திங்கள், 14 ஜூன், 2021

 மார்க்சியரே கேள்! -(1)

===============
அமெரிக்க மார்க்சியரான முரே புக்சின் துவக்க காலத்தில் ட்ராட்சுகியராக இருந்தார். பின்னர் மார்க்சியத்தை கைவிட்டு விட்டு அரசின்மையியத்தின் மீது ஈடுபாடு கொண்டார். இறுதி வரை அதிகாரத்துவ சோசியலிசத்தை எதிர்த்து அதற்கு மாற்றாக "விடுதலையிய சோசியலிசத்தை" (libertarian socialism) ஆதரிப்பவராக இருந்தார். பின்னாட்களில் தனது "அரசு எதிர்ப்பு சோசியலிச" நிலைப்பாட்டின் அடிப்படையில் இவர் உருவாக்கிய "கம்யூனலிசம்" என்ற கோட்பாடு அரசின்மையியர்களால் விமர்சிக்கப்பட்டதால் தன்னை அரசின்மையியர் என்று அழைப்பதை நிறுத்திக் கொண்டார். இவர் உருவாக்கிய கம்யூனலிசத்தின் நீர்த்துப் போன வடிவத்தை சிரிய குர்துக்கள் தங்களுடைய தன்னாட்சி பகுதியில் நடைமுறைப்படுத்தினர்.
முரே புக்சின் தன்னை "அரசின்மையிய கம்யூனிசுடு" என அழைத்துக் கொண்ட காலகட்டத்தில் மார்க்சியத்தின் மீதான விமர்சனங்களை "மார்க்சியரே கேள்" என்ற துண்டறிக்கையாக எழுதி வெளியிட்டார்.
(முழுக்கட்டுரையை ஆங்கிலத்தில் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம். https://theanarchistlibrary.org/.../murray-bookchin...)
1969 இல் வெளியான அந்த கட்டுரையின் கருத்துக்களை இந்த பதிவில் சுருக்கமாக பகிர்கிறேன்.
++++++
மார்க்சியமானது பின்தங்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்திப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பண்புகளாகக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் உருவாகிய கருத்தியல் ஆகும். இதனால் தற்கால மற்றும் வருங்கால சிக்கல்களைத் தீர்க்க இயலாதாதாக மாக்சியம் இருக்கிறது. இதன் அடிப்படைக் காரணிகள் மார்க்சியம் உருவான காலகட்டத்தின் குறைகளிலேயே உள்ளன. எனவே "புதிய மார்க்சியம்" என புதிய பெயரைச் சூடி மார்க்சியத்தை புதுப்பிப்ப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலையே ஆகும் எனக் கூறும் புக்சின் தனது கட்டுரையை நான்கு பகுதிகளாக பிரிக்கிறார்.
1) மார்க்சியத்தின் வரலாற்றுக் குறைகள்.
2) பாட்டாளி வர்க்கம் எனும் கட்டுக்கதை.
3) கட்சி எனும் கட்டுக்கதை
4) மார்கிசம் அரசின்மையிம் எனும் இரு பெரும் மரபுகள்.
இத்தலைப்புக்களின் கீழ் புக்சின் கூறும் கருத்துக்களை ஒவ்வொன்றாகக் காணலாம்.
1) மார்க்சியத்தின் வரலாற்றுக் குறைகள்.
- முதலாளித்துவமானது அனைத்துப் பிரிவு மக்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மார்க்சியம் "தொழிலாளர் வர்க்கத்தின்" மீது நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது.
- தொழில் நுட்பங்களை வளர்ப்பதற்கு ஒரு இடைக்கால அரசு தேவை என மார்க்சியம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் தொழில் நுட்பங்களோ மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி விட்டன.
- உத்திகளையும் செயல்பாடுகளையும் மார்க்சியம் இன்னும் வறுமையையும் உழைப்புச் சுரண்டலையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் தேவைக்கு அதிகமான உற்பத்தியிலும் வாழ்க்கையானது அபத்தத் தன்மை கொண்டிருப்பது புரட்சிகர உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
- மத்தியத்துவமும் குறுங்குழுக்களின் செல்வாக்கும் அரச அதிகாரமும் முன்னெப்போதையும் விட கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் அதிகாரக் குவிப்பை வலியுறுத்தும் மத்தியத்துவ கட்சிகளைக் கட்டுவதிலேயே மார்க்சியம் ஈடுபாடு கொண்டிருக்கிறது.
- சோசியலிசத்தின் பணிகளாகக் கருதப்பட்ட "தேசியமயமாக்கல்" போன்றவற்றை பல்வேறு சூழல்களில் முதலாளித்துவமே செய்து கொண்டிருக்கிறது.
- பாட்டாளி வர்க்கமானது மழுங்கடிப்பட்டு வர்க்கப் போராட்டமானது தொழிற்சங்கங்களின் மூலம் முதலாளித்துவத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டது.
- பற்றாக்குறையின் காலகட்டத்தால் உருவாக்கப்பட்ட பழமைவாத கருத்துக்கள் மற்றும் மரபின் விழுமியங்களின் மீது பிடிப்பற்ற ஒரு புதிய இளந்தலைமுறை பற்றாக்குறையின் நெருக்கடிகளை உணராமல் புரட்சிகர உணர்வுகளைக் கொண்டதாக உருவாகி ----------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக