வெள்ளி, 8 ஜனவரி, 2021

ரவிசங்கர் பிரசாத் அவர்களே,

அலைக்கற்றை விலையைக் குறையுங்கள்!

குறைக்காவிட்டால் 4g, 5g ஏலம் தோல்வி அடையும்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------

2ஜி முதல் 5ஜி வரை உலகில் உள்ளது. இந்தியாவிலும் 

உள்ளது. இந்தியாவில் 5ஜி ஏலம் மார்ச் 31ல் நடைபெறும்.

முன்னதாக 2ஜி,3ஜி,4ஜி ஏலம் மார்ச் 1ல் தொடங்குகிறது.

ஒவ்வொரு தலைமுறை அலைக்கற்றையும் அதற்கேற்ற 

அதிர்வெண் (frequency) கொண்டது. உலகின் அனைத்து 

நாடுகளுக்கும் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யும் 

பணியை ஐநா சபையின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான 

ITU (International Telecommunications Union) மேற்கொள்கிறது.


டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகவும் கபில் சிபல் 

தொலைதொடர்பு அமைச்சராகவும் இருந்த காலம் 

தொட்டு, அலைக்கற்றைகள் ஏலத்தின் மூலமே 

ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. 


அதற்கு முன்பு ஆ ராசா  தொலைதொடர்பு  அமைச்சராக 

இருந்தபோது, 2ஜி அலைக்கற்றையை  ஏலம் விடாமல் 

லஞ்சம் வாங்கிக் கொண்டு தமக்கு வேண்டியவர்களுக்கு 

வழங்கினார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.  

இந்தக் குற்றச்சாட்டு உண்மையே என்று உணர்ந்து, 

2008-2010  காலக்கட்டத்தில்  ஆ ராசா  வழங்கிய 122 உரிமங்களை  உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.  


உச்சநீதிமன்ற நீதியரசர் கங்குலி   2012 பிப்ரவரியில் 

இத்தீர்ப்பை வழங்கினார். வரலாற்றுச்  சிறப்பு மிக்க 

இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், ஏலம் விடாமல், 

லஞ்சம் வாங்கிக் கொண்டு அலைக்கற்றையை வழங்கும்    

ஊழல் பீடித்த நடைமுறை மரணத்தைத் தழுவியது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அன்றைய 

தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் 2ஜி 

அலைக்கற்றைக்கான ஓர் ஏலத்தை நவம்பர் 2012ல் 

நடத்தினார். Base priceஆக ரூ 14,000 கோடியை நிர்ணயித்து 

விட்டு, ரூ 30,000 கோடி வருவாய் வரும் என்று நாக்கைத் 

தொங்கப்பட்டுக் கொண்டு காத்திருந்தது TRAI அமைப்பு.


ஆனால் கபில் சிபல் நடத்திய ஏலம் படுதோல்வி அடைந்தது.

பல நாட்கள் நடைபெற வேண்டிய ஏலம், இரண்டாம் நாளே 

முடிவுக்கு வந்தது. பேராசையோடு டிராய் நிர்ணயித்த 

அநியாய விலைக்கு ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் 

முன்வரவில்லை. ரூ 30,000 கோடி எதிர்பார்த்த இடத்தில்,

ரூ 9407.64 கோடி மட்டுமே வருவாயாக வந்தது. இந்த 

ஏலத்துக்குப் பொறுப்பான அமைச்சர்கள் கபில் சிபலும் 

ப சிதம்பரமும் அவமானத்தால் தலைகவிழ்ந்து நின்றனர். 


ஒரு இட்லியின் விலை ரூ 50 என்று சொன்னால் கூட, 

பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி விடுவார்கள்.

ஆனால் ஒரு இட்லி விலை ரூ 100 என்று சொன்னால் 

எவன் வாங்குவான்? இதுதான் கபில் சிபலின் ஏலத்தில் 

நடந்தது. இந்த ஏலம் பொன் முட்டையிடும் வாத்தை 

அறுத்துப் பார்க்கும் முயற்சி என்று வர்ணித்தார் 

கபில் சிபல். வேண்டா வெறுப்புடன் இந்த ஏலத்தை 

நடத்தினார் கபில் சிபல். உச்சநீதிமன்றம் 122 உரிமங்களை 

ரத்து செய்து விட்டதால், ஏலம் நடத்த வேண்டிய 

கட்டாயம்  அரசுக்கு ஏற்பட்டு விட்டது.


தோல்வி அடைந்த இந்த ஏலம் மத்திய அரசுக்கு ஒரு 

படிப்பினையைத் தந்தது. நிறுவனங்களின் வாங்கும் 

சக்தியைக் கணக்கில் கொள்ளாமல், அநியாய விலைக்கு 

அலைக்கற்றையை விற்க முயன்றால் அது தோல்வியைத் 

தழுவும் என்பதே அந்தப் படிப்பினை.


பாஜக ஆட்சியின்போது, தொலைதொடர்பு அமைச்சர் 

ரவிசங்கர் பிரசாத் 2016ல் ஒரு அலைக்கற்றை ஏலத்தை 

நடத்தினார். அது பிரதானமாக 4ஜி ஏலம். 2ஜி,3ஜி, 4ஜி 

அலைக்கற்றைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன.

டிராய் அமைப்பு வழக்கம் போல அநியாய விலையை 

நிர்ணயித்து இருந்தது.


உலகிலேயே அலைக்கற்றையை அதிக விலைக்கு விற்கும்  

நாடு இந்தியாதான். 2010ல் நடந்த 3ஜி ஏலம் ரூ 67,000 கோடி

வருவாயை அரசுக்குத் தந்தது. டிராய் நிர்ணயித்த Base price

ரூ 30,000 கோடிதான். இதுவே மிகவும் அதிகமான விலை.

என்றாலும் இந்த ரூ 30,000 கோடிக்கு 3ஜி அலைக்கற்றையைப் 

பெற எந்த நிறுவனத்தாலும் இயலாது.அதை விட 

அதிகத்தொகை செலுத்தியாக வேண்டும். 


ஏனெனில் அலைக்கற்றையை எந்த ஒரு  நிறுவனமும் ஏலத்தின் 

மூலம்தான் பெற முடியும் என்பதாலும், ஏலத்தில் பங்கேற்பது 

மேலும் விலையை ஏற்றி விடும் என்பதாலும் ரூ 30,000 

கோடியில் விவகாரம் முடிவுக்கு வராது. இதன் நிகர விளைவு 

தொலைதொடர்பில் உள்ள நிறுவனங்கள்  திவால் ஆவதுதான்.

இது எந்த விதத்திலும் தேசத்தின் பொருளாதாரத்துக்கோ 

தொழில் வளர்ச்சிக்கோ உகந்தது அல்ல.   


தொலைதொடர்புத் துறையை பெருமளவுக்கு சீரழித்து 

விட்டு 2014ல் காங்கிரஸ் ஆட்சி விடைபெற்றுக் கொண்டது.

தொடர்ந்து வந்த பாஜக ஆட்சியில் தொலைதொடர்பு

குறித்த அரசின் கொள்கைகள் கொஞ்சமும் மாறவில்லை.

ரவி சங்கர் பிரசாத் தொலைத்தொடர்பு அமைச்சராக 

இருந்தார். இவர் ஓர் ஏலத்தை நடத்தினார். 


4ஜி அலைக்கற்றையின் முதல் ஏலம் அது. அதில் 2ஜி மற்றும் 

3ஜி அலைக்கற்றைகளும் ஏலம் விடப்பட்டன. 700 MHz என்னும் 

அலைக்கற்றையை முதன் முதலாக அரசு இந்த ஏலத்தில்        

 அரசு அறிமுகம் செய்கிறது. மிகவும் திறன் வாய்ந்த 

அலைக்கற்றை இது. இது low band என்ற போதிலும் 

4ஜி மற்றும் 5ஜிக்குப் பெரிதும் பயன்பட வல்லது. இதற்கு 

முன்பு, தூர்தர்ஷன் இந்த அலைக்கற்றையை (700MHz)

வைத்திருந்தது. 


700 MHz அலைக்கற்றைக்கு டிராய் அநியாயத்திலும் 

அநியாயமான விலையை நிர்ணயித்தது. எவ்வளவு 

விலை தெரியுமா? ஒரு மெகா ஹெர்ட்ஸ் விலை 

ரூ 11523 கோடி. உதிரியாக ஒரு மெகா ஹெர்ட்ஸ் என்று 

வாங்க முடியாது. 5 MHz கொண்ட ஒரு தொகுப்பாக

(block) வாங்க வேண்டும். ஒரு தொகுப்பின் விலை 

ரூ 57615 கோடி.


இவ்வளவு அநியாய விலை நிர்ணயித்ததால், 2016 ஏலத்தில் 

பல நிறுவனங்கள் குறிப்பாக ஏர்டெல் இந்த 700 MHz 

அலைக்கற்றையை வாங்கவில்லை. இதன் காரணமாக 

தற்போது நடைபெற உள்ள ஏலத்தில் (2021 மார்ச்)

விலையைக்  குறைத்துள்ளது டிராய்.        

    

அதாவது 700 MHz அலைக்கற்றையின் விலையை 43 சதம்

குறைத்தது டிராய் அமைப்பு. குறைக்கப்பட்ட பின்னர்

விலை ரூ 6568 per MHz. 5 MHz கொண்ட ஒரு தொகுப்பின்

விலை (price per block) ரூ 32,840 கோடி.


இவ்வளவு குறைத்த பின்னரும் இந்த விலை அநியாய

விலைதான். ஒரு இட்லி ரூ 500 என்று விலை வைத்து விட்டு

பின்னர் அதை ஒரு இட்லி ரூ 250 என்று குறைத்து விட்டால்

அது விலைக்குறைப்பாகி விடாது. தற்போதைய மார்ச் 2021

ஏலத்திலும் 700 MHz அலைக்கற்றையை வாங்கப்

போவதில்லை என்று ஏர்டெல் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

The prices are exorbitant என்று நிறுவனங்களின் சார்பாக

காய் அமைப்பு (COAI = Cellular Operators Association of India)

அரசிடம் தெரிவித்து உள்ளது. இருந்தும் அரசு

செவிசாய்க்கவில்லை.


இந்தியாவில் உள்ள எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும்

தன வசம் எவ்வளவு அலைக்கற்றையை வைத்திருக்கிறது

என்று பார்க்கலாம். சர்வதேச அளவில் பார்த்தால்,

உலக சராசரி (global average) 50MHz. இந்திய சராசரி

201ஆம் ஆண்டு நிலவரப்படி 31 MHz. இவ்வளவு குறைந்த

அளவில் அலைக்கற்றையை வைத்துக் கொண்டு சேவை

வழங்கினால், call dropsஐத் தவிர்க்க இயலாது.


இப்போது சிந்தித்துப் பாருங்கள். ஒரு மெகா ஹெர்ட்ஸ்

700 MHz அலைக்கற்றையின் விலை ரூ 6568 கோடி என்றால்,

capex அறுத்துக் கொண்டு ஓடுமே! யார் வாங்குவார்கள்.


எனவே மதிப்புக்குரிய டெலிகாம் அமைச்சர் ரவிசங்கர்

பிரசாத் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அலைக்கற்றையின் விலை அநியாயத்துக்கு அதிகம்.

அதை மேலும் குறைக்க வேண்டும். குறிப்பாக

எல்லோருக்கும் தேவைப்படும் 700 MHz அலைக்கற்றையின்

விலையை ரூ 1000 கோடி (per MHz) என்பதாகக் குறைக்க

வேண்டும்.


அடுத்து அலைக்கற்றையின் upfront payment

ஏலம் எடுத்த உடன் 5 சதம் என்பதாக மட்டுமே இருக்க

வேண்டும். நிறுவனங்கள் Service Roll out செய்த பின்னர்,

மீதிப் பணத்தில் ஒரு கணிசமான சதவீதத்தை வாங்கிக்

கொள்ளலாம். பின்னர் EMI மூலம் பாக்கி முழுவதையும்

செலுத்தலாம். இப்படி ஒரு ஏற்பாட்டை அமைச்சர் ரவிசங்கர்

பிரசாத் செய்ய வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்

மன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.


இதே அநியாய விலையில் அலைக்கற்றையை வைத்துக்

கொண்டு ஏலத்தை நடத்தினால், அது வெறும்

கண்துடைப்பாகவே இருக்கும். எந்த ஒரு நிறுவனமும்

உற்சாகத்துடன் ஏலத்தில் பங்கேற்கும் நிலை தற்போது

இல்லை. தொலைதொடர்பில் ஏதேனும் ஒரு நிறுவனந்த்தின்

அல்லது நிறுவனங்களின் MONOPOLY அல்லது DUOPOLY

ஏற்பட்டு விடக்கூடாது என்பது அமைச்சர் ரவிசங்கர்

பிரசாத் அறிவித்துள்ள அரசின் நிலை. இது நடைமுறைக்கு

வர வேண்டுமென்றால், அலைக்கற்றைகளின்

விலைக்குறைப்பு மிகவும் அவசியம்.

---------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

இக்கட்டுரையின் முக்கியத்துவமும் மகத்துவமும்

வாசகர்களுக்குப் புரிய வேண்டும். இக்கட்டுரையின்

தரவுகள் மிகவும் துல்லியமானவை; சரிபார்க்கப் பட்டவை.

UPSC தேர்வுகளில் IAS தேர்வு உட்பட கேட்கப்படும்

அலைக்கற்றை பற்றிய கேள்விகளுக்கு எமது கட்டுரைகள்

ஆகச் சிறந்த பதில்கள் ஆகும். இதை இலவசமாக வழங்குகிறேன்.

இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முற்போக்கார்களின்

கடமை. இல்லையேல் I will feel that I am casting pearls

before swine.

********************************************************

 

.


      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக