பிரபஞ்சத்தின் வரலாற்றை எழுதும்
ஜேம்ஸ்வெப் தொலைக்காட்சி!
---------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கடந்த கிறிஸ்துமஸ் நாளன்று (டிசம்பர் 25, 2021)
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி விண்ணில்
செலுத்தப்பட்டது. இதற்கு முன்பு விண்ணை அளந்த
ஹப்பிள் தொலைநோக்கியின் வாழ்நாள் முடிந்து
விட்டதால் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி அதனிடத்தில்
வருகிறது.
ஹப்பிள், ஜேம்ஸ்வெப் இரண்டு தொலைநோக்கிகளுமே
பூமியில் வைக்கப் படவில்லை. அவை விண்ணில்
வைக்கப் பட்ட விண்வெளித் தொலைநோக்கிகள்
(Space Telescopes) ஆகும்.
ஹப்பிள் தொலைநோக்கி பூமியை ஒரு தாழ்நிலை
சுற்றுப்பாதையில் (LEO = Low Earth Orbit) 570 கிமீ
உயரத்தில் (altitude) சுற்றி வந்து கொண்டிருந்தது.
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி ஹப்பிளைப்
போன்று பூமியைச் சுற்றி வராது. மாறாக L2
எனப்படும் இரண்டாம் லாக்ரேஞ்சு புள்ளியில்
(Earth sun second Lagrange point) தங்கி இருந்து இயங்கும்.
பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் இந்த
லாக்ரேஞ்சு புள்ளி (L 2) உள்ளது.
லாக்ரேஞ்சு புள்ளிகள் பிரெஞ்சுக் கணித மேதை
லாக்ரேஞ்சு-ன் நினைவாக அப்பெயர் பெற்றவை.
அவை விண்வெளியில் உள்ள வாகன நிறுத்தும்
இடங்கள் (vehicle parking spots) போன்றவை என்று
புரிந்து கொள்ளுங்கள். ஜேம்ஸ்வெப் போன்ற
செயற்கைக்கோள்களை நிறுத்தும் இடங்கள்
என்று புரிந்து கொண்டால் போதும். லாக்ரேஞ்சு
புள்ளிகள் hyper physicsல் வருபவை என்பதால்,
அவை குறித்து தனிக்கட்டுரை வெளியிடப்
படுகிறது.
ஹப்பிள் தொலைநோக்கி புறஊதா அலைக்கற்றையை
முதன்மையாகக் கொண்டு இயங்கியது. இதற்கு
மாறாக அகச்சிவப்பு அலைக்கற்றையை
முதன்மையாகக் கொண்டு ஜேம்ஸ்வெப்
தொலைநோக்கி இயங்குகிறது. நட்சத்திரங்கள்
வாயுக்கோளங்களாலும் தூசுக்களாலும் ஆனவை
புற ஊதாக் கதிர்களால் அவற்றை ஊடுருவிச்
செல்வது கடினம். ஆனால் அகச்சிவப்புக் கதிர்களால்
அவற்றை ஊடுருவிச் செல்ல இயலும். மேலும்
அவற்றால் மிகவும் குறைவாக சிதறடிக்கப்
படுபவையும் அவையே. எனவே ஜேம்ஸ்வெப்பில்
அகச் சிவப்புக் கதிர்கள் பயன்படுகின்றன.
பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது
என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இவ்வாறு
விரிவடைவதால், இப்போது ஒரு குறிப்பிட்ட
தூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம்
அதே இடத்தில் நிலையாக இருப்பதில்லை.
அந்த இடத்தை விட்டு விலகிக் கொண்டே செல்லும்.
இவ்வாறு ஒரு காலக்சி விலகிச் செல்வதை
தொலைநோக்கியில் பார்த்தால், அதில் இருந்து
ஒரு சிவப்பு விலகல் (red shift) நமக்குக் கிடைக்கும்.
இதற்கு மாறாக ஒரு நட்சத்திரக் கூட்டம் நம்மை
நோக்கி வரும்பட்சத்தில், அதில் இருந்து நீல விலகல்
(blue shift) கிடைக்கும். ஆக காலக்சிகள் விலகினால்
சிவப்பும், நெருங்கினால் நீலமும் கிடைக்கும்.
நமது பிரபஞ்சம் (universe) ஒரு பெரு வெடிப்பின்
பின் தோன்றியது. அதாவது 13.8 பில்லியன்
ஆடுகளுக்கு முன்பு (1380 கோடி ஆண்டுகள்) நமது
பிரபஞ்சம் பிறந்தது.
அந்த ஆரம்ப கால பிரபஞ்சத்தில் இருந்து புறப்பட்ட
ஒளி நமக்குக் கிடைக்குமானால், அதன் வரலாற்றை
நாம் அறிய முடியும். ஒளி என்பது வரலாறு என்று
உணர்க.
மழை பெய்யும்போது மொட்டை மாடியில் ஒரு
பானையை வைத்து மழை நீரை அதில்
பிடிக்கிறோம். அது போல ஜேம்ஸ்வெப்
தொலைநோக்கி ஒளியைப் பிடிக்கும் ஒரு
பானை ஆகும்.
பிரபஞ்சம் தோன்றிய காலத்தில், அல்லது அதன்
பின்னர் நட்சத்திரங்கள் தோன்றிய காலத்தில்
உள்ள ஒளியானது ஓரிடத்தில் நின்று
கொண்டு இருப்பதில்லை. அது பயணம் செய்து
கொண்டே இருக்கிறது. அவ்வாறு பயணம் செய்யம்
ஒளி நம்மை வந்து அடையும். அதாவது
ஜேம்ஸ்வெப்பை வந்தடையும்.
அந்த ஒளியைப் பரிசீலித்தால், அது எந்தக்
காலக்கட்டத்து ஒளி என்பதை அறிய முடியும்.
ஒளி என்பது வரலாறு என்பதால், 13 பில்லியன்
ஆண்டுகளுக்கு முந்திய ஒளி நமக்கு கிடைத்தால்
13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய பிரபஞ்சத்தின்
வரலாற்றை நம்மால் எழுத முடியும். இப்படித்தான்
பிரபஞ்சத்தின் வரலாற்றை எழுதுவதில் ஜேம்ஸ்வெப்
தொலைநோக்கி பங்காற்றுகிறது.
நாசா சார்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்த ஐந்து
படங்களை வெளியிட்டார். தொடர்ந்து இரண்டாவது
முறையில் மேலும் சில படங்களை நாசா வெளியிட்டு
உள்ளது. படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு
தொடர்ந்து வெளியிடப்படும். இதன் விளைவாக
பிரபஞ்சத்தின் வரலாறு துல்லியமாக எழுதப்படும்.
அதற்குக் காத்திருப்போம்.
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக