வெள்ளி, 10 ஏப்ரல், 2020

நோம் சாம்ஸ்கியின் பொருத்தமற்ற பேச்சு!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி 90 வயதைக்
கடந்தவர். அமெரிக்கரான இவர் தம் சொந்த நாடு
குறித்தும் தம் நாட்டின் தலைவர் டிரம்ப் குறித்தும்
புலம்பித தள்ளி இருக்கிறார். இவ்வாறு புலம்புவதற்கு
இவருக்கு முழு உரிமை உண்டு. இவரின் சில
புலம்பல்களை அல் ஜஸீரா ஊடகம் ஒரு
கட்டுரையாக்கி இருக்கிறது.

இந்த 91ஆவது வயதில் தன்னைத்தானே தனிமைப்
படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நோம் சாம்ஸ்கி.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ
என்ற அச்சமே அவரின் சிந்தனையை முழுவதுமாக
ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இவரின் கட்டுரையில் காத்திரமான அல்லது ஆழமான
ஆய்வுக்குரிய கருத்து எதுவும் இல்லை. போகிற போக்கில்
மிகவும் காசுவலாக நோம் சாம்ஸ்கி சொன்னது
ஒரு கட்டுரை ஆக்கப் பட்டுள்ளது. ஒரு சப் மீடியாக்கர்
(sub mediocre) ஊடகவியலாளர் இதைத் தமிழில் தோராயமாக
மொழிபெயர்த்து நோம்சாம்ஸ்கியின் பிராண்ட்
வேல்யூவுடன் பரபரப்பை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
ஆக இக்கட்டுரை ஒரு passing cloud, அவ்வளவுதான்!
(passing cloud = மழை தராத மேகம்).

1) நோம் சாம்ஸ்கியின் கட்டுரையில் விவரப் பிழைகள்
(factual errors) உள்ளன. சீனாவுக்கு அவர் அளிக்கும்
நற்சான்றிதழ் முற்றிலும் தவறானது. சீனாவின் பேச்சைக்
கேட்டுக் கொண்டு, கொரோனா வைரஸானது மனிதருக்கு
மனிதர் பரவாது என்று WHO அறிவித்தது மொத்த
உலகிற்கும் தவறாக வழிகாட்டியதாகும்.

இது போர்க்குற்றம் போன்றது. கொரோனா முடிவுற்று
நிலைமை சீரானதும், உலக நாடுகள் சேனா மீது
வழக்குத் தொடரும்; சீனாவிடம் இருந்து
இழப்பீடு கோரும்.

ஆக நோம் சாம்ஸ்கியின் சீன ஆதரவு நிலைபாடு
மானுட விரோதத் தன்மை உடையது. சீனா என்றைக்கோ
ஏகாதிபத்திய நாடாக மாறி விட்டது. சீனாவை
ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று இன்றும் எவரேனும்
கணித்தால், அது வடிகட்டிய முட்டாள்தனம் ஆகும்.

போல்ஷ்விக் கட்சியின் இளைஞர் அமைப்பான மஜஇக
சார்பாக, சீனா ஏகாதிபத்திய நாடா என்ற நூல்
வெளியிடப்பட்டுள்ளது. சீனா ஒரு ஏகாதிபத்தியம்
என்று அந்நூலில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

2) சந்தைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது
என்று அங்கலாய்க்கிறார் நாம் சாம்ஸ்கி. அதுதானே
முதலாளித்துவப் பொருளாதாரம்.சந்தையின்
விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் பொருளாதாரம்தான்
முதலாளியப் பொருளாதாரம்.

சந்தையானது கொரோனா வைரசுக்கான தடுப்பு
மருந்தைக் கோரவில்லை என்கிறார் நோம் சாம்ஸ்கி.
ஏன்? (இங்கு சந்தை என்பது அமெரிக்கச் சந்தையைக்
குறிக்கும்).

இதற்குக் காரணம் என்ன? சராசரியான சந்தைக்
காரணிகள் இதற்குக் காரணம் அல்ல. சமகால
உலகில் தடுப்பூசிகளுக்கு மிகப்பெரிதும் எதிர்ப்புக்
காணப் படுகிறது. தடுப்பூசி எதிர்ப்பில் உலகிலேயே
அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது.

அமெரிக்காவில் தோன்றிய தடுப்பூசி எதிர்ப்பு,
இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள
பிற்போக்குச் சக்திகளால் மக்களிடையே பரப்பப்
பட்டு, மக்களிடம் தடுப்பூசி எதிர்ப்பானது
செல்வாக்குப் பெற்றுள்ளது.

ஹீலர் பாஸ்கர், கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி என்று
பல சமூக விரோதிகள் தடுப்பூசிக்கு எதிராக இங்கு
இடைவிடாமல் பிரச்சாரம் செய்துகொண்டுதான்
இருக்கிறார்கள். இவையெல்லாம் அமெரிக்கக்
கழிவுகள்.

எனவே தடுப்பூசி எதிர்ப்பு உச்சத்தில் இருக்கும்
அமெரிக்காவில், கொரோனாவுக்கான தடுப்பூசிக்கு
சந்தையில் என்ன வரவேற்பு இருக்க முடியும்?    

மற்றப்படி லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்
கொண்ட அமெரிக்காவின் நிறுவனங்கள் பற்றியும்,
அமெரிக்க முதலாளித்துவத்தின் மக்களுக்கு எதிரான
கொள்கைகள் குறித்தும் நோம் சாமஸ்கி கூறுவதுடன்
நாம் முரண்பட எதுவும் இல்லை.

3) மூன்றாவதாக அணுஆயுதப்போர் குறித்த சவால்
அப்படியே இருக்கும் என்கிறார் நாம் சாம்ஸ்கி.
இவர் 50 ஆண்டுகளுக்குப் பிந்திய சிந்தனையில்
வாழ்கிறார். இவரால் 2020க்கு வர இயலவில்லை.
அணுஆயுதப் போர் அபாயம் என்றால், இன்று
விஷயம் தெரிந்த யார் எவரும் கைகொட்டிச்
சிரிப்பார்கள்.

மொத்த உலகமும் நாஷ் சமநிலையைப் பேணிக்
கொண்டிருக்கிறது. அணுஆயுதப் பூச்சாண்டி
கடந்த நூற்றாண்டோடு காலாவதி ஆகிப்போன ஒன்று.
எனவே அணுஆயுத அபாயம் என்றெல்லாம் சாமஸ்கி
உளறுவது அவரின் அறியாமையால்.

சாம்ஸ்கி மொழியியல் அறிஞர். அவ்வளவுதான்.
அவர் நவீன ராணுவ யுத்த தந்திர நிபுணரோ,
அணுஆயுத அறிஞரோ, அறிவியலாளரோ அல்ல.
மொழியியல் குறித்து அவர் என்ன வேண்டுமானாலும்
பேசட்டும். அதற்கு அவருக்கு உரிமை உண்டு.

தனக்குப் புலமை இல்லாத துறைகளில் அவர் ஏதேனும்
ஒன்று கிடக்க ஒன்று சொன்னால், அவர் மீது
நாம் குற்றம் காணக் கூடாது. ஏனெனில் அவரின்
வயது  91.
**************************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக