வியாழன், 19 நவம்பர், 2015

விண்வெளி ஆராய்ச்சி வேறு!
வானிலை ஆராய்ச்சி வேறு!
சென்னையில் 250 செ.மீ மழை பெய்யும் என்று 
நாசா கூறியதாக வரும் செய்திகள் பொய்யே!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------ 
வானிலை ஆய்வை நாசா மேற்கொள்வதில்லை. ஏனெனில் 
அது விண்வெளி ஆய்வுக்கான நிறுவனம். எனவே சென்னையில் 
2015 நவம்பரில் (அல்லது டிசம்பரில்) 21 அல்லது 22 ஆம் தேதியன்று 
250 செ.மீ மழை பெய்யும் என்று நாசா அறிவித்து இருப்பதாக 
சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள செய்தி அப்பட்டமான 
பொய்ச் செய்தியே. 

பூமியின் வளிமண்டலம் (atmosphere) ஐந்து அடுக்குகளைக்
கொண்டதாக உள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து, அதாவது 
கடல் மட்டத்தில் இருந்து, பத்தாயிரம் கி.மீ உயரம் வரை 
நமது வளிமண்டலம் பரவியுள்ளது. அதற்கு மேல், அதாவது 
10000 கி.மீ. உயரத்துக்கு மேல்தான் புறவெளி (outer space)
ஆரம்பிக்கிறது.

வளிமண்டலத்தின் முதல் அடுக்கு troposphere ஆகும்.
இது கடல் மட்டத்தில் இருந்து 12 கி.மீ உயரம் வரை உள்ளது.      
கவிஞர்களும் பொதுமக்களும் இதைத் தொடுவானம் 
என்கின்றனர். வளிமண்டலத்தின் மொத்த நிறையில் 
(mass) 80 சதம் இந்த அடுக்கில் உள்ளது. 

வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீர்த்திவலையும் 
(water vapour) அனேகமாக இந்த அடுக்கில்தான் உள்ளது. 
(வாயு வடிவத்தில் இருக்கும் தண்ணீர்தான் water vapour ஆகும்)   
எனவே பூமியின் வானிலையை இந்த அடுக்குதான் 
(troposphere) தீர்மானிக்கிறது. இந்த அடுக்கில்தான் சாதாரண 
விமானங்கள் பறக்கின்றன. ஜெட் விமானங்கள் சாதாரண 
விமானங்களை அதிக உயரத்தில் பறப்பவை. எனவே அவை 
troposphereக்கு மேலே உள்ள stratosphere என்ற அடுக்கின் 
கீழ்ப்பாகத்தில் பறக்கின்றன.

எவரெஸ்ட் சிகரம் 8848 மீ உயரமுள்ளது. இச்சிகரம் troposphere 
அடுக்கில்தான் உள்ளது. வளிமண்டலத்தின் பல்வேறு 
அடுக்குகளிலும் மேகங்கள் காணப்படுகின்றன. எனினும் 
மழை தரும் மேகங்கள், வானிலையைப் பாதிக்கும் மேகங்கள் 
ஆகியன troposphere அடுக்கில்தான் உள்ளன. 

மேற்கூறிய விவரங்கள் மூலமாக நாம் கூற வருவது 
இதுதான். வானிலை ஆய்வு மையங்களின்  (meteorological centres)
ஆகப் பெரும்பான்மையான பணி, கடல் மட்டத்தில் 
இருந்து 15 கி.மீ உயரம் வரையிலான வளிமண்டலத்தின் 
பகுதிகளை ஆராய்வதே. இந்த 15 கி.மீ உயரம் என்பது 
troposphere முழுவதும் மற்றும் stratosphereயின் தாழ்ந்த 
பகுதி ஆகியவை மட்டுமே. 

இதற்கு மாறாக. விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் 
(அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ போன்றவை)
கவனம் செலுத்துவது கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் 
கி.மீ உயரத்திலும் அதற்கு மேலும் இருக்கும் புறவெளி 
(outer space) பற்றியுமே. செயற்கைக் கோள்களைச்
செலுத்தி விண்வெளியை கோள்களை நட்சத்திரங்களை 
ஆராய்வது விண்வெளி ஆய்வு மையங்களின் பணி.

செயற்கைக் கோள்கள் அதிக உயரத்தில் பறப்பவை.
உதாரணமாக இன்சாட் 3D செயற்கைக் கோள் 36000 கி.மீ 
உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்தப் பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையம் LEO எனப்படும் Low Earth 
Orbitஇல் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

ஆக, வானிலை ஆய்வு என்பது 15 கி.மீ உயரத்துடன் முடிந்து 
விடுகிறது. விண்வெளி ஆய்வு என்பது  300 கி.மீ, 400 கி.மீயில்
தொடங்கி 36000 கி.மீ வரை செல்லக் கூடியது. வானிலை 
ஆய்வு என்பது Earth Science பிரிவைச் சார்ந்தது. விண்வெளி 
ஆய்வு என்பது Space Science பிரிவைச் சார்ந்தது. இரண்டின் 
நோக்கமும் பணிகளும் வேறு வேறானவை. ஒன்றின் பணியை 
மற்றொன்று செய்யாது; செய்வதற்கான தேவையும் இல்லை.

எனவே, நாசா வானிலை ஆய்வை மேற்கொண்டது என்பதும் 
வானிலை முன்னறிவிப்பைச் செய்தது என்பதும் பொய்யே.
250 செ.மீ மழை என்றால் என்ன என்றே தெரியாத தற்குறிகள் 
இத்தகைய பொய்யைப் பரப்புவது மிகப்பெரிய சமூகக் 
குற்றம். இந்தியாவில் எந்த வானிலை ஆய்வு மையத்திலும் 
250 செ.மீ மழையை (250 செ.மீ = 8 அடி, தோராயமாக) 
அளக்கக் கூடிய மழை அளவுமானிகள் (rain gauge) இல்லை 
என்பதே உண்மை. கருவிகள் மனிதனின்  தேவைக்கேற்ப 
வடிவமைக்கப் படுபவை.

நவீன மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்!
அறிவியலைக் கற்றுத் தெளிவோம்!
********************************************************************                 
        
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக