சனி, 3 ஜூன், 2017

ஐஐடிகளை தனியார்மயம் ஆக்க வேண்டும் என்ற 
கல்வித் தந்தைகளின் ஏவலின் பேரில்   
போலி முற்போக்கு வீராதி வீரர்கள் 
நடத்தும் ஐஐடி போராட்டங்கள்!
எமது RDX கட்டுரை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
பண்பாடு எதற்கும் பலமொழி எதற்கும்
நண்பனாம் அறிஞன் ஹுமாயூன் கபீர்க்கு.
----பேரா அ சீனிவாச ராகவன்.

தாகூரின் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட 
பேரா சீனிவாச ராகவன் (தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் 
அன்றைய (1960களில்) முதல்வர்) தமது கவிதை நூலை 
கல்வியாளர் பேரா டாக்டர் ஹுமாயூன் கபீர் அவர்களுக்குச் 
சமர்ப்பணம் செய்து வெளியிட்டபோது எழுதிய வரிகளே 
இக்கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் காண்பது.

இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளர் ஹுமாயூன் கபீர்
 குறித்து இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பே 
இல்லை. ஐ.ஐ.டி.நிறுவனங்களை உருவாக்கியதில் பண்டித 
நேருவுக்கு உறுதுணையாக இருந்தவர் ஹுமாயூன் கபீர்.

இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி. மேற்கு வங்க மாநிலம்,
கரக்பூரில் 1950 மே மாதத்தில் தொடங்கப் பட்டது. 
கொல்கொத்தாவில் இருந்து சுமார் நூறு கல் தொலைவில் 
உள்ளது கரக்பூர். இந்த ஐ.ஐ.டி.க்கான இடம் எது தெரியுமா?
இங்குள்ள ஹிஜ்லி (HIJLI) என்ற இடத்தில்தான், பிரிட்டிஷ் 
ஆட்சிக் காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களைச் 
சிறையில் அடைத்து வைத்து இருந்தனர். அந்த இடம் 
ஐ.ஐ.டி.க்காக வழங்கப் பட்டது.

தொடர்ந்து, மும்பை ஐ.ஐ.டி 1958இலும், சென்னை ஐ.ஐ.டி 
1959இலும், கான்பூர் ஐ.ஐ.டி 1959இலும், டெல்லி ஐ.ஐ.டி 
1961இலும் தொடங்கப் பட்டன. இன்று நாடு முழுவதும் பதினேழு 
ஐ.ஐ.டி.கள் உள்ளன. இந்தப் பதினேழு நிறுவனங்களிலும் 
சேர்த்து சுமார் பத்தாயிரம் மாணவர்கள் B.Tech படிக்கிறார்கள்.

நிற்க. போற்றுதலுக்குரிய கல்வித் தந்தைகளைப் பெற்றுள்ள 
மாநிலம் தமிழ்நாடு. இவர்களில் தலைசிறந்த கல்வித் 
தந்தைகளாக விளங்கும் 1) ஜேப்பியார் 2) பச்சமுத்து 3)பங்காரு 
அடிகளார் ஆகியோர் தரணிக்கே பெருமை சேர்க்கின்றனர்.

அரசு நிதியில் ஐ.ஐ.டி.கள் இயங்குவதையும், அவை 
சுயேச்சையான அமைப்புகளாக இருப்பதையும், நுழைவுத் 
தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்ப்பதையும் பெருமைக்குரிய 
நம் கல்வித் தந்தைகள் விரும்பவில்லை. ஐ.ஐ.டி.களை 
நிறுவுவதில் தனியாருக்கு இடமில்லை என்பதை இவர்கள் 
வரவேற்கவில்லை. இதுவரை பதினேழு ஐ.ஐ.டி.களை 
அரசு நிறுவியது. பதினெட்டாவது ஐ.ஐ.டி.யை நிறுவும் 
பொறுப்பைத் தனியாரிடம் விட வேண்டும் என்கிறார்கள் 
கல்வித் தந்தைகள்.

மெட்ராஸ் ஐ.ஐ.டி என்ன கொம்பா? எங்களிடம் விட்டால் 
இதை விடச் சிறப்பாக நாங்கள் நடத்த மாட்டோமா 
என்று குமுறுகிறார்கள் கல்வித் தந்தைகள். வெறும் 
800 சீட்டுக்காக மெட்ராஸ் ஐ.ஐ.டி.யா? நாங்கள் 
எட்டாயிரம் சீட்டில் ஐ.ஐ.டி நடத்துகிறோம் என்கிறார்கள் 
கல்வித் தந்தைகள்.

சென்னை ஐ.ஐ.டி. நிகழ்வுகளை ஒட்டி நடைபெறும் 
போராட்டங்களை கல்வித் தந்தைகள் முற்றிலுமாக 
ஆதரிக்கிறார்கள். போராட்டக் காரர்களுக்குத் தேவையான 
எல்லா உதவிகளையும் கேளாமலே செய்து தருமாறு 
தமது அடியாட்களுக்கு உத்தரவு இட்டிருக்கிறார்கள் 
மேதகு கல்வித் தந்தைகள். எப்படியாவது ஐ.ஐ.டி.யின் 
பெயர் கெட்டுச் சின்னாபின்னமானால் நல்லதுதானே, 
தனியார் நுழைவுக்கு இடம் கிடைக்குமே என்று களிப்பில் 
மிதக்கிறார்கள் கல்வித் தந்தைகள்.

என்னதான் சுயநிதிக் கல்லூரி, நிர்வாக ஒதுக்கீடு 
என்றெல்லாம் இருந்தாலும், அதிகபட்சம் ஒரு சீட்டுக்குச் 
சில லகரங்கள் தானே கிடைக்கிறது; இதுவே ஐ.ஐ.டி 
என்றால் ஒரு சீட்டுக்கு 2C, 3C என்று வாங்க முடியுமே 
என்று கணக்குப் போடுகிறார்கள் கல்வித் தந்தைகள்.
C language க்கு இடமில்லாத சுயநிதிக் கல்லூரிகளால்
என்ன லாபம் என்று சலித்துக் கொள்கிறார்கள் மேதகு 
கல்வித் தந்தைகள்.

முந்திய பத்தியில் குறிப்பிட்ட C language என்பது 
டென்னிஸ் ரிச்சி கண்டு பிடித்தது என்று கருதுவோர் 
இக்கட்டுரையைப் படிக்க அருகதை அற்றவர்கள்!

ஆக, இன்று இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.கள் பற்றி 
கவலை கொள்ளத் தக்க பிரச்சினை இதுதான். அதாவது,
ஐ.ஐ.டி.களின் அரசுத் தன்மைக்கும் சுயேச்சைத் தன்மைக்கும் 
எவ்வித பங்கமும் இல்லாமல் பாதுகாப்பதுதான்.
எப்படியாவது, PPP முறையிலாவது, (public private participation)
ஐ.ஐ.டி.களில் நுழைந்து விட முடியுமா என்றுதான் 
கல்வித் தந்தைகள் காத்திருக்கிறார்கள். இவர்களின் 
கனவைத் தகர்ப்பதுதான் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

ஆக, தனியார்மயக் கைக்கூலிகள் தொடர்ந்து ஐஐடிகளில் 
கலவரத்தை உருவாக்கி வருவது,  ஐஐடிகளைத் 
தனியார் மயம் ஆக்க வேண்டும் என்று முயலும் 
கல்வித் தந்தைகளின் Hidden Agendaஐ நிறைவேற்றுவதற்கே!
****************************************************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக