புதன், 9 ஜனவரி, 2019

அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துக்கள்!
அறிவியல் மாநாட்டிலேயே அறிவியலுக்கு
எதிராகப் பேசும் போலி விஞ்ஞானிகள்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
2014ல் மும்பையில் நடைபெற்ற
தேசிய அறிவியல் மாநாட்டில் (102ஆவது மாநாடு)
பிள்ளையாருக்கு யானைத் தலை இருப்பதானது
அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி
இருந்ததற்கான ஆதாரம் என்று பேசி
அறிவியலை இழிவு படுத்தும் போக்கைத்
தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தொடர்ந்து மத்திய அமைச்சர்களும், பாஜக
அரசியல்வாதிகளும் அறிவியலுக்கு எதிரான
பிற்போக்குக் கருத்துக்களைப்  பரப்பி வந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
ஹெய்சன் பெர்க் என்ற ஜெர்மன் இயற்பியலாளரின்
உறுதியின்மைக்  கோட்பாடு (uncertainty principle)
இந்தியாவின் வேதங்களிலேயே இருப்பதாகக்
கூறி தம் பங்குக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
2014ல் டில்லியில் இந்தி விழாவில் (Hindi Diwas) பேசிய

மோடி கூறியதை அறிவியல் உலகம்
பொருட்படுத்தவில்லை. ஏனெனில் மோடி ஒரு
அறிவியலறிஞரோ அறிவியல் கற்றவரோ அல்லர்.
ஒரு சராசரி மேடைப் பேச்சாளரான மோடி, தமது
குறைபாடுடன் கூடிய அறிவியல் புரிதலில் இருந்து
அப்படித்தான் பேச இயலும் என்று அறிவியல்
உலகம் அறியும்.

ஆனால் ராஜ்நாத்சிங் பேசியதை அவ்வாறு
எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில்
ராஜ்நாத்சிங் இயற்பியலில் M.Sc படித்தவர்;
இயற்பியல் பேராசிரியராக இருந்தவர்.
ஹெய்சன் பெர்க்கின் உறுதியின்மைக்
கோட்பாட்டுக்கும் வேதங்களுக்கும் என்ன
சம்பந்தம்? எப்படி அவர் இரண்டுக்கும் முடிச்சுப்
போடுகிறார்?

ராஜ்நாத்சிங் பேசுகையில் ஹெய்சன் பெர்க் என்ற
ஜெர்மன் இயற்பியல் அறிஞரைக் குறிப்பிட்டார்.
ஹெய்சன் பெர்க் என்ற பெயரையே கேள்விப்
பட்டிராத புதுடில்லி ஊடகவியலாளர்கள் அமெரிக்க
ஜனாதிபதி ஐசனோவரைத்தான் அமைச்சர்
குறிப்பிடுகிறார் என்று தவறாகப் புரிந்து கொண்டு,
ஐசனோவரின் உறுதியின்மைக் கோட்பாடு
(Eisenhower's uncertainty principle) என்று எழுதி விட்டனர்.
ஊடகவியலாளர்களின் அறிவியல் அறிவு அந்த
லட்சணத்தில் இருந்தது.

தமது கூற்றுக்கு ஆதாரமாக இயற்பியல் அறிஞர்
பிரிஜாப் காப்ரா (FRITJOF CAPRA) 1975ல் எழுதிய
Tao of physics என்ற நூலை ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார்.
( Tao of physics = இயற்பியலின் பாதை)

ராஜ்நாத்சிங் கூறுவதை ஏற்க இயலாது. எனவே
அவர் கூறியதை மறுத்து உண்மையை நிலைநாட்ட
வேண்டும். ஆனால் ஹெய்சன் பெர்க் பற்றியும்
உறுதியின்மைக் கோட்பாடு பற்றியும்
பொதுமக்கள் அறிந்திராத நிலையில்
ராஜ்நாத்சிங்கின் கருத்து தவறானது என்று
அம்பலப்படுத்த  இயலவில்லை.

எனினும், 2014ல் சென்னையில் நடந்த ஒரு
கூட்டத்தில், திரளான ஊடகவியலாளர்கள் பங்கேற்ற
ஒரு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் கூறியது தவறு
என்று நியூட்டன் அறிவியல் மன்றம் மெய்ப்பித்தது.

அக்கூட்டத்தில் பங்கேற்ற திக தலைவர்
ஆசிரியர் வீரமணி அவர்கள்
இதுகுறித்து என்னிடம் மேலும் விளக்கம்
கேட்டறிந்தார். எனினும் என்னுடைய பேச்சு
அக்கூட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்களிடம்
எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு
நான் பொறுப்பல்ல. ஊடகவியலாளர்களில்
99.999999 சதம் அறிவியல் பின்னணி இல்லாதவர்கள்.

2014ல் நடந்த 102ஆவதுமாநாடு (மும்பை மாநாடு)
முதல் அண்மையில் ஜலந்தரில்  நடந்து முடிந்த
106ஆவது மாநாடு வரை, அறிவியல் மாநாடுகளில்
தமது அறியாமையை வெளிப்படுத்தி,
அறிவியலையே கேலிக்கூத்தாக்கி வரும்
போக்கு accelerate ஆகிக்கொண்டு இருக்கிறது.
இதுவரை அமைச்சர்களும் அரசியல்வாதிகளும்
மட்டுமே அறிவியலுக்கு எதிராகப்
பேசிக்கொண்டிருந்த நிலை மேலும் வளர்ந்து
சில விஞ்ஞானிகளே அவ்வாறு பேசும் நிலை
ஏற்பட்டுள்ளது.

ஜலந்தர் மாநாட்டில் தமிழக விஞ்ஞானி டாக்டர்
கண்ணன் ஜெகதாள கிருஷ்ணன் என்பவர்
ஐன்ஸ்டின், நியூட்டன் ஆகியோரின் கோட்பாடுகள்
தவறு என்று .பேசியுள்ளார். எப்படித் தவறாகும்
என்று அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நியூட்டன் ஆயிரம் கோட்பாடுகளைக் கூறியுள்ளார்.
அவற்றில் எந்தக் கோட்பாடு தவறு என்று அவர்
எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
நியூட்டனின் எந்தக் கோட்பாடு தவறு என்று
அவரிடம் கேள்வி கேட்டுப்  பதிலைப் பெற்று
மக்களுக்கு அறிவிக்கக் கடமைப்பட்டுள்ள
ஊடகவியலாளர்கள் அதைச் செய்யவில்லை.
அதற்கான அறிவு அவர்களிடம் இல்லை.


இந்தியாவில் வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி
இருந்ததா? இருந்தது என்பதே உண்மை. உலகிற்கே
பிளாஸ்டிக் சர்ஜரியைக் கற்றுக் கொடுத்தது
இந்தியாவே. இந்திய ஞானி சுஸ்ருதரே பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை. ஆனால் மனிதத் தலைக்குப் பதில்
யானைத் தலையைப் பொருத்தியது இந்தியா
என்று கூறும்போது, இது என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
மெய்யாகவே வேத காலத்தில் இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி
இருந்தது என்ற உண்மைகூட கேலிக்கூத்தாகக்
கருதப் படுவதுதான்.   

இந்தியா ஒரு அறிவியல் தற்குறித் தேசம்.
(India is a scientifically illiterate country). எனவே இங்கு
அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள்
மகுடம் சூட்டப் படுவதில் வியப்பில்லை.
அறிவியல் வளர்ந்தால் ஒழிய இத்தகைய
இழிவில் இருந்து விடுபட இயலாது.
***************************************************



         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக