புதன், 23 ஜனவரி, 2019

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
முன்குறிப்பு: மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
என்று நீட்டி முழக்குவதற்குப் பதிலாக EVM என்று
இனி இக்கட்டுரை முழுவதும்  சொல்லப்படும்.
-------------------------------------------------------------------------------------
1) இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982ல்
முதன் முதலாக EVM அறிமுகப் படுத்தப்பட்டது.
பரீட்சார்த்த முறையில் கேரள மாநிலம் வடக்கு பரவூர்
தொகுதியின் சில வாக்குச் சாவடிகளில் EVMகள்
மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

2) தேர்தலில் EVMகளைக் கொண்டு வந்தது காங்கிரசின்
மகத்தான சாதனை ஆகும். காங்கிரஸ் கட்சியானது
அறிவியலுக்குச் செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று.

3) 1999ல் சிறிய மாநிலமான கோவாவில் தேர்தல்
முழுவதுமே EVM மூலமாக நடத்தப்பட்டது.

4) நாடு முழுவதும் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்
முழுவதுமாக EVM மூலமாக நடத்தப் பட்டது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் EVM மூலம்
நடத்தப்பட்ட முதல் தேர்தல் இதுதான்.

5) 2004 தேர்தல் EVM மூலமே நடக்கும் என்ற முடிவை
தேர்தல் ஆணையம் எடுத்தபோது பிரதமராக
இருந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

6) EVM மூலமாக நடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ்
வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர்
ஆனார்.

7) அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலும் ,
2014 நாடாளுமன்றத் தேர்தலும் EVM  மூலமாகவே
நடந்தன. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்
காங்கிரஸ் வெற்றி பெற்று, டாக்டர் மன்மோகன் சிங்
மீண்டும் பிரதமர் ஆனார். 2014ல் நடந்த தேர்தலில்
பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனார்.

8) ஆக,  தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத்
தேர்தல்கள் EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன.
இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து
மாநில சட்டமன்றத் தேர்தல்களும், பல்வேறு இடைத்தேர்தல்களும் EVM மூலமாகவே
நடைபெற்று உள்ளன. இவ்வாறு EVM இந்தியத்
தேர்தல்களில் நிலைபேறு உடையதாக ஆகிவிட்டது.

9) டாக்டர் சுப்பிரமணியம் சாமி EVM குறித்து பல்வேறு
சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடுத்தார்.வாக்காளர்கள் தாங்கள் என்ன
சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை
அறிந்திட ஏதேனும் ஒரு நிரூபணம்  தரப்பட
வேண்டும் என்றும் EVMகளில் அத்தகைய நிரூபணம்
இல்லை என்றும் டாக்டர் சுவாமி டில்லி உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது வழக்கு
தள்ளுபடியானது.

10) இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுவாமி
வழக்குத் தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் மனுதாரர்
கூறியவாறு ஒரு நிரூபணத்தை வழங்க வேண்டும்
என்று தீர்ப்பளித்தது. பிரசித்தி பெற்ற இந்தத்
தீர்ப்பை வழங்கியவர் அன்றைய உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள்.

11) இத்தீர்ப்பின் விளைவாக VVPAT எனப்படும்
Voter Verifiable Paper Audit Trail EVMகளில் பொருத்தப்
பட்டது. வாக்களித்த பின்னர் எந்தச் சின்னத்துக்கு
வாக்களித்தோம் என்று வாக்காளர் சரி பார்க்கும்
வசதி EVMகளில் ஏற்படுத்தப் பட்டது.

12) வாக்காளர்களின் இந்த உரிமையைப் பெற்றுத்
தந்தவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி என்பது
வரலாறு.

13) பரீட்சார்த்த முறையில் முதன் முதலாக நாகாலாந்து
மாநிலத்தில் உள்ள நோக்சென் (Noksen) சட்டமன்றத்
தொகுதியில் செப்டம்பர் 2013ல் VVPAT பயன்படுத்தப்
பட்டது.

14) 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோடித்
திட்டம் என்ற பெயரில் 543 நாடாளுமன்றத்
தொகுதிகளில் 8 தொகுதிகளில் VVPAT அறிமுகப்
படுத்தப் பட்டது. அந்த எட்டில் மத்திய சென்னைத்
தொகுதியும் ஒன்று. இக்கட்டுரை ஆசிரியர்
மத்திய சென்னைத் தொகுதியைச் சேர்ந்தவர்
என்பதால், வாக்களித்த பின், வாக்களித்த சின்னத்திற்கே
வாக்கு பதிவாகி இருக்கிறதா என்று அதாவது
VVPAT சரியாக வேலை செய்கிறதா என்று
சரிபார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
 VVPAT அற்புதமாக வேலை செய்தது.    

15) நாட்டின் 543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்
பட்ட EVM மூலமாகவே வாக்குப் பதிவு நடக்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. எனவே
வரவிருக்கும் 2019 தேர்தலில் அநேகமாக
543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்பட்ட
EVM நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

15) மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றிக்
குறிப்பிடாவிட்டால் இந்தக் கட்டுரை முழுமை
அடையாது; மூளியாகவே இருக்கும். பாரத்
எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் பொறியாளராக
இருந்த சுஜாதா EVM உருவாக்கக் குழுவில்
இடம் பெற்று சாதனை புரிந்தவர் ஆவார். 1982ல்
நடந்த வடக்கு பரவூர் (கேரளம்) தேர்தலில்,
சுஜாதாவே நேரடியாக தொகுதிக்குச் சென்று
EVMஐ இயக்கிக் காட்டினார்.

16) இக்கட்டுரையின் அறிவியல் பகுதி நாளை
வெளியாகும். ..............தொடரும்...............
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு: VVPAT முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட
2013 செப்டம்பரிலேயே நியூட்டன் அறிவியல் மன்றம்
VVPAT குறித்து கூட்டங்கள் நடத்தியது.பிறர் நடத்திய
பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றும் விளக்கம்
அளித்தது. இது வரலாறு.
**************************************************  
  
        

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக