திங்கள், 9 நவம்பர், 2015

பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன?
அடையாள அரசியலின் உச்சம் இதுதான்!
-----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-------------------------------------------------------------------------
ஒரு பிஹாரியின் முதல் சமூக உணர்வு அவனின் சாதிதான்.
பிஹாரி மட்டுமல்ல, எந்த ஒரு தமிழனின் முதல் சமூக உணர்வும் 
அவனின் சாதிதான். அதாவது, ஒரு பிஹாரி, தன்னை 
இன்ன சாதிக்காரன் என்றுதான்  முதலில் உணர்கிறான்.
அதன் பிறகே தான் ஒரு இந்து என்று உணர்கிறான்.
அதற்கும் பிறகே, தன்னை ஒரு பிஹாரி என்று உணர்கிறான்.
பிற சமூக உணர்வுகள் அனைத்தும் இவற்றைத் தொடர்ந்து 
ஏற்படுபவைதான்.

இந்துக்களைப் பொறுத்த மட்டில், சாதி பற்றிய சமூக உணர்வு 
வலுவானதாகவும் மதம் குறித்த சமூக உணர்வு 
மெலிதானதாகவும் உள்ளது. கிறிஸ்துவ, இசுலாமிய, சீக்கிய
மதத்தினரைப் பொறுத்த மட்டில், மத உணர்வு வலுவானதாகவும் 
சாத்திய உணர்வு மெலிதானதாகவும் உள்ளது.

நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் தொடர்ந்து நிலைபேறு 
கொண்டுவிட்ட இந்தியச் சமூகத்தில், மக்களின் சமூக 
உணர்வில் சாதியே பிரதான இடம் வகிக்கிறது. இந்திய 
சமூகத்தின் பொதுச் சித்திரம் இதுதான்.

எனவேதான், இந்திய அரசியல் என்பது வெறும் அடையாள 
அரசியலாகவே இன்றும் இருந்து வருகிறது. (சாதி, மதம் 
போன்ற அடையாளங்களின் அடிப்படையில் அரசியல் 
செய்வது அடையாள அரசியல் ஆகும். வன்னியர் சங்கம்,
கொங்கு வேளாளர் பேரவை, யாதவர் பேரவை,  முஸ்லிம் லீக்,
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்றெல்லாம் அமைப்புகள் 
இருக்கின்றன. இவை அடையாள அரசியல் அமைப்புகள்).

சாதியும் மதமும் பண்பாடு சார்ந்த 
அடையாளங்களே. எனவே அவை மானுட வாழ்வில் அவை 
இரண்டாம் நிலை அந்தஸ்து உடையவையே அல்லாமல் 
முதன்மையானவை அல்ல (secondary and not primary).

ஆயின், மானுட வாழ்வைத் தீர்மானிக்கும் முதன்மையான 
அம்சங்கள் பொருளியல் காரணிகளே. தாழ்வுற்று வறுமை 
மிஞ்சிக் கிடக்கும் இந்தியா போன்ற நாட்டில், பண்பாடு 
சார்ந்த அடையாள அரசியல் காரணிகள் மேலோங்கி 
நிற்பதில் எவ்வித நியாயமும் இல்லை. வறுமை ஒழிக்கப்பட்டு 
பொருளாதார சுதந்திரம் பெற்று விட்ட ஒரு சமூகத்தில்,
பண்பாடு சார்ந்த அடையாள அரசியல் மேலோங்குமானால் 
அது ஏற்கத் தக்கதே.

ஆனால், அறுபது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்
கோட்டுக்கு கீழ் வாழும் நிலையில் உள்ள ஒரு நாட்டில்,
அன்றாடங்காய்ச்சிகள் நிறைந்த ஒரு நாட்டில், அடையாள 
அரசியல் மேலோங்கி நிற்பது சுரண்டும் வர்க்கத்துக்கே 
லாபம் தரும். உலகில் வேறெந்த நாட்டிலும், அடையாள அரசியல் 
இவ்வளவு தீவிரத்துடனும் உக்கிரத்துடனும் முன்னெடுக்கப் 
படுவதில்லை. இதனால் மொத்த சமூகமும் பின்னோக்கி
நகர்த்தப் படுகிறது.

அடையாள அரசியலை ஒழிக்காமல் சமூகம் முன்னே நகர 
முடியாது; சுரண்டலுக்கு முடிவு கட்ட முடியாது. வர்க்க 
ரீதியாகத் திரண்டு சுரண்டலுக்கு எதிராகப் போராட வேண்டிய 
உழைக்கும் மக்களை, அடையாள அரசியலானது சுரண்டும் 
வர்க்கங்களுக்கு வால்  பிடிக்கும் மூடக் கூட்டமாக 
மாற்றி விடுகிறது.         

பீகாரில் நித்திஷ்-லாலு-காங் கூட்டணி அடைந்த வெற்றி 
மதம் சார்ந்த அடையாள அரசியலை சாதி சார்ந்த அடையாள 
அரசியல் வெற்றி கொண்டதாகும். சாதி அரசியலும் 
மத அரசியலும் அடையாள அரசியல் என்ற ஒரே நாணயத்தின்
இரண்டு பக்கங்களே.

பதினேழு ஆண்டு காலம் பாஜகவுடன் கூட்டணியில் 
இருந்த நித்திஷ்குமாரை ஒரு அவதார புருஷர் என்று 
கருதுவது மூடர்களின் பிறப்புரிமை. தலித்துகளின் 
கொடிய எதிரியான லாலு பிரசாத் யாதவ் அடைந்திருக்கும் 
இந்த வெற்றியால் மாநிலமெங்கும் உள்ள தலித் மக்கள் 
அச்சத்தால் உறைந்து போய்க் கிடக்கிறார்கள்.

எம்ஜிஆர், அச்சுத மேனன், சித்தார்த்த சங்கர் ரே ஆகிய 
கொடிய பாசிஸ்டுகளின் தொடர்ச்சியாக, நக்சல்பாரிகளை 
மாவோயிசப் புரட்சியாளர்களை  நரவேட்டை ஆடிய 
லாலு பிரசாத் யாதவ்வின் வெற்றியில் நக்சல்பாரிப் 
புரட்சியாளர்கள் மகிழ்வதற்கு ஒன்றுமே இல்லை.

பாஜக கூட்டணி-நித்திஷ் கூட்டணி என்னும் இவ்விரு 
அடையாள அரசியல் கூட்டணிகளையும் எதிர்த்துப் போட்டி 
இட்டுத் தோற்ற போதிலும் CPI, CPM கட்சிகளின் செயல்பாடு 
வரவேற்கத் தக்கதே.  

பீகாரில் உள்ள மொத்தம் 243 இடங்களில், மூன்று இடங்களில் 
வெற்றி பெற்ற நக்சல்பாரிக் கட்சியான இகக மாலெ (விடுதலை)
கட்சிக்கு வாழ்த்துக்கள்.

அடையாள அரசியலை ஒழிக்காமல் 
மார்க்சிய அரசியலை முன்னெடுக்க முடியாது.
அடையாள அரசியலை வீழ்த்துவோம்!
வர்க்க அரசியலை முன்னெடுப்போம்!
******************************************************************
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக