சனி, 13 ஜூன், 2020

உயிர் என்றால் என்ன?
உயிர் என்பது பொருளா அல்லது கருத்தா?
-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
பொருள் குறித்த மார்க்சிய வரையறை என்பது
லெனின் கூறியதே. பொருள் என்பது புறநிலை
யதார்த்தம் (objective reality) என்கிறார் லெனின்.
இது பொருளைப் பற்றிய தத்துவார்த்த வரையறை
ஆகும். பொருள் குறித்த நவீன அறிவியலின்
வரையறை இன்று மிகவும் கறாராக உள்ளது. நிற்க.

பொருளுக்கு பௌதிக இருப்பு உண்டு. ஆனால்
பொருளைப் பற்றிய மார்க்சிய வரையறையின்படி,
பௌதிக இருப்பே இல்லாத விஷயங்களும் பொருளாக
ஏற்கப்படும். உதாரணமாக, material base உடைய
சாதியம் போன்றவையும் பொருளாகக் கருதப்படும். நிற்க.
கருத்துக்கு பௌதிக இருப்பு எதுவும் கிடையாது.

உயிர் என்பது என்ன? எலக்ட்ரான் போன்றோ
நியூட்ரான் போன்றோ புள்ளியியல் விதிகளுக்குக்
கட்டுப்படுகிற துகள் போன்றதல்ல உயிர். எனினும்
உயிர் என்பது ஒரு பொருளே (matter).

மின்புலம், காந்தப் புலம் பற்றி அறிவோம்.
ஒரு எலக்ட்ரிக் சார்ஜை ஒரு இடத்தில் வைத்தால்
அந்த சார்ஜைச் சுற்றி ஒரு புலம் உண்டாகி விடும்.
அது மின்புலம் ஆகும். அறிவியலின் வரையறைப்படி
மின்புலம் (electric field) ஒரு பொருள் ஆகும். எப்படியெனில்
மின்புலத்திற்கு ஒரு physical existence உண்டு. இந்த வெளியில்
(space) ஒரு இடத்தில் மின்புலம் உணரப் படுகிறது.

எலக்ட்ரிக் சார்ஜைச் சுற்றி மின்புலம் உணரப் படுவதைப்
போல, உயிரைச் சுற்றி உயிரின் இயக்கம் உணரப்
படுகிறது. எனவே உயிர் ஒரு பொருளே.

ஒரு விஷயம் பொருளா அல்லது கருத்தா என்பதை
எது தீர்மானிக்கிறது? அதற்கு physical existence
இருக்கிறதா இல்லையா என்ற அம்சம்
தீர்மானிக்கிறது. உயிருக்கு பௌதிக இருப்பு
(physical existence) இருக்கிறது என்பது பிரத்தியட்சமாக
எவரும் உணரக் கூடியது.

உடலுக்கு மட்டும்தான் பௌதிக இருப்பு உண்டு என்றும்
உயிருக்கு இல்லை என்றும் கருதுவது சரியல்ல.
உடலின் பல்வேறு இயக்கங்களின் ஒருங்கிணைந்த
மொத்தமே (integrated whole) உயிர் ஆகும். எனவே உயிர்
என்பது அறிவியலின் வரையறைப்படியும்
மார்க்சிய வரையறைப்படியும் பொருளே ஆகும்.
அது ஒருபோதும் கருத்து ஆகாது. ஏனெனில் உயிருக்கு
பௌதிக இருப்பு உண்டு.

உயிர் என்பது கருத்து என்றால், அது கருத்தின்
விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி இல்லை
என்று எவரும் உணரலாம். உங்கள் தோட்டத்தில்
ஒரு தென்னை மரம் இருக்கிறது என்று வைத்துக்
கொள்ளுங்கள். அந்தத் தென்னை மரம் முறிந்து
விட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது
முறிந்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி
நடக்கிறதா? இல்லை. உங்களின் விருப்பத்துக்கு
அப்பாற்பட்டு அந்த மரம் இருக்கிறது.

அது போல, ஒரு உயிர் என்பது நமது விருப்பத்துக்கு
அப்பாற்பட்டு இயங்குவது. அது கருத்தின் விதிகளால்
இயங்குவதில்லை. அது பொருளின் விதிகளால்
இயங்குகிறது. எனவே உயிர் என்பது பொருளே.


உயிர் என்பது பொருள் ஆகும். பொருளை அழிக்க
இயலாது. எனவே உயிரை அழிக்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக