இணையம் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கை இல்லை!
-------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
அறிவியலும் தொழில்நுட்பமும் நாலுகால் பாய்ச்சலில்
போனால் பரவாயில்லை! நானூறு கால் பாய்ச்சலில்
போகின்றன. அதிலும் தொழில்நுட்பம் நாலாயிரம் கால்
பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.
ஐஓடி எனப்படும் (IoT = Internet of Things) அண்மைக்கால
தொழில்நுட்பம் பற்றித் தெரியாமல் சமகால சமூகத்தில்
வாழ இயலாது. பொருட்களின் மீது செயல்படும் இணையமே
ஐ ஓ டி (IoT) ஆகும். எனவே இதைத் தமிழில் பொருட்களின்
இணையம் என்று அழைக்கலாம்.
இன்டர்நெட் எனப்படும் இணையம் எதில் செயல்படுகிறது?
கணினியில் செயல்படுகிறது. கணினி இல்லாமல் அந்தரத்தில்
இணையம் செயல்பட முடியாது. இல்லையா? இணையம் என்பது
உயிர் என்றால், கணினி என்பது உடல். உயிரானது ஏதேனும்
ஒரு உடலில்தான் செயல்பட முடியும். அது போல இணையம்
என்பது கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ (laptop)
செயல்பட முடியும்.
அறிவியல் வளர்ச்சியின் போக்கில், அலைபேசியில்
GPRS (General Paket Radio Service) வசதி,. அதாவது இன்டர்நெட்
வசதி வந்தது. குறிப்பாக கூர்திறன்பேசிகளில் (SMART Phones)
இணைய வசதி அமைந்து அதுவும் நன்றாகச் செயல்படுகிறது.
பொருட்களின் இணையம்!
-------------------------------------------
ஆக, 1) கணினியில் இணையம் (Internet of Computer or laptop)
2) அலைபேசிகளில் இணையம் (Internet of Mobile phone) ஆகிய
இரண்டும் தற்போது நடைமுறையில் உள்ளன. அதாவது இரண்டு
பொருட்களின் மீது இணையம் செயல்படுகிறது. இது போதாது.
இருபது பொருட்கள் மீது, 200 பொருட்கள் மீது, 2000 பொருட்கள் மீது
இணையம் செயல்பட வேண்டும். உலகளாவிய இணையப் பரவலுக்கு, உலகின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இணைய சேவை
வழங்குவதற்கு, எல்லாப் பொருட்களின் மீதும் இணையம் செயல்பட வேண்டும். இவ்வாறு எல்லாப் பொருட்களின் மீதும் செயல்படும் இணையத்தையே பொருட்களின் இணையம் (IoT = Internet of Things)
என்று அழைக்கிறோம்.
எல்லாப் பொருட்களும் என்றால், அரிசி, பருப்பு, புளி,
நல்லெண்ணெய் உட்பட எல்லாப் பொருட்களும் என்று
கருதி விட வேண்டாம். வீட்டு உபயோகப் பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி போன்றவற்றில் இணையம் செயல்படும்.
மேலும் சுவர்க் கடிகாரம், கைக்கடிகாரம், LED டிவி, கதவின் பூட்டு
உள்ளிட்ட கணக்கற்ற பொருட்களின் மீது இணையம் செயல்படும்.
எந்த ஒரு பொருளின் மீதும் இணையம் செயல்படுமாறு செய்ய
முடியுமானால் அப்பொருள் ஐஓடி ஆகி விடும்.
ஐஓடி தொழில்நுட்பத்தில் உள்ள பொருட்கள் வெறும் ஜடப்
பொருட்களாக இராமல் அறிவுடைய பொருட்களாக இருக்க
வேண்டும்.(The things of IoT have to be intelligent). அவை சூழலில்
இருந்து விஷயங்களை உணர வேண்டும். அதற்காக அவற்றின்
மீது உணர்விகள் (sensors) பொருத்தப் படும்.
மங்கி வரும் திண்டுக்கல் பூட்டுக்கள்!
------------------------------------------------------------
உங்கள் வீட்டுக் கதவின் பூட்டில் இணையம் செயல்பட்டால்
அந்தப் பூட்டு ஐஓடி (IoT) ஆகி விடும். நீங்கள் எங்கிருந்து
கொண்டும் உங்கள் வீட்டின் கதவைப் பூட்டலாம் அல்லது
திறக்கலாம். உங்கள் வீட்டின் கதவைப் பூட்ட .மறந்து விட்டு,
நீங்கள் அலுவலகத்துக்கு வந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அலுவலகத்தில் இருந்தபடியே உங்களின் வீட்டைப் பூட்டலாம்.
உங்கள் வீட்டுக் கதவுக்கு ஸ்மார்ட் லாக் (SMART LOCK) பொருத்தி
விட்டு, உங்கள் பூட்டை IoT பூட்டாக அதாவது இணையம்
செயல்படும் பூட்டாக மாற்றி விட்டால், திருநெல்வேலியில் உள்ள
உங்கள் வீட்டை டெல்லியில் இருந்து கொண்டு பூட்டவோ
திறக்கவோ செய்யலாம். இங்கு SMART என்பது "சாமர்த்தியம்"
என்னும் அகராதிப் பொருளைத் தரும் சொல் அல்ல.
SMART = Self Monitoring, Analysis and Reporting Technology
என்று பொருள்படும்.
எதிர்காலத்தில் கதவுகளின் பூட்டுகள் யாவும் ஸ்மார்ட் லாக்
(SMART Lock) வகையிலான நவீன பூட்டுகளாகவே இருக்கும்.
திண்டுக்கல் பூட்டு போன்ற தமிழகத்தின் பாரம்பரியமான
பூட்டுகளுக்கு இனி எதிர்காலம் இருக்காது. திண்டுக்கல் பூட்டு
என்பது மெக்கானிக்கல் பூட்டு. ஸ்மார்ட் லாக் என்பது எலக்ட்ரானிக்
பூட்டு. எலக்ட்ரானிக் யுகத்தில் தொழிற்புரட்சி 4.0 என்னும் நான்காம்
பதிப்பை நெருங்கும் இந்தக் காலத்தில் மெக்கானிக்கல்
பொருட்களுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
மனைவிக்குப் பதில் சோபியா என்னும் ரோபோ!
----------------------------------------------------------------------------
அலுவலகத்தில் இருந்து களைப்புடன் நீங்கள் வீடு திரும்புகிறீர்கள்.
நீங்கள் வீட்டுக்கு வந்து விட்டதையும் களைப்புடன் இருப்பதையும்
தன் மீது பொருத்தப் பட்டுள்ள உணர்விகள் (sensors) மூலம் ஐஓடி
என்னும் அந்த இணையப்பொருள் உணர்ந்து கொண்டு, உங்களுக்கு
சூடான காப்பி தயாரிக்கும்படி காப்பி மெஷினுக்கு கட்டளை இடும்.
உடனே உங்களுக்கு காப்பி கிடைக்கும். சோபியா (Sophia) போன்ற ஒரு ரோபோவையும் விலைக்கு வாங்கி வீட்டில் போட்டிருந்தால், காப்பியை உங்கள் உதட்டுக்கே கொண்டு வந்து தரும் அந்த ரோபோ. பொண்டாட்டி
கையால் காப்பி என்பதெல்லாம் இனி nostalgiaதான்!
(ஹாங்காங் நிறுவனமான ஹான்சன் ரோபோடிக்ஸ் பெப்ரவரி 2016ல் தயாரித்த பெண்ணுருக்கொண்ட ரோபோவே சோபியா)
மேசைக்கணினியும் மடிக்கணினியும் இடத்தை அடைக்கும்.
ஆனால் இன்று ஐஓடியில் பயன்படும் கம்ப்யூட்டர்
இடத்தை அடைக்காது. அதில் ஒரு சோப்பு டப்பா சைசில்
உள்ள boardல் கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை விஷயங்களும்
அதாவது ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தின் அளவில்
கம்ப்யூட்டர் இருக்கும். இங்கிலாந்து நாட்டுத் தயாரிப்பான
"ரோஸ்பெரி பை" (Rospberry Pi) இப்படிப்பட்ட ஒரு மினி கம்ப்யூட்டர்
ஆகும். இதன் விலை இந்தியாவில் ரூ 1500 முதல் உள்ளது.
இந்தியாவில் தற்போது ராணுவத்தில் இந்த ஐஓடி(IoT) பயன்படுகிறது.
இது IoMT (Internet of Military Things) என்று அழைக்கப் படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் ஐஓடி இந்தியாவில் பரவலான செயல்பாட்டுக்கு
வரும்போது வீடுகள், தெருக்கள், உணவகங்கள், காப்பி நிலையங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள்
ஆகிய அனைத்து இடங்களிலும் அங்குள்ள பொருட்களின் மீதும்
ஐஓடி செயல்படும்.
வரும் ஆண்டுகளில் உலகச் சந்தைகளில் 20 பில்லியன்
(2000 கோடி) ஐஓடி பொருட்கள் அதாவது தன் மீது இணையத்தைச்
செயல்பட அனுமதிக்கும் பொருட்கள் விற்பனைக்கு வரும் என்று
சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
உள்பாவாடையிலும் இணையம்!
-----------------------------------------------------
2000 கோடி பொருட்கள் சந்தைக்கு வருமென்றால், இணையத்துக்கு
ஆட்படாத பொருளே இருக்க முடியாதே என்று வாசகர்கள்
மலைக்கலாம். அப்படியானால் என் மச்சினியின் உள்பாவாடையில்
இணையத்தைச் செயல்பட வைக்க முடியுமா என்கிறார் ஓர்
இளைஞர். ஆம், முடியும் என்பதே அந்த இளைஞருக்கான விடை.
கூர்திறன் உள்பாவாடைகள் (SMART inskirts) மற்றும் கூர்திறன்
ஜட்டிகள் ஆகியவை சிலஆண்டுகளிலேயே பரவலாக இந்தியச்
சந்தைக்கு வந்து விடும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
இவை தற்போதே பயன்பாட்டில் உள்ளன.
மின் வர்த்தகம், மின் ஆளுகை (e commerce, e governance) போன்றதே
மின் ஜவுளி (e textile) ஆகும். ஒரு ஆடையில் அல்லது துணியில்
எலக்ட்ரானிக்ஸ் செயல்படுமானால் அது மின் ஜவுளி எனப்படும்.
இத்தகைய தொழில்நுட்பம் அணிமணிகளின் தொழில்நுட்பம்
(wearable technology) எனப்படும்.
அணிமணிகளின் தொழில்நுட்பம் (wearable technology) என்பது மிகவும் விரிவான ஒன்று. பெண்கள் காதில் அணியும் தோடு, கம்மல்,
காது கேட்கும் கருவி, எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட புடவை, ரவிக்கை,கோட் மற்றும் காலணிகள் ஆகியவற்றில் எலக்ட்ரானிக்ஸ்
செயல்பட்டால், அவை அணிமணிகளின் தொழில்நுட்பம் ஆகும்.
இவற்றில் இணையம் செயல்பட்டால் இவை யாவும் ஐஓடி ஆகிவிடும்.
2014 ஜூலையில் இந்தியாவில் முதன்முதலாக ஹைதராபாத்தில் மின்காலணிகள் (எலக்ட்ரானிக் ஷூக்கள்) விற்கப் பட்டன.
நீட் தேர்வின்போது கம்மல், தோடு, மூக்குத்தி அணியவும் தடை போன்ற கெடுபிடிகள் ஏன் என்றால், அந்த நகைகள் ஐஓடியாக, அதாவது இணையப் பொருளாகப் பயன்படக்கூடும் என்பதாலேயே.
நேர்முக உதவியாளர் அலெக்சா!
-----------------------------------------------------
ஒரு இணையப்பொருள் எப்படி இருக்கும்? எப்படியெல்லாம்
நமக்குப் பயன்படும்? அலெக்சா (Alexa) என்னும் ஐஓடி
(இணையப் பொருள்) குறித்து நம்மில் சிலர் அறிந்திருக்கக் கூடும்.
அமேசான் நிறுவனம் இதை விற்பனை செய்கிறது. இதை வாங்கி
வைத்துக் கொண்டால், இது நமது நேர்முக உதவியாளர் போலச்
செயல்படும்.
மின்விசிறியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? அறையின்
வெளிச்சத்தை 10 சதவீதம் அல்லது 25 சதவீதம் குறைக்க
வேண்டுமா? அலெக்சாவிடம் சொன்னால் போதும்.
உங்களின் குரல் கட்டளையை ஏற்று, சொன்ன வேலையை
அலெக்சா அழகாகச் செய்து கொடுத்து விடும்.
தொடுதிரைத் தொழில்நுட்பம்!
------------------------------------------------
இந்தியாவில் ஓரிரு ஆண்டுகளில் 5ஜி அலைக்கற்றை
பயன்பாட்டுக்கு வந்து விடும். 5ஜிக்கும் ஐஒடிக்கும் நல்ல
ஜோடிப்பொருத்தம் உண்டு. உலகெங்கும் ஐஓடியானது 5ஜி அலைக்கற்றையில்தான் ஜொலிக்கிறது. அப்படியானால்
ஐஓடியானது 5ஜியில்தான் வேலை செய்யும் என்று யாரும்
புரிந்து கொள்ள வேண்டாம். ஐஓடி 4ஜியிலும் வேலை செய்யும்;
3ஜியிலும் வேலை செய்யும். BSNL நிறுவனம் தன்னிடம் உள்ள
4ஜி அலைக்கற்றையைக் கொண்டு, ஐஓடி தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்திச் சேவை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
தொடுதிரைத் தொழில் நுட்பமும் (Touch screen technology)
கூர்திறன்பேசிகளும் (SMART phones) மின்னணுவியலின் மாபெரும்
பாய்ச்சலை அடையாளப் படுத்தின. வேறு எந்தத்
துறையை விடவும் தொலைத்தொடர்புத் துறையில்தான்
மின்னணுவியலின் பயன்பாடு பரவலாக உணரப்படுகிறது.
இன்று பிரமிப்போடு பார்க்கும் ஐஓடி சேவையை இன்னும்
ஓரிரு ஆண்டுகளில் BSNLன் தயவில் வீடுகளிலும் வீதிகளிலும்
பார்ப்போம். டிஜிட்டல் இந்தியாவின் ஒரு முக்கியமான
தொழில்நுட்ப வாகனமாக ஐஓடியை பயன்படுத்தி மகிழ்வோம்.
தொழிற்புரட்சி 4.0
------------------------------
உலகெங்கும் நான்காவது தொழிற்புரட்சி (Industrial Revolution 4.0)
நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத ஒன்றாக
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இதில் முதன்மையான
பங்கு வகிக்கிறது. நடப்பது கலியுகம் அல்ல; சைபர் யுகம் (cyber age).
உலகளாவிய இத்தொழிற்புரட்சியில் இந்தியாவின் பங்கும்
பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
குறிப்பாக மின்னணுத் துறையில், IT துறையில் இந்தியா
சோடை போகவில்லை. பிற நாடுகளுக்கு இணையாக நாமும்
பல கருவிகளை, சாதனங்களை, பல கணினி மென்பொருள்
சேவைகளை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவின்
தயாரிப்புகளான இவற்றை இந்திய மக்கள் ஆதரிக்க வேண்டும்.
வெளிநாட்டுத் தயாரிப்பு, சுதேசித் தயாரிப்பு என்னும்
இரண்டு இருந்தால், இந்தியாவின் சுதேசித் தயாரிப்பை
இந்திய மக்கள் ஆதரிக்க வேண்டும். உதாரணமாக
அமெரிக்காவின் வாட்சப்பும் அதற்கு மாற்றான
இந்தியாவின் "அரட்டை"யும் சந்தையில் உள்ளன.
இந்நிலையில் நம்மில் எத்தனை பேர் இந்தியத்
தயாரிப்பான அரட்டையை உயர்த்திப் பிடிக்கிறோம்?
வாட்சப்புக்கு மாற்றாக "அரட்டை"!
----------------------------------------------------
மிகவும் திறமை வாய்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர்
(technocrat) ஸ்ரீதர் வேம்பு. சென்னை ஐ ஐ டியின் பொறியியல்
பட்டதாரியான இவர் அமெரிக்கா சென்று பிரின்ஸ்டன் பல்கலையில்
பி ஹெச் டி பட்டம் பெற்றார். இந்தியரும் தமிழருமான இவருக்கு
இந்திய அரசு இவ்வாண்டு (2021) பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
சென்னையில் இருந்து இடம் பெயர்ந்து தென்காசிக்கு அருகில்
உள்ள மத்தளம்பாறை என்னும் கிராமத்தில் தற்போது வசித்து
வருகிறார் ஸ்ரீதர் வேம்பு.
சோஹோ கார்ப்பொரேஷன் (Zoho corporation) என்னும் IT
நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. இது
இந்தியாவின் பன்னாட்டு மென்பொருள் சேவை நிறுவனம்
ஆகும். இது IT வட்டாரத்தில் SaaS நிறுவனம் என்று வழங்கப்
படும் (SaaS = Software as a Service).
வாட்சப் (WhatsApp) போன்று ஒரு தகவல் அனுப்பும் உறுபேற்றை
(Messaging App) உருவாக்கி அதற்கு அரட்டை (Arattai) என்று தமிழில்
பெயர் வைத்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஆண்ட்ராய்ட் இயங்கு
முறைமையில் (Android iOS) ல் இது வேலை செய்யும். விரைவில்
இது பரவலாகும்.
அண்மையில் தன் வாடிக்கையாளர்களுக்கான ஒரு அந்தரங்கக்
கோட்பாட்டை (Privacy Policy) வாட்சப் நிறுவனம் அறிவித்தது.
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அந்தரங்கத் தகவல்களை
எங்களின் வணிகத் தேவைக்கு ஏற்ப நாங்கள் பயன்படுத்துவோம்
என்று அறிவித்தது வாட்சப். ("We require certain information to deliver our
Services and without this we will not be able to provide our Services to you").
என்னுடைய தகவல்களை வாட்சப் எடுத்துக் கொள்வது
ஆக்கிரமிப்பு ஆகும். அது என் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்.
எனவே வாட்சப்பில் நீடிக்க நான் விரும்பவில்லை என்று முடிவு
எடுத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வாட்சப்பில் இருந்து
வெளியேறுகிறார்கள். ஒரு மாபெரும் வெளியேற்றத்தை (exodus)
இத்தருணத்தில்தான் அமெரிக்க வாட்சப்புக்கு மாற்றாக
'அரட்டை'யை உருவாக்கினார் ஸ்ரீதர் வேம்பு.
இது வெற்றி அடைந்தால் வாட்சப் பின்னுக்குப் போகும்.
வாட்சப் ஒரு கொடிய ஏகபோக நிறுவனம். இந்தியாவில்
34 கோடி வாடிக்கையாளர்களையும் உலக அளவில்
200 கோடி வாடிக்கையாளர்களையு வைத்துள்ள
வாட்சப் செய்தி அனுப்புதலில் (messaging) ஏகபோகமாக
ஆதிக்கம் செலுத்துகிறது.
ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டலின் மகன் கவின் மிட்டல்
ஒரு செய்தி அனுப்பும் (messaging) நிறுவனத்தை நடத்தி
வந்தார். ஹைக் (HIKE) என்று அதற்குப் பெயர். 16 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனம் அது.
என்றாலும் வாட்சப்பின் ஏகபோகத்தால் சந்தையில்
தாக்குப் பிடிக்க முடியாமல் தகர்ந்து போன நிறுவனங்களில்
கவின் மிட்டலின் ஹைக்கும் ஒன்று.
உலக அளவில் அமெரிக்க வாட்சப்புக்கு மாற்றாக ரஷ்யச் சார்பு
டெலிகிராமும் (TELEGRAM), அதே அமெரிக்காவின் சிக்னலும்
(SIGNAL), புதிதாக வந்துள்ள இந்தியாவின் அரட்டையும்
(ARATTAI) உள்ளன. வாட்சப்பை விவாகரத்து செய்து விட்டு
சிக்னலுக்குத் தாலி கட்டுங்கள் என்கிறார் எலான் மஸ்க்.
அமெரிக்காவின் பெருந்தொழிலதிபரும் தொழில்நுட்ப
அறிஞருமான எலான் மஸ்க் சொல்லுக்கு மதிப்பு உண்டு.
வாட்சப்பில் இருந்து விலகிய இந்தியர்கள் டெலிகிராமில்
இணைந்துள்ளனர். அரட்டை ஒரு தொடக்கநிலை
நிறுவனம் (startup company). சந்தையின் ஏகபோகத்துக்குத்
தாக்குப் பிடித்து அரட்டை நிற்குமா நிலைக்குமா அல்லது
கவின் மிட்டலின் ஹைக் (HIKE) போல் ஆகி விடுமா என்பதைப்
பொறுத்திருந்து பார்ப்போம்!
*******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக