கவுசல்யா உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு!
உடனடியாக என் நினைவுக்கு வருவது சையது மோடி கொலை வழக்கு.
சையத் மோடி எட்டு முறை இந்திய பாட்மின்டன் சாம்பியன். மனைவி அமீதாவும் சாம்பியன். மதம் மற்றும் வளர்ந்த குடும்ப சூழ்நிலைகளுக்கிடையே பெருத்த வித்தியாசமிருந்தாலும், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காதல் திருமணத்தில் முடிந்தது.
சஞ்சய் சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். வலிமை வாய்ந்த அரசியல்வாதி. திருமணமானவர் என்றாலும் அவருக்கும் அமீதாவுக்குமான உறவு சையது மோடியின் கொலையில் முடிந்து எண்பதுகளில் இந்தியாவை உலுக்கியது.
கணவர் காதலர் இருவருடனுமான அந்தரங்க உறவு உட்பட அனைத்தையும் அமீதா எழுதி வைத்திருந்த டைரி காவலர்களிடம் சிக்கி, பத்திரிக்கைகளின் விற்பனைக்கு உதவியது.
சஞ்சய்சிங், அமீதா மற்றும் அய்ந்து கூலிப்படையினர் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
குற்றச் சதிக்கான (criminal conspiracy) ஆதாரம் ஏதுமில்லை என சாட்சி விசாரணைக்கு முன்னரே குற்றப்பத்திரிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் சஞ்சய்சிங், அமீதா இருவரும் விடுவிக்கப்பட்டனர். இன்று கவுசல்யா கேட்கும் கேள்வி அன்றும் அனைவர் மனதிலிருந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் 1994ல் தீர்ப்பினை உறுதி செய்தது
முக்கியமான நபர்களே விடுவிக்கப்பட்டவுடன், கூலிப்படையினருக்கு என்ன இருக்கிறது என்று மற்றவர்களும் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட அடுத்த பத்தாண்டுகளில் உச்ச நீதிமன்றம் அதையும் முடிவுக்கு கொண்டு வந்தது.
குற்ற வழக்கினை நிரூபிக்க நோக்கம் (Motive) என்பது முக்கியமான காரணியல்ல; இரு கொலைகளிலும் கொலையில் மற்ற எவரையுமிடவும் நோக்கமிருக்கமிருக்கக் கூடிய நபர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடிந்திருக்கிறது.
சஞ்சய் சிங்’கும் சஞ்சய் காந்தியில் ஆரம்பித்து இந்திரா ராஜீவ் விபிசிங் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி என்று பயணித்து இடையில் அமீதாவையும் மணந்து கொண்டு, இப்போது மீண்டும் காங்கிரஸில் அய்க்கியமாகி விட்டார்.
சையது மோடி அவரது பெயரால் நடைபெறும் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வாழ்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக