தோழர் இளவேனில் மறைந்தார்!
அஞ்சலி செலுத்துவோம்!
----------------------------------------------------
மார்க்சியத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தோழர் இளவேனில்
(வயது 70) மார்க்சியத்தை பரந்துபட்ட மக்களிடம் அறிமுகம்
செய்தவர். அவர் ஓர் மகத்தான மார்க்சிய இலக்கியவாதி..
தோழர் வி பி சிந்தன் முதல் தோழர் ஈ எம் எஸ் வரை
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
வேறு யார் எவராலும் தமிழை இவ்வளவு வலிமை
மிக்க ஆயுதமாக முடியாது என்று சொல்லத்தக்க
அளவில் தமிழை ஒரு ஆயுதமாக ஆக்கியவர். அவரின்
தமிழ்நடை தனித்துவமானது.
பின்னாளில் எதிர்ப் பரிணாமம் அடைந்து கலைஞரிடம்
சங்கமம் ஆனார் இளவேனில். ஐந்தறிவில் இருந்து ஆறாவது
அறிவுக்கு சமூகம் செல்லும்போது, ஆறாம் அறிவில்
இருந்து ஐந்தாம் அறிவுக்கு பரிணாமம் அடைந்தார்
இளவேனில். ஆம், மார்க்சியத்தில் இருந்து விலகி,
திராவிடத்தில் போய்ச் சரண் அடைந்தார்.
வாழ்நாள் முழுவதும் வறுமையோடு போராடியவர்.
கலைஞரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தபோதும்,
அதைப் பயன்படுத்தி காசு சேர்க்க விரும்பியதில்லை.
கலைஞர் முதல்வராக இருந்தபோது, அவர் தலைமைச்
செயலகத்தில் இருக்கும்போது, ஒரு துண்டுச் சீட்டில்
இளவேனில் என்று பெயர் எழுதிக் கொடுத்தால்
போதும்; அடுத்த நிமிடம் கலைஞர் அவரை
அழைத்துக் கொள்வார். இவ்வளவு சாதகமான
சூழல் இருந்தபோதும், கலைஞரிடம் அவர் உதவி
கேட்டதில்லை.
கலைஞர் டிவியில் ஏதேனும் பொறுப்பை எடுத்துக்
கொண்டு செயல்படுமாறு கலைஞர் கூறியபோதிலும்,
வருவாய்க்கான அந்த வாய்ப்பை மறுத்தவர் இளவேனில்.
தமது கொள்கையில் சமரசம் செய்து கொள்ள நேரும்
என்பதால் கலைஞர் தந்த டிவி வாய்ப்பை இளவேனில்
ஏற்கவில்லை. அவருடன் பழகியவன் என்ற முறையில்
இந்த உண்மைகளை நன்கறிந்தவன் நான்.
நக்சல்பாரி இயக்கமும் சாரு மஜூம்தாரும் அவரை
ஈர்க்கவில்லை என்பது கருத்தில் கொள்ளத் தக்கது.
சாருவை ஏற்காத அவரின் ஆளுமை குறைபாடு
உடையதே ஆகும். நக்சல்பாரியாக அவர் இருந்ததில்லை
என்பது கால காலத்துக்கும் ஒரு களங்கமாக
அவரின் இறப்புக்குப் பின்னும் நீடிக்கும் ஒன்றாகும்.
சுதந்திரப் போராட்ட வீரரும், ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராட்டங்களில் பலமுறை சிறைப்பட்டவருமான
வி பி சிந்தன் மாபெரும் தியாகி ஆவார். எனினும் அவர்
மாபெரும் அறிஞரோ கோட்பாட்டாளரோ அல்லர்
(Not a theoretician).
பெரிதாக எதையும் கற்காதவரும் சராசரிக்குச் சற்றே
கூடுதலான IQ மட்டுமே உடையவருமான வி பி சிந்தனை
பெரும் மேதையாகவும் அறிவுஜீவியாகவும் கணித்து
அவரின் திருத்தல்வாதத்திற்கு இரையாகிப் போனவர்
இளவேனில். விபிசியின் மறைவுக்குப் பிறகு, மார்க்சிய
முகாமின் கவர்ச்சி அனைத்தும் கரைந்து போன நிலையில்,
மார்க்சிய முகாமைத் தலைமுழுகி விட்டு கலைஞரிடம்
சரண் அடைந்தார் இளவேனில்.
தமது அரசியல் வாழ்வில் பல ஊசலாட்டங்களுக்கு
இரையானவர் என்ற போதிலும், தம் சொந்த வாழ்வில்
நேர்மையாக இருந்தவர் இளவேனில். அது மட்டுமல்ல,
எதிர்ப்புரட்சிகரமாக எதையும் அவர் செய்ததில்லை
என்பது அனைவரையும் அவருக்கு அஞ்சலி செலுத்த
வைக்கிறது.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக