முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழும்
குட்டி முதலாளியக் கோமாளிப் பயல்களும்
வாழ்ந்து கெட்ட குடும்பமாக தமிழும்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
ஒவ்வொரு மொழியும் எப்போது பிறந்தது என்று
சொல்ல முடியும். ஆனால் தமிழ் எப்போது
பிறந்தது என்று எவராலும் சொல்ல இயலாது.
அதாவது மற்ற மொழிகள் அனைத்திற்கும்
"பிறந்த தேதி" (Date of birth) உண்டு. ஆனால்
தமிழுக்குப் பிறந்த தேதி கிடையாது. இப்படிச்
சொல்வது நான் அல்ல; பாரதியார்!
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும்- இவள்
என்று பிறந்தனள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்
என்கிறார் பாரதியார்.
தமிழர்கள் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்த சங்க
காலத்திலேயே ஓங்கி வளர்ந்த மொழியாகத்
திகழ்ந்தது தமிழ். வேட்டுவச் சமூகம், கால்நடை
வளர்ப்புச் சமூகம், வேளாண் சமூகம் என்று
காலந்தோறும் வளர்ந்து நிலவுடைமைச் சமூக
காலத்தில் உச்சம் பெற்றது தமிழ்.
தமிழ் தனது அதிகபட்ச உயரத்தை அடைந்திருந்த
காலம் நிலவுடைமைச் சமூக (feudal society) காலம்.
அக்காலக் கட்டத்தில் சமஸ்கிருதத்துடன் சேர்ந்து
தமிழும் பொருளுற்பத்தியின் மொழியாக இருந்தது.
இங்கு பொருளுற்பத்தியின் மொழி என்பது
மிகவும் முக்கியம். பொருளுற்பத்தியின் மொழி
என்ற கருத்தாக்கத்தையே நான்தான் முதன் முதலில்
தமிழ்-இந்தியச் சமூகத்தில் முன்வைத்தவன்.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில்
தொழிற்புரட்சி ஏற்பட்டு உலகெங்கும் பரவியது.
உலகம் முழுவதும் பொருளுற்பத்தி முறை
(mode of production) மாறியது. அதுகாறும் இருந்து
வந்த நிலவுடைமை உற்பத்தி முறை
(feudal mode of production) மாற்றம் அடைந்து
முதலாளிய உற்பத்தி முறை (capitalist mode of production)
புதிதாகத் தோன்றியது.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உற்பத்தி முறையில்
நிகழ்ந்த இந்த மாற்றங்கள் பெருமளவு முழுமை
அடைந்து, இருபதாம் நூற்றாண்டில் துலாம்பரமாக
வெளிப்பட்டன. இந்த மாற்றங்களின் விளைவாக
ஆங்கிலம் மொத்த இந்தியாவின் பொருளுற்பத்தி
மொழி ஆகியது. தமிழ் சமஸ்கிருதம் ஆகிய
இரு மொழிகளும் பொருளுற்பத்தியின் மொழிகளாக
இருந்த நிலையில் இருந்து இழிந்து வீழ்ச்சி அடைந்தன.
20, 21ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் தனது முந்திய
அந்தஸ்துகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டே
வந்தது. பள்ளி கல்லூரிகளில் தமிழ் பயிற்று
மொழியாக நீடிக்க இயலவில்லை. தமிழில்
அறிவியலைச் சொல்ல இயலவில்லை. அரசுப்
பள்ளிகளிலேயே தமிழ் மீடியம் வகுப்புகள் ஒழிக்கப்
பட்டு ஆங்கில மீடியம் வகுப்புகள் தொடங்கப் பட்டன.
சொற்கள் உற்பத்தி சார்ந்தவை. சொற்களின்
பிறப்பிடம் பொருளுற்பத்தியே பொருளுற்பத்தியில்
தமிழ் இல்லாததால் புதிய கலைச்சொற்கள் தமிழில்
இயல்பாக உருவாகவில்லை. தமிழ் அறிவியல்
சார்ந்தும் உற்பத்தி சார்ந்தும் வழக்கு வீழ்ந்தது.
நிலவுடைமைச் சமூக காலத்தில் இயல் இசை
நாடகம் என்றும் முத்தமிழ் என்றும் சமூகத்தை
தமிழ் ஆட்சி செய்தது. வாழ்வியலின் அனைத்துத்
துறைகளிலும் தமிழ் நிறைவுற்று இருந்தது.
சமூகத்தின் தேவையை தமிழ் நிறைவு செய்தது.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
முதலாளிய ஏகாதிபத்திய சகாப்தமான சமகாலத்தில்
(contemporary capitalist imperialist society) கால மாற்றத்துக்கு
ஏற்றவாறும் உற்பத்தி முறையின் மாற்றத்துக்கு
ஏற்றவாறும் தமிழ் தன்னைப் புதுப்பித்துக்
கொள்ளவில்லை; கொள்ளவும் இயலவில்லை.
இதன் விளைவாக வாழ்வியல் துறைகளின்
தேவைகளுக்கு ஈடு கொடுக்க இயலாத
போதாமையுடன் தமிழ் சுருங்கிப் போயுள்ளது.
சுருங்கக் கூறின் தமிழானது வாழ்ந்து கெட்ட
குடும்பம் போல இன்றுள்ளது. தமிழ்-இந்தியச்
சமூகத்தின் பொருளுற்பத்தியின் மொழியாக
கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழ் இல்லை.
இதுதான் உண்மை!
இதுதான் நிதர்சனம். இதற்கு மாறாக தமிழில்
எல்லாம் இருக்கிறது என்று பொறுப்பற்ற முறையில்
பிதற்றித் திரிபவன் கோமாளிப் பயல் மட்டுமல்ல
தமிழின் பகைவனும் ஆவான்.
தமிழை விட இந்தி இசைக்கு ஏற்றதாக உள்ளது
என்கிறார் இளையராஜா. அது இந்தி மொழியின்
தன்மை. பல்வேறு இந்திய மொழிகளில்
திரைப்படங்களுக்கு இசை அமைத்து அனுபவம்
பெற்றதால் அவரால் இந்த உண்மையை உணர
முடிந்தது. மேலும் அவருக்கு முன்பே இந்தக்
கருத்தை பல்வேறு இசைவாணர்கள் கூறியுள்ளனர்.
சாராம்சத்தில் இளையராஜா குறிப்பிடுவது
என்னவெனில் தமிழ் உற்பத்தி மொழியாக
இல்லை என்பதைத்தான். ஒரு காலத்தில்
இசையில் கொடிகட்டிப் பறந்த தமிழால்,
மாற்றமடைந்த உற்பத்தி முறை கோலோச்சும்
இன்றைய காலக்கட்டத்தின் சமூகத்தில்
இசை சார்ந்த சமூகத் தேவைகளை நிறைவேற்ற
இளையராஜா சுட்டிக் காட்டுகிறார். தெர்மா மீட்டரை
னாக்குகி அடியில் வைத்து, வெப்பநிலை 102 டிகிரி
மருத்துவரைப் போன்று இளையராஜாவும்
குறிப்பிடுகிறார்.
ஐந்தாண்டுக்கு முன்பு இளையராஜா சொன்னதை
இன்று புதிதாகச் சொன்னது போல் விகடன் எடுத்துப்
போடுகிறான். அதைப் பேராயுதமாகக் கருதிக்
கொண்டு, எந்த நியாயமோ அறிவுடைமையோ
இல்லாத குட்டி முதலாளியக் கோமாளி.
தொடை தட்டிக்கொண்டு வருகிறான்.
இளையராஜாவை அடிக்கப் பாய்ந்து கொண்டு
வருகிறான். அவன் ஒரு நிர்மூடன். எவ்வளவுதான்
அறிவு கொளுத்தினாலும் அந்த நிர்மூடனின்
அறிவு துலங்காது. ஏனெனில் every fool is fully convinced.
முட்டாள்தனமாக பழம் பெருமை பேசுபவன்
தமிழ்ச் சமூகத்திற்குக் கேடு விளைவிப்பவன்.
அவன் மகன் அல்லன்; மக்கட்பதடி ஆவான்.
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
உற்பத்தி மொழியாக இல்லாத தமிழை
உற்பத்தி மொழியாக ஆக்க வேண்டும்.
இதுமட்டுமே இன்றைய தேவை. இதுதான் தமிழின்
ஒரே தேவை! இதைச் செய்பவன் யாரோ அவன்
மட்டுமே தமிழை வாழ வைப்பவன்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழை
உற்பத்தி மொழியாக்க ஆக்குவதற்கு இழையறாது
பாடுபட்டு வருபவன் நான் என்பதை தமிழ்ச்
சமூகம் அறியும். எனினும் காழ்ப்புணர்ச்சி
மிகுந்த குட்டி முதலாளியம் இதைக் கண்டு
கொள்ளாது.
எனவே தமிழ் சார்ந்து நான் முன் வைக்கும்
கருத்துக்களை எதிர்ப்பவர்கள் என்னை
எதிர்ப்பதாக நான் கருதவில்லை. அவர்கள்
தமிழை எதிர்க்கிறார்கள். அவர்கள் தமிழின்
பகைவர்கள். அவர்கள் முறியடிக்கப் படுவது
திண்ணம்.
***********************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக