புதன், 16 ஜூன், 2021

 தான் வாங்கிய பேட்டரி ராஜிவ் காந்தியைக் 

கொல்லப் பயன்படப் போகிறது என்று 

பேரறிவாளனுக்குத் தெரியுமா? தெரியாதா?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

--------------------------------------------------------

ராஜீவ் காந்தியைக் கொன்ற பெல்ட் வெடிகுண்டில் 

(belt bomb) ஒரு பேட்டரி பொருத்தப்பட்டு இருந்தது. 

அது 9 வோல்ட் பேட்டரி ஆகும். அந்த பேட்டரியை  

நான் தான் வாங்கிக் கொடுத்தேன் என்று 

பேரறிவாளன் ஒப்புக் கொண்டார். ஆனால் 

வெடிகுண்டில் பொருத்துவதற்காகத்தான் 

அந்த பேட்டரி பயன்படப் போகிறது என்று 

அதை வாங்கும்போது தனக்குத் தெரியாது 

என்று பேரறிவாளன் கூறினார்.


ஆனால் தடா நீதிமன்றத்திலும் உச்ச நீதி 

மன்றத்திலும் பேரறிவாளன் தரப்பால் 

இதை உண்மை என்று நிரூபிக்க முடியவில்லை.

ஏனெனில் இது உண்மையில்லை.


வெடிகுண்டுக்குத்தான் பேட்டரி என்று 

பேரறிவாளனுக்குத் தெரியாது என்று 

உச்சநீதிமன்றத்தில் அவரின் வழக்கறிஞர் 

நடராசன் வாதிட்டார். ஆனால் அதை அவரால் 

நிரூபிக்க முடியவில்லை.


இந்த வழக்கில் சாட்சியங்கள் மூலம் ஏற்கனவே   

நிரூபிக்கப்பட்ட சில உண்மைகளைச் சுட்டிக் காட்டிய  

நீதியரசர் வாத்வா அவர்கள் பேரறிவாளனின் 

வழக்கறிஞர் நடராசனின் வாதத்தை ஏற்கவில்லை.

அவை அனைத்தும் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


பேட்டரி வாங்கியது மட்டுமின்றி வேறு நிறைய 

நிகழ்வுகளும் இந்த வழக்கில் உள்ளன. அவற்றில் 

எதுவும் பேரறிவாளனுக்குச் சாதகமாக இல்லை.

பேட்டரி வாங்கியதை மட்டும் வைத்துக் கொண்டு 

பேரறிவாளனைக் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் 

தீர்மானிக்கவில்லை.


1) ராஜிவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்று 

பேரறிவாளனுக்கு முன்கூட்டியே தெரியும். ராஜீவின் 

கொலைச்சதியில் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி 

உணர்வுபூர்வமாகவே பேரறிவாளன் பங்கேற்றார்.

ராஜிவ் கொலைக்கு முன்பும் அதன் பின்னருமான 

பேரறிவாளனின் நடவடிக்கைகள் யாவும் இக்கொலைச்   

சதியில் பேரறிவாளன் ஒரு உறுப்பினர் என்பதை 

உணர்த்தின. இதில்  யாருக்கும் எந்த சந்தேகமும் 

வரவில்லை. இப்படிச் சொல்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.


(Conduct of Arivu (A-18) before and after the assassination of 

Rajiv Gandhi leaves no one in doubt that he was a member 

of the conspiracy.... உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா 

அவர்களின் தீர்ப்பின் வாசகம்).



2) பேரறிவாளனும் (A 18) இரும்பொறையும் (A 19) 

மே 1990ல் இலங்கைக்குச் சென்று அக்டோபர 1990ல்

இந்தியா திரும்பினர். விடுதலைப் புலிகளின் தலைவர் 

பேபி சுப்பிரமணியன் என்பவருடன் அவர்கள் 

சென்றனர். அங்கு பிரபாகரனைச் சந்தித்தனர்.     

ராஜீவைக் கொல்லும் நோக்குடன் ஈழத்தில் இருந்து 

பல குழுக்கள் இந்தியா வந்தன. அப்படி வந்த 

நான்காவது குழுவில் பேரறிவாளன் வந்தார். 

இப்படிச் சொல்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.  


(Fourth group comprising Arivu (A-18) and Irumborai (A-19) 

came to India in October, 1990. They had gone to Sri Lanka 

in May, 1990 with Baby Subramaniam where they had 

met Prabhakaran...... உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா 

அவர்களின் தீர்ப்பின் வாசகம்) 


மேற்கூறியவை அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் 

பேரறிவாளனின் வழக்கறிஞர் நடராசன் அவர்கள் 

ஒப்புக் கொண்டவை ஆகும். ஆங்கிலம் நன்கு தெரிந்த 

வாசகர்கள் நீதியரசர்களின் தீர்ப்புரையை

வாசித்து உண்மையை உணரலாம். 


3) ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பேரறிவாளன்

பெற்றோரையும் குடும்பத்தையும் காக்க வேண்டிய 

பொறுப்பில் உள்ள பேரறிவாளன், டிப்ளமா முடித்ததும்

வேலை தேடாமல் அந்நிய நாடான இலங்கைக்குச் 

செல்ல வேண்டிய தேவை என்ன?


அப்படி இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 

பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு, விசா பெற்றுக்  

கொண்டு அதன் பிறகல்லவா போயிருக்க வேண்டும்?

அதுதானே நேர்மையாகவும் முறையாகவும் 

வெளிநாடு செல்லக்கூடிய யாரும் மேற்கொள்ளக் 

கூடிய நடைமுறை? அதை ஏன் பேரறிவாளன் 

செய்யவில்லை?       

 

சரி, பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் (குயில்தாசன்)

இடைநிலை ஆசிரியராக இருந்தவர்தானே! பாஸ்போர்ட் 

விசா இல்லாமல் வெளிநாடு செல்வது தவறு என்று 

அவருக்குத் தெரியாதா? அவர் தன் மகனைக்

கண்டிக்காமல், கள்ளத்தோணியில் இலங்கை செல்ல 

அனுமதித்தது ஏன்?


ஆக பேரறிவாளன் மட்டுமின்றி அவரின் ஒட்டு மொத்தக் 

குடும்பமுமே சட்ட விரோதச் செயல்களில் தயக்கமின்றி 

ஈடுபட்டு இருக்கின்றனரே!


ஒரு நல்ல நோக்கத்துக்காக அல்லது புனிதமான ஒரு 

நோக்கத்துக்காகதான் பேரறிவாளன் இலங்கை செல்ல 

முயன்றார் என்றால், முறைப்படி நேர்மையுடன் பாஸ்போர்ட் 

விசா மூலம் செல்லலாமே! அப்படிச் செல்லவில்லை 

என்பதும்,அப்படி நேர்மையான பயணத்துக்கு முயற்சி 

செய்யவில்லை என்பதும் பேரறிவாளனின் 

தீய உள்நோக்கத்துக்குச் (mala fide intention)

சாட்சியம் ஆகி விடுகிறதே!


பேரறிவாளனின் சட்ட விரோதமான இந்த இலங்கைப் 

பயணம் இந்திய அரசின் பாஸ்போர்ட் சட்டத்தை மீறிய 

குற்றமாகும் என்று தீர்மானித்து தடா நீதிமன்றம் 

அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கியது. 

உச்சநீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது.   


4) ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்வது என்பது 

சாமானியமான விஷயம் அல்ல. அதைச் சரியாகவும் 

துல்லியமாகவும் செய்வதற்கு ஒத்திகை பார்க்க 

வேண்டும்.அதன்படி ராஜிவ் படுகொலைக்கு இரண்டு 

முறை ஒத்திகை பார்த்தவர் பேரறிவாளன். சிவராசனுடன் 

சேர்ந்து கொண்டு அவரின் கட்டளைப்படி, இரண்டு முறை 

ராஜிவ் கொலைக்கான ஒத்திகையைச் செயல்படுத்தியவர் 

பேரறிவாளன். 


இந்த உண்மைகளை மறைத்து விட்டு, அதாவது 

முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைத்து விட்டு, 

பேரறிவாளன் ஒரு அப்பாவி என்று முற்றிலும் பொய்யாகச்  

சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சித்தரிப்பு அமெரிக்க 

ஏகாதிபத்தியத்தின் நலன்களில் இருந்து செய்யப் 

பட்ட ஒன்றாகும். தனது கைக்கூலிகளைப் பாதுகாப்பதும்  

தனது கைக்கூலிகளுக்கு எதிராக மக்களின் கோபம் 

எழுந்து விடாமல் தடுப்பதும் ஏகாதிபத்தியத்தின் 

தேவை ஆகிறது. 

--------------------------------------------------------------------

பின்குறிப்பு:

சிவராசனுடன் இணைந்து பேரறிவாளன் மேற்கொண்ட

ராஜிவ் கொலை ஒத்திகைகள் பற்றி அடுத்துக் காண்போம்.

********************************************************             


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக