திங்கள், 30 நவம்பர், 2015

சாகாவரம் பெற்ற மொழி எங்கேனும் உண்டா?
-------------------------------------------------------------------------------
அறிவியல் கலைச் சொற்கள் தமிழில் இல்லை என்பது மொத்தச்
சிக்கலின் ஒரு சிறு விழுக்காடு மட்டுமே. உயர் அறிவியலைத்
தமிழில் சொல்வது என்பதில் கலைச்சொல்லாக்கக் குறைபாடு
மட்டுமின்றி பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அறிவியலைத் தமிழில்
வரையறை செய்வது, தமிழில் விளக்குவது என்பன போன்ற
இடங்களில் தமிழின் போதாமை நன்கு புலப்படுகிறது.
**
16 வயதில் இருந்தே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு
வருகிறேன். மார்க்சிய மூல ஆசான்களின் படைப்புகளில்
இருந்து பல்வேறு பகுதிகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்,
அமைப்பின் தேவை மற்றும் ஆணைக்கு இணங்க. இவ்வாறு
மொழிபெயர்க்கையில் பெருத்த சிரமங்களை உணரவில்லை.
ஆனால், உயர் அறிவியலைத் தமிழில் சொல்ல முற்படும்போது
ஒருவித இயலாமையை உணர்ந்தேன். அந்த இயலாமைக்குக் காரணம் என்னுடைய குறைபாடுகள் மட்டுமன்று என்ற உண்மை
புலப்பட்டது. இங்குதான் மொழியின் போதாமை என்ற விடயமே
முன்னுக்கு வருகிறது.
**
அடுத்து, இந்தியும் தமிழைப் போன்றதுதான். தமிழால்
முடியவில்லை எனும்போது அது இந்திக்கும் பொருந்தும்தான்.
ஆட்சியாளர்களின் பரிவு என்ற ஒற்றைக் காரணி மூலமாக
எந்த மொழியும் வாழ்ந்து விட முடியாது. காலமாற்றங்களை,
சமூக மாற்றங்களை, உற்பத்திமுறை மாற்றங்களை ஊடறுத்துச்
செல்ல வேண்டுமெனில், ஒரு மொழியானது தன்னளவில்
இயல்பிலேயே (inherent) வல்லமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
இந்தி அத்தகு வல்லமை வாய்ந்த மொழி அல்ல.
**
சாகாவரம் பெற்ற மொழி என்ற ஒன்று இந்த மானுட சமூகத்தில்
உண்டா? உண்டு என்ற விடை அறிவியலுக்கு எதிரான விடையே.
அடுத்து, ஒரு மொழியின் வாழ்நாள் என்பது வரம்பற்றதா?
(infinite). இதற்கு "ஆம்"  என்ற விடை கூறப்படுமானால்,
அவ்விடை அறிவியலுக்கு எதிரானதாகும். இதுவே மார்க்சியம்
ஆகும். 

ஒவ்வொரு மொழிக்கும் பிறப்பு, வளர்ச்சி, உச்சம், சரிவு,
இறப்பு ஆகிய கட்டங்கள் உண்டு. இதற்கு விலக்காக
எந்த மொழியும் இல்லை. அடுத்து, ஒரு மொழியின்
இயக்கத்துக்கும் அம்மொழி பேசப்படும் சமூகத்தின்
பொருள் உற்பத்தி முறைக்கும் நெருக்கமான தொடர்பு
உண்டு. இதைத் தெரிந்து கொள்ள மார்க்சியக் கல்வி
துணை புரியும். நிகழ் சமூகத்தின் பொருள் உற்பத்தி
முறையில் தமிழ் என்ன பங்கு வகிக்கிறது என்பதை
அறிந்து கொண்டால் தமிழின் போதாமை பற்றி
அறிய இயலும். மார்க்சிய நோக்கில் அணுகுதல்
என்பதன் பொருள் அறிவியல் வழியில் அணுகுதல்
என்பதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக