செவ்வாய், 15 ஜூன், 2021

 ஈழ விடுதலைப்போர் மற்றும்

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு!
ஒளிவீசும் உண்மைகளின் அணிவகுப்பு!
தார்மீக அருகதையுடன் எழுதப்படும் எழுத்து!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
அந்தப் பத்திரிகையின் அட்டைப்படம் அப்போது
தமிழகத்தில் சற்றுப் பரபரப்பைக் கிளப்பி
இருந்தது. அதில் ஐந்து பேர் இருந்தனர்.ஒருவர்
டாக்டர் ஆனந்த்; அப்பத்திரிகையின் ஆசிரியர்.
இன்னொருவர் மயிலைப் பேராயர் சின்னப்பர்.
மூன்றாமவர் இக்கட்டுரை ஆசிரியர்.நான்காமவர்
ஒரு வெளிநாட்டவர்.
அவர் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேயை
எதிர்த்துப் போட்டியிட்டவர். இலங்கை
நாடாளுமன்றத்தின் அப்போதைய எம்.பி.
அவர் வேறு யாருமல்ல, சிவாஜிலிங்கம்,
விடுதலைப் புலிகளின் அங்கீகரிக்கப்பட்ட
பிரதிநிதி.
ஈழப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த
நேரம் அது. செஞ்சோலைப் படுகொலைகளைத்
தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில்
ஓர் அரசியல் பணியை நிறைவேற்ற வேண்டிய
தேவை இருந்தது.அதை சிவாஜி லிங்கத்திடம்
ஒப்படைத்து இருந்தார் தேசியத் தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்கள்.
பொறுப்பை ஏற்றுக் கொண்ட சிவாஜிலிங்கத்தால்
அவரால் மட்டுமே அப்பணியை நிறைவேற்ற இயலாது
என்பதும் தகுதி வாய்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்
யாராவது ஒருவரின் உதவியின்றி அப்பணியை
மேற்கொள்ளவே இயலாது என்பதும் தெரிந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்
பட்டிருந்த நேரம் அது. ராஜிவ் படுகொலைக்குப்
பின்னரான அக்காலக் கட்டத்தில் தமிழகத்தில்
ஈழ ஆதரவு முழுவதுமாக மங்கி மறைந்து
போயிருந்த நேரம் அது. திமுகவினர்
பெரியாரிஸ்டுகள் உள்ளிட்ட
ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் திமுக ஆட்சிக் கலைப்பு,
ராஜிவ்
படுகொலைக்குப் பின்னரான
ஈழ ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறை, திமுகவின்
மீதான பொய்யான ராஜிவ் கொலைப்பழி
ஆகிய காரணங்களால் விடுதலைப் புலிகளின்
உறவைக் கத்தரித்துக் கொண்டிருந்த நேரம் அது.
ஏற்ற பணியை நிறைவேற்றுவதில் உதவக்கூடிய
ஒரு தமிழரைக் கண்டறிய பல நாட்கள் முயன்றார்
சிவாஜிலிங்கம். அப்போது இக்கட்டுரை ஆசிரியரைப்
பற்றிக் கேள்வியுற்று அணுகியபோது ஒத்துழைத்தவர்
இக்கட்டுரை ஆசிரியர்.
ரத்தினச் சுருக்கமாகக் கூறுவதெனில், தமிழகத்தின்
கிறிஸ்துவ மதத் தலைமையை அணுகிப் பேசி
ராஜபக்சேவுக்கு எதிராகவும் புலிகளுக்கு
ஆதரவாகவும் அவர்களை மாற்றுவதே அந்த
அரசியல் பணி. அந்த அரசியல் பணியை
சிவாஜி லிங்கமும் இக்கட்டுரை ஆசிரியரும்
வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
அதையொட்டி, கத்தோலிக்க முரசு பத்திரிகையின்
அட்டைப் படத்தில் இக்கட்டுரையின் முதல்
பத்தியில் கூறிய அனைவரின் படமும் அட்டையில்
இடம் பெற்றது.
இதற்கிடையில் எழுதப்பட்ட கட்டுரை சரியாக
வந்திருக்கிறதா என்று பார்க்க வருமாறு
டாக்டர் ஆனந்த் அழைத்ததன் பேரில் இக்கட்டுரை
ஆசிரியரும் சிவாஜி லிங்கமும் சென்றனர்.
தேவையான திருத்தங்களை மேற்கொண்டபின்
கட்டுரை இறுதியாகி வெளிவந்தது.; உரியோரால்
படிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழகம்
முழுவதும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும்
கொந்தளிப்பும் ஈழப்போர் மீதான கவனமும்
புலிகள் மீதான பரிவும் மேலோங்கின.
கட்டுரையை அச்சேற்றுமுன் டாக்டர் ஆனந்த்
இக்கட்டுரை ஆசிரியரிடம் கேட்டார்: "மத்திய
அரசில் வேலை பார்க்கிறீர்கள்; விடுதலைப்
புலிப் பிரதிநிதி சிவாஜிலிங்கத்துடன் நீங்களும்
இருக்கும் படத்தை அட்டையில் போட்டால்,
உங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமே" என்று
கவலையுடன் கேட்டார்.
"ஏற்கனவே தேவைக்கும் மேல் கியூ பிராஞ்சு
ரிப்போர்ட் இருக்கிறது. இந்த அட்டைப் படத்தால்
புதிய ஆபத்து எதுவும் வந்து விடாது; நீங்கள்
தாராளமாகப் போடலாம்" என்று பதிலளித்தார்
இக்கட்டுரை ஆசிரியர்.
திருமுருகன் காந்தி, செபாஸ்டியன் சைமன்
அமீர், கவுதமன் என்று இன்று புற்றீசலாகப்
புறப்பட்டிருக்கும் திடீர் ஈழப் போராளிகள்
எவரும் அன்று சிவாஜிலிங்கத்துக்கு உதவ
முன்வரவில்லை.
அன்று அவர்கள் எல்லோரும் தங்கள் சொந்த
சுயநல வாழ்க்கையில் மூழ்கி இருந்தனர்! ஈழ
ஆதரவாளர்கள் என்ற அடையாளம்
கூட அவர்களில் எவருக்கும் கிடையாது.
ஏனெனில் அன்று ஈழ ஆதரவாளர் என்பது
வருமானம் ஈட்டும் வழியல்ல; மாறாக
நிரந்தரமான கியூ பிராஞ்சு தொல்லைக்கு
வழியாகும்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நிகழ்வை
நினைவு கூறும் இத்தருணத்தில் கத்தோலிக்க முரசு
ஆசிரியர் டாக்டர் ஆனந்த் அவர்களுக்கும் மயிலைப்
பேராயர் சங்கைக்குரிய சின்னப்பர் அவர்களுக்கும்
எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறேன். எல்லையற்ற
மனிதாபிமானத்தை அவர்கள் இருவரும்
வெளிப்படுத்தினர் என்பதை இங்கு பதிவு
செய்கிறேன்.
மதத்தைப் பரப்புவது மட்டும்தான் எங்கள்
வேலையே தவிர, அரசாங்கத்தை எதிர்த்துக்
கொண்டு இன்னொரு நாட்டில் உள்ள விடுதலைப்
புலிகளுக்கு ஆதரவளித்து சிக்கலில் மாட்ட
நாங்கள் விரும்பவில்லை என்று கூறி மயிலைப்
பேராயர் எங்களைத் தட்டிக் கழித்து இருந்தால்
நாங்கள் என்ன செய்ய இயலும்? ஆனால்
அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்றனர்.
இத்தருணத்தில் மேலும் ஒரு முக்கியமான நபரைப்
பற்றி இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
அவர்தான் ஐயா நெடுமாறனின் நேர்முக உதவியாளர்.
மயிலைப் பேராயருடனான எங்களின்
தொடர்ச்சியான சந்திப்புகளில் ஒன்றிரண்டில்
எங்கள் தரப்பில் அவரும் பங்கேற்று இருந்தார்.
அவரை முதன் முதலில் சந்தித்தபோது, உலகிலேயே
மிகவும் வயதான மனிதராக இவர் இருக்கக்
கூடும் என்று எனக்குத் தோன்றியது. தோற்றம்
அப்படி இருந்தது. வயது சுமார் 100, 150 இருக்கும்
என்று நான் கணித்தேன். சிந்தனையும் பழைய
கற்காலச் சிந்தனையாக இருந்தது. மயிலைப்
பேராயர் குழுவினருடனான எங்களின் பேச்சு
வார்த்தையின்போது, நானும் சிவாஜிலிங்கமும்
பரமபத ஏணியில் மேலே ஏறினால், இவர்
பாம்புக் கடியுண்டு எங்களையும் சேர்த்துக்
கீழே இறக்கி விட்டு விடுவார்.
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது, இவரைக்
கழற்றி விட்டு விட வேண்டும் என்று நான் சிவாஜி
லிங்கத்திடம் கூறினேன்.மிகுந்த தயக்கத்துக்குப்
பின், சிவாஜி லிங்கம் என் கருத்தை ஏற்றார்.
1980 முதல் ஈழ ஆதரவாளனாக இருந்து வருகிறேன்.
கலைஞர் ஆரம்பித்த முதல் டெசோ அமைப்பில்
நான் இணைந்து பணியாற்றியவன். அன்று
மொத்தத் தமிழரிடமும் ஈழ ஆதரவு உணர்வை
ஊட்டியது திமுகவும் கலைஞரும் மட்டுமே.
திமுகவும் மஜஇக என்னும் நக்சல்பாரி அமைப்பும்
மட்டுமே ஈழ விடுதலையை ஆரம்பம் முதல்
தொடர்ந்து ஆதரித்து வரும் அமைப்புகள். மீதி
அனைத்தும் ஈழ எதிர்ப்பு நிலையிலேயே நீண்ட
காலம் இருந்தன. ராஜிவ் படுகொலைக்குப் பின்னர்
திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டது.
திமுக மூலமாக ஈழ ஆதரவு நிலைக்கு வந்ததால்,
ஆரம்பத்தில் எனக்கு டெலோ (TELO)
போராளிகளுடன்தான் தொடர்பு இருந்தது. பின்னர்
EPRLF அமைப்புடனும் தோழர் பத்மநாபா
அவர்களுடனும் நெருக்கமான தொடர்புகள்
இருந்தன. எனது திருமணத்தின்போது
சாட்சிகளாகவும் பாதுகாவலர்களாகவும்
இருந்தவர்கள் ஈழப் போராளிகளே.
இவற்றையெல்லாம் இங்கு கூறக் காரணம்
ஈழப்போர் குறித்தும் விடுதலைப் புலிகள் குறித்தும்
எழுதுவதற்கான ஒரு தார்மீக அருகதை எனக்கு
உண்டு என்பதை வாசகர்களுக்கு உணர்த்தவே.
மற்றப்படி, ஈழ ஆதரவில் நான் பெரிதாகப்
பங்களித்து விட்டதாக கற்பனையில்கூட
நான்
கருதியதில்லை.
ராமர் பாலம் கட்டும்போது அணில் செய்த உதவி
எந்த அளவோ, அந்த அளவை விட ஆயிரம் மடங்கு குறைவானதுதான்
தேசியத் தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்களின் தனிஈழத்திற்கான
போராட்டத்தில் என்னுடைய பின்னணிப் பங்களிப்பு.
ஈழப்போர் குறித்தும், புலிகள் குறித்தும், ராஜிவ்
படுகொலை குறித்தும் நான் எழுதும்போது,
என்னுடைய ஈழ ஆதரவு அருகதை என்ன என்று
அறிந்து கொள்ள வாசகர்கள் விரும்பக் கூடும்.
அதற்காகவே இந்தக் கட்டுரை. எழுதுகிற
விஷயம் சார்ந்த தார்மிக அருகதை இல்லாமல்
ஒரு வரி கூட நான் எழுதுவதில்லை.
ஈழ விடுதலைப்போர் குறித்தும் ராஜிவ் காந்தி
படுகொலை குறித்தும் இரண்டு தனித்தனித்
தொடர்களை எழுத உத்தேசித்து, கடந்த இரண்டு
ஆண்டுகளில் ஏற்கனவே ஓரளவு எழுதியுள்ளேன்.
இது கடின உழைப்பைக் கோரும் பணி ஆகும்.
ஏற்கனவே எழுதியதில் சிலவற்றை புதிய
வாசகர்களுக்காக தற்போது மறுபிரசுரம்
செய்து வருகிறேன். இது தொடரும்.
*999999999999999999999999999999999999999999999

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக