ஞாயிறு, 3 ஜூலை, 2022

 திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய

விஞ்ஞானி நம்பி நாராயணன்.
____________________________________
சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு இந்திய விண்வெளித் துறை வளர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகளின் கடின உழைப்பு உள்ளது. குறிப்பாக, திரவ உந்துவிசை ராக்கெட் என்ஜினை (Liquid Propulsion Engine) வடிவமைத்த அற்புதமான விஞ்ஞானி ஒருவரது பங்களிப்பு முக்கியமானது. அவர்தான், ராக்கெட் பொறியாளரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான எஸ்.நம்பிநாராயணன். இந்தியாவின் கிரையோஜெனிக் என்ஜின் வடிவமைப்பிலும் நம்பியின் பங்களிப்பு முக்கியமானது.
ஆனால், போற்றிப் புகழ வேண்டிய அவருக்கு நமது மத்திய, மாநில அரசுகள் இழைத்த அநீதி, என்றும் தீராத களங்கமாகவே இருக்கும். பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை விற்க முயன்றதாக அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டு, அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அந்தக் குற்றச்சாட்டின் பின்புலத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. தீவிர விசாரணைக்குப் பிறகு, உளவுக் குற்றச்சாட்டுகளிலிருந்து மத்தியப் புலனாய்வு அமைப்பாலும், உச்ச நீதிமன்றத்தாலும் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்னமும் தீரவில்லை. நம்பி மீதான தவறான நடவடிக்கையால் இந்தியாவின் கிரையோஜெனிக் தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் பல ஆண்டுகள் தள்ளிப்போனது. இப்போதும்கூட தன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியவர்களை எதிர்த்து தனியொருவராக அவர் போராடிக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரத்துக்கு முந்தைய திருவாங்கூர் சம்ஸ்தானத்தில், நாகர்கோவிலில் 1942-இல் பிறந்தார் நம்பிநாராயணன். அங்குள்ள டி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் (1958) பள்ளிக் கல்வியை முடித்த அவர், மதுரை, தியாராஜர் பொறியியல் கல்லூரியில் பயின்றார் (1965).
1966-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) பொறியாளராக இணைந்தார். அப்போது திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் அப்துல் கலாம் ராக்கெட் வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார். அந்தக் குழுவில், கலாம் வ்ழிகாட்டலில் நம்பி நாராயணன் பணிபுரிந்தார்.
நம்பி பணியில் சேர்ந்த புதிதில், இஸ்ரோ தலைவராக இருந்த விக்ரம் சாராபாய் அங்கு திடீர் வருகை புரிந்தார். அங்கு சுறுசுறுப்பாகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம்பியைப் பார்த்த அவர், “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவருக்கு வந்திருப்பது இஸ்ரோ தலைவர் என்று தெரியாது. உடனே நம்பி, “முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். முதல் சந்திப்பே மோதலில் துவங்கினாலும், நம்பியிடம் இருந்த துணிவும் துறை சார்ந்த அறிவும் சாராபாய்க்கு மிகவும் பிடித்துப் போனது. அவரை, இஸ்ரோ செலவில் அமெரிக்கா அனுப்பி ராக்கெட் தொழில்நுட்பம் குறித்து படிக்க வைத்தார் சாராபாய்.
அமெரிக்கா சென்று திரும்பிய நம்பி, கலாமுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போது கலாம், திட எரிபொருள் ராக்கெட் தயாரிப்பு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுவந்தார். ஆனால், நமது எதிர்காலத் திட்டங்களுக்கு திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட்டே தேவை என்று கூறிய நம்பி, அதை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். 1970-களில் அவரது முயற்சி வெற்றி பெற்றது; நாட்டின் முதல் திரவ உந்துவிசை ராக்கெட் என்ஜின் 600 கி.கி. எடையுடன் தயாரானது.
1971-இல் விக்ரம் சாராபாய் மறைவை அடுத்து, இஸ்ரோ தலைவரான சதீஷ் தவானும், யு.ஆர்.ராவும், நம்பிநாராயணன் மீது நம்பிக்கை வைத்து திரவ ராக்கெட் வடிவமைப்பில் அவரை உற்சாகப்படுத்தினர். அவரது தலைமையில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஃபிரான்ஸ் சென்று பயிற்சி பெற்று வந்தது. அக்குழுவினரின் தொடர் முயற்சியால், ஃபிரான்ஸ் நாட்டு உதவியுடன், திரவ ராக்கெட் என்ஜினின் மேம்பட்ட வடிவான ‘விகாஸ்’ (Vikas) உருவானது. விக்ரம் அம்பாலால் சாராபாய் நினைவாக அந்த என்ஜினுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அதுவே, இந்தியாவின் விண்வெளி சாதனைகளை நனவாக்க உதவிய ராக்கெட் இயந்திரம். துருவ செயற்கைக்கோள் ஏவுகலனிலும் (பி.எஸ்.எல்.வி.) சந்திரயானிலும், புவி இடைநிலை செயற்கைக்கோள் ஏவுகலனின் (ஜி.எஸ்.எல்.வி.) இரண்டாவது, நான்காவது நிலைகளிலும் ராக்கெட்டை இயக்குவது விகாஸ் என்ஜின்தான்.
கிரையோஜெனிக் தொழில்நுட்பம்:
ஆயினும் அதிக தொலைவுக்கு (36,000 கிமீ உயரம்) ராக்கெட்களை அனுப்ப வேண்டுமானால், குளிர்விக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலமாக இயக்கப்படும் கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் (Cryogenics) தேவைப்பட்டது. இதனை அமெரிக்கா, ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே கொண்டிருந்தன. இஸ்ரோ விஞ்ஞானிகளின் வேண்டுகோளை ஏற்று, அதனைப் பெற நமது அரசு முயன்று வந்தது. அமெரிக்கா இதனை இந்தியாவுக்குத் தர மறுத்தது. அதையடுத்து, ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான கிளாவ்கோஸ்மோஸ் (Glavkosmos) உடன் இஸ்ரோ (Indian Space Research Organisation – ISRO) 1992-இல் ஓர் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ரூ. 235 கோடிக்கு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை அளிக்க ரஷ்ய அரசு சம்மதித்தது.
ஆனால், உலக அளவில் வல்லரசு நாடுகளால் திணிக்கப்பட்ட- ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை (MTCR) காரணம் காட்டி, ரஷ்யாவை அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் மிரட்டினார். அதையடுத்து அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டின் அந்த ஒப்பந்தத்தை 1993-இல் ரத்து செய்தார்.
ஆனால் இஸ்ரோ மனம் தளரவில்லை. ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தில் சிறு திருத்தம் செய்தது இஸ்ரோ. அதன்படி, கிரையோஜினிக் தொழில்நுட்பத்துக்குப் பதிலாக 4 கிரையோஜெனிக் ராக்கெட்களை இந்தியாவின் கெல்டெக் நிறுவனம் (KELTEC) தயாரிக்க உதவுவதாக ஒப்பந்தம் மாற்றப்பட்டு அதே ஆண்டு கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் பின்னணியில், அப்போதைய இஸ்ரோ தலைவர் யு.ஆர்.ராவ், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் துணை அமைப்பான திரவ உந்துவிசை மைய இயக்குநர் டாக்டர் ஏ.இ.முத்துநாயகம் ஆகியோர் இருந்தனர். அதற்காக விஞ்ஞானிகள் எஸ்.நம்பிநாராயணன், டி.சசிகுமரன் ஆகியோர் ரஷ்யா சென்று வந்தனர். அதன் அடிப்படையில் திருவனந்தபுரம்- வலியமாலாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இந்தியக் குழுவினர் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
அப்போதுதான், 1994 அக்டோபரில் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த நிகழ்வுகள் நடந்தன. மாலத்தீவைச் சேர்ந்த உளவாளிகளான மரியம் ரஷீதா, பௌஸியா ஹாஸன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ராக்கெட் வரைபடங்கள் இருந்தன. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிநாராயணனும் சசிகுமரனும் அளித்ததாக கேரள காவல் துறை குற்றம் சாட்டியது. பாகிஸ்தானுக்கு மாலத்தீவு உளவாளிகள் வாயிலாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நம்பியும் சசிகுமரனும் கைது செய்யப்பட்டனர். அந்நிகழ்வு இஸ்ரோவை அதிர வைத்தது.
விசாரணைக் காலத்தில் இரு விஞ்ஞானிகளும் கடும் சித்ரவதைக்கு உள்ளாயினர். ஊடகங்களோ என்ன நடக்கிறது என்றே தெரியாமல், இரு விஞ்ஞானிகள் மீதும் புழுதி வாரித் தூற்றின. மாநில அரசின் வசமிருந்து மத்திய உளவுத் துறை வசம் (Intelligence Buraeu) இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டபின், சித்ரவதை மேலும் அதிகமானது. அதில் நம்பிநாராயணன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.
சிறையில் சுமார் 50 நாட்கள் விசாரணை நடந்த பின்னரே, இவ்வழக்கு மோசடியாகப் புனையப்பட்டது என்ற உண்மை வெளிப்படத் துவங்கியது. விசாரணைக் காலத்தில், இவ்வழக்கில் யு.ஆர்.ராவையும். முத்துநாயகத்தையும் சேர்ப்பதற்காக கட்டாய வாக்குமூலம் அளிக்குமாறு நம்பிநாராயணன் நிர்பந்தப்படுத்தப்பட்டார். ஆனால், அவர் அதற்கு இணங்கவில்லை. அந்த சித்ரவதைகளுக்குக் காரணமாக இருந்தவர்கள், அப்போதைய கேரள காவல்துறை அதிகாரி ஷிபி மாத்யூஸ், ஐ.பி. தலைவர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் என்பது பிற்பாடு தெரியவந்தது.
பிறகு இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறை (CBI), இரு விஞ்ஞானிகள் மீதான உளவுக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 1996 மே மாதம் அறிவித்தது. இந்த வழக்கில் இருந்து இரு விஞ்ஞானிகளையும் உச்ச நீதிமன்றம் 1998-இல் விடுவித்தது.
அதையடுத்து மீண்டும் இஸ்ரோவின் அலுவலகப் பிரிவில் பணியாற்ற இரு விஞ்ஞானிகளும் அனுமதிக்கப்பட்டபோதும், முந்தைய ராக்கெட் ஆராய்ச்சிப் பிரிவில் அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. 2001-இல் நம்பிநாராயணன் ஓய்வு பெற்றார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைக்காக நீதிமன்றத்தில் அவர் தனது யுத்தத்தை நடத்தி வருகிறார்.
இந்த மோசடி வழக்கே, இந்தியாவின் கிரையோஜெனிக் ஆராய்ச்சியை தாமதப்படுத்த வெளிநாட்டு உளவு அமைப்புகள் செய்த சதிதான். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அதனால், அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு விஞ்ஞானிகளும் அவதூறின் எல்லைக்கே கொண்டு செல்லப்பட்டனர். அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கனே, அரசு சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ தலையிடாது என்று ஒதுங்கிக் கொண்டார்.
ஆயினும் நம்பியின் குழுவுக்கு ஆரம்பத்தில் தலைமை தாங்கியவரான அப்துல் கலாம், “அனைத்துக்கும் மேலாக இறைவனின் நீதிமன்றம் உள்ளது. அங்கு யாரும் பொய் பேச முடியாது” என்று கூறி நம்பிக்கு ஆறுதல் அளித்தார். “வெறும் நான்கு வரைபடங்களைக் கொண்டு ராக்கெட் தயாரித்து விடலாம் என்று சிலர் நினைப்பதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது” என்றும், விசாரணைக் காலத்தில் அவர் வேதனை தெரிவித்தார்.
தற்போது காலச் சக்கரம் உருண்டோடி, நியாயம் எதுவெனக் காட்டி இருக்கிறது. உண்மையை உரைத்த கலாம் ஜனாதிபதி ஆனார். நம்பிக்கு ஆதரவு காட்டத் தவறிய கஸ்தூரிரங்கன், ஆன்ட்ரிக்ஸ்- தேவா ஒப்பந்தம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். நம்பியை சித்ரவதை செய்த காவல் துறை அதிகாரிகள் வேறு சில புகார்களால் களங்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், நம்பியின் வேதனை தீரவில்லை. தன்மீதான பொய்யான குற்றச்சாட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் (2000-க்குள்) இந்தியா பெற்றிருக்க வேண்டிய கிரையோஜெனிக் தொழில்நுட்பம் 2015 வரை தள்ளிப்போய்விட்டதே என்பதுதான் அவரது ஆதங்கம்.
2015-இல்தான் இந்தியா கிரையோஜெனிக் ராக்கெட் (CE20) தயாரிப்பில் வெற்றி அடைந்தது. ஆனால், அதனை வெளிநாட்டுக்கு விற்க முயன்றதாகத்தான் நம்பி உள்ளிட்டோர் மீது 1994-இல் குற்றம் சாட்டப்பட்டது.
நம்பியின் மான நஷ்ட வழக்கை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், தவறான வழக்கால் நம்பிக்கு நேரிட்ட இழப்புகளுக்காக ஒரு கோடி ரூபாயை கேரள அரசு இழப்பீட்டாகத் தர 2001-இல் உத்தரவிட்டது. கேரள உயர் நீதிமன்றமும் ரூ. 10 லட்சம் வழங்குமாறு 2012-இல் உத்தரவிட்டது. ஆயினும் அவருக்கு அந்த நிவாரணம்கூட வழங்கப்படவில்லை. அதுதொடர்பாக நம்பியின் நீதிகான போராட்டம் தொடர்கிறது.
இப்போதும்கூட, தனக்கு நேர்ந்த அவலத்துக்காக இந்தியாவை அவர் விமர்சிக்கவில்லை. இதுபோன்ற தவறு எதிர்காலத்தில் யாருக்கும் நிகழக் கூடாது என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
எது எப்படியோ, விண்வெளிப் பயணத்தில் இந்தியா சாதனை படைக்க்க் காரணமான விஞ்ஞானி நம்பிநாராயணன், அதற்கான எந்த கௌரவமும் பெறாமல், திருவனந்தபுரத்தில் வாடுகிறார். வருங்காலத்திலேனும் நமது அரசு அவருக்கு உரிய கௌரவத்தை அளிப்பதுதான், அவருக்கு இழைப்பட்ட அநீதிக்கு சற்றேனும் மருந்தாக அமையும்.
-வ.மு.முரளி
-தினமணி இளைஞர்மணி (29.08.2017)
____________________________________
பிறகு நடந்தவை...
1. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷண் 2019 ஜனவரியில் வழங்கப்பட்டது. விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை கௌரவிப்பதை தனது அரசு பெருமையாகக் கருதுகிறது - என்றார் பிரதமர் மோடி.
2. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, கேரள அரசு (முதல்வர் பினராயி விஜயன்) கடந்த ஆண்டு விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களுக்கு ரூ. 1.3 கோடி நஷ்ட ஈட்டை வழங்கியது.
3. விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை பொய் வழக்கில் சிக்கவைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர் மீது குற்றச்சதி வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 ஏப்ரலில் உத்தரவிட்டது.
4, விஞ்ஞானி நம்பி அவர்களை சித்ரவதை செய்த ஐ.பி. அதிகாரி ஸ்ரீகுமார், குஜராத் கலவரம் தொடர்பான சதி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார்.
5. இவரது வாழ்க்கை வரலாறு நடிகர் மாதவனின் இயக்கத்தில் அவரே நம்பி நாராயணனாக நடிக்க 'ராக்கெட்ரி' என்ற திரைப்படமாக அண்மையில் வெளிவந்துள்ளது. இப்படம் அனைவரது மனசாட்சியையும் உலுக்குவதாக இருக்கிறது. நீங்களும் இப்படத்தை அவசியம் பாருங்கள்.
8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக