சனி, 9 ஜனவரி, 2021

 தடுப்பூசி முன்அனுமதி சர்ச்சை

குறித்த எனது பார்வை
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு
இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு அவசர கால முன் அனுமதி வழங்கியது அனைவரும் அறிந்ததே.
முதல் வேக்சின்- கோவிஷீல்டு ( COVI SHIELD)
இது சிம்பன்சிகளின் அடினோ வைரஸின் மீது கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள அடினோ வெக்டார் வகை தடுப்பூசி
இதை ஆஸ்ட்ரா ஸெனிகா நிறுவனமும் ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பெருந்தொற்று காலத்தில் பல உயிர்களை காக்கும் பொருட்டு இந்த தடுப்பூசிக்கான காப்புரிமை தொகையை லாப நோக்கமின்றி அவர்கள் நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த தடுப்பூசியின் இந்தியகாப்புரிமையை
சீரம் இண்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, பூனே நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவரை இந்தியாவில் சில ஆயிரம் பேர் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வில் பங்கு பெற்றனர். மூன்றாம் கட்ட ஆய்வு தொடர்ந்து நடந்து வருகின்றது.
இரண்டாவது தடுப்பூசி- கோவேக்சின் (COVAXIN)
இது உயிருள்ள கொரோனா வைரஸ்களை முடமாக்கி மூர்ச்சையடையச் செய்து அவைகளில் இருந்து நோய் உண்டாக்கும் திறனை நீக்கி விட்டு உருவாக்கப்படும் தடுப்பூசி வகை. இதை Inactivated virus vaccine என்று கூறுவோம்.
இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து
மூன்றாம் கட்ட பரிசோதனை நவம்பர் ஆரம்பித்து நடந்து வருகின்றது.
இப்போது இதில் என்ன சர்ச்சை ???
மேற்சொன்ன இரண்டு வகைகளில்
முதல் வேக்சினான கோவிஷீல்டுக்கு SII ( serum institute of India ) நிறுவனம் காப்புரிமை பெற்று அதற்குண்டான தொழில்நுட்பத்தை ஆஸ்ட்ரா செனிகாவிடம் இருந்து பெற்று உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட (Phase III clinical trial) பரிசோதனையின் இடைக்கால முடிவுகளை (Interim analysis) பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருக்கிறது. இது முதல் சர்ச்சை
இரண்டாவது வேக்சினான கோவேக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் போது இதுவரையிலான இடைக்கால முடிவை அதற்கும் வெளியிடாமல் அதற்கு விநியோகத்தின் போதே பரிசோதனை செய்து கொள்ளும் RESTRICTED USE ON EMERGENCY CONDER UNDER CLINICAL TRIAL MODE என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது இரண்டாவது சர்ச்சை.
இது குறித்த விளக்கத்தை இனி காண்போம்
மேலை நாடுகளான அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள், ஒன்றிணைந்த பிரிட்டன் முடியாட்சி, ப்ரான்சு குடியரசு போன்றவற்றில்
உருவாக்கப்பட்ட
ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி
மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி
ஆஸ்ட்ரா செனிகா நிறுவனத்தின் தடுப்பூசி ஆகியவற்றிற்கு கடந்த ஒரு ஆண்டாக செய்த ஆராய்ச்சிகள் ஆய்வுகள் பரிசோதனைகள் அதன் முடிவுகள் ஆகிய அனைத்தும் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளன.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளில் கொரோனாவை தடுக்கும் என்று ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அதை பொதுவெளியில் பகிர்ந்துள்ள மூன்று தடுப்பூசிகள் மேற்சொன்னவை மட்டுமே.
சீனா உருவாக்கியுள்ள INACTIVATED VIRUS VACCINE க்கான ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
அதே போல ரஷ்யாவின் SPUTNIK V தடுப்பூசிக்கான ஆய்வு முடிவுகளும் வெளியிடப்படவில்லை.
நம் நாட்டின் அறிவியலாளர்கள் கூற்று யாதெனில் மேலை நாடுகளைப்போல தடுப்பூசிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியே வெளியிட்டு பிறகு அனுமதி கொடுக்கலாமே என்பது தான்.
எனது எதிர்பார்ப்பும் அதுவே.
ஆயினும்
இதில் எனது வேறொரு பார்வையை இங்கு வைக்கிறேன்.
இந்தியாவின் DCGI (Drug Control General of India) அமைப்பு
இதற்கு முன் இந்த கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலத்தில்
ஃபேவிபிராவிர் (Favipiravir)
ப்ளாஸ்மா சிகிச்சை ( plasma therapy)
போன்றவற்றிற்கு அவசர கால முன்னனுமதி வழங்கி இருக்கிறது.
தலைசிறந்த தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டதாக போற்றப்படும் அமெரிக்க ஒன்றிய மாநிலங்களின் US-FDA வும் இதே போன்ற பல கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு முன் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் பெருந்தொற்று மனித உயிர்களை கபளீகரம் செய்து வரும் சூழ்நிலையில் அவர்களைக் காப்பாற்ற செய்யும் "கொள்கை முடிவுகள்" என்றே பார்க்க வேண்டும்.
பெருந்தொற்றுப் பரவல் மற்றும் இரண்டாம் அலை குறித்த அச்சம், அதனால் ஏற்பட இருக்கும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் இவற்றை கணக்கில் கொண்டு
அத்தகையதோர் நிலையைத் தடுக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு முகமை தனது அதிகாரத்திற்குட்பட்டு தனது நிலைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் தடுப்பூசி செயல்படும் என்று அறிவியல் பூர்வமாக கருதினால் அதற்கு அனுமதி அளிக்கும் உரிமை அந்த முகமைக்கு உண்டு.
ஃபைசர் தடுப்பூசியும் சரி.
மாடர்ணாவும் சரி..
ஆஸ்ட்ரா செனிகாவும் சரி.
மூன்று தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் நடப்பில் தான் உள்ளது. அவர்கள் வெளியிட்டிருப்பது இடைக்கால முடிவுகள் மட்டுமே.
மருந்துகள் உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். இதுவரை எத்தனையோ மருந்துகள் இடைக்கால ஆய்வுகளில் வெற்றி பெற்று நீண்ட கால ஆய்வுகளில் தோற்றிருக்கின்றன என்பது.
இவையெல்லாம் அறிவியல் மூலம் மனிதன் செய்யும் முயற்சிகள். இதில் வெற்றி போலவே தோல்வியும் வரும்.
ஆனால் முழு ஆய்வு முடிவுகள் முடிந்த பின் தான் அனுமதி தருவோம் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் இன்று கடுமை காட்ட முடியாது.
காரணம் - முழு ஆய்வும் முடிக்க மூன்று ஆண்டுகளாவது ஆகும்.
அதற்குள் இந்த நாடுகளில் முதியோர்களே இல்லாத நிலையை கொரோனா ஏற்படுத்தியிருக்கும் அபாயம் உண்டு.
இதன் விளைவாகவே மனித வரலாற்றிலும் சரி.. மருத்துவ அறிவியல் வரலாற்றிலும் சரி .இத்தனை விரைவாகவும் அதே சமயம் தரத்துடனும் தடுப்பூசி ஆய்வு நடந்து முன் அனுமதி தரப்படும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன
இத்தகைய அனுபவம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்குமே புதிது என்பதையும் பதிவு செய்கிறேன்.
அதற்கடுத்தபடியாக வருவது
நமது நாட்டு மக்களின் சிந்தனைத் தெளிவு
நம் நாட்டில் ஒரு சாரார் வாட்சப்பில் எது வந்தாலும் அதை நம்பும் கூட்டமாக இருக்கிறோம்.
அதற்கடுத்த சிந்தனைக்கு செல்வதே இல்லை.
இப்படியான நிலையில் இருக்கும் நம் நாட்டில்
தடுப்பூசிகள் குறித்த ஆய்வு முடிவை வெட்ட வெளியில் விட்டால்
அதன் மூலம் பல வதந்திகளை பரப்பும் போக்கு ஏற்படலாம்.
தடுப்பூசிகளினால் ஏற்படும் சாதாரண பக்கவிளைவுகளைக் கூட பெரிய அளவு பூதாகரமாக்கி நாட்டில் பெரும்பான்மை மக்கள் பயன்பெற இருப்பதை எளிதில் தடுத்து விடலாம்.
இது நாம் தடுப்பூசிகள் மூலம் ஒரு நாடாக கொரோனா தொற்றை ஒழிக்கும் நிலையில் பின்னடைவை ஏற்படுத்தும்.
எனவே இதுவரை தடுப்பூசி நிறுவனங்கள் சமர்பித்துள்ள ஆய்வு முடிவுகளை DCGI தன்னகத்தே பரிசீலித்து ஆராய்ந்து
திருப்திகரமாக இருப்பதால் இந்த முன் அனுமதியை தந்திருக்கக்கூடும்.
எனினும் இனி வரும் நாட்களில் அந்த முடிவுகளையும் வெளியிடக்கூடும். அதை வெளியிட வேண்டும் என்பதே அறிவியலாளர்களின் கோரிக்கை.
இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தடுப்பூசியை இயக்கமாக மாற்றி பெரும்பான்மைக்கு தடுப்பூசி கொடுத்து முடிக்கவே சில ஆண்டுகள் ஆகும்.
இதில் ஒரு மருந்து நிறுவனத்தின் தடுப்பூசியை மட்டுமே நம்பி இருந்தால்
இயற்கையாகவே மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் சார்ந்த தொய்வு ஏற்படும்.
எனவே இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் கோவேக்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனை சார்ந்த அனுமதி என்பதால் அந்த பரிசோதனையில் பங்குபெற எத்தனிக்கும் மக்களுக்கு அவர்களது அனுமதியை பெற்ற பின்பே இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
இந்த நிறுவனம் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் தனது இடைக்கால பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்த படியாக
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இந்த முன்அனுமதிகளை வழங்கியிருப்பதற்கான காரணமாக எனக்குத்தோன்றுவது
இந்தியா தவிர ஏனைய வளர்ந்த நாடுகள் அனைத்தும் தங்களது குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவிட்டன.
இதில் பின்னடைவு ஏற்பட்டால்
கூடிய விரைவில் இந்தியர்கள் மேற்கண்ட தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கப்பட்ட நாடுகளுக்குள் பயணமாவதை அந்த நாடுகள் தடை செய்யும் வாய்ப்பு உருவாகலாம்.
மேலும் 136 கோடி பேர் கொண்ட நாட்டில் 70% பேருக்கு தடுப்பூசியை வழங்க வேண்டும் என்ற இமாலய இலக்கு நம்முன் இருக்கிறது.
90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் தனது மக்களின் 10% பேருக்கு தடுப்பூசியை வழங்கிவிட்டது.
இதே போல அமெரிக்காவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது
எனவே நாமும் விரைவில் நமக்கான தடுப்பூசியை பெறாவிடில் "சர்வதேச கிராமத்தில்" நோய் தொற்று சார்ந்த தீண்டாமைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் பொருளாதார காரணங்களை கருத்தில் கொண்டால் நாடு முழுமைக்கும் தடுப்பூசி வழங்க நமக்கு எவ்வளவு கோடி தேவைப்படும் என்பதை கணக்கு போட்டால் தலை சுற்றுகிறது
ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் விலை அதிகம்.
ஆனால் ஆஸ்க்வர்டு பல்கலைக்கழகம் தனது காப்புரிமை விலையை மக்கள் நலனை கருத்தில் கொண்டு மிகக்குறைவாக நிர்ணயித்தது. இதனால் ஆஸ்ட்ரா செனிகா வேக்சினை சீரம் நிறுவனம் அரசுக்கு 200 ரூபாய்க்கும்
பாரத் பயோடெக் நிறுவனமும் அதே விலைக்கோ இன்னும் குறைவான விலைக்கோ தர இயலும்.
மேற்சொன்ன அத்தனை காரணங்களையும் மீறியும் எமது கோரிக்கை இதுவே
Covishield & Covaxin
இந்த இரண்டு தடுப்பூசிகளின் இடைக்கால ஆய்வு முடிவுகளை பொதுவெளியில் அப்டேட் செய்வது அறிவியலாளர்கள் இடையே நம்பிக்கையை விதைக்கும்
இது இந்த தடுப்பூசி இயக்கத்தை மேலும் வலுவாக்கும்.
அறிவியலாளர்கள் நம்பிக்கை பெற்றால்
மக்கள் தாமாக நம்பிக்கை பெறுவர்
இதை ஒன்றிய அரசு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் பரிசீலித்து ஆவண செய்ய வேண்டுமாய் இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Like
Comment
Share
Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக