வியாழன், 4 ஜூன், 2020

ஐடா ஒதுக்கீடு குறித்து!
1. இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்!
இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அதிகார நிலை படிக்கட்டுகளில் ஓரளவாவது முன்னேற முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இடப்பங்கீடு தான்.
தேசிய அளவில் பார்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.50% இடப்பங்கீடு வழங்கப்படுகிறது. உயர்வகுப்பினரில் ஏழைகள் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு 10% இடப்பங்கீடு 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது என்று கூறி, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அது எதிர்காலத்தில் தொடருமா, தொடராதா? என்ற வினா நீடிக்கிறது. சமூகநீதி வெல்லுமா? என்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது.
மாநில அளவில் எடுத்துக் கொண்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடப்பங்கீடு வழங்கப்படுகிறது. இவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடும், பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 விழுக்காடும் உள்பங்கீடாக வழங்கப் படுகின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இரு தரப்பினருக்கும், அவர்களைச் சார்ந்த சமூகப் பிரிவுகளுக்கும் இடப்பங்கீடு வழங்கப்படுகிறது என்றாலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடப்பங்கீடு கிடைத்த வரலாறு வலிகள் நிறைந்ததாகும்.
தமிழகத்தில் இடப்பங்கீடு வரலாறு
இந்தியாவில் தேசிய அளவில் பார்த்தால் சாஹு மகராஜா காலத்திலிருந்தே பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு இடப்பங்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதற்கு 62 ஆண்டுகள் முன்பாக 1840-ஆம் ஆண்டிலேயே விஸ்வகர்மா சமுதாயத்தினர் தங்களுக்கு இடப்பங்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
அதன்பின் 31 ஆண்டுகள் கழித்து 1871-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடப்பங்கீடு வழங்க முயற்சிகள் தொடங்கப்பட்டன. அந்த ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான அறிக்கையில் பிராமணர்கள் அல்லாத இந்துக்களும், இஸ்லாமியர்களும் அரசியலில் சாதிக்க முடியாத அளவுக்கு ஒதுக்கப்படுகின்றனர் என்ற உண்மை கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின் 1881-ஆம் ஆண்டில் சமூக அடிப்படையில் பின்தங்கிய மக்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
1882-ஆம் ஆண்டில் ஒரு சமுதாயத்தின் பின்தங்கிய தன்மையை அளவிடுவதற்கு கல்வியை ஓர் அளவீடாகக் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து 1885-ஆம் ஆண்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் கல்விக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.
ஆனாலும், நீதிக்கட்சி ஆட்சியில் 1921-ஆம் ஆண்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான கம்யூனல் ஜி.ஓ. பிறப்பிக்கப்பட்டு, 1927-ஆம் ஆண்டு சுப்பராயன் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இடப்பங்கீடு சாத்தியமானது. அதற்கான அரசாணை எண் 1071 பொதுத்துறை சார்பில் 04.11.1927 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை மாகாண அரசு பணிகளில் வழங்கப்பட்ட இடப்பங்கீடு வருமாறு:
1.பிராமணர் அல்லாத இந்துக்கள் - 5/12 இடங்கள் 41.67%
2. பிராமணர்கள் - 2/12 இடங்கள் 16.67%
3. இஸ்லாமியர்கள் - 2/12 இடங்கள் 16.67%
4. ஆங்கிலோ இந்தியர்/ இந்திய கிறித்தவர் - 2/12 இடங்கள் 16.67%
5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 1/12 இடங்கள் 8.33%
மொத்தம் - 12/12 இடங்கள் 100%
சென்னை மாகாணத்தில் மத்திய அரசு
பணிகளில் 100% இடப்பங்கீடு
சென்னை மாகாணத்தில் வகுப்புவாரியாக 100% இடப்பங்கீடு வழங்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இடப்பங்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நீதிக்கட்சியின் தலைவராக இருந்த பொப்பிலி அரசரும், தந்தை பெரியாரும் தான் 1934-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் இடப்பங்கீடு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் நிற்காமல் இந்த இடப்பங்கீடு கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றும் பணி ஆற்காடு இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான ஆற்காடு இராமசாமி முதலியார் என்றழைக்கப்பட்ட ஏ.ஆர். முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் தந்தை பெரியார், பொப்பிலி அரசர் ஆகியோரின் பிரதிநிதியாக தில்லிக்கு சென்று சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 100 விழுக்காடு இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய ஆட்சியாளர்களிடம் விளக்கி இடப்பங்கீடு வழங்க வைத்தார். இதற்காக ஆணை 1935-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
Government of India, Home department, Establishment special order No.F 14/06/34 dt. 15.03.1935 என்ற பெயரிலான மத்திய அரசு ஆணையின்படி சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இடப்பங்கீடு வருமாறு:
1.பிராமணர் அல்லாத இந்துக்கள் - 44%
2. பிராமணர்கள் - 16%
3. இஸ்லாமியர்கள் - 08%
4. ஆங்கிலோ இந்தியர்/ ஐரோப்பியர் - 08%
5. இதர சிறுபான்மையினர் - 08%
6.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 16%
மொத்தம் -100%
சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த இடப்பங்கீடு அனைத்துத் தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பெருமளவில் உதவியாக இருந்தது. 1935-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இடப்பங்கீடு 1947-ஆம் ஆண்டு வரை மட்டும் தான் நடைமுறையில் இருந்தது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த நிலையில், அடுத்த ஆறாவது நாள், அதாவது ஆகஸ்ட் 21-ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்பட்டது; 45&ஆவது நாளில், அதாவது செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த இடப்பங்கீடு ரத்து செய்யப்பட்டது. அந்த சமூக அநீதியை செய்தவர் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு. அதனால் சென்னை மாகாணத்தில் அனைத்துத் தரப்ப்பினரும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்டவர்கள் இடப்பங்கீட்டை இழந்தனர். அப்போது மட்டும் அந்த இடப்பங்கீடு ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், பின்னாளில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நீட்டிக்கப் பட்டிருக்கும். சமூகநீதிக்காக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்திருக்காது.
அதேநேரத்தில் விடுதலைக்கு முன்பே தேசிய அளவில் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்தது.
ஆனால், Government of India, Home department, Establishment special order No.F 14/06/34 dt. 15.03.1935 என்ற ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டதால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய விடுதலைக்குப் பிறகு 1994 வரையிலான 47 ஆண்டுகளில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக