வியாழன், 25 ஜூன், 2020

CTBT அணு ஆயுதம் இல்லா உலகை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட ஒரு ஒப்பந்தம். உண்மையில் நல்ல விஷ்யம். அதாவது இனி அணுஆயுத சோதனை யாரும் நடத்தக்கூடாது மேலும் இப்போது இருக்கும் அணுஆயுதங்களை அந்த அந்த நாடுகள் அழிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களை கொண்டது. ஆனாலும் இந்தியா அதில் கையெழுத்திட மறுத்ததற்க்கு இன்னொரு முக்கிய காரணம், ஏற்கனவே இருக்கும் அணுஆயுதங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுகிரோம் என்று சொன்ன நாடுகள் எப்போது என்ற காலக்கெடுவை வைக்கவில்லை. உருவாக்கிய அணுஆய்தங்களை அழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கால்க்கெடு இல்லாமல் "அழித்துவிடுவோம்" என்று மட்டும் சொல்வது அணுஆயுத சமனிலையை உலகில் தொடர்ந்து தக்கவைக்கவே செய்யும் அணு ஆயுதம் இல்லா உலகை நோக்கி செல்லாது என்று இந்தியா அந்த காலக்கெடுவை வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. காலக்கெடுவை முற்றிலும் ஏற்காததால் இந்தியா கடைசிவரை கையெழுத்து போடவில்லை. இதை யோசித்து இந்தியா அதில் கையெழுத்திடாதது மிக முக்கியமான விஷ்யம். உலகளாவிய அந்த பெரும் ஒப்பந்தத்தில் இந்தியா மட்டும் கையெழுத்திட்டிருந்தாலே அது முழு வெற்றி அடைந்திருக்கும், அதற்க்கு ஒரே தடையாக இருந்தது இந்தியா, எனவே சர்வதேச அளவில் பெரும் அழுத்தங்கள் இருந்தது, ஆனால் அதற்க்கு இடமளிக்காமல் இந்தியா கையெழுத்திடாமல் இருந்தது பெரிய விஷயம்.
அந்த காலத்தில் இதை போன்ற விஷயங்களை நண்பர்களிடையே இந்தியா சார்ந்து, உலகில் அதன் முக்கியத்துவம் சார்ந்து பெருமையாக பேசி விவாதித்தது எல்லாம் ஞாபகம் வருகிறது. ஆனால் இது மட்டுமல்ல இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டுகள், சாட்லைட்டுகள் என பல்வேறு விஷயங்கள் சார்ந்து பெருமையாக பேசி விவாதித்தது..... ஆனால் அப்போதெல்லாம் இதையெல்லாம் "இந்தியா" என்று குறிப்பிட்டு பெருமை பேசுவதுதான் வழக்கம், இப்போதுபோல் இந்திய பெருமையை வந்து போகும் எந்த குறிப்பிடட அரசியல் தலைவர்களுக்கும் படைசாற்றுவது கிடையாது. முன்பு இஸ்ரோவின் வெற்றிகளையே விஞ்ஞானிகள் உலகத்துக்கு அறிவிப்பார்கள், மற்ற எல்லா தலைவர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். இந்திய பெருமை இந்திய பெருமையாகவே இருந்தது, இப்போதுதான் இஸ்ரோவின் வெற்றி செய்திகள் கூட அரசியல்வாதிகளின் பெருமைக்கான இடமாகி இவர்கள்தான் முன்னின்று அறிவிக்கிறார்கள், விஞ்ஞானிகள் பின்னாடி நிற்க்கிறார்கள். இந்தியப் பெருமை தனிபட்ட அரசியல்வாதிகள் பெருமையாக பெருமை பேசப்படுகிறது, “தேசபக்தர்கள்” இல்லையா அப்படிதான் இருப்பார்கள் 😀 —-
----------மன்மோகன் சிங்: இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்-----------
Balasubramaniam Muthusamy
1974 ஆம் ஆண்டு, ‘புத்தர் புன்னகைக்கிறார்’, என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் அணு ஆயுதச் சோதனை, புத்தர் பிறந்த நாளன்று வெற்றிகரமாக நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு, அணுமின் உற்பத்திக்காகத் தரவிருந்த Heavy water ஐ கனடா நிறுத்தியது. அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) செய்திருந்த நாடுகள், உடனடி எதிர்வினையாக, Nuclear Suppliers Group (NSG) என்னும் அமைப்பை உருவாக்கி, இந்தியாவுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் செல்வதைத் தடை செய்தார்கள். இந்தியாவுக்கு, அணுத் தொழில் நுட்பங்களோ, இயந்திரங்களோ தேவையெனில், அது அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் இந்தியா கையெழுத்து இடுவதில் என்ன சிக்கல்? அந்த ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை யாரிடம் அணு ஆயுதங்கள் இருந்ததோ, அவர்கள் மட்டும்தான் அணு ஆயுத சக்திகள் என வரையறுக்கிறது. மற்றவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதே அதன் அடிப்படை. 1974 ல் அணு ஆயுதச் சோதனை செய்த இந்தியா, அந்த ஒப்பந்தத்தின் படி அணு ஆயுத சக்தி இல்லை. சீனம் என்னும் அணு ஆயுத எதிரியை அருகில் வைத்துக் கொண்டு, இந்தியா அணு ஆயுதம் இல்லாமல் இருப்பது பெரும் பலவீனம் என்பதால் இந்தியா அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. இதனால், இந்தியா அணு உலைகள் வழியாக மின்சாரம் தயாரிக்கத் தேவையான யுரேனியம் மற்றும் இயந்திரங்கள்/ தொழில்நுட்பங்களைப் பெற முடியாமல் போனது. இந்தியாவில் யுரேனியம் மிகக் குறைவாகவே கிடைக்கிறது.
1998 ஆம் ஆண்டு, வாஜ்பேயி அரசு நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனை, இந்தியாவின் மீது மேலும் தொழில்நுட்பத் தடைகளைக் கொணர்ந்தது. சில ஆண்டுகள் கழித்து, இந்தத் தடைகளை உடைத்து, மீண்டும் மேற்குலகில், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு மேம்பட வேண்டும் என அந்த அரசு முடிவெடுத்தது. 2004 ஆம் ஆண்டின் துவக்கத்தில், Next Steps in Strategic Process (NSSP) என, அணுசக்தி வர்த்தகம், ராணுவ வர்த்தகம், வான்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் பேச்சுவார்த்தைகளைத் துவங்கின.
இதைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்று அதிபர் புஷ் அவர்களுடன் இணைந்து அணுசக்தித் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தப்படி, இந்தியா அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பம் மற்றும் கச்சாப் பொருட்களை இந்தியா பெற முடியும் என்னும் நிலைமை உருவானது. அதற்கான உதவியை அமெரிக்கா செய்ய முன்வந்தது.
இந்தியா, இதற்காக, தனது அணுசக்தி நிலையங்களை, மின் உற்பத்தி மற்றும் ஆயுத உற்பத்தித் தளங்கள் எனப்பிரித்து, மின் உற்பத்தி நிலையங்கள், உலக அணு சக்தி நிறுவனத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அணுசக்தி தொழில்நுட்பங்களை, அது இல்லாத நாடுகளுக்கு இந்தியா விற்கக் கூடாது எனவும் ஒப்பந்தம் வலியுறுத்தியது.
எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பலமாக எதிர்த்தது. 2006 ஆம் ஆண்டு துவக்கத்தில், அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்தார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தில் பேசுவதை கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பலமாக எதிர்த்தது. வேறு வழியின்றி, அவர், தில்லியின் பழைய கோட்டையில் (புரானா கிலா) தனது உரையை நிகழ்த்த வேண்டி வந்தது.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை, இந்திய அணு விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்தனர். அமெரிக்கவின் ஒப்பந்த ஷரத்துகள், இந்திய அணு உலைகளின் மீது மிகக் கடும் கட்டுபாடுகளை விதிக்கின்றன. இது இந்திய இறையாண்மையை மதிக்கவில்லை என்னும் கடும் குற்றச்சாட்டை வைத்தார் இந்திய அணுசக்தித் துறையின் முன்னாள் தலைவர் எம்.ஆர், ஸ்ரீனிவாசன். இரு நாடுகளுக்குமிடையேயான ஒப்பந்தத்துக்கும், அமெரிக்க தன் நாட்டில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயற்றிய சட்டத்துக்கும் வேறுபாடுகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். முன்பு, இதே போல பிரச்சினை எழுந்த போது, தாராப்பூர் அணு நிலையத்துக்கு தொழில்நுட்பங்களைத் தருவதில் அமெரிக்க ஏற்படுத்திய சிக்கல்களை அவர் நினைவூட்டினார்.
ஆனால், இந்தியாவின் மிகச்சிறந்த பாதுகாப்புத்துறை வல்லுநர்களின் ஒருவரான, கே.சுப்ரமணியம் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தார். இருநாடுகளின் நலன்களும், பார்வைகளும் ஒன்றிணையும் வாய்ப்பு இன்னொரு முறை கிடைப்பது அரிது. Nuclear Suppliers Group ன் அனுமதியை தான் வாங்கித்தருவதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டது அவர்களது எண்ண மாற்றத்தைக் காட்டுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவது முட்டாள்தனம் என விமரிசித்தார். பாஜபா அரசின் முன்னால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பிரஜேஷ் மிஷ்ராவும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தார்.
இந்தச் சிக்கல்கள் சிடுக்கெடுக்கப்பட்டு, ஒரு வழியாக, இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்து, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 3 ஆம் தேதி வெளியிட்டன. ஆகஸ்டு 13 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே உரசல் துவங்கியது. அதைத் தீர்க்க, ஒரு குழு ஒன்று அமைக்கப்ப்பட்டது.
ஆனால், சிக்கல்கள் தீர்க்கப்படாமல், பிஃப்ரவரி 2008 ல், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆட்சியா அல்லது இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தமா என முடிவு செய்து கொள்ளுங்கள் என பிரதமருக்குத் தகவல் கொடுத்தார்கள். கம்யூனிஸ்ட்களின் ஆதரவில்லாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடக்க இயலாத நிலை.
32 ஆண்டுகளாக அணு சக்தித் தொழில்நுட்பமும், அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியமும் மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் புஷ் போன்ற இந்திய ஆதரவு மனநிலை கொண்ட அதிபர் இருக்கும் சாதகமான நிலை இன்னொரு முறை வருவது கடினம் என்னும் நிலையில், தன் அரசைப் பணயம் வைக்கத் துணிந்தார், பலவீனமான பிரதமர் என கேலி செய்யப்பட்ட மன்மோகன் சிங். அணு சக்தி நிபுணர்கள் உதவியுடன், கட்சியில் இருந்த முக்கியத் தலைவர்களுக்கு இதன் முக்கியத்துவம் எடுத்துச் சொல்லப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்திய ஜனாதிபதியாக இருந்த விஞ்ஞானி அப்துல் கலாமின் உதவியோடு இன்னொரு தோழமைக் கட்சியான சமஜ்வாதிக் கட்சிக்கும் இதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
2008 ஆம் ஆண்டு, ஜூலை 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ந்தது. 275 ஓட்டுகள் ஆதரவாகவும், 256 ஓட்டுகள் எதிராகவும் கிடைத்தன. இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தை முன்வைத்து, மன்மோகன் சிங் என்னும் பலவீனமான பிரதமர், தான் வைத்த பணயத்தில் வென்றார்.
இன்றும், Nuclear Suppliers’ Group ன் அங்கத்தினராக நுழைய வேண்டி இந்தியா அனுப்பிய விண்ணப்பம் சீனாவின் எதிர்ப்பினால், அனுமதிக்கப்படாமல் உள்ளது. ஆனால், இந்தியா, யுரேனியத்தையும், தொழில்நுட்பத்தையும் பெற எந்த் தடையுமில்லை. விஞ்ஞானிகள் பயந்தது போல அமெரிக்கா இந்திய அணுமின் நிலையங்களை கண்காணிக்கவில்லை. இந்தியா உலகில், Nuclear Prolifieration Treaty ல் கையெழுத்திடாத அணுசக்தி நாடு என்பதை உலகம் ஒத்துக் கொண்டு விட்டது. Nothing official about it. That’s all.
இந்த ஒப்பந்தம் இந்தியாவை எங்கு கொண்டு செல்லும் என உணர்ந்த ஒரு தலைவரின் தீர்க்க தரிசனத்தினால் விளைந்த பயன் இது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை, இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்ற விடாமல் செய்தனர் எதிர்க்கட்சிகள். அவர் தில்லியின் பழைய கோட்டையில் உரையாற்ற வேண்டியதாயிற்று. அங்கே தில்லியின் வனவிலங்குக் காட்சியகம் உள்ளது. புஷ் சரியான இடத்தில் தான் பேசினார் எனப் பலரும் கிண்டல் செய்தார்கள். But Sardar had the last laugh!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக