வெள்ளி, 2 ஜூன், 2017

விவசாயிகள் பித்தகோரஸ் தேற்றத்தை
நிரூபிக்க வேண்டும் என்கிறது மோடி அரசு!
மோடி அரசின் மாட்டுக்கறிச் சட்டம்!
இது ஒரு TNT (Tri Nitro Toulene) கட்டுரை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
நான் சிறுவனாக இருந்தபோது நெல்லை
மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் மாட்டுச்
சந்தைக்கு அவ்வப்போது சென்று இருக்கிறேன்.
திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் இறங்கிய உடனே,
மேலப்பாளையம், மேலப்பாளையம் என்று
கூவிக்கூவி நம்மை மேலப்பாளையம் பஸ்சில்
ஏற்றி விட்டு விடுவார்கள்.

மாவட்டம் முழுமைக்குமான சந்தை மேலப்பாளையம்
சந்தை. மலையாளிகளும் வருவார்கள். மாட்டுத் தரகும்
மாட்டு வியாபாரமும் கன ஜோராக நடக்கும் இடம் அது.
நான் கூறுவது 1960, 1970களில் நான் கண்கூடாகப்
பார்த்தது.

தரகர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? முக்கால் படி
கறக்கிற பசு மாட்டுக்கு இரண்டு சீப்பு
வாழைப்பழத்தையும், ஒரு கிலோ சீனியையும்
கொடுத்து விடுவார்கள்.(அக்காலத்தில் லிட்டர்
அளவுகள் நடைமுறையில் இல்லை).

பாலைக்  கறந்து காட்டும்போது
அந்தப் பசு இரண்டு படி பால் கறக்கும். அதே பசுவை
வீட்டுக்குக் கூட்டி வந்து, தொழுவத்தில் கட்டி,
கறந்து பார்த்தால் முக்கால் படி பால்தான் கறக்கும்.

எனவே நாங்கள் சந்தைக்குப் போய் பசு  மாடு
பிடிப்பதில்லை. உள்ளூரில்தான் பசுமாடு பிடிப்போம்.
காளை மாடு வாங்கத்தான் சந்தைக்குச் செல்வோம்.
அரசுப்பணியோடு சேர்த்து விவசாயம், மாடு வளர்ப்பு
ஆகியவற்றையும் மேற்கொண்டு வந்தது எங்கள்
குடும்பம்.

நெல்லை  மாவட்டத்தில் எந்த ஊரில் இருந்தும்
விவசாயிகள், மாடுகளை விற்பதற்கு மேலப்பாளையம்
சந்தைக்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்து
விடுவார்கள். தாசில்தார் சர்டிபிகேட்,  கலெக்டரிடம்
NOC  என்றெல்லாம் எந்தக் கெடுபிடியும் அன்று
கிடையாது. சுவாசிப்பது எப்படி  இயல்பானதோ
அப்படி இயல்பானதாக மாட்டு வியாபாரம் நடக்கும்.

இன்று, மோடி அரசின் சட்டம் வந்த பிறகு, விவசாயிகள்
பெரும் அல்லலுக்கும் அலைக்கழிப்புக்கும்
ஆளாகிறார்கள்.வத்துப்பால்  மாட்டை தொழுவத்தில்
கட்டிப் பராமரிக்க முடியுமா? பருத்திக் கொட்டை,
புண்ணாக்கு ஆனை விலையில் விற்கிறபோது
இது விவசாயிக்கு  கட்டுப்படி ஆகுமா?

இறைச்சிக்காக மாடு விற்கப்படவில்லை என்று
நிரூபிக்கும் பொறுப்பு விவசாயியின் தலையில்
சுமத்தப் படுகிறதே! எந்த விவசாயியும் இதை 
எப்படி   நிரூபிக்க முடியும்? இதை விட,
பித்தகோரஸ் தேற்றத்தை விவசாயியை
நிரூபிக்கச் சொல்லலாமே! என்ன கொடுமை இது?

எனவே, மோடி அரசின் மாட்டுக்கறிச் சட்டம்
திருத்தப்பட வேண்டும். மாட்டு இறைச்சிக்
கூடங்களை சுகாதாரமாகப்  பராமரிப்பது
என்பதோடு சட்டம் நின்று விட வேண்டும். அதிலும்
அவ்வாறு சுகாதாரமாகப் பராமரிக்கும் முழுப்
பொறுப்பையும் அரசே தன் செலவில் ஏற்றுக்
கொள்ள வேண்டும். சான்றிதழ் பெறும் சிவப்பு நாடா
முறை ஒழிய வேண்டும். எதையும் நிரூபிக்கும்
பொறுப்பு விவசாயிகளுக்கு இருக்கக் கூடாது.

இந்த முயற்சிகளுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி,
பகுஜன் கட்சிகள் ஆதரவு தருமா? மற்ற எதிர்க்
கட்சிகள் ஆதரவு தருமா? சட்டத் திருத்தம் சாத்தியமா?
அல்லது சட்டத்தை ரத்து செய்ய சோனியா
போராடுவாரா? மக்களின் நிர்ப்பந்தங்களும்
போராட்டங்களுமே அரசியல் கட்சிகளை
வலியுறுத்தி இணங்கச் செய்யும்.
****************************************************************   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக