திங்கள், 4 ஜூலை, 2022

சூரியனில் இருந்து பூமி வெகுதூரம் தள்ளி 
இருக்கும் நாள் இன்று ஜூலை 4, 2022.
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
சூரியனில் இருந்து பூமி மிகவும் அதிகமான 
தொலைவில் இருக்கும் நாள் 2022 ஜூலை 4.
எவ்வளவு தொலைவில் இருக்கும்?
152,098,455 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.
அதாவது 15 கோடியே 20 லட்சம் கிமீ தொலைவு!

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 
மாறிக்கொண்டே இருக்கும். ஏன் என்றால் 
பூமி நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை. 
அது சூரியனைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
எனவே தூரம் மாறிக் கொண்டே இருக்கும்.

வானியலில் AU என்று ஒரு யூனிட் உண்டு.
AU = Astronomical Unit. 
1 AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள 
தூரம் ஆகும் (MEAN DISTANCE). அதாவது 
15 கோடி கிலோமீட்டர் ஆகும்.

இன்றைய நாளில் (2022 ஜூலை 04) சூரியனில் இருந்து 
பூமி அதிகபட்சத் தொலைவில் இருக்கிறது என்பதை 
வானியலில் aphelion position என்று சொல்லுவார்கள்.
apogee என்றால் பூமியில் இருந்து அதிகத் தொலைவு 
என்று பொருள். aphelion என்றால் சூரியனில் இருந்து 
அதிகத் தொலைவு என்று பொருள்.

அப்படியானால் குறைந்த தொலைவு என்ற ஒன்று 
இருக்க வேண்டும் அல்லவா? ஆம், இருக்கிறது.
அது perihelion position எனப்படும். 
      
இந்த ஆண்டு 2022 ஜனவரி 4ஆம் நாள் பூமியானது 
சூரியனில் இருந்து மிகவும் குறைவான தூரத்தில் 
இருந்தது. அதாவது சூரியனுக்கு மிக நெருக்கமாக 
இருந்தது. அப்போது சூரியனுக்கும் பூமிக்குமான  
தூரம் 147,105,052 கிலோமீட்டர் ஆகும்.

பூமிக்கும் சூரியனுக்குமான சராசரி தூரம் 
mean distance =  1 AU = 15 கோடி கிமீ.
Aphelion = 152,098,455 கிமீ.
Perihelion = 147,105,052 கிமீ.

இந்த இடத்தில் நான் உருவாக்கிய நல்ல தமிழ்ச் 
சொற்களை அறிந்து கொள்ளுங்கள். அவற்றைப் 
பயன்படுத்துங்கள்.

Aphelion  =  சூரியச்சேய்மை. 
Perihelion =  சூரிய அண்மை. 
Apogee = புவிச்சேய்மை. 
Perigee = புவி அண்மை. 

சேய்மை என்றால் தொலைவு என்றும் 
அண்மை என்றால் நெருக்கம் என்றும் பொருள்.
சேய்மை = far. 
அண்மை = near.   

"சேய்மை அண்மையில் உயிர்க்கொரு 
துணையெனச் சிறந்த
வாய்மையால் அறந்தூய்மையாம்"  
என்னும் செய்யுளை அறிந்ததுண்டா?
அரிச்சந்திர புராணத்துச் செய்யுளா இது?
அல்லது வேறு எதுவுமா?

இச்செய்யுளை நான் என்னுடைய 13ஆம் வயதில் 
அறிந்தேன். அந்தச் செய்யுளில் இருந்துதான் 
புவிச்சேய்மை, புவிஅண்மை என்ற சொற்களை 
உருவாக்கினேன். அறிவியலோடு தமிழ் 
இலக்கியங்களையம்  கற்றால் அல்லாமல் 
யாராலும் நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்க இயலாது.

இவ்வாறு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 
தூரம் சேய்மையிலும் அண்மையிலும் மாறிக் 
கொண்டே இருக்கிறது? 
 
அதற்கு இதுதான் காரணம்! பூமி சூரியனை ஓர் 
நீள்வட்டப் பாதையில் (elliptical orbit) சுற்றுவதுதான்
காரணம்!

பூமி சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது 
என்பதை என்னால் எல்லாம் எளிதாக ஏற்றுக் 
கொள்ள முடிந்ததே இல்லை. ஏன்? Very poor eccentricity.
கெப்ளரும்தான் ஏற்றுக் கொண்டாரா, இல்லையே!
ஆனால் circular என்று கணக்கிட்டால் ஏகப்பட்ட 
பிழைகள் வந்து சேரவே, very poor eccentricity என்றாலும் 
அது ellipseதான் என்று முடிவுக்கு வந்தார்.

சரி, வாசகர்களுக்கு ஒரு கேள்வி!
பூமியானது சூரியனைச் சுற்றும் அந்த 
நீள்வட்டப் பாதையின், அதாவது அந்த நீள்வட்டத்தின் 
மையப் பிறழ்வு ((eccentricity) என்ன? வாசகர்கள் 
கண்டிப்பாகப் பதில் அளிக்க வேண்டும்.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இன்று (ஜூலை 4, 2022) யாரும் வீரவநல்லூருக்குச் 
செல்ல வேண்டாம். இசக்கிமுத்து அண்ணாச்சி 
கடுங்கோபத்தில் இருக்கிறார். வீரவநல்லூர் 
பஸ் ஸ்டாண்டில் பஸ் வந்து இறங்கி, உங்களின் 
காலடி வீரவநல்லூர் மண்ணில் பட்டதுமே,
eccentricity பற்றி இசக்கிமுத்து அண்ணாச்சி கேள்வி 
கேட்பார். உங்களால் பதில் சொல்ல முடியாமல் 
போனால் உங்களின் முதுகுத் தொலியை உரித்து 
விடுவார் இசக்கிமுத்து அண்ணாச்சி.
*******************************************  
  
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக