ஐஓடியும் 5ஜியும்! (IoT and 5g)!
ஐஓடியை நன்கு புரிந்து கொள்வோம்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
2021 பிறந்து விட்டது. டெலிகாம் துறையைப் பொறுத்த
மட்டில் இந்த ஆண்டு இரண்டு விஷயங்கள் புதிதாக
முன்னுக்கு வருகின்றன. ஒன்று: ஐஓடி தொழில்நுட்பம்;
மற்றொன்று 5ஜி.
5ஜி ஏலம் மார்ச் இறுதியில் நடைபெற உள்ளது. எனினும்
இந்த ஆண்டிலேயே 5ஜி சேவை தொடங்கி விடும் என்று
யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனெனில்
SERVICE ROLL OUT என்பது மிக நீண்ட காலம் பிடிக்கும்.
அது யானையின் gestation period அளவு காலத்தை
விழுங்கும். (மேலே படிப்பதற்கு முன், யானையின்
gestation period எவ்வளவு என்று அறிந்து கொள்வது நல்லது).
5ஜிக்கும் ஐஒடிக்கும் நல்ல ஜோடிப்பொருத்தம் உண்டு.
உலகெங்கும் ஐஓடியானது 5ஜி அலைக்கற்றையில்தான்
ஜொலிக்கிறது. அப்படியானால் ஐஓடியானது 5ஜியில்தான்
வேலை செய்யும் என்று யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.
ஐஓடி 4ஜியிலும் வேலை செய்யும்; 3ஜியிலும் வேலை
செய்யும். நான் இங்கு விதந்து ஓதுவது ஜோடிப்
பொருத்தத்தை. (விதந்து ஓதுதல் என்பதன் பொருளை
அறிந்து கொள்க. தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்ந்து விடாமல்
பார்ப்பதும் நமது வேலைதானே).
ஐஓடி என்றால் என்ன என்று அறிமுகம் செய்யும் ஒரு
கட்டுரையை சில நாட்களுக்கு முன் நான் எழுதி
இருந்தேன். அதன் தொடர்ச்சியே இக்கட்டுரை.
ஐஓடி (IoT = Internet of Things) என்றால் என்ன?
Cloud computing என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்றால் என்ன?
மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality) என்றால் என்ன?
இவை பற்றி அறிந்து கொள்ளாமல் இனிமேல் காலம்
தள்ள முடியாது. 2021ல் தொடங்கி அடுத்து வரும் சில
ஆண்டுகளில் மேற்கூறிய விஷயங்கள் இந்தியாவில்
பரவலாக நடைமுறைக்கு வந்து விடும். எனவே அவை
குறித்த குறைந்தபட்ச அறிவைப் பெற்றிருப்பது அவசியம்,
இன்டர்நெட்டை நாம் பயன்படுத்துவது எப்படி?
இதற்கு ஒரு .கம்ப்யூட்டர் வேண்டும். கம்ப்யூட்டரில்
இன்டர்நெட் செயல்படும். கம்ப்யூட்டர் இல்லாமல்
அந்தரத்தில் இன்டர்நெட் செயல்படாது. ஆக
இன்டர்நெட் என்று சொன்னால், அது செயல்படுவதற்கு
ஒரு பொருள் வேண்டும். அந்தப் பொருள்தான் கம்ப்யூட்டர்.
அது போல மொபைல் போனிலும் இன்டர்நெட்
செயல்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போனில்
இன்டர்நெட் சிறப்பாகச் செயல்படுகிறது.
ஆக, நமக்குத் தெரிந்து கம்ப்யூட்டரிலும், ஸ்மார்ட்
போனிலும் மட்டுமே இன்டர்நெட் செயல்படுகிறது.
மொத்தம் இரண்டு பொருட்கள் மீது மட்டும் இன்டர்நெட்
செயல்படுகிறது. சரிதானா? சரிதான்.
இது போதாது! இரண்டு பொருட்கள் மீது மட்டும்
செயல்பட்டால் போதாது. இருபது பொருட்கள் மீது,
200 பொருட்கள் மீது, 2000 பொருட்கள் மீது இன்டர்நெட்
செயல்பட வேண்டும். அப்போதுதான் உலகிலுள்ள
அனைவருக்கும் இன்டர்நெட் சேவையை வழங்க
முடியும்.
எனவே எல்லாப் பொருட்களின் மீதும் இன்டர்நெட்
செயல்படுவதையே Internet of Things (IoT) என்கிறோம்.
எல்லாப் பொருட்களும் என்றால், அரிசி, பருப்பு, புளி,
நல்லெண்ணெய் உட்பட எல்லாப் பொருட்களும் என்று
கருதி விட வேண்டாம்.
வீட்டு உபயோகப் பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மெஷின்,
டிவி போன்றவற்றில் இன்டர்நெட் செயல்படும். சுவர்க்
கடிகாரம், கைக்கடிகாரம் போன்றவற்றில் இன்டெர்நெட்
செயல்படும். ஆக பல்வேறு பொருட்களின் மீது
இன்டர்நெட் செயல்படுவதால், இத்தொழில்நுட்பம்
Internet of Things என்று பொருத்தமாகவே அழைக்கப்
படுகிறது. பொருட்களின் மீதான இணையம் என்று
தமிழில் சொல்லலாம்.
உங்கள் வீட்டுக் கதவின் பூட்டில் இன்டர்நெட்
செயல்பட்டால் அந்தப் பூட்டு ஐஓடி (IoT) ஆகி விடும்.
நீங்கள் எங்கிருந்து கொண்டும் உங்கள் வீட்டின் கதவைப்
பூட்டலாம் அல்லது திறக்கலாம். கோபாலபுரத்தில்
உள்ள உங்கள் வீட்டின் கதவைப் பூட்ட .மறந்து விட்டு,
நீங்கள் வேளச்சேரியில் உள்ள உங்கள் அலுவலகத்துக்கு
வந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அலுவலகத்தில்
இருந்தபடியே உங்களின் வீட்டைப் பூட்டலாம்.
உங்கள் வீட்டுக் கதவுக்கு ஸ்மார்ட் லாக் (SMART LOCK)
பொருத்தி விட்டு, உங்கள் பூட்டை IoT பூட்டாக அதாவது
இன்டர்நெட் செயல்படும் பூட்டாக மாற்றி விட்டால்,
திருநெல்வேலியில் உள்ள உங்கள் வீட்டை டெல்லியில்
இருந்து கொண்டு பூட்டவோ திறக்கவோ செய்யலாம்.
எதிர்காலத்தில் கதவுகளின் பூட்டுகள் யாவும்
ஸ்மார்ட் லாக் வகையிலான நவீன பூட்டுகளாகவே
இருக்கும். திண்டுக்கல் பூட்டு போன்ற தமிழகத்தின்
பாரம்பரியமான பூட்டுகளுக்கு இனி எதிர்காலம்
இருக்காது. திண்டுக்கல் பூட்டு என்பது மெக்கானிக்கல்
பூட்டு. ஸ்மார்ட் லாக் என்பது எலக்ட்ரானிக் பூட்டு. இது
எலக்ட்ரானிக் யுகம். தொழிற்புரட்சி 4.0 என்னும் நான்காம்
பதிப்பை நெருங்கும் இந்தக் காலத்தில் மெக்கானிக்கல்
பொருட்களுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
வெளியில் இருந்து கொண்டே வீட்டைப் பூட்ட முடியும்
என்பது மகிழ்ச்சியைத் தரும் அதே நேரத்தில்,
நமது வீட்டின் பூட்டுக்கு எந்த ரகசியமும் இல்லாமல்
போய் விடுகிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.
IoT போன்ற புதிய தொழில்நுட்பத்தில் safety, security
போன்றவை அர்த்தம் இழந்து விடுகின்றன.
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்கள்
வாயிலாக புற உலகை நாம் அறிகிறோம்.
IoT தொழில்நுட்பத்தில் உள்ள பொருட்கள் வெறும்
ஜடப் பொருட்களாக இருத்தல் கூடாது. அவை
அறிவுடைய பொருட்களாக இருக்க வேண்டும்.
(The things of IoT have to be intelligent). அவை சூழலில்
இருந்து விஷயங்களை உணர வேண்டும். அதற்காக
அவற்றின் மீது உணர்விகள் (censors) பொருத்தப்
பட்டிருக்கும்.
அலுவலகத்தில் இருந்து களைப்புடன் நீங்கள் வீடு
திரும்பியதும், உங்களுக்கு சூடான காப்பி தயாரிக்கும்படி
காப்பி மெஷினுக்கு கட்டளை இடும் அந்த IoT கருவி.
சோபியா போன்ற ஒரு ரோபோவையும் விலைக்கு
வாங்கி வீட்டில் போட்டிருந்தால், காப்பியை உங்கள்
உதட்டுக்கே கொண்டு வந்து தரும் அந்த ரோபோ.
பொண்டாட்டி கையால் காப்பி என்பதெல்லாம்
இனி nostalgiaதான்!
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இடத்தை அடைக்கும்.
லேப்டாப்பும் கூட இடத்தை அடைக்கத்தான் செய்யும்.
ஆனால் இன்றைக்கு IoTயில் பயன்படும் கம்ப்யூட்டர்
இடத்தை அடைக்காது. அதில் ஒரு சோப்பு டப்பா சைசில்
உள்ள boardல் கம்ப்யூட்டரில் உள்ள அத்தனை
சமாச்சாரங்களும் அடங்கி இருக்கும். அதாவது ஒரு
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தின் அளவில்
கம்ப்யூட்டர் இருக்கும். இங்கிலாந்து நாட்டுத்
தயாரிப்பான "ரோஸ்பெரி பை" (Rospberry Pi)
இப்படிப்பட்ட ஒரு மினி கம்ப்யூட்டர் ஆகும்.
இதன் விலை இந்தியாவில் ரூ 1200 முதல் உள்ளது.
வரும் ஆண்டுகளில் உலகச் சந்தைகளில் 20 பில்லியன்
IoT கருவிகள் விற்பனைக்கு வரும் என்று சந்தை
வல்லுநர்கள் கூறுகிறார்கள். (20 பில்லியன் = 2000 கோடி).
IoT குறித்தும் 5ஜி குறித்தும் எழுதி மாளாது. ஏற்கனவே
போதுமான அளவில் எழுதி உள்ளேன். அவற்றோடு
இக்கட்டுரையையும் சேர்த்துப் படிக்கவும். படித்த பின்னர்
IoT பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்த நிலைமை
முற்றிலுமாக மாறி விட்டது என்று உணர்வீர்கள். IoT குறித்த
ஒரு வலுவான அடிப்படையை எனது கட்டுரைகள் தருகின்றன.
(அடுத்த கட்டுரை: Cloud computing குறித்து)
*************************************************************
பின்குறிப்பு:
IoT கருவிகளை எளிதில் hack பண்ண இயலும்.
இதைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பை
உறுதி செய்க.
கட்டுரையைப் படிப்பது போலவே இணைக்கப்பட்ட
படங்களையும் பார்க்க வேண்டும். அவற்றில் அரிய
செய்திகள் அடங்கி உள்ளன. கட்டுரையின்
கருத்துக்களை விளக்க படங்கள் உதவும்.
எனவே படங்களையும் பார்த்து, புரிந்தால்தான்
கட்டுரையை முழுமையாகப் படித்ததாக அர்த்தம்.
ஸ்மார்ட் லாக் எனப்படும் நவநாகரிகப் பூட்டுகள்.
இவை திண்டுக்கல் பூட்டுகளின் விற்பனைக்கு
சவாலாக உள்ளன.
கள்ளத் தனமாக திறக்க முடியாத திண்டுக்கல் பூட்டுகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக