வெள்ளி, 6 நவம்பர், 2015

தமிழறிஞரும் தமிழ் தேசியப் போராளியுமான
அரண முறுவல் மறைந்தார்! அஞ்சலி செலுத்துவோம்!
--------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: நல்லடக்கம்: 07.11.2015 சனிக்கிழமை முற்பகல்.
மதியம் இரண்டு மணிக்குள்.
முகவரி: 726, பாவாணர் தெரு, முல்லை நகர், குளக்கரை அருகில்,
மேற்கு தாம்பரம், சென்னை. இத்தகவல் இறைமொழியின்
கணவர் (அய்யாவின் மருமகனார்) என்னிடம் தெரிவித்தது.   
-----------------------------------------------------------------------------------------------
வாழ்நாள் இறுதி வரை ஒரு போராளியாகவே வாழ்ந்தவர்
அய்யா அரண முறுவல் அவர்கள். 1980 முதலே அய்யா அவர்களை
நான் அறிவேன். எனது திருமணத்தை அய்யா அவர்கள்தான்
நடத்தி வைத்தார்கள்.

அய்யா அவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருந்தேன்.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளின் போது (சனவரி 25)
பலமுறை தாளமுத்து-நடராசன் நினைவிடத்தில் அஞ்சலி
செலுத்தும்போதெல்லாம் அய்யா அவர்களைச் சந்தித்து
உள்ளேன்.

1980களில் EPRLF தலைவர் பத்மநாபா அவர்களுக்கு என்னை
அறிமுகம் செய்து வைத்தார் அய்யா அவர்கள். அய்யாவின்
உந்துதலால் ஈழவிடுதலையின் தீவிர ஆதரவாளர் ஆனேன்.
நான்காம் கட்ட ஈழப்போரின்போது, தமிழ்நாட்டில் நடைபெற்ற
ஆதரவுப் போராட்டங்கள் பலவற்றில், அய்யா அவர்களுடன்
நான் பங்கேற்றேன்.

அய்யாவின் குழந்தைகள் செங்கனல், இறைமொழி இருவரும்
மிகுதியும் என் வீட்டில்தான் இருப்பார்கள். கியூ பிரிவு போலிசாரின்
நெருக்கடி காரணமாக, நான் வீட்டைக் காலி செய்து,
வேறிடத்தில் குடியேற நேர்ந்தபோது, அய்யா அவர்கள்தான்
எனக்கு ஆறுதலும் வழிகாட்டுதலும் வழங்கினார்கள்.

இறுதியாக, அய்யா அவர்களைச் சந்தித்தது, கடந்த மாதம்
சென்னை எழும்பூர் ஈக்ஷா மையத்தில் நிகழ்ந்த ஒரு
கூட்டத்தின்போது. அதன் பின், இன்று அய்யா அவர்களின்
மறைவுச் செய்தி இடியாக வந்து இறங்கியது.

வாழ்நாள் இறுதிவரை போராளியாகவே வாழ்ந்து மறைந்த
அய்யா அரண முறுவல் அவர்களுக்கு வீர வணக்கம்
செலுத்துகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------    

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக