7) யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்துக்கு
எங்கல்ஸ் அளித்த விளக்கத்தால் கவரப்பட்ட
ஈ எம் எஸ்சும் ஞானியும்!
ஞானிக்கு மறுப்பு கட்டுரையின் 7ஆம் பகுதி!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
(மதம் கடவுள் பற்றிய ஞானியின் பார்வை மீதான
எமது விமர்சனத்தின் தொடர்ச்சி)
மதம் பற்றிய மார்க்சிய பார்வையை ஒரே வரியில்
சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.
"ஒரு சோஷலிச அரசைப் பொறுத்தமட்டில், மதம்
என்பது அவரவரின் சொந்த விஷயம்". (எங்கல்ஸ்)
இந்த வாக்கியத்தில் உள்ள "அரசைப் பொறுத்த மட்டில்"
என்ற தொடர் மிகவும் முக்கியமானது. இதன் பொருள்
அரசு எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல; எந்த
மதத்துக்கும் அரசு சலுகை அளிக்காது; விரும்பும்
மதத்தை குடிமக்கள் பின்பற்றலாம்; மதத்தின் பெயரால்
பாரபட்சம் இருக்காது என்பதுதான் என்று லெனின்
விளக்கம் அளிக்கிறார்.
அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த
மட்டில், மதம் என்பது கட்சி உறுப்பினர்களின்
சொந்த விஷயம் அல்ல என்று கூறும் லெனினின்
மதம் பற்றிய கருத்துக்களைப் பின்வருமாறு
சுருக்கமாகக் கூறலாம். (பார்க்க: சோஷலிசமும் மதமும்,
லெனின்; லெனின் தொகுப்பு நூல்கள் (ஆங்கிலம்),
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1965,
தொகுப்பு-10. பக்கம் 83-87)
1.கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில்
(party programme) நாத்திகத்தை நாம் இடம்பெறச்
செய்யவில்லை. செய்யவும் கூடாது.
2. மதம் என்பதை அருவமான கருத்து (abstract) சார்ந்த
பிரச்சினையாகவோ, வர்க்கப் போராட்டத்தோடு
தொடர்பற்ற வெறும் அறிவார்ந்த கேள்வியாகவோ
பார்க்கக் கூடாது.
3. மதம் பற்றிய பிரச்சினை முதன்மையான பிரச்சினை
அல்ல. அது முதலிடத்தில் வைப்பதற்கு .உரியது அல்ல.
இதன் மூலம் லெனின் தெளிவு படுத்துவது
என்னவெனில், வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்குக்
கீழ்ப்படுத்தப் பட்டதே மதம் மற்றும் நாத்திகம்
என்பதே.
ஞானி நாகராஜன் போன்றவர்கள் லெனினின்
இந்த வழிகாட்டுதலை தங்களின் நிலைபாட்டுக்கு
ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
சீக்கியரான ஹரிகிஷன்சிங் சுர்ஜித் தமது சீக்கிய
மத அடையாளத்துடனேயே மார்க்சிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளராக இருந்ததை அவர்கள் சுட்டிக்
காட்டுகிறார்கள்.
மதம் என்பது கட்சி உறுப்பினர்களின் சொந்த
விஷயம் அல்ல என்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளைத்
திட்டித் திருத்திய எங்கல்ஸ் மதம் குறித்த
கூர்மையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
அதே நேரத்தில் கிறிஸ்துவ மதம் பற்றிய
எங்கல்சின் பின்வரும் கருத்துக்களை ஞானி
போன்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
பைபிளில் புதிய ஏற்பாட்டில் உள்ள "யோவானுக்கு
வெளிப்படுத்திய விசேஷம்" குறித்து எங்கல்ஸ்
ஒரு கட்டுரை (The Book of Revelation) எழுதி உள்ளார்.
(பார்க்க: Marx and Engels: On Religion. Progress Publishers, Moscow 1957)
(இது எங்கல்ஸ் 1883ல் எழுதியது. அதாவது தமது
63ஆம் வயதில் எழுதியது). இதில் எங்கல்ஸ்
பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
1) "நவீன சோஷலிசம் எப்படி மக்களைப் பற்றிக்
கொண்டதோ, அதே போல கிறிஸ்துவமும்
மக்களைப் பற்றிக் கொண்டது. பல்வேறு பட்ட
தமக்குள் முரண்பட்ட மக்கள் குழுக்களையும்
கூட கிறிஸ்துவம் அரவணைத்துக் கொண்டது.
அதே நேரத்தில் கிறித்துவத்தில் இணைந்த
அக்குழுக்கள் அனைவருமே அரசு அதிகாரத்துக்கு
எதிராகவும் ஆளுவோருக்கு எதிராவும் இருந்தனர்."
("Christianity got hold of the masses, exactly as modern socialism
does,.................— but all opposed to the ruling system, to
'the powers that be'.")
2) அடுத்து fornication பற்றியும் எங்கல்ஸ் பேசுகிறார்.
தன்னுடன் திருமண உறவில் இல்லாத மற்றவர்களுடன்
கொள்ளும் உறவு fornication ஆகும். கிறிஸ்துவத்தில்
இணைந்த மக்கள் குழுக்களில் சில குழுவினரிடம்
இந்தப் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
எங்கல்ஸ். தொடர்ந்து, "எந்தவொரு மாபெரும்
புரட்சிகர இயக்கத்திலும், 'சுதந்திரமான பாலுறவு'
முன்னணிக்கு வருவது ஒரு சுவாரஸ்யமான விஷயம்
ஆகும்" என்கிறார்.
.(".....and that they were fond of fornication. It is a curious fact that with
every great revolutionary movement the question of “free love” comes
in to the foreground.")
3) எந்தவொரு மாபெரும் புரட்சிகர இயக்கத்தைப்
போலவே, கிறிஸ்துவமும் மக்களால் உருவாக்கப்
பட்டது. ("Christianity, like every great revolutionary movement, was
made by the masses").
4) யூதர்களும் புற சமயத்தாரும் கூறிய, உயிர்ப்
பலிகளால் கடவுளை அல்லது கடவுளர்களை
சாந்தப் படுத்த வேண்டும் என்ற கோட்பாடே
கிறிஸ்துவத்துக்கே உரிய தனித்துவமான
கோட்பாடாக மாறியது. உண்மையில்
இதனால்தான் கிறிஸ்துவம் உலகம் தழுவிய
மதமாக ஆகியது. ஏசுநாதரின் உயிர்த்தியாகமே
கால காலத்துக்கும் போதுமான மகத்தான
தியாகமாக ஆனது.
("There is nothing but the old Jewish and heathen notion, that God,
or the gods, must be propitiated by sacrifices, transformed into the
specific Christian notion (which, indeed, made Christianity the
universal religion) that the death of Christ is the great sacrifice
which suffices once for all").
5) தொடர்ந்து, யோவான் கூறிய "அந்த மிருகத்தின்
எண் 666 ஆக இருந்தது" என்ற வாசகத்தின் புதிரை
பெர்டினண்ட் பெனரி (Ferdinand Benary) என்னும் அறிஞர்
விடுவித்து விட்டதைக் கூறுகிறார் எங்கல்ஸ்.
666 என்பது நீரோ சீசரைக் குறிக்கும் என்கிறார்.
(இது குறித்து தனிக்கட்டுரை பின்னர்
எழுதப்படும்- கட்டுரை ஆசிரியர்)
ஞானி நாகராஜன் முன்வைக்கும் தர்க்கம்!
-------------------------------------------------------------------
அ) வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு உட்பட்டே
மத எதிர்ப்பு நாத்திகச் செயல்பாடுகள் அமைய
வேண்டும்.
ஆ) கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில்
(party programme) நாத்திகம் இடம் பெறக்கூடாது.
இ) மதம் என்பது முதன்மையான பிரச்சினை அல்ல;
முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க வேண்டியதல்ல.
என்பவை போன்ற மார்க்சிய போதனைகளைக்
குறிப்பிடும் ஞானியும் நாகராஜனும், மதம்
பற்றிய மூல ஆசான்களின் போதனைகளில்
நிறையவே ifs and buts இருப்பதைச் சுட்டிக் காட்டி
தங்களின் நிலையை நியாயப் படுத்துகின்றனர்.
மேலும் கிறிஸ்துவ மதம் பற்றிய எங்கல்ஸின்
கருத்துக்கள் அவர்களை உற்சாகம் கொள்ளச்
செய்கின்றன. கிறிஸ்துவம் ஒரு மாபெரும்
புரட்சிகர இயக்கம், அது நவீன சோஷலிசம்
போல மக்களை பற்றிக் கொண்டது என்னும்
எங்கல்ஸின் புகழாரங்களைக் கொண்டு
அவர்கள் தங்களை நியாயப் படுத்த
முயல்கின்றனர்.
கிறிஸ்துவம் பற்றி எங்கல்ஸ் எழுதியதால்
கவரப்பட்ட ஈ எம் எஸ் அவர்கள் வேதங்களின்
நாடு என்ற ஒரு நூலை அருளினார்.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஞானியின்
கருத்துக்களுக்கு எமது மறுப்பு அடுத்த
கட்டுரையில் வெளியாகும்.
-------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
-----------------=
மேலே கூறிய கிறிஸ்துவம் பற்றிய எங்கல்ஸின்
கருத்துக்களை அ மார்க்ஸ், எஸ்வியார் மற்றும்
அவர்களின் அடிப்பொடியினர், பின்நவீனத்துவர்கள்
ஆகியோர் பெருமளவில் மக்களிடம் கொண்டு
சென்றனர். கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்கள்
இவற்றை நோட்டீஸ் அடித்து விளம்பரப் படுத்தி
எங்கல்சை பால் தினகரன் ரேஞ்சுக்குக் கொண்டு
சென்றனர்.
Fornicationஐ எங்கல்சே ஆதரிக்கிறார் என்று
அ மார்க்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே
கூறியதை நான் காதால் கேட்டேன். மார்க்சியம்
நோக்கி வர வேண்டிய பல இளைஞர்களை
அறிவுஜீவிகளை திட்டமிட்டு எதிர் முகாமுக்கு
அனுப்பினர் அ மார்க்ஸ் வகையறாக்கள்.
*************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக