திங்கள், 11 ஜனவரி, 2021

கல்வியா செல்வமா வீரமா எது பெரிது?

இது அன்றைய பட்டி மன்றம்!

வாட்சப்பா, சிக்னலா, டெலிகிராமா எது சிறந்தது?

இது இன்றைய முகநூல் பட்டிமன்றம்!

------------------------------------------------------------  

 நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------  

பணமா பாசமா? உயிரா மானமா? பட்டினியா தீனியா?

இவை போன்ற தலைப்புகளில் பட்டிமன்ற சினிமா எடுத்து 

வசூலை அள்ளியவர் அன்றைய சினிமா இயக்குனர் 

கே எஸ் கோபாலகிருஷ்ணன். கல்வியா செல்வமா 

வீரமா என்ற பட்டிமன்றத்தை ஒரு சினிமாப் பாட்டில் 

நடத்திக் காட்டியவர் ஏ பி நாகராஜன்.


இன்று இவர்கள் இருவருமே உயிருடன் இல்லை. என்றாலும் 

இவர்களின் பாணியை ஸ்வீகரித்துக் கொண்ட பல்லாயிரக் 

கணக்கானோர் முகநூலில் பட்டிமன்றங்களை விமரிசையாக 

நடத்தி வருகின்றனர். 


வாட்சப்பில் நீடிப்பதா?

சிக்னலுக்கு வாழ்க்கைப் படுவதா?

டெலிகிராமை முத்தமிடுவதா?

என்ற கேள்விகளுக்கு விடை காண வாட்சப், சிக்னல் மற்றும்  

டெலிகிராமின் ஆதரவாளர்கள் முகநூலில் கைகலப்பில்  

ஈடுபட்டு வருகிறார்கள். இது உலகெங்கும் நிகழ்ந்து வரும்  

நிகழ்வுதான். இந்தியாவில் இதன் நெடியின் வீரியம் சற்றே 

மூக்கைத் துளைக்கும். அவ்வளவுதான்!


கட்டுரையின் நோக்கமான பகுப்பாய்வுக்குச் செல்லுமுன் 

சில புள்ளி விவரங்களைப் பார்த்து விட வேண்டும். ஏகப்பட்ட 

புள்ளி விவரங்கள் உள்ளன. அவற்றில் authenticகிற்கு 

நெருக்கமாகவும் நம்பகத்தன்மையுடனும் உள்ள புள்ளி 

விவரங்களை We are social Hootsuite நிறுவனம் தந்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான இதைப் பரிசீலிப்போம்..


உலக அளவிலான புள்ளி விவரங்கள்: ஆண்டு 2019.

இன்றைய உலக மக்கள் தொகை = 783 கோடி.

------------------------------------------------------------------------------

மொபைல் வைத்திருப்போர் (உலக அளவில்) = 511 கோடி 

இன்டர்நெட் பயன்படுத்துவோர் = 439 கோடி 

சமூக வலைத்தளங்களை உபயோகிப்போர் = 348 கோடி 

மொபைல் போன்களில் சமூக வலைத்தளங்களை 

உபயோகிப்போர் = 326 கோடி.  


வினாடிக்கு 11 பேர் என்ற வீதத்திலும், நாள் ஒன்றுக்கு 

1 லட்சம் பேர் என்ற வீதத்திலும் இன்டர்நெட் உபயோகிப்போர் 

வளர்ந்து வருகின்றனர்.


சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 மணி 42 நிமிட நேரம்

இன்டர்நெட் பார்ப்பதில் மக்கள் செலவிடுகின்றனர்.

அதிகம் பார்க்கப்படும் வலைத்தளங்களில் 

கூகிள் முதல் இடத்திலும் 

யூடியூப் இரண்டாம் இடத்திலும் 

முகநூல் மூன்றாம் இடத்திலும் உள்ளன.


180 நாடுகளில் 60 மொழிகளில் வாட்சப்  செயல்படுகிறது.

2014ல் வாட்சப்பை பேஸ்புக்  நிறுவனம் 19 பில்லியன் 

அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கியது.

2014ல் 19 பில்லியன் அமெரிக்க டாலர் =  19 x  100 x 62 crores 

= 1,17,800 கோடி ரூபாய். அதாவது ஒரு லட்சத்து 

பதினெட்டாயிரம் கோடி ரூபாய்.


2020 பிப்ரவரியில் வாட்சப்பின் MAU எண்ணிக்கை = 2 பில்லியன்  

= 200 கோடி. (MAU = Monthly Active User).

ஆதாரம்: We are social Hootsuite


2020 ஏப்ரலில் டெலிகிராமின் MAU எண்ணிக்கை = 40 கோடி.

வாட்சப்பை விட 5 மடங்கு குறைவு.(ஆதாரம்: Statista/ Techcruch).


2020ல் சிக்னலின் MAU எண்ணிக்கை = 1 கோடி 

(ஆண்டிராய்டு OSல் பதிவிறக்கம் செய்தபடி). 


வாசகர்களுக்கான  வழிகாட்டுதல்!

------------------------------------------------------

1) WhatsApp பயனாளர்கள் 200 கோடி.

2) Telegram பயனாளர்கள் 40 கோடி.

3) Signal பயனாளர்கள் 1 கோடி மட்டுமே.

4) சிக்னல் app என்பது வாட்சப்புக்குப் போட்டி என்று 
யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது.
எலான் மஸ்க் அதை promote பண்ணுவதால் அதற்கு 
அதிர்ஷ்டம் அடித்துள்ளது. உண்மையில் வாட்சப்புக்குப்
போட்டி டெலிகிராம் போன்ற பெரிய நிறுவனமே தவிர 
சிக்னல் அல்ல. 

பாதுகாப்பு என்று எடுத்துக் கொண்டால், இம்மூன்றில் 
சிக்னல் மட்டுமே அதிகபட்ச பாதுகாப்பை வழங்கக் 
கூடியது. பாதுகாப்புக்காகத்தானே எல்லோரும் 
வாட்சப் வேண்டாம் என்று கட்சி மாறுகிறார்கள்.  


ஆகவே வாசக நண்பர்களே, 
அ) தரவுகளின் பாதுகாப்பு பற்றி நீங்கள் கவலை கொள்ளும் 
 பட்சத்தில்,வாட்சப்பில் இருந்து வெளியேறுங்கள்.

ஆ) என்னிடம்  என்ன அணுஆயுதங்கள் பற்றிய ரகசியமா
இருக்கிறது? அதை வாட்சப் எடுத்துப் பயன்படுத்தினால்
வானம் இடிந்து விழாது என்று கருதுவார்கள் என்றால் 
வாட்சப்பிலேயே நீடிக்கலாம். ஒரு கெடுதியும் நேராது.
இந்தியாவில் வாட்சப் பயன்படுத்துவோர்தான் அதிகம். 

இ) முடிவு எடுக்க முடியவில்லை; பயமாக அல்லது 
அசௌகரியமாக இருக்கிறது என்றால், உடனே 
டெலிகிராமில் சேர்ந்து விடுங்கள்.    
  

ஈ) தரவுகள், தகவல்கள், என்னைப் பற்றிய விவரங்கள்

இவை ரகசியமாகவே வைக்கப் பட வேண்டும்  என்பதில் 

நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்றால் நீங்கள் 

உடனே சிக்னலில் சேர்ந்து விடுங்கள்.

------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

ஒரு ஆங்கிலக் கட்டுரையை இணைத்துள்ளேன்.

வாட்சப், டெலிகிராம், சிக்கினால் இம்மூன்றிலும் 

எது பாதுகாப்பானது என்பது பற்றி நிறைய 

விவரங்களைச் சொல்லும் கட்டுரை அது. படியுங்கள். 

*********************************************                

 

               



  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக