புதன், 20 அக்டோபர், 2021

 கடவுள் வருகிறார்!

--------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------
கட்டு கட கட்டு கட கட்டு
கட்டு கட கட்டு கட கட்டு
கட்டு கட கட்டு கட கட்டு
இன்று என் அதிகாலைத் தூக்கத்தைக் கலைத்தது
இந்த அழைப்பு சமிக்ஞை. தூக்கக் கலக்கத்துடனே
எழுந்து பதில் சொன்னேன்; அதாவது
"கட்டு கட்டு கட" என்றேன். சொல்ல வந்ததைச்
சொல்லுங்கள் என்று இதற்கு அர்த்தம்.
இவையெல்லாம் மார்ஸ் சங்கேதக் குறியீடுகள்.
சாமுவேல் மார்ஸ் (Samuel Morse 1791-1872) என்னும்
அமெரிக்க விஞ்ஞானியின் கண்டுபிடிப்பே இவை.
கிறிஸ்டோபர் நோலனின் இன்டெர் ஸ்டெல்லார் படம்
பார்த்தீர்களா? அதில் கதாநாயகனுக்கு வரும் செய்தி
மார்ஸ் சங்கேதக் குறியீட்டில்தான் வரும்.

கட கட்டு என்றால் a; கட்டு கட கட கட என்றால் b;
கட்டு கட கட்டு கட என்றால் c. இப்படிச் செல்லும்
மார்ஸ் உருவாக்கிய குறியீடு.
செய்தி வந்து விழுந்தது. அது இதுதான்:
"கட்டு கட்டு கட, (G)
கட்டு கட்டு கட்டு, (o)
கட்டு கட கட (d) ///
கட கட்டு, (a)
கட கட்டு கட,(r)
கட கட்டு கட, (r)
கட கட, (i)
கட கட கட கட்டு, (v)
கட, (e)
கடகடகட, (s) ///
கட்டு, (t)
கட்டு கட்டு கட்டு,(o)
கட்டு கட கட, (d)
கட கட்டு,(a)
கட்டு கட கட்டு கட்டு".(y)///
அதை வாசித்துப் பார்த்ததில், God arrives today என்று இருந்தது.
"கடவுள் இன்று வருகிறார்" என்று பொருள்.
மேல் விவரம் அறிய முயன்று தோற்றேன். ஏனெனில்
இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
கடவுள் வருகிறார் என்பதை என்னால் நம்ப
முடியவில்லை. காரணம் கடவுள் இறந்து விட்டார்
என்று நீட்சே சொல்லி இருந்ததுதான். யார் இந்த நீட்சே?
ஜெர்மன் தத்துவஞானி; காரல் மார்க்சின் சமகாலத்தவர்.
நீட்சேவை மறுப்பதற்குரிய வலுவான தர்க்கம் எதுவும்
என் கைவசம் இல்லை. எனவே நீட்சே சொன்னபடி
கடவுள் இறந்துதான் போயிருக்க வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்தேன். அப்படியானால் இறந்து போன
கடவுள் எப்படி இன்று வர முடியும்?
இதற்கு ஒரு anti thesisஐ என் சிந்தனை வழங்கியது.
ஏன் இயேசுநாதரைப்போல கடவுளும்
உயிர்த்து எழுந்திருக்கக் கூடாது என்று கேட்டது.
தர்க்கம் சரிதான். ஆக நீட்சே சொன்னபடி கடவுள் இறந்து போனதும்
உண்மைதான். பின்னர் மறுநாளிலோ அல்லது மூன்றாவது நாளிலோ அவர் உயிர்த்தெழுந்ததும் உண்மைதான்.ஷ்ராடிங்கரின் பூனை போல
நீட்சே, எதிர் நீட்சே இரண்டும் ஒரே நேரத்தில் உண்மைதான்.

கடவுள் உயிரோடு இருப்பதற்கான நிகழ்தகவை அவசரம் அவசரமாகக் கணக்கிட்டேன். எப்படியோ ஒரு பூஜ்யமற்ற நிகழ்தகவு (non zero probability)
கிடைத்தது. இது கடவுள் வருவார் என்பதை உறுதி செய்தது.
போர்க்கால அடிப்படையில் கடவுளை வரவேற்க
ஆயத்தமானேன்.கடவுள் வருகிறார் என்றால் அவரை
ஒரு முப்பரிமாண யூக்ளிட்டின் வெளியில் (Euclidean space)
எதிர்பார்ப்பது மக்களின் இயல்பு.

சார்பியல் கோட்பாட்டை அறிந்தவர்கள் ஒரு மின்கோவ்ஸ்கி வெளியில்
(Minkowski space) கடவுளை எதிர்பார்ப்பர். மூன்று
பரிமாணங்களுடன் காலமும் சேர்ந்த நாற்பரிமாண
வெளியே மின்கோவ்ஸ்கி வெளி.
இழைக்கொள்கையாளர்கள் (string theorists)
பத்துப் பரிமாணங்கள் கொண்ட ஒரு கலாபி யாவ்
வெளியில் (Calabi Yau space) கடவுளை எதிர்பார்க்கக் கூடும்.

இந்த வெளிகள் எல்லாம் கடவுளுக்குப் பிடிக்குமா
என்று தெரியவில்லை. ஒருவேளை கடவுளுக்குப்
பிடிக்காமல் போய், அவர் வராமல் போய்விட்டால்
என்ன செய்வது என்று சிந்தித்தேன். அப்போது காற்று
வேகமாக அடிக்கவே, சுவரில் இருந்த காலண்டரின் தாள்கள்
படபடத்து, காலண்டரில் தெரிந்த டேவிட் ஹில்பெர்ட்
(David Hilbert 1862-1943) என்னைப் பார்த்துச் சிரித்தார்.

அந்த நொடியில் என் மூளை பளிச்சிட நான் ஹில்பெர்ட்
வெளியை (Hilbert space) தேர்ந்தெடுத்தேன். வரம்புள்ள
பரிமாணங்கள் (finite dimensions) கொண்ட வெளி மற்றும்
வரம்பற்ற பரிமாணங்கள் (infinite dimensions)
கொண்ட வெளி என்று இரண்டு விதமான வெளிகளை
ஹில்பெர்ட் உருவாக்கி வைத்திருந்தார்.

வரம்புள்ள வெளியைக் கையாள்வது எளிது. மெய்யெண்களும்
சிக்கலெண்களும் (Real and Complex numbers) அவற்றின்
Dot productம் தெரிந்தால் போதும்.

வரம்பற்ற வெளியைக் கையாள்வது சற்றுக் கடினம்தான்
என்றாலும் கொஞ்சமேனும் கணிதத்தின் ஆழத்திற்குச்
சென்று திரும்பி இருந்தால் வரம்பற்ற வெளி
வசப்படாமல் போகாது. இந்த வெளியில், கடைசிக்கும் கடைசியில்
"மாடுலஸ் சை ஸ்கொயர்ட் dx"ஐ minus infinity to plus infinity
இன்டெக்ரேட் செய்தால் நம்மை வியப்பில் மூழ்கடிக்கும் விடை
கிடைக்கும். அதாவது கிடைக்கும் விடை finiteஆக இருக்கும்.

வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கு யூக்ளிட்டின்
முப்பரிமாண வெளி விரிந்து கிடந்தது. அந்த வெளியில் அமர்ந்தேன்.
அதை ஹில்பெர்ட்டின் வரம்பற்ற வெளியாகத் தயார்
செய்து கொண்டு, அதில் இருந்தபடியே கடவுளின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

இந்த வெளியின் சௌகரியம் என்னவெனில்,
கடவுள் எந்த வழியில் வந்தாலும் என் பார்வையில்
இருந்து தப்பிக்க முடியாது என்பது ஒன்று.
கடவுள் இந்த வெளிக்குள் நுழைந்தபின் எங்கு தன்னை
மறைத்துக் கொண்டாலும் அவரைக் கண்டுபிடித்துவிட
முடியும் என்பது இன்னொன்று.

இதற்கிடையில் என் வீட்டு மொட்டை மாடிக்கு கடவுள்
வருகிறார் என்ற செய்தி தெருவெங்கும் பரவி விட்டது.
கூட்டம் கூடி விட்டது. பட்டுப் புடவைகளும் ராம்ராஜ்
காட்டன் வேட்டிகளும் காற்றில் உரசியதால் உண்டான ஓசை
சூழலின் மொத்த ஓசையில் 30 டெசிபெல்லை அதிகரித்து விட்டது.

ஆளாளுக்கு மொட்டை மாடியின் தரையைக் கூட்டிப்
பெருக்கியும் தண்ணீர் தெளித்தும், சந்தனம் பன்னீர்
அத்தரால் வளிமண்டலத்தில் நறுமணம் பரப்பியும்,
மாவிலை தோரணம் கட்டியும், தரையெங்கும் ரோஜா
இதழ்களைச் சிந்தியும் சூழலை ரம்மியம் ஆக்கினர்.

வீட்டு வாசலில் மங்கல இசை ஒலித்தது. காருக்குறிச்சி
அருணாசலமே உயிர் பெற்று வந்து இசைப்பதைப் போல
சிங்கார வேலனே தேவா பாடல்
நாதஸ்வரத்தில் இருந்து ததும்பி வழிந்தது.

எங்கள் அடுக்கக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்
proactiveஆகச் செயல்பட்டு தலைசிறந்த கர்நாடக
இசைப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து பாடச் செய்திருந்தார்.
அந்தப் பாடகர் தியாகையரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை
வரிசையாகப் பாட, சூழல் ஒருவித தெய்வீகத் தன்மை
அடைந்திருந்தது.

"எந்தரோ மஹானு பாவுலு
அந்தரிகி வந்தனமு

சந்துரு வலூனி
அந்த சந்தமுனு ஹிருதயா
அரவிந்தமு ந ஜூச்சி
பிரம்மா னந்த..........."

செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் கடவுளை ஈர்க்கக்கூடிய
சூழலை உருவாக்கி இருந்தன. மிகுந்த நிறைவுடனும் நம்பிக்கையுடனும்
கடவுள் வந்து விடுவார் என்று நாங்கள் காத்திருந்தோம். நேரம் ஆகிக்
கொண்டே இருந்தது. கடவுள் வரக் காணோம்.

பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை முடித்து விட்டு, "நிதி சால சுகமா"வில்
சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டார் பாடகர்.
எங்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. மொட்டை மாடிக்கே
சாப்பாட்டைத் தருவித்து உட்கொண்டேன். தொடர்ந்து சலிப்பே
இல்லாமல் கடவுளுக்காகக் காத்திருந்தேன்.
இங்கு சென்னையில் நான் காத்திருப்பது போலவே, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் காந்தி சிலை அருகில் இசக்கிமுத்து அண்ணாச்சி
காத்திருந்தார். அவருக்கு சாதாரணமான ஒரு யூக்ளிட்டின் வெளியைத்தான்
(Euclidean space) ஏற்பாடு செய்திருந்தேன். அடிக்கொருதரம் என்னிடம்
செல்பேசியில் கடவுள் வந்து விட்டாரா என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.
கடவுளை வரக் காணோம். மாலை, இரவு, நள்ளிரவு என்று நேரம்
பறந்து கொண்டிருந்தது. இசக்கிமுத்து அண்ணாச்சி
பொறுமையை முற்றிலுமாக இழந்து கொண்டிருந்தார்.
இதோ வந்து விடுவார் அதோ வந்து விடுவார் என்று
காத்திருந்தோர் அனைவரும் படுத்து உறங்கி
விட்டனர். நித்திராதேவியை வதம் செய்துவிட்டு நான்
கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். இறுதியில் பொழுதும்
விடிந்து விட்டது.
என்றாலும் கடவுள் வரவில்லை. அப்படி ஒருவர்
இருந்தால்தானே வருவதற்கு!
********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக