வெள்ளாட்டு நகர்வுதான் தைப்பொங்கல்!
-----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்.
--------------------------------------------------------
உலகெங்கும் கொண்டாடப் படுகின்ற பண்டிகைகள்
எல்லாவற்றிலும் தொன்மையானது பொங்கல். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நிலவிய கால்நடை
வளர்ப்புச் சமூகமானது (pastoral society) மெல்ல மெல்ல
வேளாண் சமூகமாக பரிணாமம் அடையத் தொடங்கியிருந்த
ஒரு காலத்தில் பொங்கல் தோன்றியது. அக்காலத் தமிழ்ச்
சமூகம் இனக்குழுச் சமூகமாக இருந்தது. சங்க காலச் சமூகமும்
இனக்குழுச் சமூகமே ஆகும். தமிழ்நாட்டில் சங்க காலத்துக்கு
முன்பே பொங்கல் கொண்டாடப் பட்டது. அது ஈராயிரம்
ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்கிறது.
பொங்கலை அறிவியலே உருவாக்கியது!
---------------------------------------------------------------
தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவுக்குச் சாட்சியமாக
பொங்கல் திகழ்கிறது. பொங்கல் பண்டிகையின்
உருவாக்கத்தில், அதுநாள் வரையிலும் தமிழ் இனம் சேகரித்து
வைத்திருந்த வானியல் அறிவு பயன்பட்டது. விதைப்பதையும்
அறுப்பதையும் பிற வேளாண் செயற்பாடுகளையும்
எந்தெந்தக் காலத்தில் மேற்கொள்ளுவது என்பதைச் சரியாகத்
தீர்மானிப்பதே அன்றைக்கு குழந்தைப் பருவத்தில் இருந்த
வேளாண் சமூகங்களின் முன்னிருந்த சவாலாக இருந்தது..
வேளாண் செயல்களைச் சரிவரச் செய்து முடிக்க, ஓர் கால
நிர்ணயக் கணிதம் (calendar) வேண்டும். நூறு விழுக்காடு
துல்லியமாக இல்லாவிடினும் தோராயமாகவேனும் அது இருக்க
வேண்டும். இதற்கு சூரியனின் இயக்கம் குறித்த அறிவை
ஒரு சமூகம் பெற்றிருக்க வேண்டும்.
எந்தவொரு வானியல் நிகழ்வையும் கருவிகளின் துணையுடன்
அறிந்து கொள்ளவும் முன்கணிக்கவும் இன்றைய மனிதர்களால்
இயலும். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
தொலைநோக்கி கூட கண்டுபிடிக்கப் பட்டிராத அக்காலத்தில்,
வானியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதும் அவை
எந்தெந்த நாட்களில் ஏற்படும் என்று முன்கணிப்பதும் எளிதல்ல.
சனிக்கோளுக்கு அப்பாலுள்ள யுரேனஸ், நெப்டியூன் போன்ற
கோள்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த
நமது முன்னோரால் கண்டறிய முடிந்ததா? 1781 மார்ச்சில்தான்
யுரேனஸ் கண்டுபிடிக்கப் பட்டது. 1846 செப்டம்பரில்தான்
நெப்டியூன் கண்டுபிடிக்கப் பட்டது, அதுவும் ஏகப்பட்ட
கருவிகளின் உதவியுடன். புளூட்டோ 1930ல்தான் கண்டுபிடிக்கப்
பட்டது.
இந்தியக் கணிதமேதை ஆரிய பட்டர் (Arya Bhatta CE 476-550)
பொ ச ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பொங்கல்
பண்டிகையின் காலமோ ஆரியபட்டருக்கு குறைந்தது ஐந்நூறு
ஆண்டுகள் முந்தியது. எனினும் அக்காலத்திலும் தமிழரின்
வானியல் அறிவு சிறப்பாகவே இருந்தது என்பதற்கு
பொங்கல் பண்டிகையின் பிறப்பே சாட்சி. வானியல் அறிவு
குன்றிய ஒரு சமூகத்தால் பொங்கல் போன்ற சூரியனின்
இயக்கத்தோடு தொடர்புடைய ஓர் அறிவியல் பண்டிகையை
உருவாக்கி இருக்க இயலாது.
வானியல் தயார்நிலை அட்டவணை
---------------------------------------------------------
பூமி-சூரியன் சார்ந்த, திரும்பத் திரும்ப ஏற்படும் வானியல்
நிகழ்வுகள் (recurring events) மானுட வாழ்க்கையில் பாதிப்பை
ஏற்படுத்தக் கூடியவை. அவை எப்போதெல்லாம் நிகழும்
என்பது பற்றிய தெளிவு ஒரு சமூகத்துக்குத் தேவை. சூரியனின்
இயக்கத்தைப் பொறுத்து ஓராண்டில் நான்கு நாட்கள்
முக்கியமானவை.
1) சம இரவு நாட்கள் இரண்டு (2 equinoxes)
2) கதிர்த் திருப்ப நாட்கள் இரண்டு (2 solstices).
முக்கியமான இந்த நான்கு நிகழ்வுகளும் ஏனைய நிகழ்வுகளும்
எந்தெந்த நாட்களில் வரும் என்று முன்கூட்டியே அறிந்திட
இன்றுள்ள பஞ்சாங்கம் போல ஒரு தயார்நிலை அட்டவணை
(Ready reckoner) அன்று உண்டாக்கப் பட்டிருக்கவில்லை.
பஞ்சாங்கம் என்பது முன்கணிக்கப்பட்ட வானியல் தரவுகளின்
தொகுப்பு. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம்
ஆகிய ஐந்தும் பஞ்சாங்கத்தில் உள்ளன. அதில் சோதிடர்கள்
பல்லி விழும் பலனையும் சேர்த்து விட்டதால் காலப்போக்கில்
அதற்கு ஒரு எதிர்மறைக் குறியீடு (negative connotation) ஏற்பட்டு
விட்டது.
வானியல் அட்டவணையான பஞ்சாங்கம் (almanac)
இல்லாத நிலையிலும் சூரியனின் இயக்கத்தைத் தொடர்ந்து
கூர்நோக்கி ஆராய்ந்ததன் விளைவாக, வானியல் நிகழ்வுகள்
பற்றிய தேவையான அனைத்தையும் தமிழ்ச் சமூகம்
படிப்படியாக அறிந்து கொண்டது. ஓராண்டின் கதிர்த்திருப்ப
நாட்கள் கண்டறியப் பட்டன. சமஇரவு நாட்களும்
கண்டறியப்பட்டன. புத்தாண்டு நிர்ணயம் செய்யப் பட்டது.
முன்பிருந்த முழுமையற்ற காலக்கணிதம் (imperfect calendar)
போதிய துல்லியத்துடன் பெரிதும் மேம்படுத்தப் பட்டது.
இந்த முன்னேற்றம் ஒருநாளில் கைகூடியதல்ல.ரோமாபுரி
ஒருநாளில் கட்டப்பட்டதல்ல (Rome was not built in a day). ஒரு
அறிவார்ந்த சமூகத்தின் மேம்பாடு அச்சமூக உறுப்பினர்களின்
கூட்டு ஞானத்தின் (collective wisdom) விளைவே.
குளிர்காலக் கதிர்த்திருப்பமே பொங்கல்!
-----------------------------------------------------------------
கிரெகோரி காலண்டரின்படி, டிசம்பர் மாதத்தில் ஏற்படும்
குளிர்காலக் கதிர்த்திருப்பம் (winter solstice) உலகெங்கும்
உள்ள பல்வேறு பண்பாடுகளைச் சார்ந்த மக்களால்
கொண்டாடப் பட்டு வந்தது. தமிழ்நாட்டில் மழைக்காலத்தின்
முடிவை இது குறித்தது. ஐப்பசி கார்த்திகை அடைமழை
முடிவுற்று முன்பனிக்காலம் வந்து விட்டதை இது உணர்த்தியது.
வானியல் நிகழ்வுகள் குறித்த, இன்றைய பள்ளிச் சிறுவனின்
அறிவை விட, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்ச்
சமூகத்தின் அறிவு பல மடங்கு குறைவு. இந்நிலையில்,
குளிர்காலக் கதிர்த்திருப்பம் பற்றிய அறிவைப் பெற்று விட்டதானது
தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவில் ஒரு மைல்கல் ஆகும்.
கதிர்த்திருப்ப நாளை அடையாளம் கண்டுகொண்ட சமூகம்
அதைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டிய கடமையைக்
கொண்டிருந்தது. இதைச் செவ்வனே நிறைவேற்றிட ஏதுவாக,
டிசம்பர் மாத குளிர்காலக் கதிர்த்திருப்ப நாளை (winter solstice)
தமிழ்ச் சமூகம் பொங்கல் பண்டிகை என்று அறிவித்தது.
பண்டிகையாக்கத்தின் மூலம் சமூகத்தின் அனைத்து
உறுப்பினர்களின் கவனத்தையும் கதிர்த் திருப்பத்தின்பால்
ஈர்க்க முடிந்தது மேலும் கடனே என்று யாந்திரிகமாகச்
செய்யாமல், சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையை
உற்சாகத்துடன் செய்வதற்கு பண்டிகையாக்கம்
பயன்பட்டது. இப்படித்தான் பொங்கல் பண்டிகை பிறந்தது.
பண்டிகைகளின் தோற்றுவாய் எது? சமூகத்தின் பொருள்
உற்பத்தி முறையே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
தமிழ்ச் சமூகத்தின் வேளாண் உற்பத்தி குழந்தைப் பருவத்தில்
இருந்தபோது, பொங்கல் பண்டிகை பிறந்தது. உற்பத்தியின்
தேவைகளில் இருந்தே பண்டிகை பிறந்தது. இது உற்பத்தி
சார்ந்த நிகழ்வே அன்றி ஆன்மிகம் சார்ந்த நிகழ்வு அல்ல
என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.
கதிர்த்திருப்பம் என்றால் என்ன?
--------------------------------------------------
பொங்கலின் பிறப்பைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
கதிர்த்திருப்பம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க
வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆண்டுக்கு
இருமுறை ஏற்படும் (periodic celestial event) வானியல் நிகழ்வு இது.
பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. என்றாலும் சூரியன்
பூமியைச் சுற்றி வருவது போல ஒரு தோற்றம் நமது
கண்களுக்குத் தெரிகிறது. இவ்வாறு தோற்றமளிக்கிற
சூரியனின் பாதையில் (apparent path), வடக்கு அரைக்கோளத்தில்
அல்லது தெற்கு அரைக்கோளத்தில் ஓர் எல்லை வரை
சென்றுவிட்ட சூரியன், அதற்கு மேல் செல்ல இயலாத
நிலையில், திரும்பி எதிர்த்திசை நோக்கி வருவதையே,
(அதாவது வருவதாக நாம் கருதுவதையே) கதிர்த்திருப்பம்
(solstice) என்கிறோம்.
ஓராண்டில் கோடையில் ஒன்றும் குளிர்காலத்தில் ஒன்றுமாக
இரண்டு கதிர்த் திருப்பங்கள் நிகழும். ஜூன் மாதத்தில்
கோடைகாலக் கதிர்த்திருப்பமும் (summer solstice) டிசம்பர்
மாதத்தில் குளிர்காலக் கதிர்த்திருப்பமும் (winter solstice)
நிகழ்கின்றன. கதிர்த் திருப்பங்களின்போது, கடக ரேகை
(Tropic of cancer), மகர ரேகை (Tropic of Capricorn) ஆகியவற்றின்
மீது அவற்றின் தலைக்கு நேர் மேலே, வானுச்சியில் (zenith)
சூரியன் பிரகாசிக்கும்.
கதிர்த்திருப்ப நாட்களில், பூமியின் சில குறிப்பிட்ட இடங்களில்,
தரையில் ஒரு குச்சியை நட்டு வைத்தால், உச்சி வேளையில்
தலைக்கு நேராக சூரியன் பிரகாசிக்கும்போது, அதன் நிழல்
தரையில் விழாது. இதுவே கதிர்த்திருப்ப நாளின் அடையாளம். இதைக் கொண்டே கதிர்த்திருப்ப நாட்களை பண்டைக்கால மக்கள் கண்டறிந்தனர். பண்டைய எகிப்தில் செயீன் (Syene) என்ற ஊரில்
கோடைகாலக் கதிர்த் திருப்பத்தின்போது உச்சி வேளையில்
சூரியனின் நிழல் தரையில் விழுவதில்லை. பிரசித்தி பெற்ற இந்த
நிகழ்வு பூமியின் சுற்றளவைக் கண்டறிவதில் எகிப்திய வானியல்
அறிஞர் எரோட்டஸ்தீனசுக்கு (Erotesthenes BCE 276-194) பெரிதும்
பயன்பட்டது.
.
பூஜ்ய நிழல் நாட்கள்!
---------------------------------
வட அரைக்கோளத்தில், அட்சரேகையின் அளவு +23.5 டிகிரியாக
இருந்தால் (latitude: +23.5) அது கடக ரேகை ஆகும். தென் அரைக்
கோளத்தில், அட்சரேகையின் அளவு மைனஸ் 23.5 டிகிரியாக
இருந்தால் (latitude -23.5) அது மகர ரேகை ஆகும். கடக மகர ரேகைகளுக்கு இடைப்பட்ட இடங்களில், தலைக்கு நேரே
வானுச்சியில் (zenith) சூரியன் பிரகாசிக்கும்போது, வெட்ட
வெளியில் நிறுத்தப்பட்ட ஒரு பொருளின் நிழல் தரையில்
விழுவதில்லை. ஒரு ஊரில் எல்லா நாட்களிலும் இப்படி
நிகழ்வதில்லை. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு
இரண்டு நாட்கள் இவ்வாறு நிழல் விழாது. அந்தந்த இடத்தின்
அட்ச ரேகையைப் பொறுத்து நிழல் விழாமலிருக்கும்
தேதிகள் மாறுபடும். உதாரணமாக, 2020ஆம் ஆண்டின்
நிழல் விழாத நாள் பெங்களூருவில் ஏப்ரல் 24 தேதியிலும்,
புனேயில் (Pune) மே 13 தேதியிலும் ஏற்பட்டுள்ளது. நிழல்
விழாத இந்த நாட்களே பூஜ்ய நிழல் நாட்கள்
(Zero Shadow Days) என்று அழைக்கப் படுகின்றன.
இவை மனிதனால் செயற்கையாக உண்டாக்கப்பட இயலாத
இயற்கையான வானியல் நிகழ்வுகளாகும் (celestial events).
புது டில்லியில் நிழல் விழாத நாள் (Zero Shadow Day) உண்டா?
கிடையாது. ஏன்? கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட
இடங்களில் மட்டுமே பூஜ்ய நிழல் நாள் ஏற்படும். புது டில்லியானது
இந்தப் பகுதியில் இல்லை. அது கடக ரேகையைத் தாண்டி வடக்கே
28.64 டிகிரி அட்ச ரேகையில் உள்ளது. வட அரைக்கோளத்தில் அட்சரேகை
+23.5ல் இருந்து, +90 டிகிரி வரையிலும் உள்ள இடங்களில்
சூரியன் வானுச்சிக்கு (zenith) வருவதே இல்லை. எனவே இங்கெல்லாம்
பூஜ்ய நிழல் ஏற்படுவதில்லை. அதே போல தென் அரைக்கோளத்தில், அட்சரேகை மைனஸ் 23.5 டிகிரியில் இருந்து,
மைனஸ் 90 டிகிரி வரையிலுமான இடங்களிலும் சூரியன்
வானுச்சிக்கு (zenith) வருவதும் இல்லை; பூஜ்ய நிழல்
ஏற்படுவதும் இல்லை..
கிரகோரி காலண்டரின்படி, டிசம்பர் 20,21,22,23 ஆகிய நான்கு
நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் குளிர்காலக் கதிர்த்திருப்பம்
நிகழும். டிசம்பர் 21, 22 தேதிகளில் கதிர்த்திருப்பம் அடிக்கடி
நிகழ்ந்திருப்பதும், டிசம்பர் 20, 23 தேதிகளில் வெகு அபூர்வமாக நிகழ்ந்திருப்பதும் வானியல் ஆவணங்களில் பதிவு
செய்யப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 23 கதிர்த்திருப்பம்
கடைசியாக 1903ல் நிகழ்ந்திருக்கிறது. அடுத்து 2303ல்தான்
நிகழும். அது போல டிசம்பர் 20 கதிர்த்திருப்பம் இனி
2080ல்தான் நிகழும்.
கதிர்த்திருப்பம் ஏன் நிகழ்கிறது? சூரியனைப் பொறுத்து, பூமி
தனது அச்சில் நேராக இல்லாமல் 23.44 டிகிரி சாய்ந்திருக்கிறது.
கதிர்த் திருப்பங்களும் பருவ காலங்களும் இந்த அச்சுச்
சாய்வினாலேயே (axial tilt) நிகழ்கின்றன. இந்தச் சாய்வின்
விளைவாக, பூமியின் வடக்கு அரைக்கோளமும் தெற்கு
அரைக்கோளமும் ஓராண்டில் சமமான அளவு சூரிய
ஒளியைப் பெறுவதில்லை.
வடக்கு அரைக்கோளத்தில் (Northern hemisphere) இந்தியா உள்ளது.
மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு உட்பட
உலகின் பெரும்பாலான நாடுகள் இங்குதான் உள்ளன. உலக
மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர், அதாவது
700 கோடிப்பேர் வடக்கு அரைக்கோளத்தில் இருக்கின்றனர்.
(உலக மக்கள் தொகை = 780 கோடி, ஜனவரி 2021ல்)
மகர சங்கராந்தியும் பொங்கலும்!
-------------------------------------------------------
பூமியைப் பொறுத்தவரையிலான சூரியனின் பாதை என்று
தோற்றமளிக்கும் (apparent path of the sun wrt the earth) பாதையில்,
பூமியைச் சுற்றியுள்ள அண்டவெளியே (space) ராசி மண்டலம்
(Zodiac region) ஆகும். இது ஒவ்வொன்றும் 30 டிகிரி கோணம் உள்ள
12 ராசிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம்,
கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஷ், மகரம்,
கும்பம், மீனம் ஆகியவை தமிழ் மரபுப்படியான பன்னிரு ராசிகள்.
இந்த ராசி மண்டலத்தில், தனுஷ் ராசியைக் கடந்த பிறகு
மகர ராசிக்குள் (from Sagittarius to Capricorn) சூரியன் நுழையும்
முதல்நாளே மகர சங்கராந்தி ஆகும். சங்கராந்தி என்ற
சமஸ்கிருதச் சொல் "நகர்ந்து செல்" என்று பொருள்படும்.
மகர சங்கராந்தி என்றால் "மகர ராசியில் நகர்ந்து செல்"
என்று பொருள். சூரியன் எந்த நாளில் மகர ராசிக்கு
நகர்கிறதோ அந்த நாளே மகர சங்கராந்தி ஆகும்.
அந்த நாளே தை மாதத்தின் முதல்நாளும் ஆகும். அன்றுதான்
பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
மகர ராசி என்பது ஆங்கிலத்தில் Capricorn எனப்படுகிறது.
மகரம் என்பது வெள்ளாட்டைக் குறிக்கிறது. வெள்ளாடு
போல் உருவம் உடைய நட்சத்திரக் கூட்டமே மகர ராசி ஆகும்.
மகர சங்கராந்தி என்ற சமஸ்கிருதச் சொல்
"வெள்ளாட்டு நகர்வு" என்று தமிழில் பொருள்படும்.
(மகரம் = வெள்ளாடு; சங்கராந்தி = நகர்ந்து செல், நகர்வு).
இந்த இடத்தில் மேஷ ராசியின் ஆட்டுடன் மகர ராசியின்
ஆட்டை இணைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
ராசி மண்டலத்தில், மேஷ ராசிக்கும் (Aries) மகர ராசிக்கும்
(Capricorn) ஆடுதான் சின்னம். இரண்டுமே ஆடுகள்தான்.
என்றாலும், மேஷ ராசியின் ஆடு செம்மறி ஆடு
(a ram or an adult male sheep). மகர ராசியின் ஆடு வெள்ளாடு
(a goat or a sea goat with a fish at its tail). பாபிலோனிய கிரேக்க
புராணங்களில் இது கடல்வாழ் வெள்ளாடு (sea goat) என்று
சிறப்பிக்கப் பட்டது.
உத்தராயணமும் பொங்கலும்!
-----------------------------------------------
சூரியன் மகர ராசிக்குள் நுழைந்து மேற்கொண்டு பயணம்
செய்வது உத்தராயணம் எனப்படுகிறது. உத்தராயணம் என்றால்
வடதிசைப் பயணம் என்று பொருள். (இக்கட்டுரையில் வரும்
"சூரியன் நுழைகிறது" போன்ற பதங்கள் சூரியன் பூமியைச்
சுற்றி வருவதாக பொருள் தராது. The motion of the sun described
here is only APPARENT and not actual).
உத்தராயணம் தை முதல் ஆனி வரை ஆறு மாதங்கள்
நீடிக்கும். அதன் பிறகு, சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும்.
இது தட்க்ஷிணாயணம் எனப்படும். தட்க்ஷிணாயணம்
என்றால் தென்திசைப் பயணம் என்று பொருள்.
ஆடி முதல் மார்கழி வரை இதுவும் ஆறு மாதங்கள் நீடிக்கும்.
ஆக பொங்கல் பண்டிகையானது உத்தராயணம் என்னும்
வடதிசைப் பயணத்தில், மகர சங்கராந்தி நாளன்று, அதாவது
வெள்ளாட்டு நகர்வு நாளன்று வருகிறது. முன்பெல்லாம்
பெரும்பாலும் ஜனவரி 14ஆம் நாளன்று பொங்கல் வந்து
கொண்டிருந்தது. தற்போது அடிக்கடி ஜனவரி 15ஆம் நாளிலும்
பொங்கல் வருகிறது.. எடுத்துக்காட்டாக, ஆண்டுகள்
2017, 2018, 2021ல் ஜனவரி 14 அன்றும், ஆண்டுகள் 2016, 2019, 2020ல்
ஜனவரி 15 அன்றும் பொங்கல் வந்துள்ளது.
டிசம்பரில் இருந்து ஜனவரிக்கு!
-------------------------------------------------
குளிர்காலக் கதிர்த்திருப்ப நாளே (winter solstice) பொங்கலாக
அறிவிக்கப் பட்டது என்பது வரலாறு. குளிர்காலக் கதிர்த்திருப்பம்
இதுவரை பெரும்பாலும் கிரகோரி காலண்டரின்படி டிசம்பர் 21
அல்லது 22 தேதியில் ஏற்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால்
பொங்கலோ மகர சங்கராந்தியோ டிசம்பர் 21 அல்லது
22 தேதியில்தானே வர வேண்டும்? ஆனால் தற்காலத்தில் பொங்கலானது ஜனவரி 14 அல்லது 15 தேதியில் அல்லவா
வருகிறது! முன்பு டிசம்பரில் இருந்த பொங்கல் இப்போது
ஜனவரிக்கு நகர்ந்தது எப்படி? டிசம்பர் 21க்கும் ஜனவரி 14க்கும் இடையிலான வேறுபாடு 24 நாட்கள்! இதற்கான நியாயம்
என்ன? இவற்றுக்கு விடை காண்போம்.
பூமியின் மூன்றாவது இயக்கம்!
-------------------------------------------------
இரண்டு விதமான இயக்கம் பூமிக்கு உண்டு.
ஒன்று: பூமி தன்னைத்தானே சுற்றுவது (rotation).
இரண்டு: பூமி சூரியனைச் சுற்றுவது (revolution).
அனைவரும் அறிந்த இவ்விரண்டு இயக்கங்கள் போக
மூன்றாவதாகவும் பூமிக்கு ஒரு இயக்கம் (motion) உண்டு.
இது பலராலும் அறியப்படாத ஒரு இயக்கம். ஆங்கிலத்தில்
precession என்று அழைக்கப்படும் இதை "முந்து சுழற்சி" என்று
தமிழில் கூறலாம். தொடக்கத்தில். டிசம்பர் 21ல் நிகழ்ந்த
மகர சங்கராந்தி தற்போது ஜனவரி 14க்கு மாறியதற்கு
இந்த முந்து சுழற்சியே காரணம். எப்படி என்பதைப் பார்ப்போம்.
முந்து சுழற்சி என்றால் என்ன? பம்பரம் சுற்றுவதைப் போலத்தான்
பூமியும் சுற்றுகிறது. இது பூமியின் தற்சுழற்சி (rotation) ஆகும். ஒரு கற்பனையான அச்சைப் பற்றிக்கொண்டு சுற்றும் பூமியின்
அச்சுச் சாய்வு (axial tilt) 23.44 டிகிரி ஆகும். அச்சுச் சாய்வு என்று எதைக் குறிப்பிடுகிறோம்? பூமி ஒரு அச்சில் சுழல்கிறது. சுழற்சி அச்சு
(rotational axis) என்று இதற்குப் பெயர். அடுத்து, பூமி சூரியனைச்
சுற்றி வரும் சுற்றுப்பாதைக்கு ஒரு அச்சு உண்டு அல்லவா? இது
சுற்றுப்பாதை அச்சு (orbital axis) ஆகும். இந்த இரண்டு அச்சுகளுக்கும் இடையிலான கோணமே அச்சுச் சாய்வு ஆகும். இந்த இரண்டு
அச்சுகளும் ஒன்றிப் பொருந்தினால் (coinciding) அதாவது ஒன்றின்
மீது ஒன்று படிந்தால், அச்சுச் சாய்வின் கோணம் பூஜ்யம் ஆகும்.
எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாயில் குடியேறச் செய்வேன்
என்று சபதம் செய்திருக்கிறாரே எலான் மஸ்க்! அந்த செவ்வாயின்
அச்சுச் சாய்வு 25.19 டிகிரி ஆகும். யுரேனசின் அச்சுச் சாய்வு 97.77
டிகிரி என்பதையும் வெள்ளியின் (venus) அச்சுச் சாய்வு 177.36 டிகிரி என்பதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.
பூமியின் முந்துசுழற்சி
-----------------------------------
பூமியின் அச்சு நிலையானதுதான் என்றபோதிலும்,
தற்சுழற்சியின்போது பூமி தடுமாறுகிறது (Earth wobbles while spinning).
பூமி தன்னைத்தானே சுற்றும்போது, A என்ற புள்ளியில் உள்ள
அதன் அச்சு, இத்தடுமாற்றத்தின் (wobbling) விளைவாக மெல்ல
நகர்ந்து B என்ற புள்ளிக்குச் சென்று விடுகிறது. காலப்போக்கில்
B என்ற புள்ளியில் இருந்தும் நகர்ந்து C, D, E என்ற புள்ளிகளுக்குச்
சென்று, தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது.
பூமியின் அச்சுத் தடுமாற்றம் குறித்து அமெரிக்க வானியலாளர்
சேத் கார்லோ சேண்ட்லர் (Seth Carlo Chandler 1846-1913) ஆராய்ந்து
1891ல் தமது முடிவை வெளியிட்டார். அது சேண்ட்லர் தடுமாற்றம்
(Chandler wobble) அல்லது அட்சரேகை மாற்றம் (Latitude variation)
என்று அழைக்கப் படுகிறது. இதன்படி, பூமியின் அச்சு பூமியின்
மேற்பரப்பில் 433 நாட்களில் 9 மீட்டர் நகர்கிறது என்று
அறியப் பட்டுள்ளது. எனினும் பூமியின் அச்சுத் தடுமாற்றம்
முழுவதையும் சேண்ட்லர் கண்டறியவில்லை. சேண்ட்லர்
தடுமாற்றம் என்பது பூமியின் மொத்த அச்சுத் தடுமாற்றத்தில்
ஒரு பகுதியே. காலப்போக்கில் பூமியின் முந்துசுழற்சி
முழுவதும் (தடுமாற்றமும் நகர்வும்) துல்லியமாகக்
கண்டறியப் பட்டு.விட்டது. அதன்படி, 26,000 ஆண்டுகளில்
பூமியின் முந்துசுழற்சி ஒரு சுற்றை முழுமையாகப் பூர்த்தி
செய்கிறது என்று கணக்கிடப் பட்டுள்ளது.
சூரியனின் பாதையாகத் தோற்றமளிக்கிற பாதையில் (ecliptic),
ராசி மண்டலத்தின் (zodiac region) ஊடாக, பூமி தனது முந்துசுழற்சியில்
72 ஆண்டுகளுக்கு 1 டிகிரி நகர்கிறது. ராசி மண்டலத்தில் ஒரு ராசி
என்பது 30 டிகிரி கொண்டது. எனவே 30 டிகிரி உள்ள ஒரு ராசியைக்
கடக்க 2160 ஆண்டுகள் ஆகும் (30 x 72 = 2160). இப்படியே
12 ராசிகளையும் கடக்க 25,920 ஆண்டுகள் ஆகும் (12 x 2160 = 25920).
இதையே 26,000 ஆண்டுகளில் பூமியின் முந்து சுழற்சி ஒரு
முழுச்சுற்றை பூர்த்தி செய்கிறது (one full cycle of precession of earth)
என்கிறோம்..
முந்துசுழற்சியின் விளைவுகள்
------------------------------------------------
பூமியின் அச்சுத் தடுமாற்றம் பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்துகிறது. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிடுவது
இயலாது. அதன் பிரதான விளைவுகளில் ஒன்று துருவ நட்சத்திரம்
மாறிக்கொண்டே இருப்பது. தற்போது போலாரிஸ் (Polaris) என்பது
துருவ நட்சத்திரமாக (Pole star or North star ) உள்ளது. இது அர்சா மைனர்
உடுமண்டலத்தில் (Ursa minor constellation) உள்ளது. அர்சா மைனர்
என்பது சிறிய கரடி போலத் தோற்றமளிக்கும் உடுமண்டலம் ஆகும்.
தனது துருவ நட்சத்திர அந்தஸ்தை இன்னும் 2000 ஆண்டுகளில்
போலாரிஸ் இழக்கப் போகிறது. பொச 4000ல், பூமியின் முந்துசுழற்சி
காரணமாக, போலாரிஸ் நட்சத்திரமானது வட விண்முனையில்
இருந்து (North celestial pole) வெகுவாக விலகிச் சென்று விடும். அத்தோடு
துருவ நட்சத்திர அந்தஸ்தையும் இழந்து விடும். அதன் இடத்திற்கு
காமா செபெய் (Gamma Cephei) என்னும் நட்சத்திரம்
வந்து விடும். இது செபியஸ் அரசன் (Cepheus the King) என்னும்
உடுமண்டலத்தில் உள்ளது. பன்னாட்டு வானியல் சங்கத்தால்
(International Astronomical Union) அங்கீகரிக்கப்பட்ட 88 உடுமண்டலங்களில்
(constellations) ஒன்றுதான் "செபியஸ் அரசன்".
துருவ நட்சத்திரங்கள் மாறிக்கொண்டே இருப்பது வானியலில்
வழக்கமான ஒன்றுதான். 5000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தில்
பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்தில், துபன் (Thuban) என்னும்
நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக இருந்தது. இது டிராக்கோ
(Draco the dragon) என்னும் உடுமண்டலத்தைச் சேர்ந்தது.
அது போல எதிர்காலத்தில், பிரசித்தி பெற்ற நட்சத்திரமான
வேகா (Vega) இன்னும் 13,000 அல்லது 14,000 ஆண்டுகளில்
துருவ நட்சத்திரம் ஆகிவிடும். இது லிரா (Lyra) உடுமண்டலத்தைச்
சேர்ந்தது.
மகர சங்கராந்தியா கும்ப சங்கராந்தியா?
----------------------------------------------------------------
பூமியின் முந்து சுழற்சியால் ஏற்படும் இன்னொரு விளைவு
ராசி மண்டலத்தில் எந்த ராசியில் எப்போது சூரியன் நுழையும்
என்பதுதான். குளிர்காலக் கதிர்த்திருப்பம் நிகழ்வது
டிசம்பர் 21ல். முன்பெல்லாம் இதே தேதியில் சூரியன்
மகர ராசியில் நுழைந்து கொண்டு இருந்தது. காலப்போக்கில்
பூமியின் முந்துசுழற்சி காரணமாக கதிர்த்திருப்ப நாள்
ஒன்றாகவும் சூரியன் மகர ராசியில் நுழையும் நாள்
வேறொன்றாகவும் ஆகிப்போனது. முன்பு டிசம்பர் 21ல்
மகர ராசியில் நுழைந்த சூரியன் தற்போது 24 நாட்கள்
கழித்து ஜனவரி 14ல் மகர ராசியில் நுழைகிறது.
பொங்கல் பண்டிகை உருவாக்கப்பட்டபோது, டிசம்பர்
கதிர்த்திருப்பம் என்று வருகிறதோ அன்றுதான் பொங்கல்
என்று நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. கதிர்த்திருப்ப நாளில்தான்
மகர சங்கராந்தியும் நிகழ்ந்தது. அன்றுதான் உத்தராயணம்
தொடங்கியது. பூமியின் முந்துசுழற்சியானது இவை அனைத்தையும் நொறுக்கி, ஒருவித டாமினோ விளைவை (Domino effect) ஏற்படுத்தி விட்டது.
இதன் விளைவாக மகர ராசியில் டிசம்பர் 21 கதிர்த்திருப்ப நாளில்
நுழைந்து கொண்டிருந்த சூரியன், ஜனவரி 14ல் நுழைகிறது..
இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பின், கதிர்த்திருப்ப நாளன்று
மகர ராசிக்குப் பதில் அதை அடுத்திருக்கும் கும்ப ராசியில்
சூரியன் நுழையும். அன்றுதான் பொங்கல் பண்டிகை என்றால்,
பொங்கல் நிகழ்வது கும்ப சங்கராந்தியில்!!! ஒரு ராசியில் 2160
ஆண்டுகள் மட்டுமே சூரியன் தங்கும். அதன் பின் வேறு ராசிக்குச்
சென்று விடும். முன்பு தனுஷ் சங்கராந்தி நாளில் பொங்கல்
வைத்த நாம், எதிர்காலத்தில் கும்ப சங்கராந்தியில் பொங்கல்
வைப்போம்
சூரிய வணக்கமே பொங்கல்!
---------------------------------------------
பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் இன்னும் பல்வேறு
பெயர்களிலும் வழங்கப் பட்டாலும், சூரியன் மகர ராசிக்குள்
நுழையும் முதல்நாளில்தான் இப்பண்டிகை கொண்டாடப்
படுகிறது. எனவே இப்பண்டிகை தமிழ்நாட்டுக்கு மட்டும்
உரியதல்ல; இந்தியா முழுமைக்குமானது (Pan Indian festival).
சூரியனை வணங்குதல் இந்திய மக்கள் அனைவரின்
பொதுப்பண்பு. தொல்குடிச் சமூகமாக இருந்த காலந்தொட்டே
சூரிய வணக்கம் இந்தியப் பண்பாட்டில் ஊறிய அம்சமாக
இருந்து வருகிறது.. சூரியன் இல்லாமல் வேளாண்மை இல்லை,
வளம் இல்லை, வாழ்வே இல்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த
தமிழ், இந்தியச் சமூகங்களின் சூரிய வணக்கத்துக்கான
பண்டிகையே பொங்கல் (மகர சங்கராந்தி) ஆகும்.
தமிழ்ச் சமூகம் சூரிய வணக்கத்துடன் நின்று விடவில்லை.
வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளைச்
சிறப்பிக்க, பொங்கலுக்கு அடுத்த நாளை மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடியது. இதன் உச்சமாக அலங்காநல்லூர், பாலமேடு,
உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு
என்னும் வீர விளையாட்டு நடைபெற்று வருகிறது. மாட்டுப்
பொங்கலும் ஜல்லிக்கட்டும் தமிழருக்கே உரியவை. தமிழ்ப்
பண்பாட்டின் தனித்துவத்தை மாண்பை
உணர்த்துபவை.
பொங்கல் என்பது ஒரு வானியல் நிகழ்வின் பண்பாட்டுப்
பெயர்.மகர சங்கராந்தி என்பது அதே வானியல் நிகழ்வின்
அறிவியல் பெயர். மகர சங்கராந்தி என்பது தமிழில்
வெள்ளாட்டு நகர்வு என்று பொருள்படும். ஆக பொங்கல்,
மகர சங்கராந்தி, வெள்ளாட்டு நகர்வு ஆகிய மூன்றும்
ஒரே வானியல் நிகழ்வின் வெவ்வேறு பெயர்கள். அவ்வளவே.
பொங்கலானது சூரியனின் கதிர்த்திருப்ப நாளை (solstice)
அறிவிக்கும் பண்டிகையாகத்தான் பிறப்பெடுத்தது. இது பொங்கலின் அறிவியல் அம்சம். தொல்தமிழ்ச் சமூகம்
இயற்கையை வணங்கிய சமூகமாதலின் சூரிய வழிபாடு
பொங்கலில் இடம் பெற்றது. இது பொங்கலின் பண்பாட்டு
அம்சம். பொங்கல் இயற்கையோடு இயைந்த பண்டிகை
என்பதை அதனுள் பொதிந்துள்ள சூரிய வணக்கம் உணர்த்தும்.
ஆக தொன்மைச் சிறப்புடன் கூடிய பொங்கலே அறிவியல்,
பண்பாட்டு அடிப்படையில் தமிழர்களின் ஆகச்சிறந்த
பண்டிகையாக காலத்தை வென்று நிற்கிறது.
*********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக