ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலும்
மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதன் ரகசியமும்!
--------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு-1:
----------------------
இக்கட்டுரை விவாதங்களைத் தேவையற்றதாக ஆக்கும்
ஆய்வுக் கட்டுரை. (THIS IS NOT ON POLEMICS BUT BASED
ON UNASSAILABLE EVIDENCE SUPPORTED BY DATA ANALYSIS)
முன்குறிப்பு-2:
---------------------
எனினும் காத்திரமான எதிர்வினைகள் வரவேற்கப் படுகின்றன.
--------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவை முன்னறிவிக்க
ஒரு செபாலஜிஸ்ட் தேவையில்லை. அதிமுக அமோக
வெற்றி பெறும். திமுக இரண்டாம் இடத்தைப் பெறும்.
பாஜகவும் மார்க்சிஸ்ட்டும் டெப்பாசிட் இழக்கும்.
தோராயமாக 35000 வாக்குகளைப் பெற முடிந்தால்,
பாஜக டெப்பாசிட் பெறும்.(ONE SIXTH OF THE POLLED VOTES
SECURES A PARTY ITS DEPOSIT). அப்படிப் பெற்று விட்டால்,
பாஜகவைப் பொறுத்த மட்டில் அது இமாலய சாதனை.
திருமங்கலம் முதல் ஏற்காடு வரையிலான இடைத் தேர்தல்கள்
தமிழக அரசியல் கட்சிகளுக்கு, மறக்க முடியாத ஒரு
படிப்பினையை வழங்கி இருக்கின்றன. எனவேதான், காங்கிரஸ்,
பாமக, மதிமுக, வாசனின் தமாக, தேமுதிக, புதிய தமிழகம்
உள்ளிட்ட பல கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு விட்டன.
தேர்வுக்கு முன்பே, வினாத்தாள் வெளியாகி, அது கையிலும்
கிடைத்து விட்ட மாணவனைப்போல் மகிழ்ச்சியுடன்
தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக. மற்றக் கட்சிகளின் நிலை
அவ்வாறல்ல.
பொதுவாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டால்தான்
இடைத்தேர்தல் வரும். ஆனால் ஸ்ரீரங்கம் தேர்தல், பதவியில்
இருக்கும் முதல்வர் பதவி இழந்ததால் வருகிறது. அதிமுகவைப்
பொறுத்த மட்டில், இது முதல்வரின் தொகுதிக்கான இடைத்
தேர்தல். எனவே, HIGHLY PRESTIGIOUS.
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு வார்டு என்று ஒதுக்கப்பட்டு,
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இலக்கு தவறினால் சீட்டுக் கிழிவது நிச்சயம். எனவே, அமைச்சர்கள் ஒருவித KILLER INSTINCT
உடன் களப்பணி ஆற்றுகிறார்கள். இந்தச் சந்தை இரைச்சலிலும்
வெள்ளமாய்ப் பெருகும் கரன்சி மழையிலும் நனையும்
ஸ்ரீரங்கத்து மக்களால், நிதானமாகச் சிந்தித்துச் சீர்தூக்கிப்
பார்த்து வாக்களிப்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை.
எனவே, இந்த இடைத்தேர்தல் சமநிலையற்ற ஒரு ஆட்டம்.
( A GAME AT ODDS AND NOT AT EVEN ).இதனால் பெரிதும்
பாதிப்புக்கு உள்ளாவது சிறிய கட்சிகளே. பிரதான கட்சிகளைத்
தவிர்த்து, போட்டியிடும் சிறிய கட்சிகளின் மெய்யான
ஆதரவை இத்தேர்தல் முடிவு பிரதிபலிக்காது. வாக்காளர்களிடம்
ஒருவிதமான துருவ மனநிலை (POLARISED MOOD) மேலோங்கி
இருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
பல சிறிய கட்சிகளும் போட்டியில் இருந்து ஒதுங்கிக்
கொண்ட நிலையில், FOOLS RUSH IN WHERE ANGELS FEAR
TO TREAD என்பது போல, மார்க்சிஸ்ட் கட்சி இங்கு போட்டி
இடுகிறது.
ஏழு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2014 நாடாளுமன்றத்
தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிய திருச்சி தொகுதியில்
போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வெறும் 17039 வாக்குகளை
மட்டுமே பெற்றது. இத்தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த
வாக்குகளை விட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றது
மார்க்சிஸ்ட் கட்சி. ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது
ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே,
சராசரியாக, ஒரு தொகுதிக்கு 2830 வாக்குகள் என்பதே
இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி.
இக்கட்டுரையுடன் புள்ளி விவரங்கள் அடங்கிய,
நான்கு இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை
வாசகர்கள் கண்டிப்பாகப் படிக்கவும்.
ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில், தங்களின்
வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரிந்து கொண்டு விட்ட
பிறகு, இப்போது மீண்டும் ஆதரவை அளந்து பார்க்க வேண்டிய
அவசியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை. அதுவும், ஒரு
முதலமைச்சரின் தொகுதியில், இடம் பொருள் ஏவல்,
சந்தர்ப்பம், சூழ்நிலை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல்.
கடந்த டில்லி மாநிலத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது.
சூடுபட்டது.இதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கத்தில்
போட்டி இடுவதற்கும் என்ன வித்தியாசம்?
வீண் பெருமைக்காகப் போட்டியிடுவதற்கு, மார்க்சிஸ்ட்
தலைமை திமிர் பிடித்த முட்டாள்களைக் கொண்டதல்ல.
அறிவாளிகளையும் சாணக்கியர்களையும் கொண்டதுதான்
மார்க்சிஸ்ட் தலைமை. பின் ஏன், இப்படி ஒரு முடிவு?
இங்குதான் மார்க்சிஸ்ட் தலைமையின் திவால் அரசியலும்
( BANKRUPT POLITICS), கட்சிக் கலைப்புவாதமும் வெளிப்
படுகின்றன. ஜெயாவின் நல்லெண்ணத்தைப் பெறுவது
ஒன்றே மார்க்சிஸ்ட்களின் ஒற்றை அஜெண்டாவாக உள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில், ஜெயாவுடன் ஒட்டிக்கொண்டு
ஒன்றிரண்டு இடங்களைப் பெறுவது என்ற அவர்களின்
திட்டத்துக்கு அச்சாரமாகவே, ஜெயாவைத் திருப்திப் படுத்த
மார்க்சிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கத்தில் நிற்கிறது.
"அம்மா, பாருங்கள், நாங்கள் திமுகவுடன் இல்லை!" என்று
உரக்கப் பிரகடனம் செய்வது ஒன்றுதான் மார்க்சிஸ்ட்
தலைமையின் நோக்கம். இடைத்தேர்தலில் போட்டியிடுவதன்
மூலம் இந்நோக்கம் சிறப்பாக நிறைவேறுகிறது.
"ஒருவேளை, இவர்கள் திமுகவுடன் போய் விடுவார்களோ"
என்ற சந்தேகம் அம்மாவின் மனதில் இருந்து நீங்கி விட்டது
அல்லவா இப்போது! இதுதானே மார்க்சிஸ்ட் தலைமை
விரும்பியது!
திமுகவுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி சேர வேண்டும் என்பதல்ல
நாம் இங்கு கூறுவது. நுனிப்புல் வாசகர்களைத் தவிர, முதிர்ந்த
வாசகர்களுக்கு இது எளிதில் விளங்கும்.
பாஜகவின் இந்துத்துவ அரசியலை ஏற்காத, அதே நேரத்தில்
திமுக அதிமுக கட்சிகளையும் விரும்பாத, மக்கள் திரளின்
எண்ணிக்கை தமிழக அரசியலில் அதிகரித்து வருகிறது.
இவர்களின் ஆதரவைப் பெறுவது ஒன்றுதான் மார்க்சிஸ்ட்
கட்சிக்கு ஆக்சிஜன் ஆகும். வாசன் போன்றவர்களே இக்கூட்டத்தைக்
குறி வைக்கும்போது, மார்க்சிஸ்ட்கள் பாராமுகம்
காட்டுவது ஏன்?
ஜெயாவிடம் இருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டால்
மட்டுமே, மார்க்சிஸ்ட்களால் இம்மக்கள் திரளின் ஆதரவைப்
பெற முடியும். உண்மையில் இவ்வாறு துண்டித்துக் கொள்வது
ஒரு அத்தியாவசியமான முன் நிபந்தனை ஆகும்.
ஆனால்,
"மீன் நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக் கோட்டம்மா நீ
என்பால் நோக்காய் ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்"
( குலசேகர ஆழ்வார், நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் )
என்பதுபோல், ஜெயா பக்தியில் மார்க்சிஸ்ட்கள் ஆழ்ந்து
போய்க் கிடக்கிறார்கள். இது அரசியல் முக்திக்கு அவர்களை
இட்டுச் செல்லும்.
தங்களின் திவால் அரசியலை மூடி மறைக்க, தலித்
அட்டையை ( DALIT CARD) காட்டுகிறார்கள் மார்க்சிஸ்ட்கள்.
பொதுத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ஒரு தலித் வேட்பாளரை
நிறுத்தி இருக்கிறோம் என்று பம்மாத்துப் பண்ணுகிறார்கள்.
டெப்பாசிட் இழப்பது உறுதி என்ற நிலையில், மூத்த தலைவர்கள்
போட்டியிடுவதை இகழ்ச்சியுடன் நிராகரிக்கும் நிலையில்,
ஒரு தலித் இளைஞரை நிறுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம்
தலித் ஆதரவு அந்தஸ்தை மார்க்சிஸ்ட்கள் பெற முடியாது.
தலித் மக்களையும் ஏமாற்ற முடியாது.
ராஜ்யசபா எம்.பி எனும்போது மீண்டும் மீண்டும் ரங்கராஜன்
தான். கட்சியின் மாநிலச் செயலர் பதவி எனும்போது,
தலித்துக்கா அதைக் கொடுக்கப் போகிறார்கள்?
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர்களில், தலித்
முகம் ஏதாவது உண்டா, அன்றிலிருந்து இன்று வரை?
பி. ராமமூர்த்தி, ஏ.பி,, உமாநாத், சிந்தன், எம்.ஆர்.
வெங்கட்ராமன், பரமேஸ்வரன், சங்கரய்யா, மைதிலி
சிவராமன், உ.வாசுகி என்று நீளும் தலைவர்களில்
எத்தனை பேர் தலித்துகள்?
தேசியச் செயலாளர் என்னும் உயர்ந்த பதவியில், CPI
டி.ராஜாவை அமர்த்தி இருக்கிறதே! அதுபோல், CPM இல்
எதிர்பார்க்க முடியுமா/
( இங்கு கொடுக்கப்பட்ட புள்ளி விவர இணைப்புகளைப்
பார்க்கவும்)
மேற்கு வங்கத்தில் 1980களில், ஜோதிபாசு ஆட்சியில்,
பதினேழாயிரம் தலித்துகள் மரிச்சாபி என்ற இடத்தில்
படுகொலை செய்யப் பட்டதை மறக்க முடியுமா?
தலித் விவசாயிகளின் மத்தியில், மார்க்சிஸ்ட் கட்சி
வேலை செய்த வரலாறு உண்டா? மார்க்சிஸ்ட் கட்சியின்
ஆதரவு அடித்தளம் நகர்ப்புற நடுத்தர வர்க்கமும்,
WHITE COLLAR பணியாளர்களும்தானே!
ஆக, மார்க்சிஸ்ட் கட்சி தலித் ஆதரவுக் கட்சியோ,
புரட்சி செய்யக் கூடிய கட்சியோ அல்ல.
தமிழ்நாட்டில், மார்க்சிஸ்ட் கட்சி ஜெயாவின் கடைக்கண்
பார்வைக்காக என்றென்றும் ஏங்கிக் கிடக்கும் ஒரு
கட்சிதான். இதை இக்கட்டுரை ஐயம் திரிபற
நிரூபித்துள்ளது, ஒரு ஜியோமெட்ரி தேற்றத்தை
நிரூபிப்பதைப் போல.
பின்குறிப்பு:
-----------------
இத்துடன் தரப்பட்டுள்ள நான்கு புள்ளி விவர
இணைப்புகளைப் படிக்கவும். அந்த இணைப்புகளையும்
சேர்த்தால்தான், இக்கட்டுரை முழுமை அடையும்.
*************************************************************
.