அகலிகை பற்றி கம்பன்!
------------------------------------
புக்கு, அவளோடும், காமப் புது
மண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும்
உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும்
'தக்கது அன்று' என்ன ஓராள்
தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல்
முனிவனும் கடுகி வந்தான்.
(கம்ப ராமாயணம், அகலிகைப் படலம்)
அகலிகை பற்றி கம்பன் கூறுவது:
அ) ஒக்க உண்டு இருத்தலோடும் = ஒன்றாகச்
சேர்ந்து இன்பம் துய்த்தலோடும்.
அதாவது இந்திரனுடன் ஒன்றாகச் சேர்ந்து
இன்பம் துய்த்தாள்.
ஒக்க = ஒன்றாக.,
நெல்லை மாவட்டத்தில்
ஒக்க விழுந்தால் வெட்கம் இல்லை என்று
பழமொழியே உண்டு.
ஆ) உணர்ந்தனள் = தான் இன்பம் நுகர்ந்து
அந்நியனாகிய இந்திரனிடம்தான் என்று
அகலிகை உணர்ந்து கொண்டாள்.
இ) உணர்ந்த பின்னும் தக்கது அன்று என்ன
ஓராள் = அப்படி உணர்ந்த பின்னும் இது
தகாத செயல் என்று ஓர்மை கொள்ளவில்லை.
ஒராள் = ஓரிதழ், ஓர்மை கொள்ளவில்லை.
ஈ) தாழ்ந்தனள் = எனவே அகலிகை தாழ்ந்தனள்.
கம்பன் எழுதியதற்கு மாறாக நீங்கள்
மேற்கோள் காட்டிய விளக்கம்
அமைந்துள்ளது. அது போலியுரை.
கம்பனைப் பற்றிப் படிக்காமலேயே, கம்பன்
அதைச் சொன்னான் இதைச் சொன்னான்
என்று பொய்யுரைப்பது தகாது.
மேற்கூறிய பாடலை என்னுடைய 18ஆவது
வயதில், பட்டாபி படிப்பு முதலாண்டின்போது
அறிந்தேன்; புரிந்தேன். தெளிந்தேன். . . பட்டப்
இந்தப் பாடலின் புரிதலில் மாற்றம் நிகழ
எத்தேவையும் இல்லை. ஏன் இந்த
விதண்டாவாதம்? கம்பனும் வான்மீகனும்
அகலிகை குறித்து ஒரே பார்வையையே
கொண்டிருந்தனர். அப்படிக்
கொண்டிருந்தமையால் கம்பன்
எத்தவறும் இழைக்கவில்லை.
.
உணர்ந்தனள் என்பதற்கு ஒரு பொருள்தான்!
--------------------------------------------------------
காமநுகர்வு நிறைவுற்று விட்டது.
தன் கணவன் அல்லாத ஒருவனிடம்தான்
தான் இன்பம் நுகர்ந்துள்ளதாக
அகலிகை உணர்கிறாள்.
உணர்ந்தனள் என்பதன் பொருள்
ஐயம்திரிபற இதுதான். உங்களுக்குத்
தெரிந்த தமிழாசிரியர் இருப்பின்
அவரிடம் கேட்டு நான் உரைத்த பொருள்.
சரியா என்று அறியலாம்.
உணர்ந்தனள் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்
இந்திரன் எப்படி வந்தான் என்ற கேட்பது
நியாயம் அன்று. எதை உணர்ந்தனள் அகலிகை?
குவாண்டம் கொள்கையின் சரித்தன்மையை
உணர்ந்தாளா? அல்லது அக்கொள்கை
சரியில்லை என்று உணர்ந்தாளா?
அவள் உணர்ந்தது இதுதான்!
இது மட்டும்தான்!
நிகழ்ந்த உறவு தன் கணவனுடன் அல்ல
என்று அகலிகை உணர்ந்தனள்.
பின் எவருடன்? இந்திரனுடன்.
அதாவது வேற்றாளுடன். .
18 வயதில் ஒரு தமிழ் மாணவனால்
ஒரு தமிழ்ப்பாடலின் பொருளைப்
புரிந்து கொள்ள முடியும். நான் மட்டுமல்ல
எத்தனையோ பேர் அவ்வாறு 18 வயதில்
புரிந்துள்ளனர்.
நீங்கள் ஐயுறத் தக்கது என்று கூறுவது
மிகவும் பண்பற்ற கூற்று.
உங்களுக்கு ஒரு விஷயம் 38 வயதில்தான்
புரிந்தது என்பதற்காக, எனக்கும்
அதே 38 வயதில்தான் புரிந்திருக்க
வேண்டும் என்று நீங்கள் கூறினால்
அது எப்படிச் சரியாகும்?
கம்பன் என்ன கூறியுள்ளான் என்பதைச்
சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதில் தவறிழைத்தால்,
"ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்"
என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காக நேரிடும்.
இங்கு அகலிகை உணர்ந்தது என்ன?
நிகழ்ந்து முடிந்த காம நுகர்வு தன்
கணவனுடன் அல்ல என்ற உண்மையைத்தான்.
உறவு கொண்டது வேற்றாளுடன் என்ற
உண்மையைத்தான். வேற்றாளுடன் உறவு
என்பது அக்காலத்திய விழுமியங்களின்படி,
ஒழுகலாறுகளின்படி பெருங்குற்றம் ஆகும்.
யார் எவராலும் திசை திருப்ப முடியாதபடிக்கு
கம்பன் கலிகையின் செயல் குறித்து எழுதி
இருக்கிறான். அதைத் திரிப்பது சரியன்று.
அகலிகைப் படலத்தை முழுவதுமாகப்
படித்துப் பார்த்து உண்மை அறியுமாறு
வேண்டுகிறேன்.
-----------------------------------------------------------
இந்திரன் மாறுவேடத்தில் அல்ல தன் சொந்த
உருவத்தில்தான் அகலிகையைக் கூடினான்!
-------------------------------------------------------------------
தையலாள் நயன வேலும்,
மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி
உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி,
மா முனிக்கு அற்றம் செய்து,
பொய் இலா உள்ளத்தான்
தன் உருவமே கொண்டு புக்கான்.
(கம்ப ராமாயணம், பால காண்டம்,
அகலிகைப் படலம்)
பொய்யிலா உள்ளத்தான் தன்
உருவமே கொண்டு புக்கான்
என்ற ஈற்றடியின் பொருள் உணர்க.
இதன் பொருள்: அகலிகையிடம்
பொய் கூறி ஏமாற்ற விரும்பாமல், தன்
உண்மையான உருவத்துடனே இந்திரன்
அகலிகையைக் கூடினான்.
எனவே தண்னுடன் கூடுவது இந்திரனே
என்று உணர்ந்தே அகலிகை இந்திரனைக்
கூடினாள் என்கிறார் கம்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக