தோழர் நடராசன் 90களின் பிற்பகுதியில் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இளைஞர்களில் முதன்மையானவர்.
செப்டம்பர் 01, 1987ல் தோழர்கள் தமிழரசன் உள்ளிட்ட ஐந்து தோழர்கள் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்டனர். அக்கொலைகளில் உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கும் வேலையை செய்தவர் ஜெய்சங்கர். வல்லம் முந்திரிகாடு மீட்பு போராட்டத்தில் தோழர்களோடு இருந்த ஜெய்சங்கர் பின்னாட்களில் உளவுத்துறையின் கையாளாக மாறி தோழர் தமிழரசனை காட்டிக்கொடுத்தார். அதன் பலனாக ஜெயசங்கருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தது உளவுத்துறை. பெண்ணாடம் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெய்சங்கரை கொல்ல வேண்டும் என்பது அன்றைய தமிழ்நாடு விடுதலைப் போராளிகளின் கனவாக இருந்தது. ஜெய்சங்கர் தன்னுடன் எப்போதும் துப்பாக்கியும் வைத்திருப்பார் அதனால் அவரை கொள்வது கடினமானதாகவே இருந்து.
தோழர் நடராசன் கையில் ஆண்டிமடம் காவல்நிலையத்தில் கைப்பற்றிய துப்பாக்கி இருந்தது. எதிரியின் கையாளை அவர்களின் ஆயுதத்தை கொண்டே கொல்ல வேண்டும் என முடிவெடுத்தார் தோழர் நடராசன். திட்டம் தயாரானது பெண்ணாடம் ராஜா திரையரங்கம் இருக்கும் சாலையில் வந்துகொண்டிருந்த ஜெயசங்கரை கொலை செய்ய தான் வைத்திருந்த ரிவால்வரை எடுத்து சுட்டார் நடராசன். ஆனால் துப்பாக்கியின் கோளாறு காரணமாக தோட்டா வெளியேறாமல் குழலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. எதிர்விசையால் துப்பாக்கி கையை மீறி பின்னோக்கி விழுந்தது. ஜெய்சங்கர் உஷாராகி விட சற்றும் தாமதிக்காமல் தான் வைத்திருந்த அரிவாளால் ஜெயசங்கரை வெட்டிக் கொன்றார். எதிரியின் கையாளை அவர்களின் ஆயுதம் கொண்டே கொல்லும் தோழரின் திட்டம் பலிக்கவில்லை என்றாலும் துரோகத்தை கருவருக்கும் அவரது எண்ணம் கைகூடியது.
ஆனால் எதிரியின் ஆயுதம் தோழரின் கைக்கு வந்ததெப்படி?
தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், தோழர் சுந்தரம் உள்ளிட்ட தோழர்களின் தலைமையில் வல்லம் பகுதி மக்களின் நீண்ட வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக வல்லம் முந்திரிக்காடு கூட்டுறவு சொசைட்டியாக அமைக்கப்பட்டது. மக்களிடம் முந்திரிக்காடு கிடைத்தும் அதன் பலன் மக்களுக்கு சேரவில்லை. மக்களுக்கு சேர வேண்டிய பலன்களை இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட இளவரசனும் அவரது குடும்பத்தினரும் நண்பர்களுமே அனுபவித்து வந்தனர். காட்டினை மீட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு சுந்தரம் தலைமையிலான தோழர்கள் வல்லத்தில் பிரச்சாரம் செய்தனர். இதனை அறிந்த இளவரசன் தோழர்களை கொல்ல திட்டமிட்டார். ஒருநாள் வல்லத்தில் தர்மராஜ் வீட்டில் தோழர்கள் இருப்பதை அறிந்த இளவரசன் ஆட்கள் தோழர்களை தேடி அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் வந்த நேரம் தோழர்கள் அங்கு இல்லாமல் போகவே தர்மராஜை அழைத்து சென்றுவிட்டனர். தர்மராஜை எவ்வளவு விசாரித்தும் தோழர்கள் பற்றிய விவரம் தெரியாததால் அவரை கொன்றுவிட்டனர். தர்மராஜின் அம்மா தோழர் ராமசாமியிடம் வந்து நடந்ததை கூறினார். இளவரசன் ஆட்களை அழைத்து "இன்று மாலைக்குள் தர்மராஜ் வரவில்லை என்றால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்" என மிரட்டியுள்ளார். தர்மராஜ் இருந்தால் தானே வர எனவே ராமசாமியையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர் இளவரசன் குழுவினர். நயவஞ்சகமாக பேசி ராமசாமியை வல்லம் அழைத்து சென்று கொலை செய்தும் விடுகின்றனர். பின்னர் ராமசாமியுடன் இருந்த தோழர்கள் இளவரசனின் ஆட்களை கொல்ல, இளவரசனின் ஆட்கள் இராமசாமியின் ஆட்களைக் கொல்ல என தொடர்ந்து அரியலூர் மாவட்ட பகுதிகள் முழுவதும் ரத்தக் களறி ஆக மாறியது. குறுகிய காலத்தில் 6 கொலைகள் மக்களின் மனமெங்கும் குழப்பமும் மிரட்சியும் நிறைந்தது.
இந்த நிலை தொடரக்கூடாது என முடிவு செய்தனர் தோழர்கள். சுந்தரம் தலைமையில் நடத்தப்பட்ட ரகசிய கூட்டத்தில் இந்த பிரச்சனைகளின் ஆணிவேரான காவல்துறையை எதிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்தின் அடிப்படையில் ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்டு அங்கிருந்து ஆயுதங்களும் தொலைத்தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தில் தோழர் நடராசனின் வீரமும் உறுதியும் வெளிப்பட்டது.
20 ஆண்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை முடிந்து 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு விடுதலைப் படை தோழர்கள் 11 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தோழர் நடராசன் உள்ளிட்ட 10 தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 20 மாதங்களாக சிறையில் இருந்த தோழருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
தமிழக உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக அதிகார வர்க்கத்தை அசைத்து பார்க்க 'வாளெடுத்து நின்ற' தோழர் நடராசனை நாம் காணவுமில்லை. கையோடு அழைத்து வரவுமில்லை. பிணமாக தான் திரும்பி வருகிறான் நெய்வேலிக்கு....
பதிவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக