வெள்ளி, 22 ஜனவரி, 2021

 பூமியின் மூன்றாவது இயக்கம்!

-------------------------------------------------

இரண்டு விதமான இயக்கம் பூமிக்கு உண்டு.

ஒன்று: பூமி தன்னைத்தானே சுற்றுவது (rotation).

இரண்டு: பூமி சூரியனைச் சுற்றுவது (revolution).    

அனைவரும் அறிந்த இவ்விரண்டு இயக்கங்கள் போக 

மூன்றாவதாகவும் பூமிக்கு ஒரு இயக்கம் (motion) உண்டு.

இது பலராலும் அறியப்படாத ஒரு இயக்கம். ஆங்கிலத்தில் 

precession என்று அழைக்கப்படும் இதை "முந்து சுழற்சி" என்று 

தமிழில் கூறலாம். தொடக்கத்தில். டிசம்பர் 21ல் நிகழ்ந்த 

மகர சங்கராந்தி தற்போது ஜனவரி 14க்கு மாறியதற்கு 

இந்த முந்து சுழற்சியே காரணம். எப்படி என்பதைப் பார்ப்போம்.   


முந்து சுழற்சி என்றால் என்ன? பம்பரம் சுற்றுவதைப் போலத்தான் 

பூமியும் சுற்றுகிறது. இது பூமியின் தற்சுழற்சி (rotation) ஆகும்.  ஒரு கற்பனையான அச்சைப் பற்றிக்கொண்டு சுற்றும் பூமியின் 

அச்சுச் சாய்வு (axial tilt) 23.44 டிகிரி ஆகும். அச்சுச் சாய்வு என்று எதைக் குறிப்பிடுகிறோம்? பூமி ஒரு அச்சில் சுழல்கிறது. சுழற்சி அச்சு 

(rotational axis) என்று இதற்குப் பெயர். அடுத்து, பூமி சூரியனைச் 

சுற்றி வரும் சுற்றுப்பாதைக்கு ஒரு அச்சு உண்டு அல்லவா? இது 

சுற்றுப்பாதை அச்சு (orbital axis) ஆகும். இந்த இரண்டு அச்சுகளுக்கும் இடையிலான கோணமே  அச்சுச் சாய்வு ஆகும். இந்த இரண்டு 

அச்சுகளும் ஒன்றிப் பொருந்தினால் (coinciding) அதாவது ஒன்றின் 

மீது ஒன்று படிந்தால், அச்சுச் சாய்வின் கோணம் பூஜ்யம் ஆகும்.         


எதிர்காலத்தில் மனிதர்களை செவ்வாயில் குடியேறச் செய்வேன் 

என்று சபதம் செய்திருக்கிறாரே எலான் மஸ்க்! அந்த செவ்வாயின் 

அச்சுச் சாய்வு 25.19 டிகிரி ஆகும். யுரேனசின் அச்சுச் சாய்வு 97.77

டிகிரி என்பதையும் வெள்ளியின் (venus) அச்சுச் சாய்வு 177.36 டிகிரி என்பதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். 


பூமியின் முந்துசுழற்சி 

----------------------------------- 

பூமியின் அச்சு நிலையானதுதான் என்றபோதிலும்,  

தற்சுழற்சியின்போது பூமி தடுமாறுகிறது (Earth wobbles while spinning).

பூமி தன்னைத்தானே சுற்றும்போது, A என்ற புள்ளியில் உள்ள 

அதன் அச்சு, இத்தடுமாற்றத்தின் (wobbling) விளைவாக மெல்ல 

நகர்ந்து B என்ற புள்ளிக்குச் சென்று விடுகிறது. காலப்போக்கில் 

B என்ற புள்ளியில் இருந்தும்  நகர்ந்து C, D, E என்ற புள்ளிகளுக்குச்  

சென்று, தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது.  


பூமியின் அச்சுத் தடுமாற்றம் குறித்து அமெரிக்க வானியலாளர் 

சேத் கார்லோ சேண்ட்லர் (Seth Carlo Chandler1846-1913) ஆராய்ந்து 

1891ல் தமது முடிவை வெளியிட்டார். அது சேண்ட்லர் தடுமாற்றம் 

(Chandler wobble) அல்லது அட்சரேகை மாற்றம் (Latitude variation) 

என்று அழைக்கப் படுகிறது. இதன்படி, பூமியின் அச்சு பூமியின் 

மேற்பரப்பில் 433 நாட்களில் 9 மீட்டர் நகர்கிறது என்று 

அறியப் பட்டுள்ளது. எனினும் பூமியின் அச்சுத் தடுமாற்றம் 

முழுவதையும் சேண்ட்லர் கண்டறியவில்லை. சேண்ட்லர் 

தடுமாற்றம் என்பது பூமியின் மொத்தத் தடுமாற்றத்தில் 

ஒரு பகுதியே. காலப்போக்கில் பூமியின் முந்துசுழற்சி

முழுவதும் (தடுமாற்றமும் நகர்வும்) துல்லியமாகக் 

கண்டறியப் பட்டு.விட்டது. அதன்படி, 26,000 ஆண்டுகளில் 

பூமியின் முந்துசுழற்சி ஒரு சுற்றை முழுமையாகப் பூர்த்தி 

செய்கிறது என்று கணக்கிடப் பட்டுள்ளது. 


சூரியனின் பாதையாகத் தோற்றமளிக்கிற பாதையில் (ecliptic),

ராசி மண்டலத்தின் (zodiac region) ஊடாக, பூமி தனது முந்துசுழற்சியில் 

72 ஆண்டுகளுக்கு 1 டிகிரி நகர்கிறது. ராசி மண்டலத்தில் ஒரு ராசி 

என்பது 30 டிகிரி கொண்டது. எனவே 30 டிகிரி உள்ள ஒரு ராசியைக் 

கடக்க 2160 ஆண்டுகள் ஆகும் (30 x 72 = 2160). இப்படியே 

12 ராசிகளையும் கடக்க 25,920 ஆண்டுகள் ஆகும் (12 x 2160 = 25920). 

இதையே 26,000 ஆண்டுகளில் பூமியின் முந்து சுழற்சி ஒரு 

முழுச்சுற்றை பூர்த்தி செய்கிறது (one full cycle of precession of earth) 

என்கிறோம்..


முந்துசுழற்சியின் விளைவுகள் 

------------------------------------------------

பூமியின் அச்சுத் தடுமாற்றம் பாரதூரமான விளைவுகளை 

ஏற்படுத்துகிறது. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிடுவது 

இயலாது. அதன் பிரதான விளைவுகளில் ஒன்று துருவ நட்சத்திரம் 

மாறிக்கொண்டே இருப்பது. தற்போது போலாரிஸ் (Polaris) என்பது 

துருவ நட்சத்திரமாக (Pole star or North star ) உள்ளது. இது அர்சா மைனர்

உடுமண்டலத்தில் (Ursa minor constellation) உள்ளது. அர்சா மைனர் 

என்பது சிறிய கரடி போலத் தோற்றமளிக்கும் உடுமண்டலம் ஆகும். 


தனது துருவ நட்சத்திர அந்தஸ்தை இன்னும் 2000 ஆண்டுகளில் 

போலாரிஸ் இழக்கப் போகிறது. பொச 4000ல், பூமியின் முந்துசுழற்சி 

காரணமாக, போலாரிஸ் நட்சத்திரமானது  வட விண்முனையில் 

இருந்து (North celestial pole) வெகுவாக விலகிச் சென்று விடும். அத்தோடு 

துருவ நட்சத்திர அந்தஸ்தையும் இழந்து விடும். அதன் இடத்திற்கு  

காமா செபெய் (Gamma Cephei) என்னும் நட்சத்திரம் 

வந்து விடும். இது செபியஸ் அரசன் (Cepheus the King) என்னும் 

உடுமண்டலத்தில் உள்ளது. பன்னாட்டு வானியல் சங்கத்தால்

(International Astronomical Union) அங்கீகரிக்கப்பட்ட 88 உடுமண்டலங்களில் 

(constellations) ஒன்றுதான் "செபியஸ் அரசன்".                     


துருவ நட்சத்திரங்கள் மாறிக்கொண்டே இருப்பது வானியலில் 

வழக்கமான ஒன்றுதான். 5000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் 

பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்தில், துபன் (Thuban) என்னும் 

நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக இருந்தது. இது டிராக்கோ 

(Draco the dragon) என்னும் உடுமண்டலத்தைச் சேர்ந்தது. 

அது போல எதிர்காலத்தில், பிரசித்தி பெற்ற நட்சத்திரமான 

வேகா (Vega) இன்னும் 13,000 அல்லது 14,000 ஆண்டுகளில் 

துருவ நட்சத்திரம் ஆகிவிடும். இது லிரா (Lyra) உடுமண்டலத்தைச் 

சேர்ந்தது.


மகர சங்கராந்தியா கும்ப சங்கராந்தியா? 

----------------------------------------------------------------

பூமியின் முந்து சுழற்சியால் ஏற்படும் இன்னொரு விளைவு

ராசி மண்டலத்தில் எந்த ராசியில் எப்போது சூரியன் நுழையும் 

என்பதுதான். குளிர்காலக் கதிர்த்திருப்பம் நிகழ்வது  

டிசம்பர் 21ல். முன்பெல்லாம் இதே தேதியில் சூரியன் 

மகர ராசியில் நுழைந்து கொண்டு இருந்தது. காலப்போக்கில் 

பூமியின் முந்துசுழற்சி காரணமாக கதிர்த்திருப்ப நாள் 

ஒன்றாகவும் சூரியன் மகர ராசியில் நுழையும் நாள் 

வேறொன்றாகவும் ஆகிப்போனது. முன்பு டிசம்பர் 21ல் 

மகர ராசியில் நுழைந்த சூரியன் தற்போது 24 நாட்கள் 

கழித்து ஜனவரி 14ல் மகர ராசியில் நுழைகிறது.    


பொங்கல் பண்டிகை உருவாக்கப்பட்டபோது, டிசம்பர்

கதிர்த்திருப்பம் என்று வருகிறதோ அன்றுதான் பொங்கல் 

என்று நிர்ணயிக்கப் பட்டு இருந்தது. கதிர்த்திருப்ப நாளில்தான் 

மகர சங்கராந்தியும் நிகழும். அன்றுதான் உத்தராயணம் தொடங்கும். பூமியின் முந்துசுழற்சியானது இவை அனைத்தையும் நொறுக்கி  

விட்டது. ஒருவித டாமினோ விளைவை (Domino effect) ஏற்படுத்தி விட்டது.

இதன் விளைவாக மகர ராசியில் டிசம்பர் 21 கதிர்த்திருப்ப நாளில்   

நுழைந்து கொண்டிருந்த சூரியன், ஜனவரி 14ல் நுழைகிறது..

இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பின், கதிர்த்திருப்ப நாளன்று 

மகர ராசிக்குப் பதில் அதை அடுத்திருக்கும் கும்ப ராசியில்

சூரியன் நுழையும். அன்றுதான் பொங்கல் பண்டிகை என்றால்,

பொங்கல் நிகழ்வது கும்ப சங்கராந்தியில்!!! ஒரு ராசியில் 2160

ஆண்டுகள் மட்டுமே சூரியன் தங்கும். அதன் பின் வேறு ராசிக்குச் 

சென்று விடும். முன்பு தனுஷ் சங்கராந்தி நாளில் பொங்கல் 

வைத்த நாம், எதிர்காலத்தில் கும்ப சங்கராந்தியில் பொங்கல் 

வைப்போம். 

******************************************************====



   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக