RDX-13 (500 kg RDX)
ராஜிவ் காந்தியின் கொலையில்
சந்திரா சுவாமியின் பங்கு எவ்வளவு?
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மார்வாடிக்
குடும்பத்தில் பிறந்தவர் சந்திரா சுவாமி.
இவரின் இயற்பெயர் நேமி சந்த் ஜெயின். இவர்
சிறுவனாக இருக்கும்போதே இவரின் குடும்பம்
ஹைதராபாத் நகருக்குக் குடிபெயர்ந்து விட்டது.
தாந்திரிகக் கலையைக் கற்று அதில் நிபுணரான
சந்திரா சுவாமி தம் இளம் வயதிலேயே சாமியார்
ஆகி விட்டார். பல மொழிகள் அறிந்தவர் சந்திரா
சுவாமி.
டெல்லியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால்
கொடையளிக்கப்பட்ட சில ஏக்கர் நிலத்தில்
தமது ஆசிரமத்தைக் கட்டிக் கொண்டார்
சந்திரா சுவாமி.
உலகின் பிரபலமான அரசுத் தலைவர்களுக்கு
இவர் ஆன்மிக குருவாக விளங்கினார். மார்கரெட்
தாட்சர், யாசர் அராபத், புருனே சுல்தான்
உள்ளிட்ட பலரும் இவரின் சீடர்கள்.
ராஜிவ் கொலையில் இவருக்குப் பிரதான பங்கு
உண்டு என்று ஒரு வலுவான சந்தேகம் இன்றளவும்
இருந்து வருகிறது. அவரை ஏன் CBI சிறப்புப்
புலனாய்வுக்குழு கூப்பிட்டு விசாரிக்கவில்லை
என்று கோபத்தோடு கேள்வி கேட்பவர்கள்
இன்னும் உண்டு.
இந்தச் சந்தேகங்களும் கேள்விகளும் அர்த்தமற்றுப்
போய்விட்ட ஒரு காலக்கட்டத்தில் இந்தக் கட்டுரை
எழுதப் படுகிறது. ஏனெனில் சந்திரா சுவாமி
இறந்து போய் விட்டார்; அவர் போன இடம் புல்
முளைத்துப் போய்விட்டது. மே 2017ல் சந்திரா
சுவாமி இறந்து விட்டார். அவர் இறந்து ஐந்தாண்டு
முடிந்து விட்டது. இறக்கும்போது அவருக்கு வயது
68தான். சாமியார்களுக்கே உரிய நீண்ட ஆயுள்
அவருக்கு வாய்க்கவில்லை.
திருச்சி வேலுச்சாமி என்று ஒருவர். இவர் அவ்வப்போது
காங்கிரஸ்காரராக இருப்பவர். சந்திரா சுவாமியைப்
பற்றி அதிகமாகவும் அதீதமாக்வும் பேசி வருபவர்
இந்த திருச்சி வேலுச்சாமி. அவர் பேசுவதைக்
கேட்டால், இந்த மொத்த உலகமே சந்திரா
சுவாமியின் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப்
போலவும், சுவாமியின் கண்ணசைவுக்கு
ஜார்ஜ் புஷ், பாரக் ஒபாமா போன்ற அமெரிக்க
ஜனாதிபதிகளே அடிபணிந்து நிற்பது போலவும்
ஒரு சித்திரம் நமது மனத்தில் விரியும்.
இந்தச் சித்திரம் போலியானது; பொய்யானது!
இதில் உண்மை ஒரு ரோமமும் இல்லை என்பதை
இதோ நான் நிரூபிக்கிறேன்.
சர்வ வல்லமை வாய்ந்தவராக வர்ணிக்கப்படும்
சந்திரா சுவாமி மே 2, 1996ல் CBI போலிசாரால்
கைது செய்யப் பட்டார். சென்னையில் சிந்தூரி
ஓட்டலில் தங்கியிருந்த அவரை நள்ளிரவில்
CBI அதிகாரிகள் கைது செய்தனர். லண்டனைச்
சேர்ந்த ஒரு வணிகரிடம் அவரின் பணம் ஒரு லட்சம்
அமெரிக்க டாலரை ஏமாற்றி விட்டதாக சந்திரா
சுவாமி மீது வழக்கு.
சிந்தூரி ஓட்டல் (Sindoori Hotel) என்பது
அப்பல்லோ மருத்துவமனை அதிபரும் சுவாமியின்
சீடருமான பிரதாப் ரெட்டிக்கு உரிமையானது.
அதில்தான் சந்திரா சுவாமி தங்கி இருந்தார்.
சென்னையில் கைது செய்த சந்திரா சுவாமியை
டெல்லிக்கு கொண்டு சென்று திஹார் சிறையில்
அடைத்தார்கள். திஹார் சிறையில் PRISON number-1ல்
6 அடிக்கு 9 அடி உள்ள ஒரு B grade செல்லில்தான்
சந்திரா சுவாமியை அடைத்து இருந்தார்கள்.
மே 2ல் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரா சுவாமிக்கு
உடனே ஜாமீன் கிடைத்ததா? இல்லை. ஒரு மாத
காலம் சிறையில் இருந்த பின்னர், 1996 ஜூன்
இரண்டாம் வாரத்தில்தான் அவருக்கு ஜாமீன்
கிடைத்து சிறையை விட்டு வெளியேறினார்.
இதே வழக்கில் 1988 பிப்ரவரியில் சந்திரா சுவாமி
கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்
பட்டார். நான்கு நாட்கள் சிறைவாசத்தின் பின்னர்
அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
மேற்கூறிய உண்மைகள் ஒரு விஷயத்தைத்
திட்டவட்டமாக உறுதிப் படுத்தி விடுகின்றன.
திருச்சி வேலுச்சாமி சொல்வதைப் போல,
அல்லது ராட்சசத்தனமான வதந்திகள் கூறுவதைப்
போல, சந்திரா சுவாமி கடவுளை விடச் சக்தி
வாய்ந்த மனிதரெல்லாம் அல்ல. அவர் ஒரு சராசரி
ஏமாற்றுச் சாமியார்.
அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்றால், அவரால் ஏன்
தான் கைது செய்யப் படுவதைத் தடுக்க
முடியவில்லை? கேவலம், ஒரு லட்சம் டாலர்
பண மோடி வழக்கில் அவரால் கைதாகாமல்
தப்பிக்க முடியவில்லையா?
அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்றால் அவருக்கு ஏன்
உடனடியாக ஜாமீன் கிடைக்கவில்லை? ஒரு மாத
காலம் சிறையில் இருந்து அதன் பின்னர்தானே
ஜாமீன் கிடைத்தது?
இந்த முன்ஜாமீன் முன்ஜாமீன் என்கிறார்களே,
சசிகலா டி டி வி தினகரன் ஊழல் அமைச்சர்கள்
இப்படி எல்லோருக்கும் கிடைக்கிறதே, அப்படிப்பட்ட
முன்ஜாமீன் ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்த
சாமியாருக்குக் கிடைக்கவில்லை?
இன்னொரு முக்கியமான விஷயம். சந்திரா சுவாமி
கைது செய்யப்படும் தேதி என்ன? மே 2, 1996.
அந்தத் தேதியில் இந்தியாவின் பிரதமராக
இருந்தவர் யார்? நரசிம்ம ராவ். இவர்தான்
சந்திரா சாமியின் அத்யந்த சீடர். தமது குருவை
கைது செய்ய நரசிம்ம ராவ் எப்படி அனுமதிப்பார்?
ஆனால் அனுமதித்து இருக்கிறார். எப்படி? திருச்சி
வேலுச்சாமி சொல்வதெல்லாம் முழுவதுமாக
மிகைப்படுத்தப் பட்ட பொய்கள். ஆக திருச்சி
வேலுச்சாமி சொன்னதெல்லாம் பொய் என்று
நிரூபித்து இருக்கிறேனா!
யோசித்துப் பாருங்கள்!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எனவே திருச்சி வேலுச்சாமி வர்ணிக்கிற மாதிரி,
சந்திரா சுவாமி ஒன்றும் பெரிய அப்பா டக்கர்
அல்ல. அவருக்கு இருப்பதாக திருச்சி வேலுச்சாமி
கூறும் அபார சக்திகளோ செல்வாக்கோ எதுவும்
சந்திரா சாமியாருக்கு இல்லை.
அவர் விசாரிக்கப் பட்டாரா?
-------------------------------------------
அவரை விசாரிக்கவே இல்லை என்பது இன்னொரு
பொய். ஜெயின் கமிஷனில் சந்திரா சாமி விசாரிக்கப்
பட்டார். பல முறைகள் கமிஷனின் விசாரணையில்
ஆஜர் ஆனார். கூண்டில் ஏறி நின்று கொண்டு
சாட்சி சொன்னார். எனவே ராஜிவ் கொலை
தொடர்பாக சந்திரா சுவாமி விசாரிக்கப் படவே
இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது.
ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையை
அரசிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் ஒரு
பட்டியலை நீதியரசர் ஜெயின் அரசுக்கு வழங்கி
இருந்தார். அந்தப் பட்டியலில் 18 பேர்கள்
குறிப்பிடப்பட்டு இருந்தனர். இந்தப் பட்டியலில்
கண்ட 18 பேர்களையும் விசாரிக்க வேண்டும்
என்றும், அப்படி விசாரித்தால் ராஜிவ் கொலை
பற்றிய மேலும் பல விவரங்கள் கிடைக்கும் என்று
தான் நம்புவதாகவும் நீதியரசர் ஜெயின் தமது
அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
நீதியரசர் ஜெயின் தயாரித்தளித்த 18 பேர் கொண்ட
பட்டியலில்
1) முதல் பெயராக சந்திரா சுவாமி பெயர் இருந்தது.
2) இரண்டாவது பெயராக டாக்டர் சுப்பிரமணியம்
சுவாமியின் பெயர் இருந்தது.
3) மூன்றாவது பெயராக 1990ல் தமிழக முதல்வராக
இருந்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இருந்தது.
ஜெயின் கமிஷனில் அதிக நாட்கள் சாட்சியம்
அளித்தவர் யாரென்றால் அது டாக்டர் சுப்பிரமணியம்
சுவாமிதான். அநேகமாக அவர் தினசரி ஜெயின்
கமிஷன் விசாரணைக்கு ஆஜராகி விடுவார்.
சந்திரா சுவாமியோ போதிய அளவு சாட்சியம்
அளித்து விட்டார். இதற்கு மேலும் அவ்விருவரும்
சாட்சியம் அளிக்க ஒரு ரோமமும் இல்லை.
அடுத்து கலைஞரை ஏன் CBI விசாரிக்க வேண்டும்?
கலைஞருக்கும் ராஜிவ் காந்தி படுகொலைக்கும்
என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?
ஆக ஜெயின் கமிஷன் அறிக்கை அளித்திட்ட
பட்டியலில் உள்ள 18 போரையும் விசாரிக்க
வேண்டும் என்று அடுத்தடுத்து வந்த
மத்திய அரசுகள் கருதவில்லை. வீணாக
எல்லோரையும் சந்தேகப் படுவதால் யாருக்கும்
பயன் இல்லை.
The suspicion can not take the place of proof என்று ஒரு
சட்டப் பழமொழி உண்டு.
"சந்தேகம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அது
ஒருபோதும் நிரூபணம் ஆகாது" என்பதே
இதன் பொருள்.
********************************************************
பின்குறிப்பு::
அடுத்த கட்டுரையில் ராஜிவ் கொலையில்
சுப்பிரமணியம் சுவாமிக்குப் பங்கு உண்டா?
படிப்பதற்கு முந்துங்கள்!
---------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக