டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ்
அஞ்சலகங்களில் (Post Offices) AEPS வங்கி சேவை!
என்ன மயிரு டிஜிட்டல் இந்தியா??
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
1) வங்கியில் என் அக்கவுண்டில் பணம் இருக்கிறது.
2 எனக்கு அவசரமாக ரூ 10,000 பணம் வேண்டும்.
3) திருநெல்வேலியில் உள்ள இந்தப் பட்டிக்காட்டு ஊரில்
வந்து மாட்டிக் கொண்டேன். மேலப்பாவூர் என்னும் ஊர்.
4) என்னிடம் ATM கார்டு இல்லை; சென்னையில் இருந்து
கிளம்பும்போது ஆதார் கார்டு, பான் கார்டு என்னும்
இரண்டை மட்டும் கொண்டு வந்தவன் ATM கார்டை
மறந்து விட்டேன்.
என்ன செய்வது? பணத்துக்கு என்ன செய்வது?
அந்தத் தாலியறுத்த ஊரில் ஒரு சின்ன போஸ்ட் ஆபீஸ்
இருந்தது. அங்கு ஒரு SPM (Sub Post Master) இருந்தார்.
அந்த போஸ்ட் ஆபீசின் சுவர்களில் டிஜிட்டல் இந்தியா
என்று கலர் கலராக போஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.
எனக்கு எரிச்சலாக வந்தது. என்ன மயிரு டிஜிட்டல்
இந்தியா? கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினேன்.
நான் திட்டியது காதில் விழுந்ததுமே நாலைந்து பேர்
என்னைச் சுற்றிக் கூடி விட்டார்கள். அவர்களில் ஒருவர்,
" உள்ளே போய் போஸ்ட் மாஸ்டரைப் பாருங்கள்" என்று
ஆலோசனை கூறினார். அதன்படி நானும் உள்ளே
சென்று போஸ்ட் மாஸ்டரைப் பார்த்தேன்.
"ATM கார்டு இல்ல, சார், அக்கவுண்டில் இருந்து
பணம் எடுக்க முடியுமா?" என்று கேட்டேன். நான்
பேசியதில் எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
"தாராளமாக எடுக்கலாம், வாங்க" என்கிறார் போஸ்ட்
மாஸ்டர். அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது.
"சார், என்னிடம் ATM கார்டு இல்ல சார்" என்றேன் மீண்டும்;
நாக்குழறியது. "ATM கார்டு வேண்டாம், சார்" என்றார்
போஸ்ட் மாஸ்டர். "ATM கார்டு இல்லாமலே பணம்
எடுக்கலாம்" என்ற போஸ்ட் மாஸ்டர், "உங்க ஆதார்
கார்டைக் கொடுங்க சார்" என்றார். கொடுத்தேன்.
ஆதார் கார்டும் அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல்
போனும் இருந்தால் போதும். உஙகள் அக்கவுண்டில்
இருந்து பணம் எடுக்க முடியும் என்றார் போஸ்ட் மாஸ்டர்.
இந்தத் திட்டத்துக்குப் பெயர் "AEPS" என்றார்.
ஏ ஈ பி எஸ் என்றால் என்ன?
AEPS = Aadhar Enabled Payment System. இந்த AEPS சிஸ்டமானது
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வருகிறது. ATM கார்டு
இல்லாத நிலையிலும் பணம் பெற இயலும். இதற்காக
ஒரு பேறு (App) உருவாக்கப் பட்டுள்ளது. அதில் உங்களின்
கணக்கு உள்ள வங்கி, கிளை, கணக்கு எண் ஆகிய
தேவையான விவரங்களை இன்புட் செய்தால், உங்கள்
கணக்கில் பணம் இருந்தால், நீங்கள் கேட்ட பணத்தை
எடுத்துத் தந்து விடும்.
இதுதான் ஏ ஈ பி எஸ் (AEPS) சேவை. இந்த சேவை நாடு
முழுவதும் படிப்படியாக விஸ்தரிக்கப்படும்.
ஸ்டேட் வங்கியில் நங்கநல்லூர் கிளையில் எனக்கு
கணக்கு இருந்தது. எனது அக்கவுண்டில் ரூ 50,000
பணம் இருந்தது. எனது பென்சன் பணம் கிரிடிட்
ஆகி இருக்கிறது. எனவே போஸ்ட் மாஸ்டர் நான் கேட்ட
ரூ 10,000ஐ எடுத்துத் தந்து விட்டார். ATM கார்டு இல்லாமலும்
ஒரு பட்டிக்காட்டு ஊரில் உள்ள போஸ்ட் ஆபிஸ் மூலமாக
தேவையான பணத்தை எடுக்க முடிகிறதே! இதுதான்
டிஜிட்டல் இந்தியா என்று உணர்ந்தேன்.
டிஜிட்டல் இந்தியாவை நான் கெட்ட வார்த்தைகளில்
திட்டியது எனக்கு நாணத்தைத் தந்தது. பிராயச்சித்தம்
செய்ய மனசு அடித்துக் கொண்டது. அந்த நேரம் பார்த்து
போஸ்ட் மாஸ்டர் வாசலுக்கு வந்தார். ஆட்களும் நிறையப்
பேர் கூட்டமாக நின்றிருந்தனர். சடாரென்று போஸ்ட்மாஸ்டர்
காலில் விழுந்தென்; அவரது பாதங்களைத் தொட்டுக்
கும்பிட்டேன். எனக்கு வயது 65; போஸ்ட் மாஸ்டருக்கு
35க்கு மேல் இருக்காது. என்றாலும் அவர் எனக்கு கடவுளின்
தூதராகத் தெரிந்தார். என் மனப்பாரம் இறங்கியது. நடையைக்
கட்டினேன்.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக