சாதியைத் தோற்றுவித்தது யார்?
புரோகிதர்களா? கடவுளா? இல்லை, இல்லை!
சாதியைத் தோற்றுவித்தது இரும்பே!
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
-----------------------------------------------------------
முன்குறிப்பு:
இக்கட்டுரை முற்ற முழுக்க என்னுடைய
பதிப்புரிமைக்கு உட்பட்டது.
----------------------------------------------------------------
மானுட வரலாற்றை உற்பத்தியின் அடிப்படையில்
மூன்றாகப் பிரிக்கிறார்கள்.
1) கற்காலம் (stone age)
2) வெண்கல யுகம் (bronze age)
3) இரும்பு யுகம் (iron age)
இந்தியாவில் இரும்பு யுகம் எப்போது தொடங்கியது?
சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவை ஒட்டி (கிமு 1500)
இந்தியாவில் இரும்பு யுகம் பிறக்கிறது. எனவே
இந்தியாவில் இரும்பு யுகம் தோன்றி குறைந்தது
3000 ஆண்டுகள் ஆகி இருக்கும். அதிகபட்சமாக
3500 ஆண்டுகள் ஆகி இருக்கும்.
இந்தியா முழுவதும் ஏக காலத்தில் இரும்பு யுகம்
பிறக்கவில்லை. கங்கைச் சமவெளியில்தான்
(பிரதானமாக இன்றைய உத்திர பிரதேசம், பீகார்
மாநிலங்கள்) இரும்பு யுகத்தின் செயல்பாடுகள்
நடைபெற்றன. ஆக இரும்பு யுகம் முதன் முதலில்
கங்கைச் சமவெளியிலும் பின்னர் தென்னிந்தியா உட்பட
இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.
பொருள் உற்பத்தியில் இரும்பு பிரம்மாண்டமான
புரட்சியை ஏற்படுத்தியது. மரத்தால் ஆன கருவிகள்
அகற்றப்பட்டு அவற்றின் இடத்தில் இரும்பாலான கருவிகள்
பயன்படுத்தப் பட்டன. அவை உற்பத்தியில் அபரிமிதமான
உபரியைக் குவித்தன.
இரும்பின் பயன்பாட்டுக்கு முன்பு ஒரு மூட்டை
நெல் விளைவித்த ஒருவரால் இரும்பாலான கருவிகளைப்
பயன்படுத்திய பிறகு பத்து மூட்டை நெல்லை விளைவிக்க
முடிந்தது.
பல்வேறு இரும்புக் கருவிகள் அக்காலத்தின் தலைசிறந்த
உற்பத்திக் கருவிகளாகத் திகழ்ந்தன. மிகச் சிறந்த உதாரணமாக
இரும்புக் கோடரியைச் சொல்லலாம்.
காட்டை அழித்து விளைநிலம் ஆக்குவதில் கோடரியின்
பங்கு மகத்தானது. இரும்புக் கோடரிக்கு முன்பு
மனிதர்கள் மரத்தாலான கோடரிகளையே பெருவாரியாகப்
பயன்படுத்தி வந்தனர். இரும்புப் பட்டை போடப்படாத
வண்டிச் சக்கரங்களே அன்று இருந்தன. மரக் கலப்பையில்
அன்று இரும்பாலான கொழு இருக்கவில்லை. இரும்பு
யுகத்தின்போது இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு
வந்தன.
இதன் விளைவாக உற்பத்தி அபரிமிதம் ஆகியது.
சாதாரணமாக ஒரு மூட்டை நெல் விளைந்த இடத்தில்
பத்து மூட்டை விளைந்தது. தேவைக்குப் போக மீதியுள்ள
ஒன்பது மூட்டை நெல்லை என்ன செய்வது? அதை விற்க
வேண்டும். இவ்வாறு சமூகத்தின் மொத்த வணிகம்
பெருமளவில் அதிகரித்தது.
உபரி குறைவாகஇருந்தபோதும் சமூகத்தில் வணிகம்
நடைபெறத்தான் செய்தது. ஆனால் வெண்கல யுகத்தின்போது
நடைபெற்ற வணிகம் வரம்புக்கு உட்பட்டதாக இருந்தது.
இரும்பு யுகம் தோன்றி நிலைபெற்ற பின் வணிகம்
செழித்தது. அதன் அளவும் அதிகரித்தது.
அதுவரை இந்திய சமூகத்தில் வணிகத்தை மேற்கொண்டு
இருந்தவர்கள் யார்? க்ஷத்திரியர்கள்தான் வணிகத்தை
மேற்கொண்டு இருந்தனர். ஆம், போர்த்தொழில் பயின்ற
க்ஷத்திரியர்கள்தான் வணிகத்தையும் மேற்கொண்டிருந்தனர்.
இரும்பு யுகத்தின் பின்னர் வணிகம் செழித்து வளர்ந்து
பெரும் அளவுள்ளதாக மாறிய நிலையில், முன்பு போல
க்ஷத்திரியர்களால் மொத்த சமூகத்தின் வணிகத்தையும்
மேற்கொள்ள இயலவில்லை. தங்களின் வேலைப்பளுவை
இறக்கி வைக்க விரும்பினர்.
எனவே அன்றைய சமூகத்தில் க்ஷத்திரியர்களுக்குக் கீழ்நிலையில் இருந்தவர்களில் சற்று அறிவுநிலையில்
மேம்பட்டவர்களைத் தெரிந்தெடுத்து வணிகத்தை
அவர்களிடம் ஒப்படைத்தனர் க்ஷத்திரியர்கள். இதன் விளைவாக
வைசியர்கள் என்ற புதிய சமூகப் பிரிவு (அல்லது வர்ணம்)
உண்டானது. இதைப் புரிந்து கொள்ள அக்கால வணிகம்
பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அக்கால வணிகம் என்பது இன்றைய ஆன்லைன்
வணிகத்தைப் போல் எளிமையானது அல்ல.
ஒரு ஊரில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இன்னொரு
ஊருக்கு வியாபாரத்திற்காகச் செல்ல வேண்டும்.
பொருட்களைச் சுமந்து செல்ல நூற்றுக் கணக்கில்
பணியாளர்களை அழைத்துக் கொண்டுசெல்ல வேண்டும்.
வழி நெடுகிலும் திருடர்கள், வழிப்பறிக் கள்வர்கள்
ஆகியோரிடம் இருந்து பொருட்களையும் உயிர்களையும்
பாதுகாக்க வேண்டும். இதற்கு சண்டையிடத் தெரிந்திருக்க
வேண்டும். க்ஷத்திரியர்களைப் போல தொழில்முறையிலான
(professional) போர்வீரர்களாக இல்லாவிடினும் வழிப்பறிக்
கள்வர்களை எதிர்த்து முறியடிக்கும் அளவுக்கும்
வழியில் குறுக்கிடும் மிருகங்களைக் கொன்று அப்புறப்
படுத்தும் அளவுக்கும் தெரிந்திருக்க வேண்டும். கூடவே வணிக
நுட்பங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
ஆக இவ்வாறு இந்திய சமூகத்தில் வணிகர்கள் என்று
பொருள்கொள்ளத் தக்க (mercantile community) வைசியர்கள்
என்ற புதிய சமூகப் பிரிவு உண்டானது. அதுவரை
இந்திய சமூகம் மூன்று சமூகப் பிரிவுகளை அல்லது
வர்ணங்களை மட்டுமே கொண்டிருந்தது. தற்போது
நான்காவது சமூகப் பிரிவு உண்டாகி விட்டது.
வைசியர்களாக ஆவதற்கு முன்பு அவர்கள் வேளாண்மை
கால்நடை வளர்ப்பு முதலிய பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
வணிகத்திற்கு மாறிய பின்னர் அவர்கள் அதுவரை பார்த்து
வந்த வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு வேலைகள்
சூத்திரர்களிடம் ஒப்படைக்கப் பட்டண.
ஆக இந்திய சமூகம் தற்போது, (அதாவது இரும்பு யுகம்
தோன்றி நிலைபேறு அடைந்ததற்குப் பிறகு) நான்கு
வர்ணங்களைக் கொண்டதாக ஆனது. புரோகிதர்,
க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு
சமூகப் பிரிவுகளைக் கொண்டதாக ஆகிவிட்டது
இந்திய சமூகம்.
இந்த நான்கு சமூகப் பிரிவுகளும் ஒரே காலக்கட்டத்தில்
உண்டாகவில்லை. சமூக வளர்ச்சி என்பதோ
அல்லது சமூக மாற்றம் என்பதோ சுவிட்ச்சைப்
போட்டவுடன் விளக்கு எரிவது போன்றதல்ல.
அது ஒரு நேர்கோட்டுப் பாதை அல்ல.
இந்த நான்கு சமூகப் பிரிவுகளும் யார் எவராலும்
வெளியில் இருந்து திணிக்கப் பட்டதல்ல. இவை
கடவுளால் உருவாக்கப்பட்டவை அல்ல.
ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில், சமூகத்தின் தேவையில்
இருந்து வைசியர் என்ற வர்ணம் பிறந்தது. இதை
யார் எவராலும் செயற்கையாகத் தோற்றுவிக்க
முடியாது. வர்ணம் என்பதும் சாதி என்பதும் சமூகக்
கட்டுமானங்கள் (social structure). இவற்றை சமூகமே கட்டியது.
சமூகமே உருவாக்கியது. எந்த ஒன்றும் அது தோன்றுவதற்கு
உரிய சமூகத் தேவை இல்லாமல், சமூகச் சூழல் இல்லாமல்
தோன்ற முடியாது.
இரும்பு யுகமானது வைசியர்கள் என்ற சமூகப் பிரிவைத்
தோற்றுவித்தது என்று இங்கு நிரூபித்துள்ளேன்.
இரும்பு யுகமானது இந்திய சமூகத்தில் சாதியை,
சாதியத்தை எப்படித் தோற்றுவித்தது என்று அடுத்த
கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)
---------------------------------------------------------
பின்குறிப்பு:
நால்வகை வர்ணம் இந்தியாவில் ஆரம்பத்தில் இல்லை.
மூன்று வர்ணங்கள் மட்டுமே இருந்தன. வைசிய வர்ணம்
காலத்தால் பிந்திய வர்ணம். ஒரு சமூகத்தில் உபரி உண்டான
பிறகே வணிகத்திற்கான தேவை எழுகிறது. எனவே வைசிய
வர்க்கம் தோன்றுகிறது. ஒரு சமூகம் பற்றாக்குறைச்
சமூகமாக இருக்கும்வரை அங்கு வணிகத்திற்கான
தேவையே எழுவதில்லை. எனவே அப்போதெல்லாம் வைசிய
வர்க்கம் தோன்றவில்லை.
----------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக