பிறிது மொழிதல் அணி பயிலும் இக்கட்டுரையைத்
தற்குறிகள் படிக்க வேண்டாம்! வேண்டாம்!!
ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் அர்த்தம் என்ன
என்று பார்ப்பது பேதைமையுள் எல்லாம் பேதைமை!
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
ஒரு சொல்லுக்கு அதன் மொழியில் என்ன அர்த்தமோ
அதுதான் அந்தச் சொல்லின் அர்த்தம். புரிகிறதா?
ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது. இதற்கு ஆங்கில
மொழியில் என்ன அர்த்தமோ, அதுதான் அச்சொல்லின்
அர்த்தம். அச்சொல்லுக்கு தெலுங்கு மொழியில் என்ன
அர்த்தமோ, அந்த அர்த்தம் அச்சொல்லின் அர்த்தம்
ஆகாது. அப்படிக் கருதுவது பேதைமை! ஒரு
உதாரணத்தைப் பார்ப்போம்.
Sooth saying என்று ஒரு ஆங்கிலச் சொல் உண்டு.
இதற்கு அருள்வாக்கு கூறுதல், நல்ல விதமாகக்
குறி சொல்லுதல், இதம் தரும் சொற்களைக் கூறுதல்
என்று பொருள்.
இல்லை, இல்லை, SOOTH என்ற சொல்லுக்கு தமிழில்
சூத்து என்று பொருள். எனவே sooth saying என்றால்
சூத்தைப் பற்றிக் கூறுவது என்று பொருள்
கொண்டால் என்ன செய்வது?
தமிழ்நாட்டில்தான் போலிகள் மிகவும் அதிகம்..
போலி முற்போக்குக் கபோதிகளும், போலி
இடதுசாரித் தற்குறிகளும் இன்ன பிற கழிசடைகள்
அனைவரும் sooth saying என்றால் சூத்தைப் பற்றிக்
கூறுவது என்றுதான் பொருள் கொள்கிறார்கள்.
தமிழில் மட்டும்தான் எப்படிப் பொருள் கொள்ள
வேண்டும் என்று இலக்கணம் உண்டு. பொருள்கோள்
பற்றி எத்தனை போலி முற்போக்குக் கபோதிகளுக்குத்
தெரியும்?
செய்யுளுக்குப் பொருள் கொள்ளுவது எப்படி என்று
தமிழ் இலக்கணம் கற்றுத் தருகிறது. யாற்றுநீர்ப்
பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள்
என்றெல்லாம் பொருள்கோள் உண்டு. ஒரு எடுத்துக்
காட்டைப் பார்ப்போம்.
தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்
வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே
வங்கத்துச் சென்றார் வரின்.
இப்பாடலுக்கு நேரடியாகப் பொருள் கொண்டால்
தாறுமாறாக வரும். எனவே முறையான
பொருள்கோளைப் பின்பற்றி இதற்குப் பொருள்
காண வேண்டும். இப்பாடலுக்குரிய முறையான
பொருள்கோள் எது? கொண்டுகூட்டுப் பொருள்கோள்
எனப்படும் பொருள்கோளே.
உடுத்ததுவும் மேய்த்ததுவம் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப்--படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன்னா வரையிலை காய்பூ.
இது காளமேகப் புலவரின் பாடல். சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட காளமேகப் புலவர்
தனிப்பாடல் திரட்டு என்ற நூலை வாங்கிப்
படியுங்கள். இந்தப் பாடலை நான் எட்டாம் வகுப்பு
படிக்கும்போது (1966ல்) முதன் முதலாக அறிந்தேன்.
இதற்கு எப்படிப் பொருள் கொள்ளுவது? இப்பாடல்
கண்ணனைப் பற்றிய பாடல். உடுத்தது பொன்,
மேய்த்தது ஆ, எடுத்தது வரை, படுத்தது இலை
(ஆலிலை) என்று பொருள் கொள்ள வேண்டும்.
எடுத்தது வரை என்றால் எடுத்தது மலை என்று
பொருள். கண்ணன் கோவர்த்தனகிரியைத்
தோளில் தூக்கியதைக் குறிக்கிறது. விரிவாக
எழுத இடமில்லை. அப்படி எழுதினாலும்
தமிழ்நாட்டுத் தற்குறிகளுக்கு என்ன புரிந்து விடும்?
இப்பாடலுக்கு உரியது முறை நிரல்நிறைப்
பொருள்கோள் ஆகும்.
அந்தக் காலத்தில் செய்யுளுக்குத்தான் பொருள்கோள்
இருந்தது. உரைநடைக்கு இல்லை. அது தேவையும்
இல்லை. இன்றோ உரைநடைக்கும் பொருள்கோள்
தேவைப் படுகிறது. அந்த அளவில் இருக்கிறது
தமிழ் வளர்ச்சி!
மீண்டும் sooth saying என்ற சொல்லுக்கு வருவோம்.
ஒரு சொல்லைப் பேசும் முன்பு அல்லது எழுதும் முன்பு
சொல்லின் மூலம் என்ன, வரலாறு என்ன
என்றெல்லாம் பார்க்க வேண்டாமா என்று
சிலர் அங்கலாய்க்கின்றனர்.
நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே என்று ஒரு
பழமொழி உண்டு. கூடவே மொழி மூலமும்
பார்க்காதே என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பல சொற்களுக்கு முற்காலத்தில் வழங்கிய
பொருள் இன்று இல்லையே! ஏன்? அது
அப்படித்தான்! மொழி தொடர்ந்து இயங்கிக்
கொண்டே இருக்கிறது. இயங்குகிற போக்கில்
அது மாறிக்கொண்டும் இருக்கிறது. எனவே
சொற்களின் பொருள் மாறும். இது மொழியின்
தவிர்க்க இயலாத பண்பு.
பொன்மலர் நாற்றம் உடைத்து என்பது தமிழில்
வழங்கும் பொன்மொழி. இங்கு நாற்றம் என்பது
நறுமணம் என்ற பொருளில் ஆளப்படுகிறது.
"நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்"
என்கிறாள் ஆண்டாள் (திருப்பாவை). இங்கும்
நாற்றம் என்பது நறுமணம் என்ற பொருளில்
வழங்கப் படுகிறது.
ஆனால் இன்று என்ன பொருள் முட்டாள்களே?
இன்று நாற்றம் என்றால் கெட்ட நாற்றம் என்று
பொருள். Chemistry Labல் போய் அங்குள்ள
H2S ஏனப்படும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவைத்
திறந்து வெளியே விடுங்கள். அவ்வளவுதான்
நாற்றம் குடலைப் புரட்டும். திருநெல்வேலி சென்ட்ரல்
கஃபேயில் சாப்பிட்ட டிபன் வாந்தியாக வந்து விடும்.
எனவே நாற்றம் என்பதற்கு இன்றைய பொருள்
என்னவோ அதுதான் பொருள்.முன்பு என்ன பொருள்
வழங்கப்பட்டது என்பது சொற்பிரயோகத்திற்குத்
தேவையற்றது.
அடுத்து sir (சார்) என்ற ஆங்கிலச் சொல். இதன்
etymologyயின் படி, (etymology = வரலாறு) I will ever
remain your slave என்பதுதான் sir என்று மாறியுள்ளது.
எனவே சார் என்று சொல்லாதீர்கள், அது
அடிமைத்தனத்தைக் குறிக்கும் சொல் என்று சில
குட்டி முதலாளித்துவ அசடுகள் கூறுவது உண்டு.
நான் மத்திய அரசில் மூன்று தசாப்தங்களுக்கு
மேல் பணியாற்றியவன். சார் என்ற சொல்லை
என்னுடைய ஒட்டு மொத்தப் பணிக்காலத்தில்
மூன்று லட்சம் முறைகள் உச்சரித்து இருப்பேன்.
அது போல மற்றவர்கள் என்னை சார் என்று
கூப்பிட்டதும் குறிப்பிட்டதும், அது ஒரு மூன்று
லட்சம் முறை இருக்கும். இவ்வளவு தூரம்
பயன்பாடு மிக்க ஒரு சொல்லை எப்படிப்
புறக்கணிக்க இயலும்? ஏன் புறக்கணிக்க
வேண்டும்?
நான் இங்கு யாப்புறுத்த வருவது என்னவெனில்,
ஒரு சொல்லின் முந்தைய வரலாறு எப்படி இருந்தாலும்
அதை இன்று பார்க்க வேண்டிய தேவை இல்லை.
சொற்பிரயோகத்திற்கு முந்திய வரலாறு கணக்கில்
கொள்ளப்பட வேண்டியதில்லை.
மொழி எப்படி உயிருடன் இருக்கிறது? அது மக்களால்
பேசப்படுவதால்! ஒவ்வொரு செல்லின் etymologyஐயும்
தெரிந்து வைத்துக்கொண்டுதான் அச்சொல்லைப்
பிரயோகிக்க வேண்டும் என்று தொல்காப்பியம் உட்பட
உலகில் எந்த மொழியும் சொல்லவில்லை. அப்படி
எந்த இலக்கணமும் சொல்லவில்லை.
எனவே ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கில மொழியில்
என்ன பொருளோ அதுதான் கணக்கு. அகராதியை
எடுங்கள். அந்த ஆங்கிலச் சொல்லுக்கு அகராதி
தரும் பொருள் என்ன என்று பாருங்கள். அதுதான்
அச்சொல்லின் பொருள்.
அதை விடுத்து அச்சொல்லுக்கு தமிழில் என்ன
பொருள், எத்தியோப்பிய மொழியில் என்ன
பொருள் என்று பார்த்துக் கொண்டிருப்பவன்
புத்தி பேதலித்தவன். சொற்களின் பிரயோகத்திற்கு
மொழி வரலாறோ சொற்களின் பிறப்பியல் வரலாறோ
(etymology) தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
தொல்காப்பியத்தைப் படித்து விட்டா எட்டுக்
கோடித் தமிழனும் தமிழ் பேசுகிறான்?
"வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்" என்கிறார்
தொல்காப்பியர். செய்யுளை விட வழக்கிற்கே
முதன்மை கொடுக்கிறார். தொல்காப்பியர் இப்படிக்
கூறியுள்ளதன பொருள் தமிழ்நாட்டில் ஒரு நாலைந்து
பேருக்குத்தன் தெரியும். என்ன செய்ய? தமிழ்க
கல்வியின் லட்சணம் அந்த மட்டத்தில் உள்ளது.
இதை எழுதும்போது எனக்கு கண்ணீர் வருகிறது.
என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தத்
தாலியறுத்த தமிழ்ப்பற்று என்னை விட்டுத்
தொலைய மாட்டேன் என்கிறதே!
வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க் கேற்ப
நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும்
சங்கரன் தந்த வாளும்
வீரமும் களத்தே போக்கி
....... ............ ..................
என்று எழுதி இருப்பார் கம்பர். வீரமும்
என்பதுடன் தமிழ்ப்பற்றும் என்று நான்
சேர்த்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்பற்றும் சேர்ந்து போகட்டும். வெறுங்கையோடு
வீடு ஏக விரும்புகிறேன். ((இங்கு வீடு என்பது houseதான்.
ஆறாம் பொருள் இன்பம் வீடு என்று நான்காவதாக
வரும் வீடு அல்ல)/
இந்தக் கட்டுரையில் பிறிது மொழிதல் அணி
பயில்கிறது. சொல்ல வந்த பொருளை நேரடியாகச்
சொல்லாமல், வேறு ஒரு பொருளைச் சொல்வதன்
மூலம் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதே
பிறிது மொழிதல் அணி ஆகும்.
இதற்கான புகழ் பெற்ற உதாரணமாக பள்ளி
ஆசிரியர்கள் பின்வரும் குறளைக் கூறுவர்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
இக்குறளில் பிறிது மொழிதல் அணி பயில்கிறது.
இறுதியாக, வேற்றுப் பொருள்வைப்பணி என்று
ஓர் அணி இருக்கிறது. அதை ஒரு உதாரணத்துடன்
யாராவது விளக்க இயலுமா? , பிறிது மொழிதல்
அணிக்கும் வேற்றுப் பொருள் வைப்பணிக்கும்
உள்ள வேறுபாடு பற்றி யாராவது விளக்க இயலுமா?
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
மறைந்த பழம் பெரும் நடிகர் காளி என் ரத்தினம்
நடித்த ஒரு படத்தில் தேவடியாக் கச்சேரி என்ற
பதம் அடிக்கடி வரும். அச்சொல் அந்தக் காலத்தில்
இழிவான பொருளில் வழங்கப்படவில்லை. இன்று
தேவடியாக் கச்சேரி என்று வசனம் எழுதினால்
முதுகுத் தொலியை உரித்து விடுவார்கள்.
***************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக