கடவுள் இருக்கிறாரா?
-----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
முன்குறிப்பு:
IQ மிகவும் குறைந்தவர்கள் (say IQ less than 100)
இக்கட்டுரையைப் படிக்க வேண்டாம்.
----------------------------------------------------------------------
கருப்பு நாயைக் குளிப்பாட்டி வெள்ளை நாயாக மாற்ற
ஒருவன் முயற்சி செய்தானாம். அதைப்போன்ற ஒரு
முயற்சியை நாலைந்து வாரங்களாக நான் மேற்கொண்டு
இருந்தேன்.
கடவுள் நம்பிக்கையோ அல்லது குறைந்தபட்சம் கடவுள்
மீது ஒரு அபிமானமோ ஏற்பட வேண்டும் என்று பெருமுயற்சி
செய்தேன். கடவுள் மீதான ஆழ்ந்த பக்தியை அற்புதமாக
வெளிப்படுத்தும் இலக்கியமான நாலாயிரம் திவ்வியப்
பிரபந்தத்தை எடுத்து முழுவதும் படித்தேன். ஆண்டாள் மீதும்
குலசேகர ஆழ்வார் மீதும் காதல் கொண்டேன். ஆனால்
கடவுள் மீது அணுவளவும் அபிமானம் கொண்டிலேன்.
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே.
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக் கோட்டம்மாஎன்
பால்நோக்காய் ஆகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே.
இப்பாசுரங்கள் தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகைமையில்
வரும் என்று நான் சொல்வேனேயாகில் அது எவராலும்
புரிந்து கொள்ளப் படாது (விதிவிலக்குகள் உண்டு) என்பதால்
நான் கற்றது என்னோடு நாசமாய்ப் போகட்டும் என்று
விடுகிறேன்.
இதுபோன்ற பாசுரங்களைப் படிக்கப் படிக்க இந்த
இடத்தில் (இங்கு இடம் என்பது CONTEXT என்ற பொருளில்
ஆளப்படுகிறது) ஒரு Inverse Square Law செயல்படுவதைக்
காண்கிறேன். பாசுரங்களை படிக்கப் படிக்க குலசேகர
ஆழ்வார் மீதான மதிப்பு ஏறிக்கொண்டே செல்கிறது.
கணிதரீதியாக Tends to infinity என்று கூறலாம்.
அதே நேரத்தில் கடவுள் மீதான அபிமானம் inverse square
lawஇன்படி வீழ்ச்சி அடைகிறது. கணிதரீதியாக
tends to zero என்று கூறலாம்.
கடவுள் என்றால் ஒருவர்தான்! எனவே கடவுள் என்று
சொன்னாலே போதும். ஆனால் இழிந்த தற்குறிகள்
நிறைந்த நம் நாட்டில், கடவுள் என்பவர் அனைத்து
மதங்களும் குறிக்கும் கடவுள் என்று பொழிப்புரை
எழுத நேரிடுகிறது.
ஆதிசங்கரர் ஆறு சமயங்களை ஒன்றாக்கியவர் என்பர்.
அது போலவே யானும் ஆறு சமயங்களின் கடவுள்களை
ஒன்றாக்கிக் கூறுகிறேன். 1) இந்து 2) கிறித்துவம்
3) இஸ்லாம் 4) பௌத்தம் 5) சமணம் 6) சீக்கியம்
என்னும் ஆறு சமயங்களும் கூறும் கடவுள் என்பவர்
மொத்தப் பிரபஞ்சத்திலும் இல்லை என்று அடித்துக்
கூறுகிறேன்.
கடவுளுக்கு வெளி-காலத்தில் ஒரு பௌதிக இருப்பு
கிடையாது. God does not exist. கடவுள் என்பது ஒரு
கற்பனையே தவிர மெய்மை அல்ல.
கடவுளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மதத்தில்
இடமுண்டு என்று சொல்பவை ஆபிரகாமிய மதங்களான
கிறித்துவமும் இஸ்லாமும். அம்மதங்களில் கடவுள்
மறுப்புக்கு இடமில்லை. இவை இந்திய மண்ணில்
பிறந்த மதங்கள் அல்ல.
கடவுளை (அல்லாவை, அல்லா = அரபு மொழியில் கடவுள்)
ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருவன் இஸ்லாம்
மதத்தில் அனுமதிக்கப் படுவான். எனவே இஸ்லாமிய
நாத்திகன் என்று எவரும் இருக்க முடியாது. ஒரு
இஸ்லாமியன் நாத்திகனாக இருக்க முடியாது.
அது போல ஒரு நாத்திகன் இஸ்லாமியனாக இருக்க
முடியாது. அது போலவே ஒரு கிறித்துவனும் நாத்திகனாக
இருக்க முடியாது. கிறித்துவம் அனுமதிக்காது.
ஏனைய நான்கும் இந்திய மண்ணில் பிறந்தவை.
அவற்றுள் சீக்கியம் மட்டும் கடவுள் மறுப்புக்கு இடம்
தருவதில்லை. சீக்கியம் தோன்றிய காலத்தில்
இஸ்லாமின் ஆதிக்கம் மக்கள் மீது தீவிரமாகச்
செலுத்தப் பட்டது. இஸ்லாமுக்கு எதிராகவும்
இஸ்லாமின் ஆதிக்கத்தில் இருந்து மக்களைக்
காக்கும் நோக்குடனும் சீக்கியம் உருவாக்கப் பட்டது.
எனவே சூழ்நிலையின் கைதியாக இருந்த நிலையில்
சீக்கியம் இஸ்லாமின் சில கடினமான கூறுகளைத் தன்
மதத்தில் ஏற்றுக் கொண்டது. இவ்வாறு இஸ்லாமைப்
போலவே, கடவுள் மறுப்புக்கு இடமளிக்காத மதமாக
ஒரு இறுக்கத்தைப் பேணியது சீக்கியம்.
இந்து, பௌத்த, சமண மதங்கள் கடவுள் மறுப்புக்கு
தம் மதங்களில் இடமளித்தன. இவற்றுள் மிகவும்
தாராளமானது (terribly liberal) இந்து மதமே ஆகும்.
உலகில் இந்துமதம் போல் தாராளவாத மதம் எதுவும்
இல்லை. கடவுள் உண்டு என்பதற்கும் கடவுள் இல்லை
என்பதற்கும் சம மதிப்பும் அந்தஸ்தும் தருகிற ஒரே
மதம் இவ்வுலகில் இந்து மதம் மட்டுமே. அதிக
எண்ணிக்கையிலான நாத்திகர்களைத் தாங்கிக்
கொண்டு இயங்க வல்லது இந்து மதமே.
புத்தர் ஆத்மா இல்லை என்றார். ஆத்மா இல்லை
என்றால் கடவுள் இல்லை என்று பொருள். புத்தரின்
நிராத்மவாதம் (Theory of no soul) மிகவும் பிரசித்தம்.
தோன்றிய காலத்தில் நாத்திக மதமாக இருந்த பௌத்தம்
புத்தருக்குப் பின், கடவுளை ஏற்றுக்கொண்டு வழிபடும்
மதமாகச் சீரழிந்தது. மலத்தில் விழுந்த மாங்கனியாக
கருத்துமுதல்வாதச் சேற்றில் வீழ்ந்தது பௌத்தம்.
தோன்றியபோதே சமணம் ஆத்மா உண்டு என்றது.
அதாவது கடவுள் உண்டு என்று பொருள். என்றாலும்
கடவுள் மறுப்பாளர்களைத் தன மாதத்தில் இருந்து
சமணம் வெளியேற்றவில்லை. நிற்க.
மதங்கள் என்னதான் குட்டிக் கரணம் அடித்தாலும்
கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த நிமிடம் வரை
எந்த நிரூபணமும் அவை தரவில்லை; தர இயலவில்லை.
ஆனால் கடவுள் இல்லை என்பதை அன்றாடம் அறிவியல்
நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. இந்த உலகில்
ஒவ்வொரு நாளும் நடக்கும் அறிவியல் பரிசோதனை
ஒவ்வொன்றும் கடவுள் இல்லை என்று நிரூபித்துக்
கொண்டே இருக்கிறது.
நானும் தலைகீழாக நின்று பார்த்தேன். கடவுள் மீது
ஒரு மின்னல் கீற்றுப்போன்று ஒரு சிறிதேனும்
நம்பிக்கையோ பற்றோ ஏற்பட வேண்டும் என்று
வெகுவாக முயற்சி செய்தேன். ஆனால் பயனில்லை.
கடவுள் மீது அணுவளவும் பற்று ஏற்படவில்லை.
கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தால்தானே அவர் மீது
அன்போ வெறுப்போ ஏற்பட முடியும்! கடவுள் இருக்கிறார்
என்பதற்கு இதுவரை யார் எவராலும் ஒரு துணுக்கு
ஆதாரத்தைக் கூடத் தர இயலவில்லையே!
இல்லாத கடவுள் மீது நம்பிக்கை எப்போது ஏற்படும்?
புத்தி பேதலித்தால் மட்டுமே ஏற்படும்! புத்தி
பேதலிக்காதபோது கடவுளை ஏற்பது எப்படி?
ஆக, இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்
கடவுள் இல்லை என்பது விண்ணதிரும்
முழக்கங்களுடன் நிரூபிக்கப்பட்டு, அறிவார்ந்தவர்களால்
கொண்டாடப்படும் கோட்பாடாக ஆகி உள்ளது.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) நாத்திகத்தை அனுமதிக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள்
எதிர்மறையாகப் பின்னூட்டம் இட அனுமதிக்கப்பட
மாட்டார்கள். நேர்மறையான பின்னூட்டம் இடலாம்.
2) பிறர் அனைவரும் நேரிய அதாவது நேர்மறையான
கருத்துக்களை பின்னூட்டம் இடலாம். எதிர்மறையான
கருத்துக்களை பின்னூட்டமிட விரும்புவோர் 110க்குச்
சமமான அல்லது அதிகமான IQ கொண்டிருக்க
வேண்டும் (IQ = 110 OR MORE).
3) IQ மிகவும் குறைந்தோர் (say < 100) இக்கட்டுரையைப்
படிக்க அனுமதி இல்லை.
**************************************************************** 0000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக