ஞாயிறு, 17 அக்டோபர், 2021

விபத்தின் பின்னர் செர்நோபில் அணுஉலையை 

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் 

காரீயப் போர்வையால் மூடிய 

சோவியத் ஒன்றிய விமானப் படை வீரர்கள்!

------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------------- 

செர்நோபில் அணுஉலை விபத்து 1986 ஏப்ரலில் நடைபெற்றது.

அப்போது சோவியத் ஒன்றியம் இருந்தது. மிகையில் 

கோர்பச்சேவ் சோவியத் ஒன்றிய அதிபராக இருந்தார். 

உக்ரைன் என்பது சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசு.


உக்ரைனின் தலைநகரான கீவ் நகருக்கு வடக்கே உள்ள 

செர்நோபில் நகரில் லெனின் அணுஉலை செயல்பட்டு 

வந்தது. துரதிருஷ்டம் பிடித்த அந்த ஏப்ரல் 26ல் நான்காம் 

அணுஉலை விபத்துக்கு உள்ளானது.


உலகில் இதுவரை நிகழ்ந்த மூன்று அணுஉலை 

விபத்துகளில் மிகப் பெரியது செர்நோபில் விபத்துதான்.

என்றபோதிலும் அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் 

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 மட்டுமே என்பதால் 

உக்ரைன் அரசும் சோவியத் ஒன்றியமும் ஆசுவாசம் 

அடைந்தன.


விபத்தின்போது நான்காம் எண் அணுஉலை எரிந்து 

கொண்டிருந்தது. அதன் காரணமாக கதிர்வீச்சு 

வளிமண்டலத்திலும் சுற்றுப்புறத்திலும் பரவிக் கொண்டு 

இருக்கிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று 

சோவியத் அரசு தனது விமானப் படை வீரர்களைப் 

பணித்தது. அவர்களும் ஹெலிகாப்டர்களில் தாழப் பறந்து 

காரீய போர்வைகளால் நான்காம் எண் அணுஉலையை 

மூடினார். இவ்வாறு கதிர்வீச்சு பரவுவது தடுக்கப் பட்டது.


இந்தப் பணியில் கதிர்வீச்சின் கொடிய ஆபத்தையும் 

பொருட்படுத்தாது சற்றேறக் குறைய 600 விமானிகள் 

பங்கேற்றனர். ஆயிரம் முறையேனும் அவர்கள் 

அணுஉலையின் தலைக்கு மேலே தாழப் பறந்து

கதிர்வீச்சுஅபாயத்துக்குத் தங்களை உட்படுத்திக் 

கொண்டனர்.


மனித நேயத்தின் உச்சம் என்ன என்பதை கம்யூனிஸ்டுகளான 

சோவியத் விமானிகளின் இந்தத் தியாகம் எடுத்துக் 

காட்டுகிறது. நாட்டையும் மக்களையும் அழிவில் இருந்து 

காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன்,

கதிர்வீச்சு தங்கள் உயிரையும் உறிஞ்சி விடும் அபாயம் 

இருந்தபோதும், அதைத் துச்சமென மதித்து கணக்கற்ற 

காரீயப் போர்வைகளால் எரிந்த அணுஉலையை மூடி

கதிர்வீச்சு வெளியே பரவாமல் இந்த விமானிகள் காத்தனர்.

இதன் விளைவாகவே சாவு எண்ணிக்கை 31ஐத் 

தாண்டாமல் சோவியத் அரசு கட்டுப்படுத்தியது.


மானுடத்தின் வரலாற்றில் இந்த 600 விமானிகளும்

காலத்தால் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

யுகத்தின் மீது சுவடு பதித்தவர்கள் அவர்கள்.


வேறுள குழுவை எல்லாம் 

மானுடம் வென்ற தம்மா.

-------------------------------------------------------------   

   

            .

.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக