புதன், 17 ஜூன், 2020

OBC இடஒதுக்கீடு டாக்டர் ராமதாஸ் கருத்து!
13. உயர்கல்வியில் 27% இடஒதுக்கீடு: நான் நடத்தி வெற்றி பெற்ற இரண்டாவது சமூகநீதிப் போர்!
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் உள்ளிட்ட பெரும்பான்மையான வட இந்தியத் தலைவர்கள் இட ஒதுக்கீடு என்றால், வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு மட்டும் என்றே கருதினார்கள். அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் அவர்கள் கல்வி கற்று, வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள் என்ற புரிதல் அவர்களுக்கு இல்லை. அதனால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போதும் கூட வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 16(4) பிரிவைச் சேர்ந்த அண்ணல் அம்பேத்கர், கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக எந்தப் பிரிவையும் சேர்க்கவில்லை.
செண்பகம் துரைராஜன் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு தந்தை பெரியார் தலைமையில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த காமராசரும் ஆதரித்தார். திமுகவின் நிறுவனரான அறிஞர் அண்ணாவும் ஆதரித்தார். ஒட்டுமொத்த தமிழகமும் ஆதரித்தது. அதன்விளைவாக செய்யப்பட்ட முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தில் தான் 15(4) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பின்னாளில் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டு, இரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, அதில் கல்விக்கும் 27% இடஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், வி.பி.சிங் அமைச்சரவையில் இட ஒதுக்கீட்டுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வானும், மற்ற அதிகாரிகளும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை பிரதமரிடம் தெளிவாக எடுத்துக் கூறத் தவறியதால் தான் அப்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இந்தக் குறையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போலவே ஆனைமுத்து கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக தனி ஆளாக குரல் கொடுத்தார். வட இந்தியாவிலிருந்து கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக குரல்கள் எழவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், தேசிய அளவில் கல்வியிலும் 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது பா.ம.க. தான். ‘‘ கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் அவர்கள் படித்து வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவார்கள். கல்வியில் இட ஒதுக்கீடு வழங்காமல் வேலைவாய்ப்பில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதால் எந்த பயனும் ஏற்படாது’’ என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஏராளமான போராட்டங்களும் நடத்தப் பட்டன. 1996, 1998, 1999, 2004 ஆகிய மக்களவைத் தேர்தல்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் இது தொடர்பான வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம்.
பின்னாளில் வட மாநிலங்களில் சமூகநீதியில் அக்கறை கொண்ட சில கட்சிகளும் இந்தக் கோரிக்கையை ஆதரித்தன. நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 2004-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தில்லியில் பதவியேற்றது.
அந்த அணியின் செயல்பாட்டுக்கான குறைந்தபட்ச பொது செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த செயல் திட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதையும் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அதை ஏற்று அந்த திட்டத்தை பொது செயல்திட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சேர்த்துக் கொண்டது. அதன் மூலம் கல்வியிலும் 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஆனால், மன்மோகன்சிங் அரசு அமைந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அத்தகைய சூழலில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 23.05.2006 காலை 27% இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் கூட்டுக் கூட்டம் தில்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி, அதை விளக்கும் வகையில் மிகவும் நீண்ட அறிக்கை ஒன்றை வாசித்தனர். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால் அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப் பட வேண்டும் என்றும், அவற்றை உருவாக்க 3 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறிய அவர்கள், அதன் பிறகே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்தனர்.
மிகவும் முக்கியமான அந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலைஞரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதற்காக அவரை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், பல்வேறு காரணங்களைக் காட்டி திமுக தலைவர் கலைஞர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் மறுத்ததும், அதை சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்ததும் எனக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர்களும் இந்த அநீதியை கண்டிக்க முன்வராமல் அமைதியாக இருந்தனர். அதனால் ஆத்திரமடைந்த நான், 27% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று எழுந்து நின்று, ஒரு கையில் சிதம்பரமும், பிரணாப்முகர்ஜியும் படித்த அறிக்கையை பிடித்துக் கொண்டே ஆவேசமாக குரல் எழுப்பினேன்.
எனது ஆவேசக் குரலைக் கேட்டதும் கூட்டம் நடந்த அவையில் அமைதி நிலவியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது இருக்கையிலிருந்து எழுந்து எனக்கு அருகில் வந்து என்னை சமாதானப்படுத்தினார். இந்தக் கூட்டத்தை இப்போது முடித்துக் கொள்ளலாம், மாலையில் மீண்டும் கூடி இதுகுறித்து பேசலாம் என்று கூறிய சோனியா காந்தி, அப்போது 27% இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்று உறுதியளித்தார்.
அப்போதும் ஆவேசம் குறையாக நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த லாலுவின் பக்கம் திரும்பினேன். அவர் மிகவும் அமைதியாக இருந்தார். அவரை நோக்கி நீங்கள் ஏன் வாயை மூடிக் கொண்டு இருக்கிறீர்கள்?(Why do you keep mum?) என்று கேட்டேன். எனது ஆவேசத்தைக் கண்ட அவரால் எந்த பதிலும் கூற முடியவில்லை. அங்கிருந்த அனைத்து தலைவர்களிடமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கூட்டத்தில் கலந்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் எனது நிலைப்பாட்டை ஆதரித்ததுடன், நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம் என்று உறுதியளித்தார். அந்த தலைவர்களின் உத்தரவாதம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.
தொடர்ந்து என்னுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை தனியாக அழைத்துச் சென்று, ‘‘இங்கு நடந்தவை அனைத்தையும் தாத்தாவிடம் (கலைஞரிடம்) எடுத்துக் கூற வேண்டும்; அவரை சோனியா காந்தியிடம் பேச வைத்து 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க வேண்டும். தாத்தாவுக்கு செல்பேசியில் இணைப்பு ஏற்படுத்திக் கொடு’’ என்று கூறினேன். தயாநிதி மாறனோ அய்யா இதோ சொல்கிறேன்.... அதோ சொல்கிறேன் என்று கூறி விட்டு கடைசி வரையில் கலைஞரிடம் பேச இணைப்பு ஏற்படுத்தித் தரவில்லை. அன்று இரவு வரை இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கலைஞர் எதுவும் பேசவில்லை. அதுமட்டுமின்றி, அன்றிரவு நடைபெற்ற கூட்டத்திலும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தயாநிதிமாறன் பேசவில்லை.
தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பேசி இது தொடர்பாக அழுத்தம் தரும் படி வலியுறுத்தினேன். அப்போதைய மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரதன், உள்ளிட்டோரையும் சந்தித்து இதுகுறித்து பேசினேன். அவர்களின் ஆதரவையும் திரட்டினேன்.
நான் எப்போது தில்லிக்கு சென்றாலும் தவறாமல் பார்க்கும் தலைவர்கள் இருவர். முதலாமவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, இரண்டாமவர் மத்திய அமைச்சர் இராம்விலாஸ் பாஸ்வான். அன்றும் அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டேன். இந்த விஷயத்தில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் எனது நிலைப்பாட்டுக்கு முழுமையான ஆதரவு அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிற்பகலில் பிரதமர் மன்மோகன்சிங் என்னை சந்தித்து பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நான் விரைந்து சென்று அவரை சந்தித்தேன். ஆனால், அவரோ காலையில் நடந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி என்ன கூறினாரோ, அதையே கூறி என்னை சமரசப் படுத்த முயன்றார். ஆனால், அதை ஏற்க நான் மறுத்து விட்டேன். 27% இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என்னை சமாதானப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த பிரதமர் மன்மோகன்சிங் சமாதான முயற்சியை கைவிட்டார்.
அதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் ஆகியோரிடம் உரிமையுடன் சண்டையிட்டேன். எனது வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை பல தலைவர்கள் பாராட்டினார்கள். அடுத்தநாள் கொல்கத்தாவிலிருந்து வெளியான தி டெலிகிராப் நாளிதழில்,‘‘Such a decision was not on the committee’s agenda, but the intense pressure by the southern MPs forced the government’s hand. S. Ramadoss, the PMK leader, was constantly interacting with the Left till the evening meeting’’ என்று பாராட்டி எழுதப்பட்டிருந்தது. தினமணி நாளிதழ் ‘‘ இராமதாசு ஆவேசம்; தில்லியில் மாறியது காட்சி’’ என்று தலைப்பிட்டு நடந்த நிகழ்வுகளை தொகுத்து வெளியிட்டது.
இட ஒதுக்கீட்டுக்காக நான் நடத்திய போராட்டத்தைப் பார்த்த இடதுசாரிக் கட்சிகளின் தேசிய தலைவர்கள் அனைவரும் என்னை சமூக நீதித் தலைவர் என பாராட்டினார்கள். இவ்வாறாகத் தான் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது.
மண்டல் ஆணையப் பரிந்துரைகளைப் பொருத்தவரை இரு தலைவர்கள் ஒற்றை ஆளாக நின்று நடத்திய போராட்டங்கள் தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தன. 1990-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, லோக்தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராம் அவதேஷ்சிங் தனி ஆளாக போராட்டம் நடத்தி, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் கவனத்தை ஈர்த்தார். அதுதான் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தது.
கல்வியில் 27% இட ஒதுக்கீடு வழங்குவதைப் பொருத்தவரை 23.05.2006-இல் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் ஒற்றை ஆளாக நான் எழுப்பிய ஆவேசக் குரல் தான் இட ஒதுக்கீட்டை வென்று கொடுத்தது. கொள்கையில் உறுதியாக இருந்தால், ஒற்றை ஆளாக இருந்தாலும் ஆவேசமாக போராடி உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்த நிகழ்வு இதுவாகும்.
அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஐ.டி. ஐ.ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.எம், என்.ஐ.டி, எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்ட மசோதா -2006 தயாரிக்கப்பட்டது.
மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்ட மசோதா 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் அதே ஆண்டின் திசம்பர் 14-ஆம் தேதி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2007-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து 2007-08 கல்வியாண்டு முதல் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அதுமட்டுமின்றி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் 29.03.2007 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. அதனால், 2007-08 ஆம் கல்வியாண்டில் 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து கவலை தெரிவித்த நான், இந்த தடையை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினேன்.
இட ஒதுக்கீட்டு வழக்கில் பல மாதம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு 10.04.2008 அன்று இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து 2008-09 ஆம் கல்வியாண்டு முதல் 27% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. காரணம்.....பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், பொதுப்பிரிவினருக்கான இடங்கள் எந்த வகையிலும் குறைந்து விடக் கூடாது என்று மத்திய அரசு நினைத்தது.

அதற்காக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கூடுதல் இடங்களை உருவாக்க முடிவு செய்தது. ஆனால், ஒரே ஆண்டில் அத்தகைய இடங்களை உருவாக்கி விட முடியாது என்பதால், மொத்தம் 3 ஆண்டு கால இடைவெளியில் கூடுதல் இடங்களை உருவாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் 9% வீதம் 3 ஆண்டுகளில் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதென்றும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2008-09 ஆம் ஆண்டில் 9% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டது. பின்னர் 2009-10 ஆம் ஆண்டில் 18% ஆகவும், 2010-11 ஆம் ஆண்டில் 27% ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக