருப்பது அசத்தலான திரை மேதைமை. இப்படி பலப் பல காட்சிகளை விவரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் , மிக நீண்ட பதிவாக விடும்.
மிக சிக்கலான கதையமைப்புகள் கொண்ட திரைக்கதையிலும் , திரைமொழியிலும் அபார மேதைமை இருந்தால் தான் இன்ஸ்செப்ஷன் , இண்ட்டர்ஸ்டெல்லார் போன்ற படங்களை உருவாக்கியிருக்க முடியும். கிறிஸ்ட்டோபஃர் நோலன் சமகாலத்தின் திரைமேதை என்றால் அது மிகையல்ல.
- அருண் பகத்
15 / 4 / 20
15 / 4 / 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக