புதன், 23 ஜனவரி, 2019

ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமா? அல்லது அறிவா?
சுடும் உண்மைகள்!
----------------------------------------------------------------------------------------- 
ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமல்ல!
ஆங்கிலம்தான் அறிவு!
தமிழனைப் பொறுத்து இதுதான் 
யதார்த்தத்தில் உள்ள கள நிலவரம்!

உலக அளவில் நரம்பியல் விஞ்ஞானத் துறையில்
(neuroscience) பெரும் புகழ் பெற்ற மேதைகள் வெகு
சிலரே. அந்தச் சிலரில் ஒருவர் பேராசிரியர்
வி எஸ் ராமச்சந்திரன். தமிழரான இவர் அமெரிக்கப்
பல்கலையில் நரம்பணுவியல் பேராசிரியர்.

இவர் சென்னைக்கு வந்துள்ளார். அவரை அணுகி
அவரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தது
வராக மிகிரர் அறிவியல் மன்றம்.

கூட்டம் ஒரு அரங்கில் நடைபெற்றது. 200 பேர் நேரில்
வந்து பேராசிரியரின் பேச்சைக் கேட்டனர்.
அற்புதமான உரை. நிகழ்வு முழுவதும்
ஆங்கிலத்தில் இருந்தது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்ட
நிகழ்வுகளை யூடியூப் வீடியோவாக
வெளியிட்டுள்ளது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த
வராக மிகிரர் அறிவியல் மன்றம். வீடியோ
முழுவதும் ஆங்கிலத்தில்.

இந்தக் கூட்டமும் சரி, இந்த வீடியோவும் சரி
இரண்டுமே அறிவின் சேமிப்புகள். இவ்விரண்டும்
அறிவு ஆகும். இந்த அறிவு ஆங்கிலத்தில் மட்டுமே
இருக்கும்போது என்ன நடக்கிறது?
வெறும் மொழியாக மட்டும் இருந்த ஆங்கிலம்
அறிவாக மாறி விடுகிறது.

தமிழில் இது போன்ற அறிவு உண்டா? இல்லை!
சமகால அறிவியல் எதுவும் தமிழில் இல்லை.
தமிழனைப் பொறுத்த மட்டில் தமிழில் அறிவு
இல்லை. தமிழ் அறிவுக்கு இடம்  கொடுப்பதில்லை.

தமிழ் மட்டுமே தெரிந்த, ஆங்கிலம் தெரியாத
ஒரு தமிழனுக்கு இக்கூட்டத்தாலோ இந்த
வீடியோவாலோ பயன் எதுவும் இல்லை. 
இந்தச் சொற்பொழிவு தரும் அறிவை
தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு தமிழனால்
ஒருபோதும் பெற முடியாது.

இதன் விளைவு என்ன? அறிவைப் பெற வேண்டுமானால்
ஆங்கிலத்தைத் தேடி ஓட வேண்டி உள்ளது.
இதுதானே யதார்த்தம்! இதுதானே கள நிலவரம்!

இதுதான் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.
ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி.
எனவேதான் தமிழர்கள் பள்ளிகளில் ஆங்கில வழியில்
கல்வி வேண்டும் என்று .கேட்கிறார்கள்.

எனவே தமிழக அரசு என்ன செய்கிறது? அரசுப்
பள்ளிகளில் உள்ள தமிழ் வழிக் கல்வியை மூடுகிறது
அல்லது குறைத்துக் கொண்டு வருகிறது.

இதன் கொடிய விளைவு என்னவெனில், எல்கேஜி
யுகேஜி வகுப்புகளில்கூட  ஆங்கில மீடியம் கொண்டு
வரப் படுகிறது. இது அதீதமான நடவடிக்கை.

தாய்மொழியைக் கற்கும் முன்னரே ஆங்கிலத்தை
பயிற்று மொழியாக ஆக்குவது என்பது
எதிர்காலச் சமூகத்தை நஞ்சூட்டிக் கொலை
செய்வதாகும்.

இதைத் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் உயர் கல்வி,
நவீன அறிவியல் ஆகியவற்றைத் தமிழில் கொண்டு
வருதல் வேண்டும். இது ஓரிருவர் செய்யக் கூடிய
வேலை அல்ல. ஊர் கூடித் தேர் இழுக்கும் வேலை இது.

அறிவியலைத் தமிழில் சொல்லும் முயற்சிகளை
இந்த சமூகம் ஆதரிக்க வேண்டும். அறிவியல்
நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். அறிவியல்
இதழ்களை ஆதரிக்க வேண்டும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் தன் சக்திக்கு உட்பட்டு,
தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, தன்னால்
முடிந்த அளவுக்கு அறிவியலைத் தமிழில்
சொல்லி வருகிறது.

என்றாலும் இதெல்லாம் கடலில் காயம்  கரைத்த
கதையாகத்தான் இருக்கிறது என்பதை நியூட்டன்
அறிவியல் மன்றம் உணர்ந்தே இருக்கிறது.

பேராசிரியர் ராமச்சந்திரனின் உரை தமிழில்
மொழிபெயர்க்கப் பட வாய்ப்பு உள்ளதா? இல்லை.
தமிழில் அறிவியலைச் சொல்லும் எத்தனை
வீடியோக்கள் உள்ளன? அப்படி வீடியோ
வெளியிட்டால், அதை ஆதரிக்க எத்தனை
பேர் தயாராக உள்ளனர்?

ஆங்கிலம் வெறும் மொழி மட்டும்தானே என்று
சொல்லும் கோமாளிகள் இதற்கு என்ன பதில்
சொல்வார்கள்?
***********************************************        

கணிதத்தில் surface area என்று ஒரு சொல் வருகிறது.
இதை மொழிபெயர்க்கச் சொன்னேன்.
surface = மேற்பரப்பு. சரி.
area = பரப்பு. சரி.
surface area = மேற்பரப்பின் பரப்பு. இது சரியல்ல.   
     

1) பொருளின் மேற்பரப்பு வளைவாக இருக்கிறது.
2) மேற்பரப்பின் பரப்பு = 40 cm^2.
அல்லது அதன் பரப்பு = 40 cm^2.
இப்படி குறைபாட்டுடனும் போதாமையுடனும்தான்
தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.
 

கணக்கைச் செய்! பலனை எதிர்பாராதே!
நவீன கணித கீதை!
ஹெக்சா டெசிமலில் விடை கூற வேண்டும்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------ 
ஒரு நெடுஞ்சாலையில் இரண்டு உணவகங்கள்
உள்ளன. இரண்டுக்கும் இடையில் 50 கிமீ தூரம்
உள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் உணவகத்தில்
இருந்து ஒருவர் காரில் புறப்படுகிறார்.
சரியாக அதே நேரத்தில் இரண்டாம் உணவகத்தில்
இருந்தும் ஒருவர் காரில் புறப்படுகிறார். இரண்டு
கார்களும் ஒரே திசையில் செல்கின்றன. இருவரும்
அதிகாலை 5.30 மணிக்கு சந்திக்கின்றனர்.

ஒருவேளை இருவரும் அதே நள்ளிரவு  12.30 மணிக்கு
எதிரெதிர் திசையில் ஒருவரை நோக்கி ஒருவர் பயணம் மேற்கொண்டிருந்தால் இருவரும் நள்ளிரவு 1.30 மணிக்கு
சந்தித்து இருப்பார்கள். எனில் அவ்விருவரின் வேகம் என்ன?

இக்கணக்கின் விடையை ஹெக்சா டெசிமல் முறையில்
(hexadecimal) சொல்ல வேண்டும்.
டெசிமல் முறையில் சொல்லப்படும் விடை
ஏற்கப்பட மாட்டாது.

 உதாரணமாக டெசிமலில் 100 என்பது ஹெக்சா டெசிமலில்
64க்குச் சமம்.
**********************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக