வியாழன், 8 ஜூன், 2017

மோடி அரசே
5 முறை உலக  சாம்பியன்
தமிழன் விஸ்வநாதன் ஆனந்துக்கு
பாரத ரத்னா வழங்கு! 

ஹாக்கி வீரர் தயான் சந்த் அவர்களுக்கு
பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
நான் விரும்பாவிட்டாலும் எதிர்க்க விரும்பவில்லை.
ஆனால் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா
வழங்கும் முன்னரே ஆனந்துக்கு வழங்கி
இருக்க வேண்டும். இப்போதும் காலம் கடந்து
விடவில்லை. கிரிக்கெட் ஹாக்கி ஆட்டங்களை
விட இந்தியாவிலேயே பிறந்த சதுரங்க ஆட்டத்திற்கு
உரிய மரியாதையை வழங்க வேண்டும்.    

சதுரங்கம் பற்றி மார்க்சியம் கூறுவது என்ன?
லெனின் ஏன் சதுரங்கம் விளையாடினார்?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்களில் ஒருவரான லெனின்
சதுரங்க  விளையாட்டில் விருப்பம் உடையவர்.
கிடைக்கிற மிகச் சிறிதான ஓய்வுநேரத்தில் அவர்
மாக்சிம் கார்க்கியுடன் சதுரங்கம் விளையாடிக்
கொண்டு இருப்பார். இந்த ஆட்டங்களில்
பெரும்பாலும் கார்க்கியே வெற்றி பெறுவார்.

சதுரங்கம் பற்றி மார்க்சியம் கூறுவது என்ன?
இதோ லெனின் கூறுகிறார்:
CHESS is the gymnasium of mind என்றார் லெனின்.

சதுரங்கம் என்பது மனதின் பயிற்சிக்  கூடம்
என்பது இதன் பொருள். உடற்பயிற்சிக் கூடம்
உடலை உரமிக்கதாக மாற்றுவது போல,
சதுரங்கம் மனதை உரமிக்கதாக மாற்றுகிறது
என்பது இதன் பொருள்.

(உரம்= வலிமை. உரம் என்றால் யூரியா போன்ற
ஒரு ரசாயன உரம் என்று கருதிட வேண்டாம்) 

பழைய சொற்கள் வழக்கு வீழ்ந்து விடக்கூடாது என்ற
அக்கறை காரணமாக உரம் என்ற சொல்லைப்
பெய்தேன். நிற்க.

சோவியத் ஒன்றியத்திலும் தற்போதைய ரஷ்யாவிலும்
சதுரங்கம் என்பது பள்ளிப்பாடத் திட்டத்தில்
இடம் பெற்ற ஒன்று. இதன் பொருள் கணிதம்,
இயற்பியலில் படித்துத் தேற வேண்டும் என்பது
போல, சதுரங்க ஆட்டத்திலும் தேற வேண்டும்
என்பதுதான். ஸ்டாலின் காலத்தில் இருந்து
சதுரங்கம் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கப்
பட்டுள்ளது. இன்றும் தொடர்கிறது.

எனது கல்லூரிக் காலத்தில்,  ஃபிஷர்-ஸ்பாஸ்கி
உலக சாம்பியன்  போட்டி எங்களை மிகவும் ஈர்த்தது.
உலகமே திரும்பிப் பார்த்த ஒரு நிகழ்வு அது.
அதில் ஸ்பாஸ்கி தோற்றார். ஃபிஷர் வென்றார்.
ஸ்பாஸ்கி ரஷ்யர்; ஃபிஷர் அமெரிக்கர். பனிப்போர்
நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. தோல்வி
அடைந்து மாஸ்கோ சென்ற ஸ்பாஸ்கியை
விமான நிலையத்தில் வரவேற்க யாரும் வரவில்லை.

ஸ்பாஸ்கி, ஃபிஷர்  இருவருமே உச்சபட்ச ஆட்டக்
காரர்கள்தாம். எனவே உளவியல் ரீதியாக
தாக்குதல் தொடுத்து ஸ்பாஸ்கியை ஃபிஷர்
வீழ்த்தியதாக அக்கால  ஆங்கில ஏடுகள்
எழுதின. அது உண்மைதான் என்பதை இங்கு
என்னால் நிரூபிக்க இயலும். எனினும் விரிவஞ்சி
விடுக்கிறேன்.

சதுரங்கம் பற்றி ஃபிஷர் இப்படிக் கூறினார்:
Chess is a PSYCHIC MURDER".   
"சதுரங்கம் என்பது ஒரு உளவியல் படுகொலை"
என்பது இதன் பொருள்.

ஹெச் ஜி வெல்ஸ் தெரியுமா? இங்கிலாந்தைச் சேர்ந்த
கணித நிபுணர்; விஞ்ஞானி; தத்துவஞானி. அவர்
எழுதிய "The Invisible Man" என்ற அறிவியல் புனைவு
(science fiction) பற்றியும், அதை நான் மறுவாசிப்புச்
செய்து கொண்டிருப்பது பற்றியும் ஒரு மாதம்
முன்பு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்
என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  

அவர்  சதுரங்கம் பற்றிக் கூறியது என்ன தெரியுமா?
"முன்னுக்கு வர விரும்பும் ஒருவனுக்கு சதுரங்கம்
கற்றுக் கொடுங்கள்; அதன் பிறகு அவன் கதை
முடிந்து விடுவதைக் காண்பீர்கள்" என்பதுதான்.
Yes, its laurels are DECEPTIVE.   

சதுரங்கம் என்பது கணிதமே என்பதை  கணிதமும்
சதுரங்கமும் பயின்றவர்கள் அறிவார்கள். ஒருமுறை         
உலக சதுரங்க சாம்பியனாக கணித நிபுணரான
டாக்டர் மாக்ஸ் யூவ் இருந்தார் என்பதையும்
வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

உலக வரலாறு கண்டும் கேட்டும் இராத சதுரங்க
மேதையாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்
காரி காஸ்பரோவ் அவர்களைக் கருதுகிறேன்.
ஆனந்த்-கார்ல்சன் உலக சாம்பியன் போட்டி
சென்னையில் நடந்தபோது, அநேகமாகப்
பல நாட்கள் அந்தப் போட்டியைக் காணச்
சென்றேன். அப்போது என் அபிமான நாயகர்
காரி காஸ்பரோவை அந்த ஓட்டல் வளாகத்தில்
கண்டேன். ஒரிரு நிமிடங்கள் அவருடன் பேசினேன்;
கைகுலுக்கி விடை பெற்றேன். என் வாழ்க்கையில்
எனக்குக் கிட்டிய பேறுகளில் இது ஒன்று என்று
நிறைவடைந்தேன்.

சதுரங்கத்தில்  காஸ்பரோவுக்கு அடுத்தவர்
ஐயத்துக்கு இடமின்றி விஸ்வநாதன் ஆனந்த்தான்.

ஆக மொத்தத்தில் மார்க்சியம் சதுரங்கத்தை
ஏற்கிறது; ஆதரிக்கிறது; பாடத்திட்டத்தில்
சேர்க்கிறது. எனவே சதுரங்கத்தை எதிர்ப்பது
அறிவியலை எதிர்ப்பதாகும்; மார்க்சியத்தை
எதிர்ப்பதாகும்.

இதற்கு மாறாக, பின்நவீனத்துவம்  சதுரங்கத்திற்கு
மார்க்சியம்  அளிக்கும் முக்கியத்துவத்தை
எதிர்க்கிறது.

"மார்க்சியம் என்பது மனிதகுல அறிவின் ஒட்டு
மொத்தம்" என்றார் லெனின். ( மேற்கோளின்
மொழிபெயர்ப்பு தோழர் பி ஆர் பரமேஸ்வரன் அவர்கள்).
எனவே சதுரங்கத்தைப் பற்றிய அறிவும்
மார்க்சிய அறிவில் உள்ளடங்கியதே.
---------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:- மார்க்சிய லெனினிய லேபிளில்
திராவிடக் கட்சி நடத்தும் ஒரு அமைப்பின் தோழர்
ஆனந்துக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற
என் கோரிக்கை குறித்துக் கேள்வி எழுப்பி, தனது தத்துவ அறியாமையை வெளிப்படுத்திய போது, அவரின்
மண்டையில் இறக்கிய விஷயங்களின் சாரமே
இக்கட்டுரை.
****************************************************************   






   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக