இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து
NGOக்கள் மற்றும் அந்நிய முதலாளித்துவ ஆதரவுடன்
இந்திய நிலப்பிரபுக்கள் நடத்தும் டெல்லிப் போராட்டம்!
ஒரு மார்க்சிய லெனினிய அறிவியல் பார்வை!
-----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம், சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
--------------------------------------------------------------------
இந்திய சமூகம் எப்படிப்பட்டது? அது எப்படி இயங்குகிறது?
இந்தக் கேள்விகளுக்கு பலரும் பலவிதமாகப் பதிலளிக்கலாம்.
ஆனால் மார்க்சிய லெனினியத்தின் பதில் என்ன என்பதே
இறுதியானது. ஏனெனில் அது மட்டுமே அறிவியல் ரீதியாகச்
சரியானது.
ஒரு சமூகத்தை ஆராய்ந்திடவும் மதிப்பிடவும் அந்தச்
சமூகத்தின் உற்பத்தியை எடுத்துக் கொள்கிறது மார்க்சியம்.
ஒரு சமூகத்தில் எந்த முறையில் உற்பத்தி நடக்கிறது?
உற்பத்தியில் பயன்படும் கருவிகள் என்னென்ன?
உற்பத்தியில் ஈடுபடுவது யார் யார்?
அவர்களுக்கு இடையிலான உறவுகள் எப்படி உள்ளன?
மேற்கூறிய கேள்விகளுக்குக் கிடைக்கிற பதில்களைக்
கொண்டு ஒரு சமூகத்தை மதிப்பிடுகிறது மார்க்சியம்.
அதன்படி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு இந்தியா நிலவுடைமைச்
சமூகமாக (feudal society) இருந்தது. அதாவது நிலவுடைமை
உற்பத்தி முறை இருந்தது. அதன் மீது முதலாளித்துவ
உற்பத்தி முறையைத் திணித்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
ஆக இந்திய சமூகத்தில் நிலவுடைமை உற்பத்தி முறையும்
முதலாளிய உற்பத்தி முறையும் சேர்ந்தே இருந்தன.
நிலவுடைமை உற்பத்தி முறை
முதலாளிய உற்பத்தி முறை
என்னும் இவ்விரண்டில் முதலாளிய உற்பத்தி முறையே
மேலானது; முற்போக்கானது. நிலவுடைமை உற்பத்திமுறை
பிற்போக்கானது. இது மார்க்சிய பால பாடம் ஆகும்.
தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் மோடி அரசின்
மூன்று வேளாண் சட்டங்களும் முதலாளிய உற்பத்தி
முறையை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. அதாவது
நிலவுகிற (existing) பிற்போக்கான நிலவுடைமை உற்பத்தி
முறையை அகற்றி விட்டு அதனிடத்தில் முற்போக்கான
முதலாளிய உற்பத்தி முறையை ஏற்படுத்தவே இத்தகைய
சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
(முக்கிய குறிப்பு: இந்தச் சட்டங்கள் தங்களின் செயல்பாட்டு
எல்லைக்குள் (jurisdiction) மட்டும் முதலாளிய உற்பத்தி
முறையை ஏற்படுத்துபவை).
இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவையில் இருந்து இந்த
மூன்று வேளாண் சட்டங்களும் இயற்றப் பட்டன.
இந்திய ஆளும் வர்க்கம் என்பது பிரதானமாக முதலாளிய
வர்க்கமே ஆகும்.
இச்சட்டங்களை எதிர்ப்பவர்கள் யார்? இந்தியாவில்
28 மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலங்களிலும்
இச்சட்டங்களுக்கு எதிர்ப்பு இல்லை. பஞ்சாப், ஹரியானா
என்னும் இரண்டு மாநிலங்களோடும் மேற்கு உபியுடனும்
எதிர்ப்பு சுருங்கி விட்டது. ஏன்?
ஜாட் சாதி நிலப்பிரபுக்கள் மட்டுமே இச்சட்டங்களை
எதிர்க்கிறார்கள். காரணம் அவர்கள் அச்சட்டங்களால்
பாதிப்பு அடைகிறார்கள். அதாவது நிலங்களை
வைத்திருக்கும் பிற சாதி விவசாயிகளின் மீதான அவர்களின்
ஆதிக்கம் பறிபோய் விடுகிறது. பொருளாதார ஆதிக்கம்
மட்டுமல்ல, ஜாட் சாதியின் சாதிய ரீதியான மேலாண்மையும்
போய் விடுகிறது. பிற தாழ்ந்த சாதியினர் ஜாட்டுக்களுக்குச்
சமமாக பொருளாதார உயர்வை முதலிலும் சமூக அந்தஸ்தைக்
காலப்போக்கிலும் பெற்று விடுவார்கள். இந்த உண்மை
ஜாட் நிலப்பிரபுக்களைப் பெரிதும் அலைக்கழிக்கிறது.
எனவே தங்களின் சாதிய மேலாண்மையைத் தக்க வைத்துக்
கொள்ளவும் பொருளாதார ஆதிக்கத்தை இழந்து விடாமல்
இருக்கவும் ஜாட் சாதி நிலப்பிரபுக்களின் விவசாயச் சங்கங்கள்
இச்சட்டங்களை எதிர்க்கின்றன. அதாவது இந்தியச் சமூகமானது
முதலாளிய உற்பத்திமுறைக்குச் சென்று விடாமல் தடுக்கவும்,
ஆகப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத்
தக்க வைக்கும் பொருட்டும் ஜாட் சாதி நிலப்பிரபுக்கள்
இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.
ஜாட் சாதி நிலப்பிரபுக்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு
இது வாழ்வா சாவா போராட்டமாகும். இப்போராட்டத்தில்
அவர்கள் தோற்றால், இந்திய சமூகத்தில் நிலப்பிரபுக்கள்
(Landlords) என்ற வர்க்கம் முற்றிலுமாகத் துடைத்தெறியப்
பட்டு விடும். எதிர்கால இந்தியா என்பது நிலப்பிரபுக்களே
இல்லாத ஒரு சமூகமாக இருக்கும்.
எனவே இந்திய அரசுக்கு எதிராக தீர்மானகரமான ஒரு யுத்தத்தை
(a decisive war) பிரகடனம் செய்து விட்டார்கள் ஜாட் சாதி
நிலப்பிரபுக்கள். இந்த யுத்தத்தில் பிரபலமான பல்வேறு
NGO எனப்படும் அரசுசாரா நிறுவனங்கள் நிலப்பிரபுக்களுக்கு
ஆதரவாகப் பங்கெடுக்கின்றன. யோகேந்திர யாதவ்,
மேத்தா பட்கர் உள்ளிட்ட பலரின் NGOக்கள் இப்போராட்டத்தில்
கலந்து கொண்டுள்ளன. பிரசித்தி பெற்ற இவர்களின் பங்கேற்பு
காரணமாக இப்போராட்டம் சர்வதேச அளவில் தெரிய
ஆரம்பித்து உள்ளது. உலக முதலாளித்துவம் தனது
கைக்கூலிகளான ரிஹன்னா (Rihanna) கிரேட்டா துன்பெர்க்
(Gretta Thunberg) ஆகியோர் மூலம் மோடி அரசின் மீது சர்வதேச
சமூகத்தின் கண்டனத்தை ஏற்படுத்த முடியுமா என்று
நாயாய் அலைகிறது.
இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாகிய காங்கிரஸ் கட்சி
இப்போராட்டத்தை ஆதரிப்பதாக நடிக்கிறது. இது வாக்குவங்கி
அரசியலின் அற்ப லாபம் கருதிய நடவடிக்கையே தவிர,
போராட்டத்திற்கான மெய்யான ஆதரவு அல்ல. இந்தியாவின்
போலி இடதுசாரிகளான CPI, CPM கட்சிகள் மற்றும் அமைப்பு
பலமற்று மாநில அளவில் உயிர்வாழும் பல்வேறு மார்க்சிய
லெனினியக் குழுக்கள் ஆகியவை இந்தப் போராட்டத்தில்
ஜாட் சாதி நிலப்பிரபுக்களை ஆதரிக்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சிகளில் எல்லாக் கட்சிகளுமே ஜனநாயகப்
புரட்சிக்கான வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கின்றன.
தேசிய ஜனநாயகப் புரட்சி, மக்கள் ஜனநாயகப் புரட்சி,
புதிய ஜனநாயகப் புரட்சி என்று எல்லாப் புரட்சிகளுமே
ஜனநாயகக் கட்டத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன.
ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டுமென்றால், இந்திய
சமூகத்தில் நிலப்பிரபுக்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நிலப்பிரபுத்துவ வர்க்கமே இல்லாமல் அழிந்து போய்விட்டால்,
ஜனநாயகப் புரட்சி நடத்துவது எப்படி? மேலும் ஒவ்வொருவரும்
தங்கள் கட்சியின் வேலைத்திட்டத்தில், நிலப்பிரபுத்துவத்துக்கும்
விவசாயிகளுக்குமான முரண்பாடே பிரதான முரண்பாடு
என்று வரையறுத்து வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில்
மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நிலப்பிரபுத்துவ
வர்க்கத்தையே இந்திய ஆளும் வர்க்கம் இல்லாமல்
செய்துவிடுமானால், புரட்சி நடத்துவது எப்படி? புரட்சியை
விடுங்கள், கட்சி நடத்துவது எப்படி? எனவே தெய்வம் மடிதற்றுத்
தான்முந்துறும் என்று வள்ளுவர் கூறியது போல, வேட்டியை
மடித்துக் கட்டிக்கொண்டு இறங்கி விட்டார்கள் போலிக்
கம்யூனிஸ்டுகள் மற்றும் போலி நக்சல்பாரிகள்
நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக