திங்கள், 4 ஜூலை, 2022

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் 
சூரியனுக்கு அருகில் பூமி வருவதும் 
தூர விலகுவதும் இயல்பே! இது அபூர்வ நிகழ்வு அல்ல!
இது ஆண்டுதோறும் நிகழ்வது! (periodical phenomenon)  
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
வாட்சப்பில் வந்தது என்றும் மாலைமலரில் வெளிவந்த 
செய்தி என்றும் ஒரு தவறான செய்தி சமூகத்தின் 
பொதுவெளியில் உலா வருகிறது. இதோ பாருங்கள்
மாலைமலரில் வந்ததாகக் கூறப்படும் அச்செய்தி!

"சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி
கிலோ மீட்டர் ஆகும். ஆனால் அல்பெலியன் நிகழ்வு
காலத்தில் 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிக்கும்.
சுமார் 66 சதவீதம் தூரத்தின் அளவு அதிகரிக்கும்".

"சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை
அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும். அல்பெலியன்
கால கட்டத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல் மற்றும்
சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம".
நன்றி மாலைமலர்.

மேற்கண்ட செய்தி மாலைமலரில் வந்ததா என்று 
உறுதி செய்ய இயலவில்லை. ஆனால் வாட்சப்பில் 
வந்ததை அறிய முடிந்தது.

இந்தச் செய்தி உண்மையல்ல. தூரத்தின் அளவு 
66 சதவீதம் அதிகரிக்கும் என்பது  மூடத்தனமான 
பொய். மேலும் இது அபூர்வ நிகழ்வு அல்ல.ஆண்டுதோறும் நிகழும் 
ஒரு periodical phenomenon.

மிகக்குறைந்த eccentricity உடைய ஒரு நீள்வட்டப் 
பாதையில் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. 
இவ்வாறு ஒரு முழுச்சுற்றையும் சுற்றி முடிக்க
பூமிக்கு ஓராண்டு காலம் ஆகிறது. இந்த ஓராண்டில் 
ஒருமுறை சூரியனுக்கு நெருக்கமாகவும், ஒருமுறை 
சூரியனுக்கு அப்பாலும் பூமி சுற்றுகிறது.
சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் நிலை perihelion 
position என்றும் சூரியனுக்கு அப்பால் உள்ள நிலை 
aphelion position என்றும் அழைக்கப் படுகிறது.



சரி, பூமியானது சூரியனை எவ்வளவு அருகில்
நெருங்கும்?? அதுபோல சூரியனுக்கு அப்பால் 
என்னும்போது சூரியனில் இருந்து எவ்வளவு 
தூரம் விலகி இருக்கும்?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 
வானியலில் மிகவும் முக்கியமானது. இதை 
AU என்பார்கள் (AU = Astronomical Unit).
1 AU = 15 கோடி கிமீ. இதன் பொருள் சூரியனுக்கும் 
பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் 
(Mean distance) 15 கோடி கிமீ என்பதாகும்.

பூமி சூரியனுக்கு அருகில் வரும் perihelion positionல்,
பூமி சூரியனில் இருந்து 14 கோடியே 71 லட்சம் கிமீ
தூரத்தில் இருந்தது. அதாவது சராசரி தூரமான 
15 கோடி கிமீயை விட 29 லட்சம் கிமீ குறைவான 
தூரத்தில், சூரியனுக்கு அருகில் சென்றது.

அதே போல, பூமி சூரியனுக்கு அப்பால் வெகு 
தூரத்தில் சுற்றும்போது (Aphelion position), பூமி 
சூரியனில் இருந்து 15 கோடியே 21 லட்சம் கிமீ 
தூரத்தில் இருந்தது. அதாவது சராசரி தூரமான 
15 கோடி கிமீயை விட 21 லட்சம் கிமீ தூரம் 
அதிகமாக சூரியனுக்கு அப்பால் இருந்தது.

சராசரி தூரம் (Mean distance) =  15 கோடி கிமீ 
சூரிய அண்மை (Perihelion) = 147,105,052 கிமீ.
சூரியச் சேய்மை (Aphelion) = 152,098,455 கிமீ.

15 கோடியை விட 21 லட்சம் கிமீ அதிகம் என்பது
ஒருபோதும் 66% அதிகரிப்பு ஆகாது. எனவே 66%
அதிகரிப்பு என்று ஊடகங்கள் கூறுவது முற்றிலும் தவறு.

66% அதிகரிப்பு என்றால் சராசரி தூரமான 15 கோடி
கிமீயை விட 66% அதிகரித்து, அதாவது 10 கோடி கிமீ
அதிகரித்து, பூமியானது சூரியனில் இருந்து
25 கோடி கிமீ (15+10 = 25கிமீ) தூரத்தில் இருக்க
வேண்டும். அப்படி இருக்க இயலுமா? இயலாது.

ஏனெனில் பூமியை அடுத்து இருக்கும் கோளான
செவ்வாய் சூரியனில் இருந்து 22.8 கோடி கிமீ (1.5 AU)
தூரத்தில் உள்ளது. செவ்வாயையும் தாண்டி 25 கோடி
கிமீ தூரத்தில் பூமி இருக்கும் என்று கூறுவது தவறானது
மட்டுமல்ல அடிமுட்டாள்தனமானதும் ஆகும். எனவே
66% அதிகரிப்பு என்பது இகழ்ச்சியுடன் நிராகரிக்கத்
தக்கது.

இதனால் பூமி குளிர்கிறது என்றும் நோய்கள் வரும்
என்றும் அளவே இல்லாமல் பொய்கள் பரப்பப்
படுகின்றன. மத்தியானம் ஒரு மணிக்கு வெயிலில்
இறங்கி நடந்து பாருங்கள். குளிர் அதிகரிக்கிறது
என்பதெல்லாம் எவ்வளவு பொய் என்று அனுபவத்தின்
மூலம் உணரலாம்.

இதுகுறித்து ஏற்கனவே full fledgedஆக ஒரு கட்டுரை
எழுதினேன். தற்போது வதந்திகள் அதிகரிக்கவே
இந்தக் கட்டுரையை கையை ஒடித்துக் கொண்டு
எழுத நேர்கிறது. பொய்யைச் சொல்லுகிறவனுக்கு
ஒரு நிமிட வேலை. அது பொய் என்று நிரூபித்து
உண்மையை நிலைநாட்டுவதற்குள் தாடைகள்
உடைந்து விடுகின்றன.
-------------------------------------------------------------
பின்குறிப்பு::
மாலைமலரின் மேற்குறிப்பிட்ட தவறான செய்தி
வந்திருக்கிறதா? வந்திருந்தாள் அதன் நகல் அல்லது
clippingஐ இங்கு பதிவிடுமாறு வாசகர்களை
வேண்டுகிறேன்.
**********************************************
       
    
      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக